பழகு.... நீயே...

Posted by அகத்தீ Labels:














பேசப்பழகு  “அவர்கள்” மகிழும்படி
எழுதப்பழகு  “அவர்கள்” எண்ணப்படி
வெறுக்கப்பழகு  “அவர்கள்” சுட்டுகிறபடி
வாழப்பழகு அந்த  “மநு” சொன்னபடி

சாதிக் குடுவைக்குள் சாகப்பழகு
மதபோதையில் மூழ்கப்பழகு
மனிதன் என்பதை மறக்கப்பழகு
அறிவைத்  தொலைத்து கேட்டுப்பழகு !

இவற்றில் கரைந்தால் தேசபக்தன்
இவற்றை மறந்தால் தேசவிரோதி
சிந்திக்க முனைந்தால் தீவிரவாதி
மனிதம் கொன்றால்  “கடவுளின் பிள்ளை”!

நீ தேசபக்தனாய்
கடவுளின் பிள்ளையாய்
வாழப்பழகுவியோ !
இல்லை என்போல்
மனிதனை நேசித்து
“ தேசவிரோதியாய்”
பட்டம் சுமப்பியோ?
நீயே முடிவுசெய் !
அது உன் உரிமை !\







அவர்கள் சர்வாதிகாரியா ?
பாசிஸ்டா ?
இட்லரின் அவதாரமா ?
முடிவு உன் கையில்தான்….
ஆம்.
நீ எப்படி நடந்து கொள்கிறாயோ
அவர்களும் அப்படியாவார்கள் !

நீ !வாயை இறுக மூடிக்கொள்
அப்போது உன்
கருத்து சுதந்திரம் பற்றி
அவர்கள் உரக்க முழங்குவார்கள்!

உன் பேனாவை கேமிராவை
உறையில் போட்டு கட்டி வை
அப்போது உன்
விமர்சன உரிமை பற்றி
நிச்சயம் நீட்டி முழங்குவார்கள்!

வயிற்றை ஈரத்துணியால் கட்டிவை
அப்போது இங்கு
வளர்ச்சியின் புள்ளிவிவரங்களை
 அள்ளிவிடுவார்கள்!

நீ!
மவுனியானால்
அவர்கள்
ஜனநாயகவாதியாய் காட்சியளிப்பார்கள்!

வல்லான் வகுத்ததே வாய்க்காலென
நீ வாளாயிருந்தாக்
அவர்கள்  அஹிம்சாமூர்த்திகளாய்
புன்னகை பூப்பார்கள் !

சாது மிரண்டால் காடு கொள்ளாதென
நீ கனன்றால்
அவர்கள் விஸ்வரூபமாய்
தங்கள் சுயரூபம் காட்டுவார்கள்!               

அவர்கள் சர்வாதிகாரியா ?
பாசிஸ்டா ?
இட்லரின் அவதாரமா ?
முடிவு உன் கையில்தான்….
ஆம்.
நீ எப்படி நடந்து கொள்கிறாயோ
அவர்களும் அப்படியாவார்கள் !











0 comments :

Post a Comment