வசந்த புஷ்பம் : கப்பல் சுமந்த செய்தி

Posted by அகத்தீ Labels:







புரட்சிப் பெருநதி – 6


வசந்த புஷ்பம் : கப்பல் சுமந்த செய்தி

சு.பொ.அகத்தியலிங்கம்




மொத்தத்தில் சர்ச் மேலிடம் அரசுத்துறையின்
ஒரு பகுதி போல
  அரசு சார்பான கலாச்சார போலீஸ் போல
செயல்பட ஆரம்பித்தது.


கப்பல்களுக்கும் புரட்சிகளுக்கும் எப்போதும் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு..
கிறிஸ்தவ மத நம்பிக்கையாளர்களிடையே நோவாவின் கப்பலுக்கு ஒரு முக்கிய இடம் உண்டு.ஊழிப் பேரழிவின் போது ஆண்டவனின் விருப்பப்படி ஆதாமின் எட்டாம் தலைமுறையைச் சார்ந்த நோவா செய்த கப்பலில் அனைத்து ஜீவராசிகளை மீட்டதாக அந்தக் கற்பனைக் கதை நீளும்.இப்போதும் அந்த நம்பிக்கையை பிடித்துக்கொண்டு நோவாவின் கப்பலைத் தேடிக் கண்டுபிடிக்க சில கிறிஸ்தவ நாடுகள் சேர்ந்து ஒரு குழு அமைத்து பணத்தை விரயம் செய்யும் அறியாமையை என்னென்பது?
இந்திய விடுதலைப் போரில் காமகட்டமாரு ,தல்வார் கப்பல்களின் பங்கை அறிவோமா?
ரஷ்யப் புரட்சியின் வரலாற்றை அசைபோடும் யாரும் பேட்டில்ஷிப் போட்டம்கின், அரோரா கப்பல்களை நினைக்காமல் இருக்க முடியாது .
மே பிளவர் அதாவது வசந்த புஷ்பம் எனும் கப்பலையும் மறக்க இயலுமோ ?.
அரசர் எட்டாவது ஹென்றி பிராட்டஸ்டண்டைத் தழுவியதும் இங்கிலாந்து பிராட்டஸ்டண்டு நாடாகிவிட்டதாகவே கருதப்பட்டது ..
ஹென்றிக்கு பின் அவரது புதல்வி எலிசபெத் பட்டத்துக்கு வந்தார் . ஸ்பானிய போர்ச்சுக்கீசிய கடலோடிகள் கண்ட வெற்றியால் உத்வேகம் பெற்ற இங்கிலாந்தும் அமெரிக்காவுக்கு கடல்மார்க்கம் கண்டுபிடிக்க ஆர்வம் காட்டியது .1603 இல் எலிசபெத் மரணமடைந்தார் .ஸ்காட்லாந்து மன்னன் ஜேம்ஸ் வாரிசு அடிப்படையில் முடிசூட்டிக்கொண்டார்.
