தலைப்பு எதற்கு ?

Posted by அகத்தீ Labels:

தலைப்பு எதற்கு ?

==========================

நேற்றுவரை நம்பியவற்றை
சற்றே நகர்த்திவை !

அடையாளங்கள் ஒன்றுவிடாமல்
துறந்து அம்மணமாகு !

இந்த நொடிவரை எதிர்பார்த்தவற்றை
இடம்பெயரச் செய் !

கீழிருந்து மேலே பார் !
மேலிருந்து கீழே பார் !

இடம் வலம் முன்பின்
எங்கும் துழாவு !

காலடியை தவறவிடு !
கைககளை சுழலவிடு !

பூமியில் உருளு ! நீரில் மித !
நெருப்பின் சுவை அறி !

நிபந்தனை இல்லாமல் ஊர்சுற்று !
அனைத்தையும் வாசித்தறி !

எதையும் சாராமல் ! எதன்மீதும் சாயாமல் !
ஞானத்தை தேடி அலை !

ஒருவேளை அகப்படலாம் !
உன்னுள்ளும் புத்தன் இருக்கலாம் !

- சு.பொ.அகத்தியலிங்கம் .

சும்மா கிடந்த சொல்லை எடுத்து .. [ 2 ]

Posted by அகத்தீ Labels:








சும்மா கிடந்த சொல்லை எடுத்து -  [2 ]


கூடுபின்னும் குருவிகள் கூறுகின்ற சேதி


- சு.பொ.அகத்தியலிங்கம்

காதலுக்கும் கவிதைக்கும் உள்ள உறவை சரியாக வரையறை செய்வது பெரும் சிரமம் . காதல் துளிர்க்கும் போது நெஞ்சில் கவிதை மீதான காதலும் துளிர்த்து விடுமோ? இருக்கலாம் .

காதல் இல்லாத சினிமாவை எத் தனை பேர் ரசிப்பார்கள் . திரைப்படங் கள் மௌனப்படமாய் இருந்த காலம் தொட்டு காதல் பாடல்கள் உண்டு. திரைப்படம் பேசும் படமானதிலிருந்து எத்தனை விதமான காதல் பாடல்கள்? யோசிக்க யோசிக்க சிறகுகள் விரியும். அவற்றில் மென்மையாய் வருடியகாத லும் உண்டு . காமம் கொப்பளித்தகாத லும் உண்டு .

“நெஞ்சுக்குள்ளே முள்ளு மொளச்சா...” என காதல் உறுத்தலை பாடத்துவங்கிய ஒரு பாடல் (படம்: கங்காரு) “ தள்ளிப் போட காதல் ஒண்ணும் / தேர்தல் இல்லை வாடி /தப்பு பண்ணும் சந்தர்ப்பத்தை /தந்துவிட்டு போடி...” என காதலில் தப்பு நடப்பதை நியாயப்படுத்தும். காதலில் இரண்டு வகை சைவம் ஒண்ணு அசை வம் ஒண்ணுண்ணு தமிழ் திரைப்பட உலகம் தனி இலக்கணமே வகுத்துக் கொண்டு விட்டது . இது சரியா ? பண்பாட்டு அளவுகோலின்படி இவை ஏற்கத்தக்கதா இல்லையா என்கிற விவாதம் நடந்து கொண்டே இருக்கிறது.

தெய்வீகக் காதல் என்பதும் புனித மான காதல் என்பதும் வெறும் பகட்டுப் பேச்சே . காதல் இயற்கையானது. தவிர்க்க முடியாதது . நம்மைச் சுற்றி ஒருமுறை பாருங்கள். தலைகொடுத்தான் தம்பி (ஆண்டு 1959) திரைப்படத்தில் பட்டுக் கோட்டை இதனை காட்சிப் படுத்துகிற பாங்கே தனி.

