சிரமறுத்தல் வேந்தனின் கருணை...

Posted by அகத்தீ Labels:







புரட்சிப் பெருநதி  - 4

சிரமறுத்தல் வேந்தனின் கருணை...


சு.பொ.அகத்தியலிங்கம்

அவரின் கற்பனைத்தீவில் பணத்துக்கு எந்த மரியாதையும் கிடையாது . தங்கமும் வெள்ளியும் மதிப்பற்றவை. குற்றவாளிகளின் கை-கால்களை பிணைக்கும் விலங்கு செய்யவே தங்கமும் வெள்ளியும் பயன்பட்டன. குழந்தைகள் விளையாடும் பொம்மைகளிலேயே முத்தும் பவளமும் பதிக்கப்பட்டன.



இது ஒரு நூலின் அட்டைப் படம் . 1516 ல் லத்தீன் மொழியில் முதன்முதலாக வெளிவந்தது . இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு 1551ல் வெளிவந்தது .இந்த ஆங்கில மொழிபெயர்ப்பு வருவதற்கு 16 வருடங்கள் முன்பே 1535லேயே இதை எழுதியவர் கொல்லப்பட்டு விட்டார் .

அவரை சித்ரவதை செய்து கொல்லும் முடிவை மறு பரிசீலனை செய்து கருணை அடிப்படையில் சிரத்தைக் கொய்து கொல்ல ஆணையிட்டாராம் மன்னர் .அந்த நூல் தான்கற்பனைத்தீவு’ ; அதை எழுதியவர் தான் புனித தாமஸ்மூர் .

லண்டனில் வசதியான கத்தோலிக்கக் குடும்பத்தில் 1478 பிப். 7ஆம் நாள் பிறந்தார். 13 வயதிலேயே கத்தோலிக்க மதகுரு மார்ட்டனின் உதவியாளரானார்.புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் லத்தீன், கிரேக்க இலக்கியங்களில் புலமைபெற்றார். 1497ல் எராஸ்மஸ் டெஸிடெரியஸ்- ஸிடம் நட்பு பாராட்டத் தொடங்கினார். இந்நட்பு தாமஸ்மூரின் மனிதநேயப் பார்வையை கூர்மையாக்கியது.

பொய்மையின் விலைஎனும் புகழ்மிக்க நூலை தாமஸ்மூரின் வீட்டிலிருந்தபடி தான் எராஸ்மஸ் எழுதினார். கத்தோலிக்க மத இலக்கியங்களிலும் நடைமுறைகளிலும் மிகவும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட போதிலும் தந்தையின் விருப்பத்துக்கு ஏற்ப சட்டம் பயின்று வழக்குரைஞர் ஆனார் தாமஸ்மூர் . தன் சம்பாத்தியத்தின் பெரும்பகுதியை ஏழைகளுக்கு செலவிட்டு மகிழ்ந்தார்.

1504ல் தன் 26 வயதில் தாமஸ்மூர் காமன்ஸ் சபைக்கு தேர்வு செய்யப்பட்டார் .அங்கு இளவரசர் ஆர்தரின் கேளிக்கை மற்றும் பொழுது போக்குக்காக அதிக மானியம் கோரிய மன்னர் ஹென்றியின் தீர்மானத்தை தாமஸ்மூர் கடுமையாக எதிர்த்தார் . இதனால் பதவி பறிக்கப்பட்டு மடலாயத்தில் இருக்கும்படி தண்டிக்கப்பட்டார் . எனினும் அரசரின் திடீர் மரணத்துக்குப்பின் 1510ல் மீண்டும் காமன்ஸ் சபைக்கு தேர்வு செய்யப்பட்டார் .

