“சொத்து” என்றாலே “திருடியது’ என்றார்

Posted by அகத்தீ Labels:



புரட்சிப் பெருநதி - 8

சொத்து என்றாலே திருடியது என்றார்


1846 ஆம் ஆண்டு பிரெளதன்  எழுதிய வறுமையின் தத்துவம் என்ற நூலும்
அதனை விமர்சித்து கார்ல் மார்க்ஸ் எழுதிய தத்துவத்தின் வறுமை என்ற நூலும்
இன்றும் சமூகமாற்றத்தில் அக்கறையுள்ள ஒவ்வொருவரும் அவசியம் படித்து
உள்வாங்க வேண்டிய அடிப்படை நூல்களாகும்.

சு.பொ.அகத்தியலிங்கம்


1630 இல் காற்றாலை மூலம் இயங்கும் மரமறுக்கும் இயந்திரம் ஒன்று லண்டனுக்கு அருகில் அமைக்கப்பட்டபொழுது அது மக்களால் அழித்தொழிக்கப்பட்டது. 1758 இல் நீர்விசையால் இயங்கும் கம்பளி கத்தரிக்கும் இயந்திரம் ஒன்றை எவரெட் நிறுவினார்; ஆனால் வேலை இழந்த தொழிலாளிகளால் தீயிட்டு பொசுக்கப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் தொழிலாளர்கள் கூட்டமாக இயந்திரங்களை உடைத்து வன்முறையில் ஈடுபடுவது அதிகரித்துவந்தது” என்கிறார் சுகுமால் சென்.

தொழில் புரட்சியில் பிறந்த நவீன பாட்டாளிவர்க்கமே ஆரம்பத்தில் கட்டற்ற கோபத்தை வன்முறை மூலமே வெளிப்படுத்தியது எனில் பிற வர்க்கத்தின் கோபமும் ஒழுங்கமைக்கப்படாத அல்லது அராஜக வழியிலேயே ஆதியில் வெளிப்பட்டிருக்கமுடியும்.தீர்வுகளும் கற்பனாவாதமாகவே முகிழ்த்திருக்க முடியும்.

ரஷ்யாவில் மக்களைத் திரட்டுவதில் நம்பிக்கை இழந்த நரோத்தினிசம் பற்றிப் பார்த்தோம். மைக்கேல் பகுனின் ரஷ்யச் சூழலில் உருவான முக்கியமான ‘அராஜகவாதி’. அவரின் தத்துவக் கண்ணோட்டத்தையும் அணுகுமுறையையும் எதிர்த்து லெனினும் மார்க்சும் நடத்திய தத்துவப் போர் நெடியது. பகுனினுக்கு முந்தைய பிரெளதன் பியாரி ஜோசப்பிடமிருந்தே கருத்துப் போரைத் தொடங்கினர்.


பிரெளதன் 1809 இல் பிரான்சில் பிறந்தார். பள்ளிப்படிப்பு அரைகுறையாய் முடிந்தது. அச்சகப் பணியில் ஈடுபட்டார். சுயமுயற்சியில் நிறைய வாசித்தார். 1837 லேயே மொழி குறித்து தன் முதல் நூலை வெளியிட்டார் .


1840 இல் “சொத்து என்றால் என்ன?” என்ற புத்தகம் வெளியிட்டார். 1844 இல் கோடைக் காலத்தில் மார்க்ஸ் பிரெளதனைச் சந்தித்தார். பிரெளதன் ஏழைவிவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவர். நேரடியாக முதலாளித்துவத்தின் கீழ் உழைக்கும் மனிதன் எவ்வாறு கஷ்டப்படுகிறார்கள் எனக் கண்ணாரக் கண்டவர். அவருடைய உள்ளாழம் மிக்க அக்கறை கண்டு மார்க்ஸ் வியந்தார். அதே நேரம் அந்நூல் சொத்துடைமையை அடிப்படையில் எதிர்க்காமல் பெரும் செல்வத் திரட்சியை ‘திருடியது’ என பழிப்பதை மார்க்ஸ் விமர்சித்தார்.


