புரட்சிப் பெருநதி -10
தவறான தத்துவத்தின் வேதநூல்
சு.பொ.அகத்தியலிங்கம்
ஜாரின் கொடுங்கோன்மையையும் நிலப்பிரபுத்துவத்தையும்
எதிர்த்து கனல் மொழிகளில் பேசியதால் சைபீரியாவிற்கு
நாடு கடத்தினார் ஜார்.
இவ்வாறு நாடுகடத்தப்பட்ட முதல் ரஷ்யர் இவரே
‘…….நாம் அவருடைய ‘தீவிரமான வேலைத் திட்டத்தை’ அங்கீகரித்தால் அதைவைத்து ஊரெல்லாம் பறைசாற்றி அதன் மூலம் நம்முடன் சமரசம் செய்துகொள்ளலாம் என்றும்; நாம் எதிர்த்தால் நம்மை எதிர்புரட்சிக்காரர்கள் என அவமதிக்கலாம் என்றும் நினைக்கிறார்.’இவை 1896 மார்ச் 5 ஆம் நாள் காரல் மார்க்ஸ் தன் தோழன் ஏங்கெல்சிற்கு எழுதிய கடிதத்தில் எழுதிய வரிகள் .
‘ஓய்வறியா அவரின் உத்வேகத்தையும் , தீவிரமான உண்மையின் தேடலையும் கண்டு நான் அவர் வசமானேன்’ என்கிறார் அவரின் சகா பெலின்ஸ்கி.
இரண்டுபேர் சொல்வதும் மிகை அல்ல.அவர் சந்தேகமில்லாமல் ஒரு உறுதியான போராளிதான்; இரண்டு முறை மரண தண்டனைக்கு ஆளாகி கடைசி நொடியில் தப்பியவர்; எட்டு ஆண்டுகள் மேற்கு ஐரோப்பிய மற்றும் ரஷ்யச் சிறைகளில் கடும் இன்னலை அனுபவித்தவர்; நான்காண்டுகள் சைபீரியாவுக்கு தண்டனையாகக் கடத்தப் பட்டவர்; இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நாடு கடத்தப்பட்டவர்.முதன் முதலாக அரசியல் காரணங்களுக்காக நாடு கடத்தப்பட்ட ரஷ்யர் இவரே!
அவர்தான் மைக்கேல் பகுனின். சமரசமின்றி போராடியவர். எனினும் அவரது பாதை ஊனமானது என்பதால் மார்க்சும் ஏங்கெல்சும் அவரோடு கருத்துப்போர் புரிந்தனர்.1814 ஆம் ஆண்டு மாஸ்கோவில் ஒரு மேட்டுக்குடி குடும்பத்தில் முதலில் பிறந்த இரட்டையர்களில் ஒருவரே பகுனின். 1828ல் மாஸ்கோ பீரங்கிப்படையில் பயின்றவர்.
1832 ஜாரின் ராணுவத்தில் பணிக்குச் சேர்ந்தார்.1835 ல் பணியில் திருப்தியின்றி விலகினார். மாஸ்கோவில் ஜாஹன் கிவிச், பெலின்ஸ்கி, ஹெர்ஷன், ஓஹர்யோவ் போன்றோர் ஒரு குழுவானார்கள். ஹெகலின் தத்துவமே அவர்களுக்கு வழிகாட்டியானது. ரஷ்யாவில் டிசம்பரிஸ்ட் புரட்சியாளர்களின் தோல்வியை இவர்கள் அலசத் தலைப்பட்டனர். உரையாடலைத் தொடங்கினர். ஹெகலை மேலும் பயில பகுனின் ஜெர்மன் நாட்டுக்கு சென்றார்; அப்போதைய ஐரோப்பாவில் நடந்த தொழிலாளர் கிளர்ச்சிகள் ஹெகலியன் தத்துவத்திலிருந்து விலகி மாற்றாய் சிந்திக்க வழி செய்தது.‘ஜெர்மனியின் எதிர்ச் செயல்’, ‘ஒரு பிரெஞ்சுக்காரனின் சொற்கள்’ போன்ற இவரது கட்டுரைகள் பெரும் விவாதப்புள்ளியாயின.
