பாதை தவறு : கோபம் நியாயம்...

Posted by அகத்தீ Labels:






புரட்சிப் பெருநதி – 5

பாதை தவறு;கோபம் நியாயம்


சு.பொ.அகத்தியலிங்கம்


அலெக்சாண்டர் உல்யானவ், பொகோமி அந்தோரோவ்ஸ்கின்,
வசிலி செர்னோலோவ். வசிலி ஒபிஸினோவ்
மற்றும் பீட்டர் ஷெவ்ரேவ் என ஐவர்
மே 8 ஆம் நாள் தூக்கிலிடப்பட்டனர்.



ஆற்றில் மிதந்து வந்த தெப்பங்கள் மிகவும் வித்தியாசமாக இருந்தன . அதில் நடப்பட்டிருந்த தூக்கு மரங்களில் கலகக்காரர்கள் உடல்கள் தொங்கவிடப்பட்டிருந்தன . இந்தக் காட்சியை கொஞ்சம் மனக் கண் முன் கொண்டு வாருங்கள் ! நெஞ்சம் பதைக்கும்!புஷ்கின் எழுதிய ‘கேப்டன் மகள்’ என்கிற நாவலில் இப்படி ஒரு கொடூரமான காட்சி தீட்டப்பட்டிருக்கும். ஜெயகாந்தன் இதனை மொழி பெயர்த்திருப்பார்.ஜாரின் கொடுங்கோலாட்சியின் போது, 1830ல் இந்நாவலை புஷ்கின் எழுதினார்.

ரஷ்யாவின் அன்றைய யாயி நதிக்கரையில் வாழ்ந்த மக்களும் பக்ரீஷியர் எனும் பழங்குடியினரும் இணைந்து ஜாராட்சிக்கு எதிராக நடத்திய கலகத்தினை புஷ்கின் நாவலாக்கி இருந்தார் .1825 டிசம்பரிஸ்ட் எழுச்சி முறியடிக்கப்பட்டாலும் இது போன்ற விவசாயக் கலகங்கள் தொடர்ந்த வண்ணம் இருந்தது. 1840-1860 ரஸ்னொசிண்ட்ஸி என்றழைக்கப்பட்ட விவசாயிகள், கீழ் மத்திய தரவர்க்கம், மதகுருமார்களின் தலைமையில் கலகங்கள் தொடர்ந்தன.1870 களில் இவ்வியக்கம் தகிக்கத் துவங்கியது. தலைமை தாங்கியவர்கள் ‘நரோத்னிக்’ என ரஷ்ய மொழியில் அழைக்கப்பட்டனர்.

நரோத்னிக் என்றால் மக்கள் என்றே பொருள் . ‘மக்களிடம் செல்லுமாறும் விவசாயிகளைத் திரட்டுமாறும்’ அறிவுஜீவிகளை தூண்டியது இவ்வியக்கம். புகழ்வாய்ந்த தலைவர்களாலும் வீரர்களாலுமே வரலாறு உருவாக்கப்படுவதாகவும் ; மக்கள் கூட்டம் குறிப்பாக விவசாயப் பெருங்குடிகள் விசுவாசத்தோடு அவர்களைப் பின்பற்றுவார்களென கணக்குப் போட்டனர் .எதற்கும் தயாரான சிறுகூட்டத்தை மட்டுமே முன்வைத்து திட்டமிட்டனர். நிக்கோலாய் பக்கூன் பியோதர், லாவ்ரோவ்,கசேவ் போன்ற புகழ்பெற்ற நரோத்னிக் தலைவர்கள் ஆவர்.இவர்களின் கணக்கு தப்பானது. மக்களை வென்றெடுக்க முடியவில்லை .

