விழிப்புணர்வு தந்த தோல்விகள்

Posted by அகத்தீ Labels:






புரட்சிப் பெருநதி -2





விழிப்புணர்வு தந்த தோல்விகள் 

சு.பொ.அகத்தியலிங்கம்

கசைதான் அந்நாட்டின் சின்னம் என்பர் வரலாற்றாளர்கள்; அடிமைகளின் முதுகுத் தோலை உரிப்பது ஜார் மன்னனின் பொழுதுபோக்கு! இதனால் அங்கு அடிக்கடி விவசாயிகள் கலகம் செய்து வந்தனர்.


அங்கு ரஷ்யாவில் ஒரு வழக்கம் இருந்தது. யாரைத் தூக்கிலிட்டாலும் ஒருமுறை தான்தூக்கிலிட வேண்டும். ஏதாவது எதிர்பாராத வகையில் தூக்கு இறுகாமல் ஒருவர் உயிர் தப்பிவிட்டால் அவரை மீண்டும் தூக்கிலிடக் கூடாது. ஆனால் அந்த ஐவரை தூக்கிலிட்ட போது, அதில் ஒருவர் கழுத்தை தூக்குக் கயிறு சரியாக இறுக்கவில்லை.அவர் உயிர் தப்பிவிட்டார். வழக்கத்தை – பலநூற்றாண்டு பாரம்பரியத்தை மாற்றி மீண்டும் தூக்கிலிட்டுக் கொல்ல ஆணையிட்டார் ஜார்மன்னன். அப்படியாயின் அந்த நபர் ஜார்மன்னனின் தூக்கத்தைக் கெடுத்தவனாகத் தானே இருக்க முடியும் ?

உலகில் படுபிற்போக்கான நாடாகவும் கொடுமையும் வறுமையும் தாண்டவமாடும் தேசமாகவும் பத்தொண்பதாம் நூற்றாண்டில் இருந்த தேசமே ரஷ்யா. அந்நாடு தன்னை ‘பரிசுத்த ரஷ்யா’ என அழைத்துக் கொண்டது. ஜார் அரசரோ தம்மை ‘குட்டிவெண்பிதா’ ஸலிட்டில் ஒயிட்பாதர்] என அழைக்கச் செய்தார்.மதபீடமும் அரசும் கைகோர்த்து மக்களை வேட்டையாடிய காலம் அது.

‘கசை’ தான்அந்நாட்டின் சின்னம் என்பர் வரலாற்றாளர்கள்; அடிமைகளின் முதுகுத் தோலை உரிப்பது ஜார் மன்னனின் பொழுது போக்கு! இதனால் அங்கு அடிக்கடி விவசாயிகள் கலகம் செய்து வந்தனர்.

தன் சகோதரனை அரண்மனை புரட்சியில் ஒழித்துக்கட்டி ஆட்சிக் கட்டிலை அலங்கரித்த ஜார்நிக்கோலஸ் மிகப்பெரும் கொடூரனாயும் வஞ்சகனாயும் இருந்தான்.ரஷ்ய தேசிய இனத்தைத் தவிர இதர தேசிய இனங்கள் கடும் ஒடுக்குமுறைக்கு ஆளானார்கள். அவர்களுக்கு எதிரான வெறுப்பு விஷம் ஊட்டப்பட்டது. யுதர்கள் பெரும் தாக்குதலையும் உயிர்ப்பலியையும் எதிர் கொண்டனர்.மக்களிடம் கோபம் இருந்தது. விடுதலை மார்க்கமும் தெரியவில்லை. நம்பிக்கை வறட்சியில் சுருண்டு கிடந்தனர்.
ஆனால் சில அதிகாரிகளும், படித்த பிரபுக்கள் சிலரும் சகிக்க முடியாத இந்த நிலையை மாற்றத் திட்டமிட்டனர். பாவேல் பெஸ்டல், நிக்கிட்டாமுர்னேவ், எஸ்பிதிரோலோஸ்கி உள்ளிட்ட அதிகாரிகளும் பிரபுக்களும்,1816ல் மீட்பர் சங்கம் அமைத்து ஜார்ஆட்சிக்கு எதிராய் போராடினர். ரகசியமாய் படை திரட்டினர். 1825 டிசம்பர் 26 ஆம்நாள் 3000 பேர் புனித பீட்டர்ஸ்பர்க்கிலுள்ள செனட் சதுக்கத்தில் கூடினர். ஆனால் ஜாரின் ராணுவம் வெறி கொண்டு தாக்கி அவர்களை விரட்டியது.