‘புரட்சி நிகழ்ச்சிநிரலில் இடம்பெற்றுவிட்டது. தவிர்க்க முடியாதது. ஐரோப்பாவில் மட்டுமல்ல ரஷ்யாவிலும் அது முதிர்ச்சி பெற்று உச்சகட்டத்திற்கு வந்துள்ளது….’ என இவர் எழுதியது அரசின் கோபத்தைக் கிளறியது. ஸ்விட்சர்லாந்துக்கு செல்ல கட்டாயப்படுத்தப்பட்டார். 1844 ரகசியமாக பிரஸல்ஸூக்கும், பாரீசுக்கும் சென்றார். அங்குதான் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் ஆகியோரை சந்தித்து விவாதத்தைத் துவக்கினார். பிரெளதனுடன் பகுனின் நட்பும் துவங்கியது. ‘பிரெளதன் தான் தன் குரு’ என தொடர்ந்து பகுனின் சொல்லிவந்தார். மேற்கு ஐரோப்பிய சோஷலிஸ்டுகளோடும் தொடர்பு வலுத்தது.
ஜாரின் கொடுங்கோன்மையையும் நிலப்பிரபுத்துவத்தையும் எதிர்த்து கனல் மொழிகளில் பேசியதால் சைபீரியாவிற்கு நாடு கடத்தினார் ஜார். இவ்வாறு நாடுகடத்தப்பட்ட முதல் ரஷ்யர் இவரே! பாரீசுக்கு தப்பிச் சென்றார். அங்கு போலந்து எழுச்சியைக் கொண்டாடும் கூட்டத்தில் பங்கேற்று ஸ்லாவ் விடுதலைக்கு குரல் கொடுத்தார். ஜார் கேட்டுக்கொள்ள பிரெஞ்சு அரசும் பகுனின் அங்கிருந்து வெளியேற ஆணை பிறப்பித்தது.1848ல் பிராக்கில் நடந்த எழுச்சியிலும் பங்கு கொண்டார். பிரஷ்யப் புரட்சியில் தன் ராணுவத் திறமையோடு வழிகாட்டி முனைமுகத்து நின்றார். இதனால் மரண தண்டனைக்கு ஆளானார். பின்னர் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.
ஆஸ்திரிய அரசிடம் ஒப்படைக்கப்பட்டு அங்கும் மரணதண்டனைக்கு ஆளானார். பின்னர் ஆயுள் தண்டனையானது. சாக்ஸோன், ஆஸ்டிரியா, ரஷ்யச் சிறைக் கொட்டடிகளில் எட்டாண்டு தனிமைச் சிறையில் வதைபட்டார். ஆயினும் தன் கருத்துக்களை மாற்றிக் கொள்ளவில்லை . ‘எந்த ஒரு அரசியல் பிரகடனமும் நேரடியாக புரட்சிக்கு இட்டுச் செல்லாவிடில் அது தீங்கு விளைவித்துவிடும்’ என்றார். இது பிரெளதன் கோட்பாட்டின் இன்னொரு வடிவமே! மேலும் கட்டுக்கோப்பான தொழிலாளி வர்க்கக் கட்சிக்கும், அரசியல் போராட்டங்களுக்கும் எதிராக இருந்த பகுனின், ‘தனிநபர் சுதந்திரத்துக்கு அவை ஒத்துவராதவை’ என நிராகரித்தார்.