ஏற்கனவே எராஸ்மஸின் நட்போடு டச்சு மனிதாபிமானி பீட்டர் ஏகிடியஸின் நட்பும் தாமஸ்மூரின் இதயத்தை மேலும் விசாலமாக்கியது; பார்வையைக் கூர்மையாக்கியது.இந்தத் தொடர்பால் விளைந்த விவாதத்தைகற்பனைத்தீவுஎனும் நூலாய்ப் படைத்தார். அந்நூல் மூன்று பேரின் உரையாடலாய் விரியும். தம் நண்பர் ஏகிடுயஸோடு நடத்தும் உரையாடலில் ராபேல் ஹாத்லோட்டேய்ஸ் எனும் போர்ச்சுகீசிய மாலுமி எனும் கற்பனைப் பாத்திரத்தையும் இணைத்திருப்பார். அவர் மூலம் ஒரு கற்பனைத்தீவு ஒன்றைப் படைத்துக்காட்டுவார்.

அவரின் கற்பனைத் தீவில் பணத்துக்கு எந்த மரியாதையும் கிடையாது. தங்கமும் வெள்ளியும் மதிப்பற்றவை. குற்றவாளிகளின் கை-கால்களை பிணைக்கும் விலங்கு செய்யவே தங்கமும் வெள்ளியும் பயன்பட்டன. குழந்தைகள் விளையாடும் பொம்மைகளிலேயே முத்தும் பவளமும் பதிக்கப்பட்டன. அந்த தீவில் நிலம் தனிப்பட்ட யாருக்கும் சொந்தமாக இருக்காது.
அனைவரும் தினசரி ஆறு மணி நேரம் உழைக்க வேண்டும். அனைவரும் உண்ண வேண்டும் . அந்த தீவில் அடிமைகளும் கிரிமினல்களும் கூட இருந்தனர். அவர்கள் கடுமையாக உழைக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டனர்.‘எல்லாரும் எல்லாப் பெருஞ்செல்வமும் எய்துவதாலே இல்லாரும் இல்லை, உடையாரும் இல்லைமாதோஎன்கிற கம்பனின் காவியக் கனவு தாமஸ்மூரின் கற்பன்னைத் தீவின் லட்சியக்கனவாக ஆகிப்போனது.ஏதோ கனவு கண்ட வரல்ல தாமஸ்மூர் ஒரு லட்சிய பொதுவுடைமை சமூக அமைப்பை மனிதகுலம் பெறவேண்டும் என அவா மிகுந்தவராகவே தாமஸ்மூர் விளங்கினார் .
கற்பனைத் தீவு நூலில் மட்டுமல்லாது ; மூன்றாம் ரிச்சர்ட் மன்னனின் வரலாறு, லத்தீன் மொழியில் கவிதை வடிவில் தீட்டிய கட்டுரை என அனைத்திலும் முடி மன்னரின் சர்வாதிகாரத்துக்கு எதிராக மக்களுக்கு அதிகாரம், சமத்துவம் ஆகிய கருத்துகளை முன்வைத்தார் . எட்டாவது ஹென்றியின் முடி சூட்டுவிழாவினை ஒட்டி தீட்டிய கட்டுரை கூட மனிதநேய அரசியல் திட்டமாகவே அமைந்தது .ஹென்றி மாறுபட்டவராக இருப்பார் என எதிர்பார்த்தார் . மன்னரின் கவுன்சில் உறுப்பினரானார். அரசருக்கு வரும் மனுக்களைப் படித்து அரசரின் கவனத்துக்கு கொண்டு போய் ஆணைகள் பிறப்பிக்கச் செய்யும் பணியை சக அதிகாரிகளின் மனப் புகைச்சலுக்கிடையேயும் திறம்படச் செய்தார். 1529ல் இங்கிலாந்தின் லார்டு சான்ஸலர் என்ற உயர் பதவியைப் பெற்றார் .
இந்த பதவி ஏற்புக்கு முன்னர் மன்னர் ஹென்றியிடம் ஒரு வாக்குறுதி கேட்டார். ‘முதலில் கடவுளுக்குப் பணிந்து நடப்பேன் ; பின்னரே மன்னருக்கு பணிவேன்என்பதே அந்த உறுதிமொழி.இந்த நட்பும் அதிகாரமும் நீண்டநாள் நிலைக்கவில்லை . மன்னரோடு தாமஸ்மூர் முரண்படலானார் . மன்னர் ஸ்பெயின் நாட்டு இளவரசியை மணமுடிக்க ஒப்பந்தம் செய்தார் . பின்னர் ஆனிபெளலின் எனும் பேரழகியைச் சந்தித்தார் . அவரை மணமுடிக்க தோதுவாக ஸ்பெயின் இளவரசியுடனான திருமண ஒப்பந்தத்தை ரத்து செய்ய கத்தோலிக்க மதபீடமான போப்பிடம் விண்ணப்பித்தார் . ஸ்பெயினோடு உள்ள நட்பு கருதி போப் அதற்கு சம்மதிக்கவில்லை . இதனால் வெகுண்டெழுந்த மன்னர் .
கத்தோலிக்க உறவையே துண்டித்து இங்கிலாந்து கிறுத்துவ சபைக்கு தன்னையே தலைவராக பிரகடனப் படுத்திக் கொண்டார் . இன்று வரை இங்கிலாந்து கிறுத்துவ சபை போப்புக்கு கட்டுப்பட்டதல்ல .

