வர்க்கத்தை பிரசவித்த புரட்சி...

Posted by அகத்தீ Labels:




புரட்சிப் பெருநதி – 3




வர்க்கத்தை பிரசவித்த புரட்சி...
சு.பொ.அகத்தியலிங்கம்

பிரடெரிக் ஏங்கெல்ஸ் எழுதிய ‘இங்கிலாந்து உழைக்கும் வர்க்க மக்களின் நிலைமை’ எனும் நூல் தொழிற்புரட்சிக்கு பிந்தைய இங்கிலாந்திலுள்ள ஏழைகளின் அவல வாழ்க்கையை ஒரு ஆவணமாக பதிவு செய்துள்ளது. வெறும் கற்பனை அல்ல; அது கிட்டத்தட்ட ஒரு கள ஆய்வு.





காட்டு விலங்குகளைப் பழக்கியதும்; காட்டுச் செடிகளை வீட்டுப் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்ததும் மனிதகுல வரலாற்றில் மிக முக்கிய பாய்ச்சல் வேகபுரட்சிகர மாற்றமாகும். அதன் பிறகான நெடிய வரலாற்றில், தொழிற்புரட்சியே மனித வளர்ச்சியில் நடந்த மிக முக்கிய புரட்சிகர நிகழ்வு என்பது வரலாற்று அறிஞர்கள் கருத்தாகும்.

1750-1850ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் புதிய கண்டுபிடிப்புகள் வேகம் பெற்றன. இதன் விளைவாய் உற்பத்தி பெருகியது. அதுவரை கிராமப்புறங்களில் எளிய பட்டறைகளில் செய்யப்பட்டு வந்த உற்பத்தி நகரங்களில் ஆலைகளில் பெருமளவில் நடக்கத் தொடங்கின. இதனை தொழிற்புரட்சி (ஐனேரளவசயைட சுநஎடிடரவiடிn) என்பர். தொழிற்புரட்சி முதலில் இங்கிலாந்தில் தோன்றியது. இந்த உற்பத்தி முறைக்குத் தோதாக அரசியல், சமூக மாற்றங்களும் நிகழ்ந்தன. புரட்டஸ்டண்ட் மதத்தின் தோற்றமும் இதன் இன்னொரு விளைவு என்பர் சமூக ஆய்வாளர்கள்.

புதிய இயந்திரக் கண்டுபிடிப்புகள் மூலம் வேகம் பெற்ற முதலாவது துறையாக நெசவுத் துறை விளங்கியது. 1733-ல் ஜான்கே ‘பறக்கும் நாடா’வைக் கண்டுபிடித்தார். இது துணி நெய்யும் வேகத்தை அதிகரித்தது. இதனால் நூல் தேவை அதிகமாயிற்று. 1764-ல் ஜேம்ஸ்ஆர்கீரிவ்சுவின் ‘நூற்கும் ஜென்னி’ மற்றும் 1779-ல் சாமுவேல் கிராம்டனின் ‘நூற்கும் மியூல்’ ஆகியவை நூலிற்கான அதிகத் தேவையை ஏற்படுத்தின.1785-ல் கார்ட்ரைட் கண்டுபிடித்த ‘விசைத்தறி’யினால் அதிக அளவில் துணி நெய்யும் முறை நடைமுறைக்கு வந்தது. எலிவிட்னி என்பவர் 1793-ல் பருத்தியிலிருந்து விதைகளைப் பிரிப்பதற்காகக் ‘காட்டன்ஜின்’ என்ற கருவியை கண்டுபிடித்தார். இதன் மூலம் அதிக அளவு கச்சாப் பருத்தி, துணி உற்பத்திக்குக் கிடைத்தது.1846-ல் எலியாஸ் ஓவே என்பவர் தையல் இயந்திரத்தைக் கண்டுபிடித்தார்.தொழிற்புரட்சியின் கண்டுபிடிப்புகளில் முதன்மையானது நீராவி இயந்திரமாகும். 1609ல் ஸ்பானிஸ் விஞ்ஞானி ஜெரோனிமா நீராவி இயந்திரம் குறித்து முயற்சியில் இறங்கினார். 1698ல் தாமஸ் சேவரி முயற்சித்தார். அடுத்து நியூகாமன் மேலும் முன்னேறினார்;

