வசந்தம்

Posted by அகத்தீ Labels:




வசந்தம் 1938 ( ஜெர்மன் கவிதை )
------------------------------------------

இன்று
ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை.
காலையில் திடீரென பனிமழை பெய்தது!
தீவு எங்கும் பசுமை
அதன்மேல் வெண்பனித்துளிகள்
இந்தப் பெருங்கரை, தீவு,
எனது மக்கள் கூட்டம்,
என் குடும்பம் மற்றும் என்னையும் அழித்தொழிக்கும்
யுத்தத்தில் இறங்கியவருக்கு எதிராய்
விரல் சுட்டும் ஒரு கவிதையை
எழுதிக்கொணடிருந்த என்னை
எனது இளைய மகன்
வேலிக்கு அருகிலிருந்த
ஆப்ரிக்கோட் மரத்தின் பக்கம்
கையைப்பிடித்து அழைத்துப் போனான் !
குளிரால் உறைந்து நிற்கும் அம்மரத்தை
ஒரு சாக்கால் மூடினான்
நான் அமைதியானேன் !
கடலின்மேல் மழைமேகங்கள் தொங்கினாலும்
பூந்தோட்டங்களில்
வெய்யிலின் தங்க ஸ்பரிசம் !
கொய்யா மரங்களில் பச்சைத்தளிர்கள்
ஆனாலும் பூக்கவில்லை.
பூத்திருக்கும் செர்ரி மரங்களில்
இலைகளில்லை .
வறண்டு காய்ந்த கிளைகளில்
வெண்மலர்க்கொத்துகள் மலர்ந்திருப்பதைப்போல்
கடலில் சிறு அலைகளுக்கிடையில்
வெட்டித் தைத்த பாயுடன்
கடந்துபோகிறது ஒரு படகு.
பாக்கு மரக்கிளிகளின் கொஞ்சல் மொழிகளைக்
கிழித்துக்கொண்டு மூன்றாம் ரைஹின்
யுத்த விளையாட்டால் உண்டான
கப்பல் பீரங்கியின் இடிமுழக்கம்!
கடற்கரை அரளிமரங்களில்
வசந்த இரவில் காலக்கோழிகள் கூவுகின்றன.
மரணம் வருவதைத் தெரிவிக்கவே
காலக்கோழிகள் கூவுவதாய்
மக்கள் நம்புகின்றார்கள் .
அதிகார சக்கிகளின் அந்தரங்களை
வெளிப்படுத்தும் எனக்கு
மரணத்தைத் தெரிவிக்க
காலக்கோழிகளின் உதவி தேவையில்லை!


மூலம் : பர்தோள்ட் பிரட்
மலையாளத்திலிருந்து : எல்.பி.சாமி

(
ஹிட்டலரின் யுத்தவெறி உலகம் முழுவதையும் அச்சுறுத்திய இருண்ட காலமான 1938-41 ஆம் ஆண்டுகளில் பாசிசத்திற்கு எதிராக எழுதப்பட்ட இந்தக் கவிதை தற்காலத்திற்கும் பொருந்தும். ஹிட்லர் இன்று இல்லை என்றாலும் வாரிசுகள் தொடரத்தானே செய்கிறார்கள்! ) - மொழிபெயர்ப்பாளர்


நன்றி : தேசாபிமானி மலையாள வாரயிதழ் 


0 comments :

Post a Comment