ஆயினும், “பிரெளதனின் இந்தப்படைப்பு புனிதத்திலும் புனிதமாக கருதப்பட்ட பொருளாதாரத்தில் கைவைத்தது; முன்னுக்குபின் முரணான வாதம்; சூடேற்றும் விமர்சனம்; கடுமையான வஞ்சப்புகழ்ச்சி; அங்குமிங்குமாய் சில துரோகங்கள்; இருக்கின்ற அமைப்பின் பால் மெய்யான கலப்படமற்ற கோப உணர்ச்சி; இவையனைத்தையும் ஒன்றாகக்கூட்டி மின்சாரத்தை பாய்ச்சுவதுபோல் பெரும் தாக்கத்தை உருவாக்க வல்லதாக இந்நூல் உள்ளதென” மார்க்ஸ் கூறினார்.


1846 ஆம் ஆண்டு பிரெளதன் எழுதிய “வறுமையின் தத்துவம்” என்ற நூலும் அதனை விமர்சித்து கார்ல் மார்க்ஸ் எழுதிய “தத்துவத்தின் வறுமை” என்ற நூலும் இன்றும் சமூகமாற்றத்தில் அக்கறையுள்ள ஒவ்வொருவரும் அவசியம் படித்து உள்வாங்க வேண்டிய அடிப்படை நூல்களாகும்.


இந்த நூல் எழுதுவதற்கு முன் கூர்மையான தத்துவஞானியாக இருந்த மார்க்ஸ் இந்நூல் மூலம் பொருளாதார ஞானியாகவும் மாறினார் . பின்னர் 1880ல் மார்க்சே ஒப்புக்கொண்டது போல், “இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் மூலதனம் எனும் நூலில் விரிவாக விளக்கப்பட்ட தத்துவத்தின் கருவடிவம் இந்நூலில் அடங்கி இருந்தது.”


பிரெளதனுடைய நூலின் சாரம் முதலாளித்துவத்தையும் அதன் அடிப்படையையும் மாற்றுவதல்ல; மாறாக பண்ட உற்பத்தியின் கெட்ட கூறுகளை நீக்கிவிட்டு நல்லனவற்றை வரையறுத்து காண்பிப்பதுதான். இந்நூல் விஞ்ஞான சோஷலிசத்தை முன்வைக்கவில்லை; கற்பனாவாத சோஷலிசமாகவே இருந்தது.


பிரெளதன் முன்மொழிந்த வங்கிச் சீர்திருத்தங்கள் பண்டமாற்று முறையை முன்வைத்தது; தங்கம், வெள்ளி ஆகியவற்றை மதிப்பற்ற பண்டமாக கருதச் சொன்னது; உற்பத்தியின் பாத்திரத்தை குறைத்து மதிப்பிட்டு வர்த்தகச் சுழற்சியின் பாத்திரத்தை மிகைப்படுத்தியது.பணமற்ற, லாபமற்ற பண்டமாற்று முறையில் குற்றங்களும், பசி, பஞ்சமும் அருகிப்போகுமென வாதிட்டது. இவை மேம்போக்கானவை; அடிப்படையற்றவை; தவறானவை என மார்க்சும் லெனினும் எதிர்த்து கருத்துப்போர் புரிந்தனர்.


பிரெளதனின் கருத்துப்படி சமூக சீர்திருத்தத்துக்கு அடிப்படைப் பாதை புரட்சி அல்ல; புனரமைக்கப்பட்ட பண்டமாற்றே! இதனை பிரச்சாரம் செய்ய “மக்களின் பிரதிநிதி” என்ற பத்திரிகையும் கொணர்ந்தார் .


1848 இல் பிரெஞ்சு அரசியல் நிர்ணய சபை உறுப்பினரானார் . தொழிலாளர்கள் மீது 1848 ஜூனில் நடந்த தாக்குதல்களை கடுமையாக கண்டித்து நாடாளுமன்றத்தில் ஆவேசமாக உரையாற்றினார்; அதைத் தொடர்ந்து தன் பண்டமாற்றை போதிக்கத் துவங்கி கேலிக்கூத்தாகிவிட்டார்.
மக்கள் வங்கியை உருவாக்குவது; பணத்தை சேமித்து தொழிலாளர்கள் தொழிற்சாலை பங்குகளை வாங்குவது என கற்பனைக் கோட்டை கட்டினர்.