சலிப்பும் விரக்தியும் வேர்விடலாயின. ‘வரலாற்றில் தனிநபர் பாத்திரம்’ போன்ற புகழ்மிக்க நூல்களை எழுதியவரும் – ஆரம்ப கால ரஷ்ய மார்க்சிய சிந்தனையாளர்களில் ஒருவருமான பிளக்கனோவ் ஆரம்பத்தில் ஒரு நரோத்னிக்கே !இதில் ஒரு பிரிவினர் அதிகாரிகளை கொலை செய்வதன் மூலமும் தனிநபர் பயங்கரவாதம் மூலமும் முன்னேற முடியும் என திட்டமிட்டனர் . நரோத்னிக்குகளிடையே இவர்கள் கை ஓங்கியது .இவர்கள் ‘நரோத்னாயா வோல்யா’ அதாவது ‘மக்கள் விருப்பம்’ என்றழைக்கப்பட்டனர்.ஜார் மன்னனைக் கொல்ல நடந்த சில முயற்சிகள் தோல்வி அடைந்தன;1887 மே மாதத்தில் ஒரு நாள் ரஷ்யபுரட்சியின் தளநாயகர் லெனின் ஒரு அதிர்ச்சி செய்தியை அறிந்தார்; இது குறித்து அவர் வரலாற்றை எழுதிய மரியா பிரிலெழாயெவா எழுதுகிறார்;‘தெரு விளக்குக் கம்பத்தின் அருகே சில நபர்களை விளாடிமிர் (லெனின்) கண்டான். கம்பத்தில் ஏதோ காகிதம் ஒட்டப்பட்டிருந்தது.

பலர் அதனைப் படித்துக் கொண்டிருந்தனர். விளாடிமிரைக் கண்டதும் அப்பாவின் உடன் பணியாற்றிய அதிகாரிகள் முகத்தைத் திருப்பிக் கொண்டு ஓடினர். கூடியிருந்த கூட்டமும் கலைந்தோடியது. விளாடிமிர் அறிவிப்பைப் படித்தான். அவன் கண்கள் இருண்டன. ஜார் மூன்றாம் அலெக்சாண்டரைக் கொல்ல முயன்ற ஐந்து மாணவர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்படிருந்தது. ‘ஆம். லெனினின் மூத்த சகோதரர் அலெக்சாண்டர் இலியெச் உல்யானவும் அதில் ஒருவர். அவர் நரோத்னிக் தத்துவத்தால் கவரப் பட்டவர்.

ஜாரின் அடக்குமுறை மாணவர்களிடையே பெரும் கோபத்தை விதைத்திருந்தது. ஜாரைக் கொல்ல சில மாணவர்கள் திட்டமிட்டனர். தன் தந்தை ஜார் இரண்டாம் அலெக்சாண்டர் கொலை செய்யப்பட்டதன் ஆறாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்த ஜார் மூன்றாம் அலெக்சாண்டர் 1887 மார்ச் முதல்நாள் வருவதை அறிந்து அங்கு குண்டுவீசி கொல்ல மாணவர்கள் முயற்சித்தனர். லெனின் அண்ணன் அலெக்சாண்டர் குண்டு தயாரிக்க வேதியியல் யுத்திகளை வகுத்து உடன் இருந்து உதவினார். முயற்சி தோல்வி அடைந்தது . ‘நரோத்னாயா வோல்யா’ குழுவைச் சார்ந்த 15 மாணவர்கள் இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டனர். விசாரணை நாடகம் நடந்தது. விசாரணையில் அலெக்சாண்டர் ஒரு அரசியல் உரையே நிகழ்த்தினார்.

அதில் அரசின் கொடுங்கோன்மையை கடுமையாகச் சாடினார். நரோத்னிய சிந்தனையின் போதாமையையும் தன் உரையில் ஒப்புக் கொண்டார். ஜார் சிலரை மன்னித்தார். அலெக்சாண்டர் உல்யானவ், பொகோமி அந்தோரோவ்ஸ்கின், வசிலி செர்னோலோவ். வசிலி ஒபிஸினோவ் மற்றும் பீட்டர் ஷெவ்ரேவ் என ஐவர் மே 8 ஆம் நாள் தூக்கிலிடப்பட்டனர். நாடெங்கும் கடும் அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டது.மறுபுறம் ஜார் அறிவித்த நிலச்சீர்திருத்தம் வெறும் மோசடியாகவே இருந்தது.

