தொடக்கமுமல்ல ... முடிவுமல்ல...

Posted by அகத்தீ Labels:

புரட்சிப் பெருநதி – 1



தொடக்கமுமல்ல... முடிவுமல்ல...
- சு.பொ.அகத்தியலிங்கம்


சோவியத்புரட்சி மட்டுமே முதலும் முடிவுமான புரட்சி அல்ல; அதற்கு முன்பும் பலஉண்டு; பின்பும் உண்டு; இனியும் உண்டு. இதில் சோவியத் புரட்சியின் தனித்த முத்திரையும் உண்டு; பாடங்களும் உண்டு. அவற்றை ஆங்காங்கே புரட்டிப்பார்ப்போம். புரட்சிப் பெரு நதியில் கையளவு மொண்டு முடிந்தவரைப் பருகுவோம்!


புரட்சி என்பது எல்லோருக்கும், எல்லாவற்றுக்கும் எதிரான கண் மூடித்தனமான கலகம் என்றோ; எல்லாவற்றையும் அழிக்கும் அராஜகம் என்றோ; மார்க்சியவாதிகள் ஒருபோதும் எண்ணவில்லை . புரட்சி என்பது எல்லாவிதமான சுரண்டலையும், சமுதாயம் மற்றும் நாட்டின் ஒடுக்குமுறையின் எல்லா வடிவங்களையும் ஒழிப்பதற்கானப் போராட்டமாகும். அறிவியல், தொழில் நுட்பம், பண்பாடு ஆகியவற்றின் மிகப்பெரிய சாதனைகள் உழைப்பாளி மக்களின் உயர்வுக்குத் தொண்டாற்றவேண்டும். அவர்களுடைய வாழ்வை அதிகப் பொருளும் அதிகச் சுவையும் உள்ளதாக்கவேண்டும் என்பதற்கான போராட்டமே புரட்சி ! சோவியத் புரட்சியின் வீரிய மிக்க வெற்றி; போர்க்களத்தில் இரத்தமும் வியர்வையும் சிந்தி ஈட்டியது மட்டுமல்ல. ஆம் சமூக வாழ்க்கை முழுவதையும் மனிதநேயம் மிக்கதாய் மாற்றி அமைக்க இடைவிடாது தொடர்ந்த முயற்சியுமாகும்.


‘புரட்சி என்பது புதுமைக் கூத்து
புரட்சி என்பது புத்துயிர் வெள்ளம்
புரட்சி என்பது புதிரைத் தீர்த்தல்
புரட்சி என்பது போரிற் பெரிது
புரட்சி என்பது புதுமைக் கீதம்
புரட்சி என்பது புத்துயிர் முரசு
புரட்சி என்பது பொறுமைக்குறுதி
புரட்சி என்பது போம்பணிக்கறுதி
புரட்சி என்பது பூகம்ப வேகம்
புரட்சி என்பது பூரண மாற்றம்
புரட்சி என்பது புரட்டின் வைரி
புரட்சி என்பது புவித்தாய் நகைப்பு’
எனக் கவிதையில் முரசறைவார் தமிழகப் பொதுவுடைமை மூலவர்களில் ஒருவரான ப.ஜீவானந்தம்.

‘‘புரட்சி நீடூழி வாழ்க!" என்று நாம் ஏன் முழங்கவேண்டும் ? புரட்சியையும் மாறுதலையும் நாம் ஏன் விரும்பவேண்டும் ?இந்தியா இன்று பெரிய மாறுதலை வேண்டி நிற்பதென்னவோ உண்மைதான். நாம் விரும்பும் அப் பெரியமாறுதல் நிகழ்ந்த பின்பும்-இந்தியா சுதந்திரம் பெற்றபின்பும்-நாம் சும்மா இருக்கமுடியாது. இவ்வுலகில் மாறுதல் அடையாததெல்லாம் நசிந்து போகும். இயற்கை நாளுக்குநாள் நொடிக்கு நொடி மாறிக்கொண்டே இருக்கிறது. மாறி மாறி வளராது வாளா இருப்பதெல்லாம் மரணமடைகிறது. ஓடுகிற நீர் தூயதாக இருக்கிறது; அதன் ஓட்டத்தைத் தடுத்தால் நாற்றமெடுத்து விடுகிறது. மனித வாழ்க்கையும் ஒருதேசத்தின் ஜீவனும் இதைப் போன்றனவே . நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மூப்பு நம்மை வந்தடைகிறது .குழந்தைகள் சிறு பெண்களாகவும், சிறு பெண்கள் பருவ மங்கையராகவும், பருவ மங்கையர் பேரிளம் பெண்களாகவும், பேரிளம்பெண்கள் கிழவிகளாகவும் மாறுகிறார்கள்.இம்மாறுதல்களுக்கும் உட்பட்டே தீரவேண்டும்.ஆனால் உலகம் மாறுகிறது என்பதையே பலர் ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள். அவர்கள் தங்கள் மனக் கதவுகளை அடைத்துத் தாளிட்டுப் புதிய கருத்துகளை உள்ளே விடமாட்டேன் என்கிறார்கள். சிந்தித்துப் பார்ப்பது என்றாலே அவர்கள் பயந்துநடுங்குகிறார்கள். இதன் முடிவு என்ன? உலகம் அவர்களைப் பற்றிக் கவலை கொள்ளாமல் முன்னேறிச் செல்கிறது. உலகம் அவ்வாறு மாறி மாறிச் செல்லும்போது புதிய நிலைமைக்கு ஒத்துப்போகமுடியாத சிலர் இருக்கும் காரணத்தால் பெரிய குழப்பமும் கொந்தளிப்பும் ஏற்படுகிறது.” இப்படி உண்ர்ச்சியைக் கொம்பு சீவி விடுபவர் மேநாள் பிரதமர் ஜவஹர்லால்நேரு. இவர் சிறையிலிருந்து தன் மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதங்கள் புகழ்பெற்றவை.1931-ஆம் ஆண்டு ஜனவரி 8-ஆம் தேதி எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டவையே மேலே சொன்னவை. இக் கடிதங்களெல்லாம் ‘உலக சரித்திரம்’ என்கிற பெயரில் இரண்டு பாகமாகப் புத்தகமாகவே வந்துள்ளது. தன்னைச் சோஷலிசத்தின் பக்கம் திருப்பியதில் இந்நூலுக்குப் பெரும் பங்குண்டு என்பார் தோழர் இ.எம்.எஸ். இன்றும் இளைய தலைமுறை கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகங்களில் இதுவும் ஒன்று.

