புரட்சிப் பெருநதி
– 13
புறம்போக்கைத் தோண்டி புதுயுகக்கனவு….
‘தனியார் உடைமை இல்லாத,
ஏழைகளுக்கான
ஒரு குடியரசை’
முன்மொழிந்தார்.சுருக்கமாக
‘விவசாயிகளை முன்னிறுத்தி கம்யூனிச சமுதாயம்’
பற்றிய கனவுகளை விதைத்தார் .
சு.பொ.அகத்தியலிங்கம்
கிளர்ச்சிக்காரர்களை வேட்டையாட கேப்டன் கிளாட்மேன் தலைமையில் ஒரு குதிரைப் படை லண்டனிலிருந்து சர்ரேவிலுள்ள ஜார்ஜ் மலையடிவாரத்துக்கு விரைந்து வந்தது . அங்கே பெரும் ஆயுதங்களுடன் கிளர்ச்சிக்காரர்களை எதிர்பார்த்து வந்த கிளாட்மேன் அதிர்ந்தார் . சுமார் இருபது பேர் அழுக்கடைந்த கந்தல் உடையுடன் மண்வெட்டி கடப்பாரை சகிதம் மண்ணைக் கொத்திக் கிளறிக் கொண்டிருந்தனர் . இவர்கள் மீது கடும் தாக்குதல் தொடுக்க அவருக்கு மனம் வரவில்லை . தலைமைத் தளபதி ஃபயர்பாக்ஸூக்கு விவரத்தைச் சொன்னார் .
அங்கே மண்ணைத் தோண்டிக் கொண்டிருந்த ஜெர்ராட் வின்ஸ்டான்லி விளக்கம் சொல்ல லண்டனுக்கு புறப்பட்டார் . அங்கே அவர் தங்க ஒரு விடுதியின் அறைக் கதவுகூட திறக்கப்படவில்லை ; அவர் தன் நோக்கத்தை உலகுக்கு சொல்ல பேனாவைக் கையில் எடுத்தார். இது நடந்தது 1649 ஏப்ரல் மாதம். இந்நிகழ்வின் 350 ஆம் ஆண்டு விழாவை 1999 ஆண்டு லண்டனில் கொண்டாடினர் என்பதும் ; இவரது எழுத்துகளை மொத்தமாகத் தேடிச் சேகரித்து ஆக்ஸ்போர்ட் பதிப்பகம் வெளியிட்டது என்பதும் கவனத்தில் கொள்ளவேண்டிய சேதி.
இவரையும் இவரைச் சார்ந்தவர்களையும் ‘தோண்டுவோர்’ [DIGGERS] என்றே வரலாறு பதிவு செய்துள்ளது ; சமூகத்தை சமப்படுத்தவே தாங்கள் தோண்டுவதாக அவர்கள் அறிவித்தனர் . ஜெர்ராட் வின்ஸ்டான்லி 1609 இல் லங்காஷையரில் பிறந்தவர் – 1630 களில் லண்டனில் வியாபாரம் செய்ய முயன்றவர் – 1640 இல் சூசன் என்கிற மங்கையை மணந்தவர் என்பன போன்ற சில தகவல்களைத் தவிர அவரது சொந்த வாழ்க்கையைப் பற்றிய தகவல்கள் அதிகம் கிடைக்கவில்லை. அவர் அதிகம் படித்தவரில்லை; அவரது எழுத்துகளில் பைபிள் மேற்கோள்கள் மட்டுமே இடம் பெற்றாலும்; அவரது எழுத்தின் வீச்சை வைத்து ஷேக்ஸ்பியரை அவர் படித்திருப்பார், தாமஸ் மூரின் ‘கற்பனைத்தீவை’யும், கெம்பனெல்லோவின் ‘சூரியநகரத்தை’யும் வாசித்திருப்பார் என யூகிக்கின்றனர் ஆய்வாளர்கள் . 1649 அந்த மலையடிவாரத்தில் புறம்போக்கு நிலத்தில் இறங்கி மண்ணை பண்படுத்த கிராமம் கிராமமாக சென்று விவசாயிகளை அழைத்தார் ; நிலத்தை சமூகத்தின் பொதுச் சொத்தாகப் பாவித்து கூட்டாக உழைக்க அழைப்புவிடுத்தார் . யாரையும் கட்டாயப்படுத்தி தன்னோடு சேர்க்கவில்லை; விருப்ப அடிப்படையில் இணைக்க முயற்சித்தார் .