“ துள்ளித் துள்ளி அலைகளெல்லாம் / என்ன சொல்லுது ?- பல / துண்டு துண் டாய் எழுந்து - அது / எங்கே செல்லுது” என அவள் கேட்க, “ கள்ளவிழிப் பார்வையைக் / கண்டுகொள்ளுது - கோபங் /கொண்டே துள்ளுது - உன் / கன்னத்தில் கிள்ளிவிட்டு சிரிக்கச் சொல் லுது !” இப்படி அவன் கூற பாடல் நீளும். நண்டு , வண்டு என ஒவ்வொன்றாய் சுட்டி அவள் கேட்க அவன் பதில் சொல்வான். இறுதியாக . “ பாக்குமரச் சோலையிலே/ பளபளக்கும் பாளையிலே/பறந்து பறந்து குருவியெல்லாம்/என்ன பின்னுது?” என அவள் வினவ அவன் சொல்வான், “அது வாழ்க்கையை உணர்ந்துகிட்டு / மனசும் மனசும் கலந்து கிட்டு/மூக்கினாலே கொத்தி கொத்தி / கூடு பின்னுது” என்பதோடு நில்லாமல் இருவரும் இணைந்து சொல்வர் , “இத்தனையும் நம்மைப் போல / இன்பம் தேடுது - இதை / எண்ணும் போது நமது மனம் / எங்கோ போகுது ”.

ஆக , காதல் இயற்கையானது என் பதை கவிஞர் எவ்வளவு இயல்பாய் பாடி விட்டார் பாருங்கள் .அதே சமயம் காதல் பொறுப்பற்றதாகக் கருத பட்டுக்கோட் டையால் முடியாது. ஏனெனில் அவர் சமூகப் பொறுப்புமிக்க கவிஞர். எனவே தான் குருவிகள் கூட பொறுப்புணர்ந்து வாழ்க்கையை உணர்ந்து தன் காதல் வாழ்வுக்கு கூடுகட்டுவதை சுட்டிக்காட்டி ‘மனிதா! காதலிக்கும் போது உனக்கும் அந்த பொறுப்பு வேண்டாமா?’ என வாழைப்பழத்தில் ஊசியை இறக்குவது போல் நற்பார்வையை காதலுக்குத் தருகிறார்.

காதலை வர்ணிப்பதில் நெகிழ்ந்து நெக்குருகுவதில் எல்லா கவிஞர்களும் ஒன்றே. ஆனால் எல்லையற்ற காமவிர சத்தைக் கொட்டி எழுதுவது இப்போது வாடிக்கையாகிவிட்டது. இதற்கு எடுத் துக்காட்டு சொல்லப் போயின் இந்தப் பக்கமே ஆபாசத்தின் எல்லை கடக்கும் அபாயம் உண்டு. “கட்டிப் பிடி கட்டிப்பி டிடா...” “கடித்து தின்னேண்டா..” “ தப்பு பண்ணேண்டா..” என்றெல்லாம் நேரடி யாக எல்லைதாண்டும் பாடல்கள் உண்டு.அவை மட்டுமே இன்றைய திரைப்படத்தில் காதல் லட்சணம் என்று கூறுவது மிகவும் குறுகிய பார்வை . அப்படிப்பட்ட பாடல்களுக்கு இடையே அந்திமழை பொழிவதுபோல் இதயத்தை வருடுகிற ஏராளமான பாடல்களும் அன் றாடம் காதில் புகுந்து நெஞ்சில் கலக்கி றது . அதே சமயம் சமூகப் பொறுப்பும் ஆண்பெண் சமத்துவமும் மிக்க காதல் பாடல்கள் மிகச் சொற்பமே .இங்கே தான் பட்டுக்கோட்டையின் தனித்துவம் வெளிப்படுகிறது . காதலும் காமமும் வரம்புகட்டி சமூகப்பொறுப்புடன் அவன் பாடல்களில் சிரித்தது .

“மலர்க் கொடி தலையாட்ட / மரக்கிளையும் கை நீட்டக் / கிளையில் இணையும்படி ஆனதுமேனோ ” - இங்கே யும் பெண்தான் கேட்கிறார்.ஆனால் மலர் தலையாட்டுகிறது கிளை கை நீட் டுகிறது என இருவரையும் பொறுப்பாக்கு கிறார் . காதலில் ஒருவர் மட்டுமே குற்ற வாளி ஆகமுடியாதல்லவா ? அதைத் தொடர்ந்து அவன் விளக்குகிறான், “ இயற்கையின் வளர்ச்சி முறை / இளமை செய்யும் கிளர்ச்சி முறை /ஏனென்று நீ கேட்டால் யானறிவேனா? (இரும்புத் திரை - 1960.) இயற்கை, இளமைக் கிளர்ச்சி எனக் கூறியபின் அது வரம்புக்குள் கட்டுப்படுமா ?

