விழியை திறக்கும் ஞானப்புனைவு
“ கண்ணிருந்தும் குருடர்களாய்” என்ற
சொற்றொடரொன்று நம்மிடையே புழக்கத்தில் உண்டு . சினிமா பாணியில் சொல்வதானால் இதையே
“ஓண் லைன் ஸ்டோரியாக” எடுத்துக் கொண்டு ; கதை பண்ணினால் எப்படியிருக்கும் ?
பழைய இந்தி சினிமா ஒன்று இப்படி வந்ததாக ஞாபகம் .ஆனால் இந்த நாவல் நம்மை ஒரு
உலுக்கு உலுக்கிவிடும் .ஆம்.அனுபவித்தே சொல்லுகிறேன் . உலுக்கும் நாவல் இது.
காரோட்டிக்கொண்டிருக்கும் ஒருவனுக்கு பார்வை திடீரென
பறிபோய்விடும் . எல்லாம் ஒரே இருட்டாக அல்ல வெண்மையாகத் தெரியும் . அவன் வண்டியை
நிறுத்திவிட போக்குவரத்து நெரிசலில் சாலையே அல்லோகலப்படும் . ஒருவன் உதவிக்கு
வருவான் . அந்தக் காரிலேயே பார்வையைப் பறிகொடுத்தவனை அவன் வீட்டில் சேர்ப்பான் .
பார்வை இழந்தவன் மனைவி அவனை மருத்துவமனைக்கு கொண்டு செல்வாள் . இந்த விசித்திர
நோய் இதற்குமுன் எங்கும் கேள்விப்படாத ஒன்று .மருத்துவர் திணறுவார் .ஆனால் நோய்
பரவத் தொடங்கியது. அவனின் மனைவி ,உதவிக்கு வந்து காரை திருடிக்கொண்டு போனவன் ;
அவன் உறவுகொண்ட பாலியியல் தொழிலாளி ; அந்த டாகடர் என ஓவ்வொருவராய் நோய் தொற்ற
பார்வை இழந்தனர் . குருடு ஒரு தொற்று நோயல்லதான் ஆனால் இங்கு இந்த விசித்திரக்
குருட்டு நோய் தொற்றி பரவத் தொடங்குகிறது .
டாக்டர் உயரதிகாரிகளை – அமைச்சர்களைத் தொடர்பு கொள்ள
; முதல்கட்ட தடுப்பு நடவடிக்கையாய் இந்நோய் தொற்றியவர்களை தனி குவாரண்டைன்களில்
அடைக்கப்படுகிறார்கள் . புதினம் சூடுபிடிக்கிறது .டாகடரின் மனைவியும் பார்வை
இழந்து அங்கு அடைபடுபவராக முதலில் காட்டப்படுவார் ; பின்னர் அவர் மட்டும் பார்வை
இழக்கவில்லை – இழந்ததாக நடித்து அங்கு தொண்டு செய்பவராக சமூக விழிப்பை விதைப்பவராக
செயல்படுகிறார் என கதைப் போக்கில் தெளிவாகிறது .
ஒவ்வொரு நாளும் நோய்த்தாக்கம் அதிகரிக்கிறது
.சாலையின் வண்டி ஓட்டிகள் அப்படி அப்படியே வண்டியை நிறுத்துகிறார்கள் .செய்தி
வாசிக்கும் போதே செய்திவாசிப்பாளர் பார்வை போகிறது . முதலில் குவாரண்டைனைவிட்டு
வெளியேற முயற்சித்த கார் திருடிய குருடனை ராணுவத்தின் துப்பாக்கிக்கி
பலிகொள்கிறது . குவாரண்டைனில் அடைக்கப்பட்டோர் உணவைப் பெறுவது பெரும் போராட்டம்
ஆகிறது .
