புவிவெப்பமாதலின் அறிவியலும் அரசியலும்

Posted by அகத்தீ Labels:




புவிவெப்பமாதலின் அறிவியலும் அரசியலும்

சுற்றுச் சூழல் பாதிப்பு எனும் பேரபாயத்தை இன்றைய உலகம் சந்தித்து வருகிறது .இதனை எல்லோரும் பேசத்தொடங்கியுள்ளனர் . சுற்றுச்சூழல் பாதிப்பு என்பது என்ன? இதைப்புரிந்து கொள்வதிலும் விளக்குவதிலும் ஆளுக்குஆள், அமைப்புக்கு அமைப்பு மாறுபாடுகள் உண்டு. அவை வெறுமே புரிதல் குறைபாடு மட்டுமல்ல ; அதற்கும் மேல் அவை ஒவ்வொன்றுக்கு பின்னாலும் ஒரு நுட்பமான அரசியல் ஒளிந்திருப்பதை அறியாதவரைக்கும்  சுற்றுச் சூழல் பாதுகாப்பு வெறும் வெற்று முழக்கமாகவே இருக்கும்.
மனிதனுக்கு பயன்படாமல் இயற்கை வீணடிக்கப்படுவதைச் சுற்றுச் சூழல் பாதிப்பு எனலாம். அது மட்டுமல்ல , மனிதன் தற்போது வாழ்ந்துகொண்டிருக்கும் இப்புவிக்கோளம் நல்வாழ்வுக்கு உகந்ததாக அமையாமல் பெரும்பாதிப்பு ஏற்படும் வகையில் தொடர்ந்து சீரழிக்கப்படுவதையும் சுற்றுச் சூழல் பாதிப்பு எனலாம்.
 ‘‘ஓசோன் படலம் பாதிப்பு ; உலகளாவிய வகையில் வளிமண்டலம் பாதிப்படைதல் -இதனை சுருக்கமாகச் சொன்னால் புவி வெப்பமாதல் ; உயிரினங்கள் அழிந்து அற்றுப்போதல்; மரபணு வகைகள் அழிதல்; அமில மழை; மழைக்காடுகள் அழிதல்; சதுப்புநிலம் அழிதல்; மண் அரிப்பு; பாலைவன மாதல்; வெள்ளமும் வறட்சியும் ;நிலத்தடி நீர் உட்பட குளம் , குட்டை, ஏரிமுதலிய நீர்அருகல்; கடற்கரை மாசுபடுதல்; விஷத்தன்மையுடைய மாசுபடுதல் என பலவகை யான மாசுப் பிரச்சனைகள் இன்று உலகம் முழுவதும் பரவியுள்ளன. இவை நம் நல்வாழ்வைப் பாதிக்கின்றன’’ என்கிறார் விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன். தற்போது புவிவெப்பமாதல் மிக முக்கிய அவசர அவசிய சவாலாக நம் முன் எழுந்துள்ளது .இப்பிரச்சனையை அறி வியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் புரிந்து உடன் செயலாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது .
‘‘ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் – உதாரணமாக ஒரு நாளில் சுற்றுச் சூழலில்  அல்லது வளிமண்டலத்தில் ஏற்படும் வெப்பம், அழுத்தம், காற்றில், ஈரப்பதம் மற்றும் மழை யில் அளவு மாற்றத்தையே தட்பவெப்ப நிலை (WEATHER) என்று கூறுகிறோம். தட்ப வெப்ப நிலையின் நீண்டகாலத் தொகுப்பையே காலநிலை (CLIMATE) என்கிறோம். பன்னெடுங் காலமாக இயற்கையாகவே காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுக்கொண்டேதான் இருக்கிறது.
ஒரு காலத்தில் பனிப் பெருங்காலம் இருந்தது. அப்போது பூமி முழுவதும் பனிபடர்ந்திருந்தது. அதன்பின் ஏற்பட்ட பனி விலகிய காலம் இது. சுமார் எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிறுபனிக்காலம் விலகி இன்றைய பனி இடைக்காலம் [INTERGLACIAL AGE] ஏற்பட்டுள் ளது என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இவை இயற்கை மாற்றம்; லட்சம் அல்லது பல்லா யிரம் ஆண்டுகள்  இடைவெளியில் மெல்ல மெல்ல ஏற்படும் மாற்றம்’’.