1849 இல் பிரெஞ்சு ஜனாதிபதி லூயி நெப்போலியன் போனபர்ட்டை எதிர்த்து கடுமையாக எழுதியதால் மூன்றாண்டு சிறைத் தண்டனை பெற்றார் . மக்கள் பிரதிநிதி ஏட்டிற்கும் அபராதம் விதித்து முடக்கப்பட்டது; ஆயினும் நண்பர்கள் உதவியால் அபராதத்தைக் கட்டி ஏடு தொடர்ந்தது; சிறையிலிருந்தபடியே எழுதிக் கொண்டிருந்தார். ‘புரட்சிப் போராளியின் ஒப்புதல் வாக்குமூலம்’, ‘19வது நூற்றாண்டு புரட்சியைப் பற்றிய பொதுவான பார்வை’ ஆகிய நூல்கள் வெளிவந்தன. 1851 இல் ஏங்கெல்சுக்கு எழுதிய கடிதத்தில் மார்க்ஸ் குறிப்பிட்டார், “அது கம்யூனிசத்துக்கு எதிரான வாதப்பிரதிவாத நூலாகும்.” “குட்டி பூர்ஷ்வா வர்க்கத்தை உயர்வுபடுத்த பாட்டாளிவர்க்கத்தை மிகவும் குறைத்தும் இழித்தும் பிரெளதன் கருத்துகளைப் பரப்பினார்” என மார்க்சிய மூலவர்கள் சரியாகச் சுட்டினர்.


1858 இல் “புரட்சியிலும் திருச்சபையிலும் நியாயம்” எனும் முழுக்க முழுக்க மத எதிர்ப்பு நூலொன்று படைத்தார்; விளைவு மீண்டும் சிறையிலடைக்கப்பட்டார். பெல்ஜியத்துக்கு தப்பியோடினார் .1860 இல் பொது மன்னிப்பு பெற்றார். இறுதிவரை பிரான்சுக்குத் திரும்பவில்லை. 1865 இல் மரணமடைந்தார்.


எவரெல்லாம் ஏழையோ அவரெல்லாம் என் இரத்தத்தின் இரத்தமான உடன்பிறப்பென அவர் அடிக்கடி சொல்லுவார். அதற்கான உரிமை அவருக்கு உண்டு. அவர் உளப்பூர்வமாக உழைத்தார்; ஆனால் விஞ்ஞான சோஷலிசமாக அவர் சிந்தனை விரிவு கொள்ளவில்லை. குட்டி முதலாளித்துவ கருத்தமைவுகளுக்கு அப்பால் அவர் செல்ல இயலவில்லை .


1880 இல் ஏங்கெல்ஸ் எழுதினார், “ஐரோப்பிய தொழிலாளர் வர்க்க இயக்கத்தின் வரலாற்றில் பிரெளதன் பாத்திரம் மகத்தானது .ஆரவாரமின்றி பணியாற்றியதால் அவர் புறக்கணிக்கப்பட்டார். சித்தாந்த ரீதியில் அவர் ஏற்றுக்கொள்ளப்படவில்லை . நடை முறையில் ஓரங்கட்டப்பட்டார் . எனினும் வரலாற்று ரீதியான ஆர்வத்தை அவர் இன்றும் மூட்டிக்கொண்டே இருக்கிறார்.”
ஆம் இன்றும் சோஷலிசத்தை ஆராயப் புகின் அவருடைய தத்துவத்தின் தாக்கம் புதிய புதிய வடிவங்களில் புதிய புதிய சொற்களில் வருவதை எதிர்கொண்டே ஆகவேண்டும்.
புரட்சி தொடரும்…
நன்றி : தீக்கதிர் . 26 -12-2016.


0 comments :

Post a Comment