முகத்தில் முகம் பார்க்கலாம் பாடலின் கடைசியில் கவிஞர் பாடுகிறார், “ கலையெல்லாம் பழசாகலாம் - சதங்கை / குலுங்கி நகைத்திட வரம்பு கடந்திடும் / குறும்பு படர்ந்திடும்” ஆம், ‘வரம்பு ’ கடக்கும் போதும் அது ‘ குறும்பு என்கிற அளவோடு நிறுத்துகிறார் கவிஞர் . “ தப்புபண்ணும் சந்தர்ப்பத்தை தந்துவிட்டு போடி ” என்று ஆரம்பத்தில் எடுத்துக்காட்டிய கவிதை போல் கோரிக்கை வைக்கவில்லை.

கல்யாணப்பரிசு (1959) திரைப்படத் தில் இந்த குறும்பு எல்லை மீறும் போது பெண் சொல்லுவது போலுள்ள வரிக ளில் , “ பொறுமை இழந்திடலாமோ ? - பெரும் / புரட்சியில் இறங்கிடலாமோ? - நான் / கருங்கல்லுச் சிலையோ காத லெனக் கில்லையோ...” என கடிவாளம் போடுகிறார் .இது காதலுக்கு கடிவாளம் அல்ல .
“ கழியக் காதல ராயினும் சான்றோர் /பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்” எனச் சங்க இலக்கியம் , சான்றோர் பழியுடன் வரும் இன்பத்தைக் காதலர் விரும் பார் எனச் சுட்டுகிறது . இது காதலர்க்கு மட்டும் அன்று கவிஞர்க்கும் உரியது என்கிறார் திறனாய்வாளர் பா. வீரமணி .

அதே பாடலில் கடைசியில் இருவ ரும் சேர்ந்து பாடும் வரிகள் நயமானவை, ஆண்-பெண் சமத்துவத்தின் குறியீடுமாகும் . “ சைக்கிளும் ஓடும் மண்மேலே - இரு / சக்கரம் சுழல்வது போலே - அணை / தாண்டிவரும் சுகமும் தூண்டிவிடும் முகமும் / சேர்ந்ததே உறவாலே ” ஆம் வாழ்க்கை என்பது ஒற்றைச் சக்கர வாகனமாகாது . இரு சக்கரமாய் ஒன்றோ டொன்று இணைந்தும் ஈடுகொடுத்தும் ஓடுவதன்றோ வாழ்க்கை ? “அஞ்சி அஞ்சி ஓடுவதில் இன்ப மில்லை” - இது ஆண் . “வீணை மட்டு மிருந்தால் நாதமில்லை”- இது பெண் . “மீட்டும் விரல் பிரிந்தால் கானமில்லை”- இது ஆண்.இவ்வாறு காதல் கீதம் இசைக்கும் போது அங்கே இதயம் கனிந்து, எதையும் மறந்து, இருவர் மகிழ்ந்து உறவாடுவர் என்கிறார்... ஆயின் இவர்களின் உறவாடல் எப்படி கண்ணியமாக இருந்தது என்பதற்கு இப்பாடலின் ஆரம்பவரிகளை அசை போட்டுப் பாருங்கள் . “ ஆடை கட்டி வந்த நிலவோ - கண்ணில் / மேடைகட்டி ஆடும் எழிலோ - இவள் / ஆடைகட்டி வந்த நிலவோ - குளிர் / ஓடையில் மிதக் கும் மலர் / ஜாடையில் சிரிக்கும் இவள் / காடுவிட்டு வந்த மயிலோ - நெஞ்சில் / கூடுகட்டி வாழும் குயிலோ ”. (அமுத வல்லி 1954) இதற்கு விளக்கம் தேவையா என்ன?

“எப்படி அல்லது எப்பொழுது அல்லது எங்கிருந்து / என்று தெரியாமல் உன்னைக் காதலிக்கிறேன் / எந்தவிதப் பெருத்த சிக்கலோ இறுமாப்போ இல்லா மல் / உன்னை நான் நேரடியாக காதலிக் கிறேன் ” என்றான் பிரபஞ்சக் கவிஞன் பாப்லொ நெருதா. அந்தக் காதலை வெறுத்தால் என்னவாகும்? கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். கலீல் ஜிப்ரன் சொன்ன கதைக் கவிதை நினைவுக்கு வருகிறது;

“வெள்ளைக் காகிதம் ஒன்று
பனிக்கட்டி போலப்
பிரகாசமாய், பரிசுத்தமாய் இருந்தது...
அது சொன்னது,
“நான் பரிசுத்தமானதாய்ப் படைக்கப்பட்டேன்..
இறுதி வரை பரிசுத்தமானதாகவே இருப்பேன்...
இருள் என் அருகில் வர
இறுதி வரை நான் அனுமதிக்க மாட்டேன்...
சுத்தமில்லாத எதுவும்
என்னைத் தொடவும் கூடச் சம்மதிக்க மாட்டேன்..!”