ஆக புவி நீண்டகாலமாக சூடேறிக் கொண்டுதானே இருக்கிறது என்று ஒதுக்கி விடமுடியாத நிலை உருவாகியுள்ளதா? ஆம். ‘‘மனிதத் தலையீடுகளால் தற்போது ஏற்படும் மாற்றங்கள் சூழல் மண்டலத்தையே நிலை குலைய வைத்துவிடும். இதைத்தான் கால நிலை மாற்றம் எனக் கவலையோடு பேசுகிறோம்’’. இன்னும் தெளிவாகச் சொல்வ தெனில் புவியிலுள்ள கார்பன்டை ஆக்ஸைடு செறிவை பிபிஎம் எனும் அலகால் குறிப்பிடுவர். வளிமண்டலத்தில் 100 பிபிஎம் அதிகரிக்க 5000 ஆண்டுகளிலிருந்து 20,000 ஆண்டுகள் வரை காலம் பிடிக்கும் . ஆனால் கடந்த 120 ஆண்டுகளில் மனிதன் உருவாக்கிய மாசி னால் அதே 100பிபிஎம் அதிகரித்துள்ளது.அதாவது குறைந்தபட்சம் ஐயாயிரம் ஆண்டுகளாவது பிடிக்கும் பேரழிவை நாம் வெறுமே 120 வருடங்களில் செய்துள்ளோம். நிலைமை இப்படியே போனால் 2100 ஆம் ஆண்டு மேலும் 100 பிபிஎம் அளவு கார்பன் அதிகரிக்கும் . புவியின் வெப்பம் 4 டிகிரி கூடும்.
புவிவெப்ப மடைந்தால் பல உயிர்கள் அழியும்; பருவநிலை சீர்கெடும்; விவசாயம் பாதிக்கப்படும் ; தொற்று நோய்கள் உரு வாகும் ; பனிப்பாறை உருகும் ; கடல் மட்டம் அதிகரிக்கும் ; மாலத்தீவு உட்பட பல நாடுகள், கடற்கரைப் பிரதேசங்கள் அழிவைச் சந்திக்கும்; இப்படி எண்ணற்ற தொடர் விளைவுகள் ஏற்படும் .
இந்த வெப்ப அதிகரிப்புக்கு சூரிய ஒளிதான் காரணமா ? இல்லை ! பின் என்ன காரணம்? ஒரு எளிய உதாரணம் ஒரு போர்வையால் தலை  முதல் கால் வரை இறுக்க போர்த்திக் கொள்ளுங்கள் சற்று நேரத்தில் போர்வைக் குள் கதகதப்பாகிவிடும் ;இதன் பொருள் இடையே இருக்கிற காற்றுதான் அல்லவா? அதேபோல் பூமியின் வளிமண்டலத்தில் கார்பன் – டை – ஆக்ஸைடு, மீத்தேன், குளோரோப்ளூரோ கார்பன் முதலிய பசுங்கூட வாயுக்களே காரணம்.
இதில் குளிர்சாதனப் பெட்டி போன்ற வற்றில் அடைக்கப்பட்ட குளோரோ ப்ளூரோ பெரும் கேட்டை உண்டாக்கியது . சர்வ தேச அளவில் மேற்கொள்ளப்பட்ட தொடர் போராட்டம் – முயற்சி இவற்றின் விளை வாக இந்நிலை மாற்றப்பட்டு மாற்று தொழில் நுட்பம் மூலம் குளோரோ ப்ளூரோ கைவிடப் பட்டு, கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது; விளவு தற்போது ஓசோன் ஓட்டை அடைந்து வருகிறது.
இந்த கார்பனை பெருமளவு மரங்கள் பகலில் உணவுதயாரிக்க உறிஞ்சிவிடும்; தற்போது பெருமளவு காடுகள் அழிக்கப்பட்டு வருவது பிரச்சனையை இன்னும் கடுமையாக்குகிறது. காடு பாதுகாப்பு மற்றும் வளர்ப்பு புதிய நெருக்கடிகளைத் தவிர்க்குமா? பெரிய ஆய்வுகள் சொல்வதென்ன? இது முக்கியமே ; ஆனால் இது மட்டுமே தீர்வல்ல. ஏனெனில் தொழில் வளர்ச்சியை சார்ந்து நாம் உபயோகிக்கும் நிலக்கரி , பெட்ரோல் போன்றவைகளே பெரிதும் காரணமாகிறது; அவையே கார்பன் அதிகரிப்பில் முக்கிய சூத்திரதாரி ஆகிறது. இதன் உபயோகத்தை உடனே நிறுத்துவது சாத்தியமல்ல எனினும் படிப்படியாக மாற்று தேடியாக வேண்டும். வேறுவழியில்லை.
