விதைதூவி ,,,களை எடுத்து...

Posted by அகத்தீ Labels:




புரட்சிப் பெருநதி – 12

விதை தூவி … களை எடுத்து

இவர் எழுதிய,
வரலாற்றில் தனி நபர் வகிக்கும் பாத்திரம்
எனும் நூல் இன்றும்
மார்க்சிய இயக்கங்களால்
மீண்டும் மீண்டும்
பேசப்படுகிறது;
வாசிக்கப்படுகிறது.

சு.பொ.அகத்தியலிங்கம்.



விவசாயிகளின் வலியைப் பாடிய கவிஞர் நெக்ரோட்சோவ்; 1877 இல் அவர் இறந்த அன்று நரோத்தினிக்குகள் அஞ்சலிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். நெக்ரோட்சோவ் கவிதைகளை உணர்ச்சி கொப்பளிக்க முழங்கி இரங்கல் உரையாற்றிக் கொண்டிருந்தான் 21 வயது இளைஞன் ஒருவன். ஜாரின் காவல்துறை அவனைக் கைது செய்யக் காத்திருந்தது. பேசி முடித்ததும் மெல்ல நழுவி கூட்டத்தில் கரைந்து போகிறான். காவல்துறை ஏமாந்தது. அந்த இளைஞன்தான் ஜார்ஜி வாலண்டினோவிச் பிளக்கனோவ்.

பிளக்கனோவ் 1856 இல் பிறந்தார். 1873 இல் ராணுவக் கல்லூரியில் சேர்ந்தார். அது பிடிக்காமல் 1874 இல் பொறியியல் படிப்புக்கு மாறினார் . அங்கு நரோத்தினிக்குகளால் கவரப்பட்டார். அவர் நன்கு படித்தபோதும் தீவிரவாத ஈடுபாடு காரணமாக கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டார். 1876 இல் நிலம் , விடுதலை என முழங்கி நரோத்தினிக்குகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார் . அப்போது 31 பேர் கைது செய்யப்பட்டனர் . அவர் தப்பிவிட்டார். இன்னொரு இடத்தில் துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்யக் கூடிய போது கைது செய்யப்பட்டார்,’  எனினும் இவரிடமிருந்து ஆட்சேபணைக்குரிய எதையும் கைப்பற்ற முடியாததால் விடுவிக்கப்பட்டார் . அடுத்து கவிஞர் அஞ்சலிக் கூட்டத்தில் பங்கேற்றபோது நடந்ததை துவக்கத்தில் பார்த்தோம் .பிளக்கனோவை போலீஸ் தேடத் துவங்கியது..

வெளிநாடு பறந்தார் .நாடு கடத்தப்பட்டவராயும் தலைமறைவாகவும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை புதிய பாஸ்போர்ட்டுகளை ஜோடித்துக் கொண்டு 37 ஆண்டுகள் சுவிட்சர்லாந்து, பிரான்சு, இத்தாலி என மாறி மாறித் திரிந்தார். அங்கு லீப்க்னெட், கவுட்ஸ்கி, கியூஸ்ட் போன்றோர் தொடர்பு கிடைத்தது.மார்க்சியத்தை கற்றறிந்தார். நரோத்தினிசம் பிழையான பாதை என்கிற முடிவிற்கு வந்தார் . ஆக்சல்ரோட், சாசுலீச்,இக்னடோவ்,டெயிஸ்ச் போன்றோருடன் இணைந்து 1888 இல் ஜெனிவாவில் தொழிலாளர் விடுதலைக் குழுவை அமைத்தார். ரஷ்யாவின் சமூக ஜனநாயக அமைப்பும் முதல் மார்க்சிய விதையும் இதுவே!

மார்க்ஸ், ஏங்கெல்ஸ் சிந்தனைகளைப் பரப்ப கம்யூனிஸ்ட் அறிக்கை , கற்பனா சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும், கூலி உழைப்பு மூலதனம் போன்ற அடிப்படை நூல்களை ரஷ்ய மொழியில் மொழியாக்கம் செய்து முதன் முதலாக வெளியிட்டது இக்குழு.

1883 – 85 இல் இவர் எழுதியசோஷலிசமும் அரசியல் போராட்டமும், நமது வேறுபாடுகள் ஆகிய நூல்கள் நரோத்தினிசத்தை உறுதியாய் எதிர்த்தன. வரலாறு என்பது வீரர்களாலும் , மகத்தான மனிதர்களாலும் உருவாக்கப்படுகிறது.. என்ற நரோத்தினிக்குகள் கூற்றை பிளக்கனோவ் உடைத்தெறிந்தார்; வரலாறு என்பது மக்களால், சமுதாய வர்க்கங்களால் உருவாக்கப்படுகிறது என நிறுவினார். இவர் எழுதிய, வரலாற்றில் தனி நபர் வகிக்கும் பாத்திரம் எனும் நூல் இன்றும் மார்க்சிய இயக்கங்களால் மீண்டும் மீண்டும் பேசப்படுகிறது;வாசிக்கப்படுகிறது.