இங்கிலாந்தில் முதலாளித்துவப் புரட்சியில் மன்னரும் கிரஹாம்பெல்தலைமையில் நாடாளுமன்றமும் மோதிக்கொண்டிருந்த காலம் . அங்கு நடந்த மாறுதல்களால் ஏழை விவசாயிகள் உள்ளதையும் இழந்து வாடியகாலம். 1648 இல் ‘பக்கிம்காம்ஷயரில் ஒளி வீசுகிறது’ என்ற ஒரு பிரசுரம் யாருடைய பெயருமின்றி வெளிவந்தது . சிறிது நாளில் மறுபதிப்பும் வந்தது ,அப்பிரசுரம், ‘நாடாளுமன்றம் முடியாட்சியின் அதிகாரத்தைத்தான் வலுப்படுத்தியது; மக்கள் சுதந்திரத்தை இழந்துவிட்டனர்’ என வாதிட்டது .
இந்தச் சூழலில் சிலர் அரசு புறம்போக்கு நிலத்தைக் கைப்பற்றி உழுவது என்பது அரசுக்கு விடப்படும் சவாலாக ; வருங்காலத்தில் பெரும் விளைவுகளை உருவாக்கும் போக்காகிவிடுமென பயந்தே முதலில் சுட்டிக்காட்டியபடி படையை அனுப்பியது ‘தனிச் சொத்துரிமையும், இது என்னுடையது, இது உன்னுடையது என்கிற பாகுபாடும்தான் அனைத்து தீமைகளுக்கும் மூலகாரணமாகும்.தனியார் சொத்துரிமையே மக்களைக் குற்றம் இழைக்கத் தூண்டுகிறது . அவர்களைக் குற்றவாளியாக்கிக் கொல்கிறது . நிலத்தைக் கூட்டாகப் பயன்படுத்துவதிலும், கூட்டாக உழைப்பதிலும்தான் இதற்கு பரிகாரம் அடங்கி இருக்கிறது .இவையே ஒவ்வொருவரையும் வறுமையிலிருந்து மீட்டு அனைவருக்கும் ஆனந்தமயமான வாழ்க்கையையும் சமாதானத்தையும் அளிக்கும்’ என்பதையே 1649 இல் வின்ஸ்டான்லி வெளியிட்ட ‘நேர்மையின் புதிய விதி’ பிரசுரம் பிரகடனப்படுத்தியது. ‘இங்கிலாந்து ஒரு சிறைச்சாலை’ என இப்பிரசுரம் வர்ணித்தது. 1648 இல் அனாமதேயமாக வந்த பிரசுரத்திலும் இது போன்ற வாசகங்கள் இடம் பெற்றதையொட்டி அதையும் வின்ஸ்டான்லியே தயாரித்திருக்கக்கூடும் எனக் கருதுகின்றனர்.
பைபிள் மீது பற்றுக்கொண்ட இவர் எல்லாம் சட்டத்திற்கு உட்பட்டே நடக்க வேண்டும் .கலகம் கூடாது . விரும்பி இணைந்து செய்ய வேண்டுமென்றார் . இவரும் இவரது தோழர்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டனர் . நீதிமன்றமோ அவர்கள் வாதத்தைக் கேட்காமல் ; அபராதம் விதித்ததோடு; இவர்கள் பண்படுத்தத் தொடங்கிய இடத்தை விட்டும் விரட்டியடித்தது. காரணம் இதை இப்படியே அனுமதித்தால் பெருகிவரும் ஏழைகள் தரிசு நிலங்களையும் புறம்போக்கு நிலங்களையும் தாங்களே எடுத்துக் கொள்வார்களென அரசு பயந்தது.