1864 ல் சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் உள்ளே புகுந்து அதனை தம் அராஜகவாத கருத்துக்களை பரப்பும் இடமாக மாற்றவும்; அந்த அமைப்பை சிதைக்கவும் முயன்றார்.மதத்தை ஒழிப்பது, பரம்பரை சொத்துரிமையை ஒழிப்பது, நிலத்தை தேசவுடைமையாக்குவது என்பது உள்ளிட்ட பகுனின் முழக்கங்கள் சிறுவிவசாயிகள் உள்ளிட்ட பெரும்பகுதி மக்களை எதிரணிக்கு தள்ளிவிடும் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டி இயங்கியல் ரீதியாக மார்க்சும் ஏங்கெல்சும் வாதிட்டனர் .மேலும் பாட்டாளி வர்க்கக் கட்சியின் தேவையை வலியுறுத்தினர் .
கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் தத்துவரீதியாகவும் , அமைப்பு ரீதியாகவும் கடும் போராட்டம் நடத்திய மார்க்சும் ஏங்கெல்சும் 1872-ல் பகுனினை முறியடித்தனர் . ஆயினும் அதன் தத்துவ விஷவேரை விடாது இனங்காட்டினர். அதனை 1880க்குள் செயலற்ற நிலைக்கு தள்ளிவிட்டனர். பாரீஸ் கம்யூனின் எழுச்சியும் இதில் வரலாற்றுப் பங்கு வகித்தது .பகுனின் வாழ்க்கையின் கடைசி காலகட்டம் எல்லாவகையிலும் தோல்வி முகமாகவே அமைந்தது. 1873ல் ஸ்பெயினிலும் 1874 ல் இத்தாலியிலும் பகுனின் பங்கெடுத்து வழிகாட்டிய அராஜகவாதக் கிளர்ச்சிகள் தோல்வியைத் தழுவின.
1876 ஆம் ஆண்டு மரணமடைந்தார். கடைசி வரை தன் தத்துவமும், உத்திகளும் தவறானவை என்பதை அவர் ஏற்கவில்லை.‘சொத்துடைமை வர்க்கங்களின் கூட்டான அதிகாரத்திற்கு எதிராக தொழிலாளிவர்க்கம்; சொத்துடைமை வர்க்கம் உருவாக்கியுள்ள எல்லாவிதமான பழைய கட்சிகளுக்கும் மாறாக – அதற்கு முற்றிலும் மாறுபட்ட வேறு வகையிலான – ஒரு அரசியல் கட்சியில் ஸ்தாபன ரீதியாகத் திரளாமல்; வேறு எந்த வழியிலும் வர்க்கம் என்ற வகையில் தொழிலாளி வர்க்கம் செயல்பட முடியாது’ என 1871 லண்டன் மாநாட்டு தீர்மானத்தின் இறுதி வாக்கியத்தை மார்க்சும் ஏங்கெல்சும் மிகச்சரியாக வடித்து வழிகாட்டினர்.
தனிநபர் சாகசங்களோ – அராஜக தாக்குதல்களோ எதிர் விளைவையே உருவாக்கும் என எடுத்துக் காட்டினர்.‘அரசாங்கத்தின் தன்மையும் அராஜகமும்’ என்கிற தலைப்பில் பகுனின் எழுதிய நூலே அராஜகவாத இயக்கத்தின் வேத நூல் எனக் கருதப்படுகிறது. இதனை துல்லியமாகத் தாக்கி மார்க்ஸ், ‘ஸ்டாட்டிஸ்க்கீட் அண்ட் அனார்க்கி’ எனும் நூலை எழுதியிருந்தார். அது பகுனின் வரலாற்று மற்றும் சமுதாயக் கண்ணோட்டங்களைத் தோலுரித்துக் காட்டியது. 1926 ஆண்டு ரஷ்யாவில் இது வெளியிடப்பட்டது. ஏனெனில் பகுனின் கருத்தோட்டங்கள் வேறு வேறு அவதாரம் எடுப்பதால் அதற்கு எதிரான போராட்டமும் தொடர வேண்டியிருந்தது; இன்றும்தான்.
நன்றி : தீக்கதிர் , 9 – 01 – 2017.
0 comments :
Post a Comment