ஒன்றுக்கும் உதவா களர் நிலங்களை விவசாயிகளுக்கு கிள்ளிக் கொடுத்துவிட்டு; ஒரு கோடி விவசாயிகளின் விளைநிலங்களை முப்பதாயிரம் நிலப்பிரபுக்கள் ஏப்பம் விட வழி செய்யப்பட்டது. இன்னொரு புறம் தொழிற்புரட்சியின் சிறிய வீச்சு ரஷ்யாவிலும் பாட்டாளி வர்க்கத்தைப் பிரசவித்தது. இருண்ட சேறு நிரம்பிய சுரங்கங்கள், தூசு நிறைந்த பஞ்சாலைகள், வேக்காடு மிகுந்த ஊதுலைப் பட்டறைகள் என படர்ந்தது. சுமார் ஒரு கோடி எண்ணிக்கையைப் பாட்டாளி வர்க்கம் எட்டியது.

தினசரி 12 மணி நேரம், 16 மணி நேரம் என வேலை வாங்கப்பட்ட தொழிலாளர்களிடையே அதிருப்தியும் சினமும் மேலோங்கத் தொடங்கியது.ரஷ்யரல்லாத பிற தேசிய இனங்கள் அப்போது மொத்தமக்கள் தொகையில் 57 சதவீதமாக இருந்தனர். அவர்களை ஜாராட்சி இரண்டாந்தர குடிமக்களாய்க் கொடுமைப்படுத்தியது. இதன் எதிரொலியும் உரத்து கேட்கத் துவங்கின.1870 முதல் 1879 வரை வெடித்த 326 தொழிலாளர் வேலை நிறுத்தப் போராட்டங்கள் சரியான இலக்கோ அரசியல் பார்வையோ இல்லாமல் பெரும் தோல்வியைச் சந்தித்தன.

தொழிலாளர்களிடையே உருவாகிவந்த முற்போக்குப் பிரிவினர் முதலில் நரோத்னிக் தத்துவத்தால் ஈர்க்கப்பட்டாலும் அவை பயன்தராது என விரைவில் உணரத் துவங்கினர்.சகோதரனின் மரணம் லெனினைப் பாதித்தது. எனினும் நரோத்னிக் பாதையை தவறெனப் பார்த்தார். ‘தனது விடுதலைக்காக முயற்சி செய்யும் ஒவ்வொரு வர்க்கமும் - ஆதிக்கம் பெற நினைக்கும் ஒவ்வொரு அரசியல் கட்சியும் - எந்த அளவு முற்போக்கான சமுதாயப் போக்குகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறதோ - தன் காலத்துக்கே உரிய முற்போக்கு சிந்தனைகளைத் தாங்கிச் செல்லும் சாதனமாக உள்ளதோ – அந்த அளவுக்கு அது புரட்சிகரமானதாகும்.

உள்ளடக்கத்தில் புரட்சிகரமான கருத்துகூட ஒருவிதத்தில் வெடிமருந்தே ஆகும். உலகில் வேறெந்த வெடிமருந்தும் அதன் இடத்தை நிரப்பவே முடியாது’ என்கிற பிளக்கனோவ் கருத்து ஓரிரவில், ஒற்றை முயற்சியில் கைகூடவில்லை.நரோத்னிக்குகளின் புரட்சிகர உணர்வையும்; பாட்டாளி வர்க்க தத்துவத்தையும் சரியான விகிதத்தில் கலந்து ரஷ்யப் புரட்சிக்கு உந்துவிசையான லெனின் களத்துக்கு வந்தார்.
புரட்சி தொடரும் …

நன்றி : தீக்கதிர் , 05/12/2016.


0 comments :

Post a Comment