விரைவில் மேலும் கூட்டமாக இரு நூறுபேர் அங்கு
அடைக்கப்பட நெரிசலும் உதவியின்மையும் பசியும் அங்கே அவர்களை பாடாய்படுத்துகிறது
.உணவுக்காக பெரும் தள்ளுமுள்ளு – கழிவறை சுத்தம் செய்ய ஆளில்லை . நிரம்பி வழிய
வழியெங்கும் மலஜலம் - என்ன நடக்கிறது – யாருக்கும் தெரியவில்லை .
மேலும் மேலும் பிர்ச்சனைகள் பூதாகரமாகின்றன .
வந்தவர்களில் ஒரு பகுதியினர் ரெளடிகளாக அவதாரம் எடுக்கின்றனர் . அதில் ஒருவர்
தன்னிடம் இருக்கும் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு மிரட்டுகின்றார் .
எல்லோரிடமும் இருப்பதை மிரட்டிப் பறிக்கின்றனர் . அதன் பின் பெண்களை தங்களுக்கு
விருந்தாகுமாறு வற்புறுத்துகின்றனர் .பார்வை தொலைந்தாலும் வக்கிரமும் கொடூரமும்
தொலையவில்லை .இக்கட்டத்தில் பெண்கள் முதலில் சற்று இணங்கியும் பின்னர் டாக்டரின்
மனைவியின் திட்டப்படி ஒரு ரெளடியின் கழுத்தில் கத்திரியால் குத்தி கொலைசெய்ய ;
ரெளடிக் கூட்டம் பயந்து பின் வாங்குகிறது .
இதற்கிடையில் அரசு வெற்று நம்பிக்கைகளை மட்டுமே
சொல்லிக் கொண்டிருக்கிறது – அந்நிய சதி என்று பேசுகிறது – ராணுவத்தையும் நோய்
தாக்க அவர்களும் பின் வாங்க நாடெங்கும் ஒரே குழப்பம் .இந்தச் சூழலில் டாக்டரின்
மனைவி தலைமையில் ஒரு குழுவினர் ஒருவருக்கொருவர் புரிந்து ஒத்துழைத்து குவாரண்டைனை
விட்டு வெளியேறி டாகடரின் வீட்டுக்குவருகின்றனர் .ஊரே குலைந்து கிடக்கிறது
.உணவுக்கான வேட்டை தொடர்கிறது .
நாவல் எங்கு நடக்கிறது குறிப்பு இல்லை
.பாத்திரங்களுக்கு பெயரில்லை .சர்ச் பைபிள் என இரண்டொரு இடத்தில் வருவதைத் தவிர
வேறெந்த மதத் தடயமும் இல்லை . புத்தகத்தின் அட்டையை , எழுதியவர் பெயரை
நீக்கிவிட்டால் உங்கள் ஊரில் – எங்கள் ஊரில் உங்கள் ஊரில் நடக்கிற சம்பவமாகிவிடும் !
மனித மனம் எப்படியெல்லாம் அலைபாய்கிறது –
ஒவ்வொருவரின் சுயநலமும் சிக்கலும் எப்படி எல்லாம் இருக்கிறது –
குப்பை,கூளம்,வறுமை,அடக்குமுறை ,நபிக்கைத் துரோகம் , மோசடி , எதிர்பார்ப்பு
,குற்றவாளியாக்கப்படும் சூழல் ,ஏமாற்று , செயலற்ற வேறும்பேச்சாக இருக்கும் அரசு
இவை எதையும் கண்டும் காணாமல் இருக்கிற மக்களை பகடி செய்கிறது இந்நாவல் .
“கொடுமையைக் கண்டும் காணாத குருட்டு உலகமாகிவிட்ட” சமூகத்தை குருடாகிப் போன மனிதர்கள்
மூலம் சவுக்கடியாய் தாக்குகிறது இந்நாவல்.