முதலாம்ஜேம்ஸ் என அழைக்கப்பட்ட இவன் கொடூரன். நாடாளுமன்றத்தை மதிப்பதே இல்லை . அரச கட்டளை தெய்வ கட்டளையே என்றான். அங்குள்ள சர்ச்சுகளே ஆங்கிலேயன் சர்ச் எனப்படலாயிற்று. இதனை புராட்டஸ்டண்டிலுள்ள ஒரு பிரிவினர் ஏற்கமறுத்தனர் .இவர்கள் அரசனின் ஆதிக்கம் உள்ள சர்ச்சுகளைப் புறக்கணித்தனர். இவர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்பட்டது. அரசனுக்கு வரி கட்ட மறுப்பதே மதவிரோதமாக அறிவிக்கப்பட்டது. மாற்று மதக் கருத்து கொண்டோரைத் தண்டித்தார். மொத்தத்தில் சர்ச் மேலிடம் அரசுத்துறையின் ஒரு பகுதி போல அரசு சார்பான கலாச்சார போலீஸ் போல செயல்பட ஆரம்பித்தது என்கிறார் உலக மக்களின் வரலாற்றை எழுதிய கிறிஸ் கார்மன்.
இதனை ஏற்கமறுத்த புராட்டஸ்டண்டில் சிலர்; நாட்டைவிட்டு வெளியேற முடிவெடுத்தனர். வசந்த புஷ்பம் கப்பலில் சுமார் 120 பேர் அட்லாண்டிக் கடலில் அமெரிக்கா நோக்கி பயணப்பட்டனர். கடலில் கடும் இயற்கை சிக்கல்களை எதிர்கொண்டு சுமார் மூன்று மாதம் பயணித்து அமெரிக்காவின் வடகரையில் நீயூ ஃபிளைமுத் எனும் இடத்தில் தரை இறங்கினர். ஏற்கெனவே வெர்ஜீனியாவில் சிலர் டச்சிலிருந்து வந்து குடியேறி இருந்தனர். இப்படி ஐரோப்பா முழுவதுமிருந்து குடியேறியவர்கள் 13 மாநிலங்களை உருவாக்கினர். உள்நாட்டு சிகப்பிந்தியர்களைக் கொன்றுகுவித்து அந்த இரத்தச் சகதியில்அமெரிக்கா குடியேற்றநாடு உருவானது தனிக்கதை.
ஆக, வசந்த புஷ்பம் வரலாற்றில் புதுச்செய்தியானது. இதில் பயணித்தவர்களை வரலாற்றில் புனித யாத்திரிகர்கள் எனக் குறிப்பிட்டனர்.
முதலாம் ஜேம்ஸின் மகன் முதலாம் ஜார்ஸ் அரசனானதும். நாடாளுமன்றத்துக்கும் அரசனுக்கும் மோதல் முற்றியது. நாடாளுமன்றம் சமர்ப்பித்த உரிமை மனு அரசனின் எதேச்சதிகார செயல்களுக்கு கடிவாளம் போட்டது.. 1924 இல் உள்நாட்டுப் போர் துவங்கியது .நிலப்பிரபுக்களும் ராணுவத்தின் பெரும்பகுதியும் மதபீடமும் அரசனின் பக்கம் நின்றது ; 1942 இல் அரசன் சில நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கைது செய்துவிட்டு படையோடு நகருக்குள் நுழைந்தான். ஆனால் மக்கள் கையில் கிடைத்த ஆயுதங்கள் , வெந்நீர் அண்டாக்கள் இவற்றால் எதிர்கொண்டு விரட்டியடித்தனர் .கிரஹாம்வெல் அமைத்த இரும்புப் படை கடுமையாகப் போரிட்டது. முதலாம் சார்லஸ் சிறை பிடிக்கப்பட்டார்.