மன்னனின் கத்தோலிக்க எதிர்ப்பை தாமஸ்மூர் ஏற்கவில்லை . மன்னனின் திருமணத்தையும்; ஆடம்பர வாழ்க்கை முறையையும் எதிர்த்தார். இதனால் பதவி பறிக்கப்பட்டு; சித்ரவதைசெய்து கொல்லும் ஆணைக்கு உள்ளானார்; எனினும் மன்னர் இவரின் நீண்ட நாள் நட்பு கருதி சித்ரவதை செய்து கொல்லுவதற்குப் பதில் தலையை வெட்டிக் கொல்லகருணைஆணைபிறப்பித்தார்.

1535 ஜுலை 6 ஆம் தேதி தண்டனை நிறைவேற்றப்பட்டது. சாகும்முன் அவர் தன் கண்ணை தானே கர்ச்சிப்பால் கட்டிக்கொண்டு தண்டனையை முகமலர்ச்சியோடு ஏற்றார்.1517ல் ஜெர்மனியில்ஒருசீர்திருத்தஇயக்கம்தோன்றியது. இது நிலச்சீர்திருத்தம் உள்ளிட்டவைகளில் கவனம் செலுத்தியது. இதில் கொஞ்சம் வன்முறை தவிர்க்க முடியாமல் இருந்தது. இதனை தாமஸ்மூர் ஏற்கவில்லை.
தம் கற்பனைத் தீவில் வன்முறைக்கோ அராஜகத்துக்கோ இடம்இல்லை. முழுக்க முழுக்க மனம் திருந்தி மனம் ஒப்பி செய்யப்படும் ஏற்பாடென சொன்னார் .19 ஆம் நூற்றாண்டில் காரல்மார்க்ஸ்ஏங்கெல்ஸ் சோஷலிசத்தை அறிவியல் பூர்வமாக வார்த்தெடுக்கும் வரை அது உட்டோப்பியன் சோஷலிசமாகவே -அதாவது கற்பனாவாத சோஷலிசமாகவே இருந்தது. தாமஸ்மூரின் கற்பனைத்தீவு நூல் லத்தீன்மொழியில்உட்டோப்பியாஎன்றே பெயரிடப்பட்டிருந்தது . அதிலிருந்தே உட்டோபியன் சோஷலிசம் என்கிற பெயர் பிறந்தது.

 மாஸ்கோ நினைவுத் தூணில் பொறிக்கப்பட்டுள்ள 19 பெயர்களில் இவரும் ஒருவர் என்பது தற்செயலானது அல்ல. லெனின் இவரை நினைவு கூர்ந்தது சோஷலிச சித்தாந்தத்தின் பரிணாம வளர்ச்சியை இளைய தலைமுறை அறியவேண்டும் என்பதற்குத் தானே !

புரட்சி தொடரும்



0 comments :

Post a Comment