யதார்த்தத்தை எழுதுகிறேன் பேர்வழி என செப்பிக் கொண்டு
“ நம்பிக்கை வறட்சியை” விதைக்கிற நாவல்களுக்கு மத்தியில் ; எவ்வளவு நெருக்கடியான
சூழலிலும் – இருண்ட பொழுதுகளிலும் கூட சூழலைப் புரிந்து மனிதர்களைத் திரட்ட
முடியும் – கொடுமையைப் பின்னுக்குத் தள்ள முடியும் என இந்நாவல் நெற்றிப் பொட்டில்
அறைந்து சொல்கிறது.
இந்நாவல் முழுக்க முழுக்க புனைவு ,கற்பனை . ஆனால்
ஊடும் பாவுமாய் இருக்கும் சமூகச் செய்திகள் அனைத்தும் முழுக்க முழுக்க சமூக
யதார்த்தம் .யதார்த்த இலக்கியமெனில் அங்கு கற்பனைக்கு இடமிருக்காது என்கிற வறட்டு
வாதத்தை இந்நாவல் நொறுக்கிவிட்டது .
இந்நூலாசிரியர் சரமாகோ போர்ச்சுகீசியர் ,கவிஞர்
.நாவலாசிரியர் . பத்திரிகையாளர் .இவர் எழுதிய “ இயேசு வழியிலான வேதாகமம்”
நூலுக்காக பெரிதும் சங்கடங்களை எதிர் கொண்டவர் . ஐரோப்பிய நாவலுக்கான
பரிசிலிருந்து விலக்கி வைக்கப்பட்டவர் . மனம் நொந்து நாட்டை விட்டு வெளியேற
வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டவர் . இறுதிக்காலத்தை ஸ்பெயினில் கழித்தவர் . அங்கேயே
மரணமடைந்தவர் .வாழ்நாள் முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராகவே இருந்தவர் .
அடக்குமுறைகளால் தடம் மாறவில்லை . அவரின் இந்த நாவல் நோபல் பரிசு பெற்றது.அதன்
மூலம் நோபல் பரிசு தன்னைப் பெருமைப்படுத்திக் கொண்டது .
இந்நாவல் குராடாகிப் போனவர்களை சுற்றிச் சுழலும்
நாவல் ; ஆனால் மாபெரும் விழிப்புணர்வை உங்களுக்குள் விதைக்கும் . அவசியம்
படியுங்கள் .இந்த நாவலைப் படித்து உணர்வதை அப்படியே வார்த்தையில் வடித்திடல் இயலாது
.படியுங்கள் . மொழிபெயர்ப்பு என்று சொன்னால்தான் தெரியும் என்கிற அளவுக்கு
துள்ளோட்டமான நடையில் தமிழில் தந்துள்ள எஸ்.சங்கரநாராயணனுக்கு நெஞ்சம் நிறைந்த
பாராட்டுகள் .
குறிப்பு :
பொதுவாக குருடன் ,குருடு போன்ற சொற்களை இப்போது
பொதுவெளியில் பயன்படுத்துவதில்லை . பார்வை இழப்பு ,பார்வை இழந்தவன் என்ற சொற்களே
பயன்படுத்தும் போக்கு ஓங்கி வரும் காலம் இது . எனினும் இந்நாவலிலும் ,இந்த நூல்
அறிமுகத்திலும் குருடு ,குருடன் என்ற சொற்கள் தாராளமாய்
புழங்கவேண்டியதாகிவிட்டது.அது இந்நாவலின் உள்ளடக்கம் சார்ந்து தேவையாகிவிட்டது .
இந்நாவல் ஊட்டும் விழிப்புணர்வைக் கருதி அதற்காக மன்னித்துவிடலாம் அல்லவா ?
பார்வை தொலைத்தவர்கள் [ நாவல்],
ஆசிரியர் : யோசே சரமாகோ,தமிழில்: எஸ்.சங்கரநாராயணன்
,
வெளியீடு : பாரதி புத்தகாலயம் ,
7,இளங்கோ தெரு ,தேனாம் பேட்டை,சென்னை –
600 018.
பக் : 384 , விலை : ரூ .295.
- சு.பொ.அகத்தியலிங்கம்.
0 comments :
Post a Comment