இதற்கு முன்பும் இங்கிலாந்து அரசகுடும்பத்தினர் பலர் துரோகத்தால் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் நாடாளுமன்றம் விசாரணைக்குழு அமைத்து விசாரித்து ; தீர்ப்பும் வழங்கி முதலாம் சார்லஸ் தலை சீவி வீசப்பட்டது ; இங்கிலாந்து வரலாற்றில் இதற்கு முன்பு நிகழாத ஒன்று .

கிரஹாம்வெல் முடியாட்சி ஒழிந்ததென்றும் குடியாட்சி மலர்ந்ததென்றும் அறிவித்தான்; ஆரவாரமான பேச்சு மட்டுமே இருந்தது . செயலில் எதுவும் மாறவில்லை.


சம்பளம் இல்லாமல் ராணுவம் கலைக்கப்படுவதையோ அயர்லாந்தில் தொடரும் முடிவற்ற யுத்தத்துக்கு அனுப்பப்படுவதையோ ராணுவம் விரும்பவில்லை. மக்களிடமும் அதிருப்தி பரவியது .
ரிச்சர்ட் ஓவன், ஜான் வைமன் ,வில்லியம் வைல்வைன் , ஜான்லிபர்னே போன்றவர்களால் தலைமை தாங்கப்பட்ட சமத்துவவாதிகள் புரட்சிகர ஜனநாயக்குழுவினர் செல்வாக்கு அதிகரிக்க ஆரம்பித்தது.
இங்கிலாந்தின் பரம ஏழைக்கும் மிகச் சிறந்த வாழ்க்கை வாழ உரிமை இருக்கிறது என்று நான் கருதுகிறேன். தன் குரல் ஒலிக்க முடியாத ஒரு அரசாங்கத்திற்கு இங்கிலாந்தின் ஒரு பரம ஏழை கட்டுப்பட வேண்டிய அவசியமில்லை என ரெயின்போரே என்கிற அதிகாரி ஒரு விவாதத்தில் கிரஹாம்வெல்லிடம் சொன்னது நாடெங்கும் தீயாய் பற்றியது. சொத்துக்களை சமத்துவப்படுத்த முடியாது; அது முட்டாள்தனமானது என அறிவித்து கிரஹாம்வெல் மேட்டுக்குடி விசுவாசத்தைக் காட்டிக்கொண்டான்.
1658இல் கிரஹாம்வெல் மரணமடைந்தான். விஷம் வைத்துக் கொல்லப்பட்டதாகவும் வரலாற்றுப் பதிவு உண்டு. முதலாம் சார்லஸின் மகன் இரண்டாம் சார்லஸ் நாடு திரும்பி முடிசூட்டிக்கொண்டான். அவனுக்கு பின் இரண்டாம் ஜேம்ஸ் பதவிக்கு வந்தான் .அவன் கத்தோலிக்க நம்பிக்கையோடு போப்பின் அதிகாரத்துக்கு உட்பட்டு சீர்திருத்தங்கள் செய்ய முனைந்தான். நாடு கொந்தளித்தது. எதிர்ப்பின் நெருப்பை தாங்க முடியாமல் ஜேம்ஸ் பிரான்சுக்கு தப்பி ஓடினான்.
நாடாளுமன்றத்தின் கை ஓங்கியது எனினும் அங்கு ஒரு சமரசம் ஏற்பட்டது. நாடாளுமன்றமும் இருக்கும் அரசனும் இருப்பார் . வில்லியம் அவர் மனைவி மேரி இருவரும் கூட்டாக அரச பொறுப்பேற்றனர் .உற்பத்தி முறையில் ஏற்பட்ட மாற்றம் குழப்பமான அரசியல் சூழலை சிருஷ்டித்தது .இந்த மாற்றங்களெல்லாம் மகுடங்களை மாற்றியதே தவிர மக்களை வாழவைக்கவில்லை.
இராஸ்மஸ் என்கிற டச்சு கவிஞன் சொன்னான்; பறவைகள் அநேகம் உண்டு, ஆனால் கழுகுதான் அரச குறியீடாகிறது / கழுகு பார்ப்பதற்கு அழகாய் இருக்காது / அதன் குரல் கேட்பதற்கு இனிமையானதல்ல /கழுகை பிற விலங்குகள் புசிப்பதில்லை ,ஆனால் அது எல்லா உயிர்களையும் புசிக்கும் / எல்லோரும் வெறுக்கின்றனர் /சபிக்கின்றனர்/ பிற உயிருக்கு தீங்கிழைக்கும் பலம் அதிகம் அதற்கு / அதற்கு ஆசை அளவற்றது /சக்தியை மீறியும் கொடுமை செய்யவே அலையும்…’ [கழுகை வணங்குகிறவர்கள் இந்தியர்கள் என்கிற விவரம் அந்த டச்சுக் கவிஞருக்கு தெரிந்திருக்காது ]


இங்கிலாந்து ஆட்சியின் குணம் இதுதானே ?


புரட்சி தொடரும்


0 comments :

Post a Comment