பலர் கைது செய்யப்பட்டனர்.பலர் தூக்கிலிடப்பட்டனர். பலர் கடும் தண்டனைக்கு ஆளானார்கள். பலர் நாடு கடத்தப்பட்டனர். உறை பனி பிரதேசமான சைபீரியாவுக்கு கடத்தப்பட்டனர். டிசம்பர் மாதம் நடந்ததால் இவர்களை வரலாறு ‘டிசம்பரிஸ்ட்டுகள்’ என அழைக்கப்பட்டனர்.

கட்டுரையின் துவக்கத்தில் சுட்டிக்காட்டப்பட்ட சம்பவம் இந்த டிசம்பரிஸ்ட் எழுச்சி அடக்கப்பட்டு தூக்குத் தண்டனைகள் நிறைவேற்றும் போதுதான் நிகழ்ந்தது. இந்த கலகம் ஜாரை மிகவும் மிரளச் செய்து விட்டது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ!ரஷ்யாவில் ஜார் மன்னன் பகீரங்கமான அரசியல் நடவடிக்கைகள் அனைத்தும் தடை செய்யப்பட்டு இருந்ததால் இரகசியசங்கங்கள் மூலமே இந்த டிசம்பர் எழுச்சி உருவாக்கப்பட்டது என்பது முக்கியமானது.
பிரெஞ்சு நாட்டில் கனந்த புரட்சி கர எழுச்சி படித்த உயர்வர்க்கத்தினரிடையே உசுப்பிவிட்ட சுதந்திரக்கனலே இந்த டிசம்பரிஸ்ட் எழுச்சிக்கு உந்து சக்தியானது எனில் மிகை அல்ல .1848 –ல் தான் மார்க்சும் ஏங்கெல்சும் எழுதிய கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியானது. ஆனால் அதற்கான கொதி நிலை உலகெங்கும் உருவாகிக் கொண்டிருந்த பின்னணியில் தான் கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியானது . எனினும் அதன் புரட்சிகர உள்ளடக்கமும் திசைவழியும் எல்லா இடத்துக்கும் சென்றடையாத காலம்.

ரஷ்யாவின் நிலைமை என்ன? ‘நிக்கோலஸ் மன்னன் ஆட்சியின் கீழ் ரஷ்யா’ எனும் நூலின்ஆசிரியர் மார்கிஸ் அஸ்டால்ப் சொல்லுவார் ‘கொழுந்து விட்டெரியும் தீயில் – இறுக மூடப்பட்ட கொதிகலனுள் கொதித்துக் கொண்டிருந்தது ரஷ்யா’ என்பார்.
1825 ல் நிகழ்ந்த முதல் வெடிப்பு தாங்க முடியா கொடுமையின் எதிர்வினை எனில் மிகை அல்ல. ‘ருஷ்யாவில் முதன் முதல் அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டது இக்கலகத்தில் தான்’ என்பார் பண்டிட் ஜவகர்லால் நேரு.இக்கலகம் தோற்கடிக்கப்பட்டாலும் பின்னர் ரஷ்யப் புரட்சி வெடித்தெழ முதல் அஸ்திவாரக் கல்லாய் இந்நிகழ்வை லெனின் பார்த்தார்.