இப்படி நீராவி இயந்திரக் கண்டுபிடிப்புக்கான முயற்சிகளையும் முன்னேற்றத்தையும் படித்து உள்வாங்கி மேலும் முயற்சித்த ஜேம்ஸ்வாட் என்பவர் புதிய நீராவி இயந்திரத்தை 1769-ல் உருவாக்கினார். அறிவியலாயினும் வரலாறாயினும் பல முயற்சிகள், தொடர் தோல்விகள் இவற்றைத் தொடர்ந்தே வெற்றி கிட்டும் என்பது அனுபவம். நீராவி இயந்திரமும் அதைத் தான் சொல்லுகிறது. ஆனால் இந்த கண்டுபிடிப்பு பாய்ச்சல் வேக முன்னேற்றத்துக்கு விதையானது.இதனால் நெசவுத் தொழிற்சாலைகளில் குதிரை மற்றும் நீர் ஆற்றலுக்குப் பதிலாக நீராவி ஆற்றல் பயன்படுத்தப்பட்டது. ஜார்ஜ் ஸ்டீபன்சன் நீராவி ரயில் இயந்திரத்தை 1825-ல் கண்டுபிடித்தார். 1830-ல் முதல் பயணியர் தொடர் வண்டி மான்செஸ்டருக்கும் லிவர்பூலுக்கும் இடையே விடப்பட்டது.1814-ல் கண்டுபிடிக்கப்பட்ட நீராவி அச்சு இயந்திரத்தால், அச்சுப் பொருட்களின் விலை குறைந்தது. இதற்குப் பின்னர் மைக்கேல் பாரடே டைனமோவைக் கண்டுபிடித்தார். ஆபிரகாம் டெர்பி என்பவர் இரும்புத் தாது உருகுவதற்கு கரிக்கு மாற்றாக நிலக்கரியைப் பயன்படுத்தும் ஆய்வுகளை மேற்கொண்டார்.

1760-இல் ஜான்ஸ்மீட்டன் என்பவர் டெர்பியின் ஆய்வுடன் நீராற்றலை இணைத்து அதனை மேம்படுத்தினார்.ஹம்பிரிடேவி கண்டுபிடித்த பாதுகாப்பு விளக்கினால் சுரங்க வேலை செய்வோர் பாதுகாப்புடன் பணி புரிந்தனர். 1784-இல் ஹென்றிகார்ட் இரும்பைத் துண்டாக்க உருளையைப் பயன்படுத்தும் புதியமுறையை அறிமுகப்படுத்தினார். 1856-ல் பெர்ஸ்மர் இரும்பு எஃகு உற்பத்தி செய்யும் புதிய முறையைக் கண்டுபிடித்தார். இக்காலம் முதல் நிலக்கரியும் இரும்பும் நீராவியுடன் இணைந்து செயல்பட்டதால் தொழில்மயமாதலுக்கு அடித்தளமாகியது.தொழிற்புரட்சி

நிகழ்ந்த காலப் பகுதியை வரலாற்றாளர்கள் வெவ்வேறு விதமாகக் கூறுவர். எரிக்ஹாப்ஸ்பாம் என்பவர், தொழிற்புரட்சி 1780இல் தொடங்கியது என்றும் 1830 அல்லது 1840களிலேயே முழுமையாக உணரப்பட்டது என்றும் கூறுவார். இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்றாளர்கள் பொருளாதார, சமூக மாற்றங்கள் படிப்படியாகவே ஏற்பட்டன என்றும், நீடித்த காலத்தில் நடந்தவற்றை விளக்குவதற்குப் புரட்சி என்ற சொல் பொருத்தமற்றது என்றும் சொல்கின்றனர்.

தொழில் புரட்சி உற்பத்தி பெருக்கத்தை மட்டுமா கொண்டு வந்தது ?தொழிலாளி, முதலாளி என இரண்டு எதிரெதிர் வர்க்கத்தை வரலாற்று அரங்கில் நிறுத்தியது. கண்மூடித்தனமான சுரண்டலையும்; மனிதாபிமானமற்ற வாழ்க்கைச் சூழலையும், குழந்தைத் தொழிலாளி எனும் கொடூரச் சுரண்டலையும் கொண்டு வந்து சேர்த்தது.