1972ல் ஸ்டாக்ஹோமில் நடந்த சுற்றுச்சூழல் மாநாடு முதல் எச்சரிக்கை மணியை அடித்தது; அதுமுதல் 2016 பாரீஸ் மாநாடு வரை நடந்த மாநாட்டு விவாதங்கள், முடிவுகள், முட்டுக் கட்டைகள், திசைதிருப்பல்கள்  என பெரும் அரசியல் போராட்டமும் இதோடு பின்னிப் பிணைந்தது .2014ல் ஐந்தாம் அறிக்கையில் ஐ.நா.பொதுச் செயலாளர் பான்-கி-மூன் எச்சரித்தார். ‘‘விஞ்ஞானம் பேசிவிட்டது! இதில் மறுப்பதற்கு ஏதும் இல்லை !உலகத் தலை வர்கள் செயல்பட வேண்டிய தருணம் இது . இன்னும் தயங்கி நிற்க காலம் நம் பக்கத்தில் இல்லை!’’
ஆம், அண்மையில் கியூபாவின் பெரும் தலைவர் தோழர் பிடல் காஸ்ட்ரோ தன் பேச்சில் உலகின் தலையாயப் பிரச்சனையாக சுற்றுச் சூழல் பாதுகாப்பையே முன்னிறுத்துவார்.   2016 -ம் ஆண்டுக்கான 88-வது ஆஸ்கர் விருது வழங்கும்  விழா  லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்றபோது, சிறந்த நடிகருக்கான பரிசு பெற்ற லியோனார்டோ டி காப்ரியோ எச்சரித்தார்  ‘‘நாம் ஆதரிக்க வேண்டும்  புவி வெப்பமயமாதல் குறித்து உண்மையை பேசும் தலைவர்களை.  சூழலை மாசுப்படுத்தும் மனிதர்கள் மற்றும் பெரும் நிறுவனங்களை ஆதரித்து பேசாத தலைவர் களை சுட்டிக்காட்ட வேண்டும். புவி வெப்பமயமாதலால் பாதிக்கப்படும்,  உலகம் முழுவதும் உள்ள பழங்குடி மக்களுக்காகவும்,  கோடான கோடி  ஏழைகளுக்காகவும் பேசும் தலைவர் களை, நாம் ஆதரித்து எழ வேண்டும்’’-  இது ஆஸ்கர் மேடையில் காப்ரியோ பேசியது.
மேம்போக்காக பார்த்தால், இது சாதாரண விஷயமாக தோன்றலாம். ஆனால், பருவ நிலை மாற்றத்தில் ஆதிக்கம் செலுத்தும், தொடர்ந்து கார்பன் உமிழ்வை குறைத்துக் கொள்ள மறுக்கும் அமெரிக்காவில் நின்று கொண்டு பேச ஒரு கலைஞனுக்கு மாபெரும் துணிச்சல் வேண்டும்.
புவி சூடாகிவிட்டது ஆளுக்கு கொஞ்சம் குறைத்துக் கொள்வோம் என பொதுவாகப் பேசும் அமெரிக்க சாமர்த்தியம் அல்லது அளவுக்கு குறைவாய் மாசுபடுத்துவோரிடம் காசு கொடுத்து பசுமையை என் கணக்கில் சேர்த்துக் கொள்கிறேன் என்கிற வியாபார தந்திரம் எல்லாவற்றையும் எதிர்கொண்டே இப்பிரச்சனையை அணுக வேண்டியுள்ளது .
உலகின் மொத்தகார்பன் அளவில் ஒவ்வொரு நாட்டுப் பங்கையும் கணக்கிட்டால்  அமெரிக்கா 14.7 ,சீனா 23 , இந்தியா 5 . இதையே மக்கள் தொகை அடிப்படையில் கணக்கிட் டால் அமெரிக்கா 14 டன், சீனா 7 டன், இந்தியா 1.5 டன்  இதனை சராசரி 2 டன்னாக குறைக்க வேண்டுமெனில் அமெரிக்காதானே பெரும் முயற்சி செய்ய வேண்டும். இதைத்தான் லியோனார்டோ டி காப்ரியோ சரியாக எச்சரித்தார் .