எனவே தான் இவ்வெழுச்சி நடைபெற்ற புனிதபீட்டர்ஸ் பர்க்கிலுள்ள செனட் சதுக்கத்துக்கு’ ‘டிசம்பரிஸ்ட் சதுக்கம்’ எனப் பெயர் சூட்ட விரும்பினார். லெனினின் விருப்பம் அவர் மறைவுக்குப் பிறகே நிறைவேற்றப்பட்டது. சோவியத் யூனியன் சிதைவிற்குப் பிறகு இப்பெயர் பழையபடி ‘செனட் சதுக்கம்’ என 2006ல் மாற்றப்பட்டது. இப்போதும் அந்த டிசம்பர் கலவரக் கங்கின் அனலைக் கண்டு ஆட்சியாளர் நடுநடுங்குவதின் குறியீடே இந்த சதுக்கத்தின் பெயரை மாற்றியது எனலாம்.
இந்தக் கலவரம் தோற்கடிக்கப் பட்டாலும் அதன் அனல் அடங்கவில்லை; பல ரகசியக் குழுக்கள் முளைவிடவும் செயல்படவும் வழிவகுத்தது எனில் மிகையல்ல.கடும் அடக்குமுறையின் விளைவாய் சற்று அமுங்கியது போல்காட்சி அளித்த கொந்தளிப்பு 1840-1860 வரை வேறுவடிவம் எடுத்தது. மேல்தட்டு கனவான்களின் தலைமையில் டிசம்பரிஸ்ட் கலகம் நடந்ததெனில், இப்போது விவசாயிகள், கீழ்மட்ட மதகுருமார்கள், விவசாயிகள்,வியாபாரிகள், சாதாரண மத்திய தரத்தினர் கைக்குமாறியது. இவர்களை ரஷ்ய மொழியில் ரஸ்னொசிண்ட்ஸி என்றழைப்பர்.விஸோரியோன் பெலின்ஸ்கி, அலெக்சாண்டர், நிக்கோலாய் தோப்ரோலியுபோவ் உள்ளிட்டோர் இந்த இயக்கத்தில் முன் நின்றனர். அவர்கள் கற்பனாவாத சோசலிஸ்டுகளாய் இருந்தனர்.
இவர்கள் விவசாயிகள் புரட்சியை முன்னிறுத்தினர். அப்போது தொழில் வளர்ச்சி குறிப்பிடத்தகுந்ததாய் இல்லாததால் தொழிலாளி வர்க்கமும் பெரிதாய் இல்லை.1861ல் கிரிமிய தீபகற்பத்தில் நடந்த போரில் ஜார் மன்னன் படுதோல்வியடைந்தான். இச்சூழலில் பண்ணையடிமைகள் கலவரம் செய்யக் கூடும் என அஞ்சினான். எனவே பண்ணை அடிமைத் தனத்தை ஒழித்து ஆணையிட்டான். சிறிய அளவில் நிலச் சீர்திருத்தமும் மேற்கொண்டான். ஆனால் பலனை வேறுவழியில் அறுவடை செய்ய நிலப்பிரபுக்கள் சூழ்ச்சி செய்தனர்.
அநியாய குத்தகை, இலவச உழைப்பு, கடும் வரி என நீண்டது. முதுகொடிய பாடுபட்டும் முழு வயிறு காணா நிலைதான். இது அதிருப்தியை வேகமாக விசிறிவிட்டது. தொழில் வளர்ச்சியும் மெல்ல தலைதூக்கத் தொடங்கியது.இப்பின்னணியில் 1870-ல் ரஸ்னொசிண்ட்ஸி இயக்கம் சூடு பிடித்தது. ரஷ்யப் புரட்சியின் அடுத்த அடிவைப்புக்கு தயாரிப்பு களமானது. லெனின் மூத்த சகோதரர் அலெக்சாண்டர் உல்யானோவ் இலியெச் தீவிரவாதியாய் மாறிய காலகட்டம் துவங்கியது.அதற்குள் நுழையும் முன் உலகை ஈர்த்த வேறு சில புரட்சிகர நிகழ்வுகளை அடுத்து பார்ப்போம்.
புரட்சித் தொடரும்…


0 comments :

Post a Comment