தொழிலாளிகள் தங்க எந்த சுகாதாரமும் அற்ற கொட்டடிகள், நவீன குடிசைப் பகுதிகள் என ஒரு அழுக்கின் ராஜ்யத்தை உருவாக்கியது எனில் மிகை அல்ல.இக்காலகட்டத்தை பிரதிபலிக்கும் சில புதினங்கள் வெளிவந்தன.

பிரான்சில் விக்டர் ஹியூகோ ‘ஏழை படும்பாடு’ ஸடநள அளைநசயடெந] என்ற புதினத்தை எழுதினார். குறிப்பிட்ட சில எழுத்தாளர்கள் மட்டுமே, ஏழைகளின் வாழ்க்கையையும் பதிவு செய்துள்ளனர். அதில் ஹியூகோவின் படைப்பு காத்திரமானது. அன்றைய சமூகத்தைக் கண்ணெதிரே கொண்டுவரும். இதுவரை படிக்காதவர்கள் இனியேனும் படியுங்கள்.

பிரடெரிக் ஏங்கெல்ஸ் எழுதிய ‘இங்கிலாந்து உழைக்கும் வர்க்க மக்களின் நிலைமை’ எனும் நூல் தொழிற்புரட்சிக்கு பிந்தைய இங்கிலாந்திலுள்ள ஏழைகளின் அவல வாழ்க்கையை ஒரு ஆவணமாக பதிவு செய்துள்ளது. வெறும் கற்பனை அல்ல; அது கிட்டத்தட்ட ஒரு கள ஆய்வு என்று கூட சொல்லலாம். மேட்டுக்குடியில் பிறந்த ஏங்கெல்ஸ் தனது ஐரிஷ் நண்பியான மேரிபேர்ன்ஸ் என்கிற ஏழைப் பணிப் பெண்ணோடு அவரது குடிசைப் பகுதிகளில் சுற்றித் திரிந்து கண்ணால் கண்ட உண்மைகளை பதிவு செய்த நூல் அது.

ஏங்கெல்ஸின் இந்தப் புத்தகத்தையும் ஹியூகோவின் ஏழை படும்பாடு நாவலையும் படித்தால் தான் தொழிற்புரட்சியின் இன்னொரு பக்கம் விளங்கும்.தொழிற்புரட்சி உற்பத்தி பாய்ச்சல் வேக வளர்ச்சிக்கு மடைதிறந்து விட்ட போதே; முதலாளி வர்க்கத்தையும் அதற்கு எதிரான புரட்சிகர தொழிலாளி வர்க்கத்தையும் படைத்து விட்டது. தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகர பாத்திரத்தை மார்க்ஸ் சொல்லும் வரை சரியாக உலகம் இனம் காணவில்லை.ஆகவே மக்களின் கோபம் பல்வேறு போராட்டங்களாக வெடித்த போதும்; வெற்றி இலக்கை கோட்டை விட்டு விட்டது.

‘…திமிறி எழுவது சகஜமானது; இயற்கையானதும் கூட. கோபுரங்கள் மண்மேடுகளாக மாறும். மக்களை மதிக்காத அரசாங்கங்கள் கவிழும்; மண்ணைக் கவ்வும்’ என்று ஹியூகோ சொன்ன வரிகள் வரலாற்றின் முன்னறிப்பாகும்.

‘என் பயணத்தில் தொழிற்புரட்சியின் எந்த நன்மையையும் காண முடியவில்லை. அது இயற்கையை முற்றும் முழுவதுமாக சிதைத்து விட்டது. இனி வரும்காலத்தில் மனிதர்களுக்கு சுவாசிக்க நல்ல காற்று கூட இருக்காது. எங்கும் பச்சையம் இருக்காது... இயற்கையை மட்டும் சிதைக்கவில்லை. இந்த தொழிற்புரட்சி மனித பண்புகளையும் சிதைத்துவிட்டது. பணம் அற மதிப்புகளை இல்லாமல் செய்துவிட்டது... இந்த தொழிற்புரட்சி குறித்து எதுவுமே தெரியாமல் கிராமத்தில் வாழும் ஒரு எளிய மனிதன், இன்னும் இயற்கையுடன் மகிழ்ச்சியாக உரையாடிக் கொண்டு இருக்கிறான்’ என்றார் கவிஞர் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த். ஆம் என்கிறது வரலாற்று அனுபவம்.

புரட்சி தொடரும்…




0 comments :

Post a Comment