வின்ஸ்டான்லி தொடர்ந்து தன் கருத்தை பிரச்சாரம் செய்ய, வால்டனின் வில்லியம் ஸாடார் ,டெய்லர் ஆகியோரின் பிளவ்டி மற்றும் கிறிஸ்துவ மதத்திற்கு முரணான செயல்பாடு’, ‘எனது லார்டு ஜெனரலுக்கும் போர்க்குழு உறுப்பினர்களுக்கும்’, ‘லண்டன் மாநகரிலும் ராணுவத்திலும் போர் முழக்கம்’ என வரிசையாக பிரசுரங்கள் வெளியிட்டார். இவரது கடைசிப் படைப்பு, ‘சுதந்திரத்தின் விதி’ 1652 இல் வெளிவந்தது . விவசாயிகளின் கம்யூனை அதில் கனவு கண்டார் . ‘அனைத்து நிலங்களும் அவற்றின் ஆதாயங்களும் அரசுக்கே சொந்தம்; சர்ச்சுக்கு சொந்தமான நிலங்கள், பூங்காக்கள் ,மன்னனிடமிருந்து கைப்பற்றப்பட்ட காட்டுநிலங்கள் ஆகிய அனைத்தையும் அவற்றைப் பெறுவதற்காக இரத்தம் சிந்தி தங்கள் உடைமைகளை எல்லாம் தியாகம் செய்தவர்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும்.
அவர்கள் கூட்டாக வாழ்வதற்கு கம்யூன்கள் அமைக்க வேண்டும்’ என பிரதமர் கிரஹாம்பெல்லுக்கு வேண்டுகோள் விடுத்தது இப்பிரசுரம். ‘நிலத்தில் உழுது பயிரிட ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு ; உழைப்புக்கு தரப்படும் மரியாதை மட்டுமே செல்வச் செழிப்பின் தோற்றுவாய்’ என்றார். ‘தனியார் உடைமை இல்லாத, ஏழைகளுக்கான ஒரு குடியரசை’ முன்மொழிந்தார்.சுருக்கமாக ‘விவசாயிகளை முன்னிறுத்தி கம்யூனிச சமுதாயம்’ பற்றிய கனவுகளை விதைத்தார். அரசு இதனைக் கண்டு வெகுண்டது .இவருடைய மற்றும் இவரது தோழர்களுடைய குடியிருப்புகளை உடைத்தெறிந்தது. இவர் எப்போது எப்படி இறந்தார் என்கிற விவரம்கூட தெரியவில்லை .1652லேயே இறந்திருக்கக்கூடும் என யூகிக்கப்படுகிறது. இவரது புகைப்படமோ இவரை வரையத் தேவையான வர்ணனைகளோகூட கிடைக்கவில்லை .
இளைஞர்கள் அறிய வேண்டிய புரட்சியின் வரலாற்று ஆளுமைகள் வரிசையில் ஜெர்ராடு வின்ஸ்டான்லியையும் சேர்த்தார் லெனின் என்பதிலிருந்தே அவரின் முக்கியத்துவம் விளங்கும் . இவரின் ‘சுதந்திரத்தின் விதி’ என்பது ‘கற்பனைத் தீவு’, ‘சூரிய நகரம்’ இவற்றுக்கு இணையானதாக இன்றைய வரலாற்றாய்வாளர்கள் கருதுகின்றனர். 1999ல் விழா கொண்டாடப்பட்டதும்; இவரது படைப்புகள் தொகுத்து வெளியிடப்பட்டதும் இதற்குச் சான்றுகளாகும்.
புரட்சி தொடரும்…
நன்றி : 30/01/2016.
0 comments :
Post a Comment