நான் ஏங்கெல்சுடன் நெடிய உரையாடல் மேற்கொள்ளும் அரிய மகிழ்ச்சிகரமான வாய்ப்பைப் பெற்றேன். ஏறத்தாழ ஒரு வார காலம் அவருடன் சித்தாந்தம் மற்றும் நடைமுறை பிரச்சனைகளை விவாதித்தேன் என்கிறார் பிளக்கனோவ். 1889 இல் பாரீசில் நடந்த இரண்டாவது அகிலத்தின் முதல் காங்கிரஸில் லீப்க்னெக்ட், மார்க்ஸ் போன்றோருடன் ரஷ்ய சோஷலிஸ்ட் பிரதிநிதிகளாக பிளக்கனோவ், ஆக்சல்ரோட் ஆகியோர் கலந்து கொண்டனர். அதன் பின் லண்டன் சென்று ஏங்கெல்சை சந்தித்தார் .

சர்வதேச சமூக ஜனநாயக இயக்கத்தில் தலையெடுத்த திருத்தல்வாதிகளின் [ பெர்னிஸ்டின் போன்றோர்]வெற்று ஆரவாரங்களை ; மிகச் சரியாக உறுதியாக இயக்கவியல் பொருள் முதல்வாத நிலைபாட்டிலிருந்து கண்டித்த ஒரே மார்க்சியவாதி பிளக்கனோவ்தான் என்றார் லெனின். மார்க்சியத்தின் அடிப்படைப் பிரச்சனைகள் எனும் நூல் தத்துவ ஆயுதமானது . நரோத்தினிக்குகள் விவசாயிகள் புரட்சி பற்றி பேசிக்கொண்டிருந்த போது ; தொழிலாளி வர்க்கத்தின் தலைமையிலேயே புரட்சி சாத்தியம் எனவும் , .அரசியல் போராட்டங்களின் தேவையை குறைத்து மதிப்பிட்டிருந்த நரோத்தினிக்குகளுக்கு பதிலடியாக தொடர்ந்து அரசியல் போராட்டம் நடத்த வேண்டியதின் அவசியத்தையும் எடுத்துரைத்தார் .

மார்க்சியத்துக்கு ஆதரவாக அல்லது வரலாற்றுப் பொருள் முதல்வாதக் கருத்துக்கு ஆதரவாக என்ற தலைப்பில் தாம் எழுதிய நூலை உளவுத்துறையின் கண்ணில் மண்ணைத் தூவ ஒரு பொருண்மைவாதக் கருத்தின் வளர்ச்சி என்று தலைப்பிட்டு 1895 இல் ரஷ்யாவில் சட்டப்பூர்வமாகவே வெளியிட்டார். 1895 இல் சுவிட்சர்லாந்தில் லெனினை சந்தித்தார். தொடர்ந்து அவரோடு உரையாடினார் இணைந்து செயல்பட்டார். ரஷ்யாவில் இயங்கி வந்த சமூக ஜனநாயக் குழுக்களை இணைத்து ஒரே கட்சியாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட போது .நகல் திட்டத்தை தயாரிக்கும் பொறுப்பு பிளக்கனோவுக்கு தரப்பட்டது . பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம், ரஷ்யாவில் முதலாளித்துவத்தின் வளர்ச்சி, முதலியன அவ்வறிக்கையில் இடம்பெறவில்லை. . நிலங்களை நாட்டுடைமை ஆக்குதல் எதிர்விளைவை உருவாக்கும் என்கிற லெனின் கருத்திலும் மாறுபட்டார்.

1903 இல் பிளக்கனோவ் துவக்கி வைக்க மாநாடு வெற்றிகரமாக நடந்தது . ஆனால் இரண்டே மாதங்களில் பிளக்கனோவ் தலைமையில் மென்ஷ்விக்குகள் , லெனின் தலைமையில் போல்ஷ்விக்குகள் என இரண்டாகப் பிரிந்தது. 1905 இல் நடந்த புரட்சியில் மென்ஷிவிக்குகள் பக்கமே நின்றார்.

முதலாளிகளையும் தொழிலாளிகளையும் தவிர வேறு சமூக சக்தி ஏதுமில்லை என்றார் . தொழிலாளர் விவசாயி நேச இணைப்பைக் காண மறுத்தார். பின்னர் தன் போக்கை மாற்றி இன்னொரு திருத்தல்வாதப் போக்கை எதிர்த்து, பொருள்முதல்வாத முன்னணி வீரர்கள் என்ற நூலை எழுதினார். லெனின் பாராட்டினார். முதல் உலக யுத்தம் வந்த போது தடுமாறினார். தேசிய நலன் எனக்கூறி முதலாளிகளையும் நிலப்பிரபுக்களையும் எதிர்த்த போல்ஷ்விக்குகள் போராட்டத்தைக் எதிர்த்தார்.

1917 ஆம் ஆண்டு பிப்ரவரிப் புரட்சிக்கு பிறகே நாடு திரும்பினார் . ஆனால் லெனின் தலைமையில் தொடர்ந்த சோஷலிசத்திற்கான புரட்சியை அவநம்பிக்கையோடு பார்த்தார் . விமர்சித்தார். ரஷ்ய நாடு சோஷலிசப் புரட்சிக்கு இன்னும் பக்குவப்படவில்லை என வாதிட்டார். 1917 இறுதியில் நோய்வாய்ப்பட்டார். மருத்துவ ஓய்வுக்காக பின்லாந்து சென்றார். 1918 மே 18 இல் அங்கு காலமானார். அவர் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு அவரது உடல் ரஷ்யாவிற்குக் கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. லெனின் முயற்சியால் அவருக்கு ஒரு நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டது.
புரட்சி தொடரும் ..
நன்றி : தீக்கதிர் , 23/01/2016 .


0 comments :

Post a Comment