அமெரிக்கா பெரிய தவறு செய்கிறது. பேரழிவு அமெரிக்காவுக்கு என சும்மா இருக்க இயலுமா?  ‘தென்ன மரத்தில் தேள் கொட்டினால் பனமரத்தில் நெறிகட்டும்’ என்பது போல 0.3க்கும் குறைவான கார்பனை வெளியிடும் மாலத்தீவே முதலில் அழியும் ; நம் போன்ற வளரும் நாடுகளின் கடலோரப்பகுதி மக்கள் இயற்கைப் பேரழிவைச் சந்திப்பர். எனவே எல்லோரும் கூட்டாகச் சந்திக்க வேண்டிய பெரும் சவால்.
பாரீஸ் மாநாட்டில், ‘‘ஆண்டு தோறும் வளிமண்டலத்தில் மனித நடவடிக்கைகளால் உமிழும் கார்பன் அளவைக் குறைத்துக் கொண்டு –கார்பன் தவிர்த்த வளர்ச்சிப்பாதை மேற்கொள்ளப்பட வேண்டும் என அனை வரும் ஒப்புக் கொண்டுள்ளனர். மேலும் கொள்கை அளவில் அனைவருக்கும் பொது வான,  ஆனால் வேறுபட்ட அளவிலான பொறுப்பேற்பு [COMMON BUT DIFFERENTIAL RESPONSIPLITY] எனும் கோட்பாட்டையும் ஒப்பந்தம் அங்கீகரித்துள்ளது முக்கியமான மைல்கல்லாகும் .
ஆயினும் அதனை நிறைவு செய்வது அவ்வளவு சுலபமல்ல ; அமெரிக்கா போன்ற வல்லரசுகளின் ஆதிக்கத்தை மீறி செய்வது பெரும் சவாலே. அமெரிக்கா கார்பனை அதிகம் உமிழும் தொழில்களை இந்தியா போன்ற நாடுகளின் தலையில் கட்டிவிடும் , மேக் இன் இண்டியா என கவர்ச்சி வசனம் பேசி மோடிகள் இதனை நம்மக்கள் மீது திணித்துவிடக்கூடும் ;மேலும் மாற்று தொழில் நுட்பத்திற்கு வளரும் நாடுகள் மாறுவது பெரும் நிதிச்செலவாகும் ; அதுவும் மூன்றாம் உலகநாடுகளில் பெரும் கடன் சுமையாக ஏறும். ஆக, புவி வெப்பமாவதை தடுத்து நிறுத்துவது நம் எதிர்காலத்தை குறித்த பெரும் கேள்வியாகும் .
இதன் அறிவியலை,வரலாற்றை, அர சியலை முழுமையாக உள்வாங்காமல் இப்போரினில் வெல்ல இயலாது. ஒரு முழுமையான பார்வை தேவை. த.வி.வெங் கடேஸ்வரன் எழுதிய பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள புத்தகம் (102 பக்கம், விலை ரூ.80) ‘‘சுற்றுச்சூழல் அரசியல் : ஏமாற்றம் தரும் பாரீஸ் ஒப்பந்தம்’’ எனும் நூல் தொடக்க பாடமாக அமைந்துள்ளது. ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டும் அவசியம் படிக்க வேண்டும்.விவாதிக்க வேண்டும். பரப்புரை செய்ய வேண்டும்.களம் காண வேண்டும் .
இந்த புவிக்கோளம் நம்முடையதல்ல எதிர்காலச் சந்ததியினருக்கு இதனை பத்திரமாய் கையளிக்க வேண்டியது நமது கடன். இதனை வலியுறுத்தவே குழந்தைகள் முன்பு பாரீஸ் ஒப்பந்தம் கையெழுத்தானது. நாமும் அதனை உணர்வுப் பூர்வமாய் ஏற்று அடுத்த தலைமுறைக்காக சிந்திப்போம்.செயல்படுவோம்.
  • சு.பொ.அகத்தியலிங்கம்

0 comments :

Post a Comment