வரலாறு நெடுகிலும் எண்ணற்ற புரட்சிகள் நடந்துள்ளன; நெருப்பைக் கண்டுபிடித்ததும்-சக்கரம் கண்டுபிடித்ததும்-விவசாயத்திற்குப் பழக்கியதும்- கால் நடைகளைப் பழக்கியதும் அணைகள் அமைத்ததும் எல்லாமே புரட்சிகர முன்னேற்றமே….

மனிதகுலம் ஒவ்வொரு துறையிலும் புரட்சிகர நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுவதன் மூலமே மகத்தான முன்னேற்றங்களைக் கண்டுள்ளன. ஸ்பார்ட்டகஸ்-அடிமைகளின் கலகம் இன்றி அடிமைத்தனத்துக்கு எதிரான எழுச்சிஏது? விடுதலை ஏது ? ஆக அந்த அடிமைகளின் புரட்சி தொடங்கி தொழிற்புரட்சி, அமெரிக்க சுதந்திரப்போர், பிரெஞ்சுப்புரட்சி இவற்றின் கனலை உள்வாங்காமல் ரஷ்யப் புரட்சியையும் தொடரும் புரட்சிகளையும் சரியாக உள்வாங்க இயலுமா?இந்தியப் புரட்சிக்குப் பாதை சமைக்க இயலுமா?
புரட்சிப் பெருநதி பாய்ந்தோடிக் கொண்டே இருக்கிறது; கசடுகளையும் குப்பைகளையும் வாரி வீசி எறிந்துவிட்டுப் புதுவெள்ளமாய்ப் பாய்ந்தோடிக் கொண்டே இருக்கிறது. காலங்காலமாய்ப் புரட்சிகள்அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு புரட்சியும் முந்தைய புரட்சியின் நல்லவைகளை முன்னெடுக்கவும்; தொடரும் தடைகளை நொறுக்கவும் ஆங்காரமாய்க் கர்ஜித்து எழுகிறது. தொடர்கிறது. தொடர்ந்து கொண்டே இருக்கும் .

கிரெம்ளின் அலெக்ஸாண்டிரியா பூங்காவில் 1918-ஆம் ஆண்டு நவம்பர் புரட்சியின் முதலாமாண்டு விழாவில் ஒரு நினைவுத்தூண் நிறுவப்பட்டது. அதன் அடிப்பீடத்தில் பத்தொன்பது பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தது.

மார்க்ஸ்,
ஏங்கெல்ஸ்,
லீப்க்னெக்ட்,
லாஸ்ஸல்,
பேபல்,
காம்பெனல்லா,
மெஸ்லியர்,
வின்ஸ்டன்ஸ்லி,
தாமஸ்மூர்,
செயிண்ட்சைமன்,
வெயிலண்ட், ஃபோரியர்,
ஜாரெக்ஸ்,
பிரெளதன்,
பாகுனின்,
செர்னிசெவ்ஸ்கி,
லாப்ரோவ்,
மிகையிலோவ்ஸ்கி,
பிளக்கனோவ்...

பட்டியல் முடியுமோ? முடியாது .

இவர்களின் லட்சியங்கள், சித்தாந்தம், நடைமுறைச் செயல்பாடுகள் மாறுபடலாம். ஆயினும் அனைத்துக்கும் வரலாற்றில் ஒரு பங்குண்டு.

புரட்சி என்பது வெற்றிடத்திலிருந்து யாருடைய மூளையிலோ சுயம்பு வாய் உதித்ததல்ல. அந்த நினைவுச் சின்னத்தில் பொறிக்கப்பட்ட கவித்துவமான அஞ்சலி வரிகள் இன்றும் வாழ்வின் பொருளை உரக்க ஒலித்துக் கொண்டிருக்கிறது…

‘செல்வமும் அதிகாரமும் அறிவும்
ஒரு சிலருக்கே உரித்தாயிருந்ததை எதிர்த்து
நீங்கள் போர் தொடுத்தீர்கள்!

செல்வமும் அதிகாரமும் அறிவும்
எல்லோருக்கும் உரித்தாகும் பொருட்டு
நீங்கள் புகழ்மிக்க வீரமரணம் எய்தினீர்கள்!!’

ரஷ்யப் புரட்சி தொடக்கமுமல்ல… முடிவுமல்ல…

புரட்சி தொடரும்...




0 comments :

Post a Comment