கறுப்பு மைபுட்டி ஒன்று
காகிதம் சொன்னதைக் கேட்டது..
தனக்குள் சிரித்துக் கொண்டது...
ஆனாலும் காகிதத்தை நெருங்க
அதற்குத் தைரியம் வரவில்லை..!

பல வண்ண வண்ண பென்சில்கள் கூட
வெள்ளைக் காகிதம் சொன்னதைக் கேட்டன..
ஆனால் அவையும்
அதை நெருங்கத் துணியவில்லை
இன்று வரை
வெள்ளைக் காகிதம்தான்
விரும்பியபடிபரிசுத்தமானதாகவே இருக்கிறது ...

ஆனால்,
வெறுமையாக இருக்கிறது ..!! ”

ஆமாம் , மெய்தானே உளிக்கு பயந்த கல் சிலையாகுமா ? உலக் கைக்குப் பயந்தால் நெல் அரிசியா குமா? இந்த வெறுமை தேவையா ? பட்டுக்கோட்டை வாழ்க்கையை எவ்வாறு அணுகினான்? அடுத்து பார்ப்போம்.

 - நன்றி ; தீக்கதிர்  இலகியச் சோலை 12-05- 2014​

சும்மா கிடந்த சொல்லை எடுத்து ..[ 1 ]

Posted by அகத்தீ Labels:








சும்மா கெடந்த சொல்லை எடுத்து ...[ 1 ]


கல்யாண சுந்தரனே! கண்ணியனே!


- சு.பொ.அகத்தியலிங்கம்


“தங்கமகன் போன பின்னர் , தமிழுக்கும் கதியில்லை
வெங்கொடுமைச் சாக்காடே ! விழுவதற்கேற்ற பொருள்
மங்காத செங்குருதி மகனென்றோ எண்ணமிட்டாய் ?
கல்யாண சுந்தரனே ! கண்ணியனே ! ஓர் பொழுதும்
பொல்லாத காரியங்கள் புரியாத பண்பினனே !
சாவது இயற்கை ! சாவதற்கு நீதியுண்டு ;
நீதியிலா சாவுன்னை நெருங்கி விட்ட தென்றாலும் !
வாழும் தமிழ்நாடும் வளர்தமிழ் கலைஞர்களும்
வாழ்கின்ற காலம்வரை வாழ்ந்துவரும் நின் பெயரே ! ”

- இது பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மறைந்த பொழுது கவியரசர் கண்ணதாசன் வடித்திட்ட கண்ணீர் கவிதை. கவிதையின் கடைசி இருவரிகள் பட்டுக்கோட்டை யின் பாடல்கள் சாகா வரம் பெற்றவை - காலத்தை வென்று நிற்பவை எனப் பறையறைந்து கூறுகிறது . ஆயினும் நிலவுக்கே ஃபுளோ ரோசெண்ட் மினுக்குவண்ணம் பூச வேண்டிய யுகத்தில் பட்டுக் கோட்டையையும் வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் .


“ கண் , காது ,இருதயம் / துருப்பிடிக்கும் முன் துலக்குவீர்” என்றார் வைரமுத்து .அதற்குத்தான் இந்தத் தொடர் . இது ஆய் வல்ல . அசைபோடல் .

“பாதகம் செய்பவரைப் / பாட்டாலே உமிழ்ந்தான் / பஞ்சை களின் நிலையைப் பார்த்து உள்ளம் நெகிழ்ந்தான்” என பாரதியை கவிதையால் போற்றியவன் ; தனக்கும் அதே வரிகள் பொருந்திட வாழ்ந்தான் பட்டுக்கோட்டை என்பதுதான் சிறப்பு.

கவிதை எழுதுவதில் கிடைக்கும் சுதந்திரம் சினிமாவுக்குப் பாட்டெழு தும் போது கிடைக்காது; எனினும் அந்தத் திரைப்பட உலகிலும் கொள்கை முழக்கமிட்டவன் பட்டுக்கோட்டையன்றோ !திரைப்பட உலகின் கெடுபிடிகள் , எல்லைகள், சூழல் அன்றைக்கு எப்படி இருந்தது என்பது குறித்தும் ‘பேசும்பட’ இதழில் வெளிவந்த பட்டுக் கோட்டையாரின் பேட்டியை சந்தி ரன் வீராச்சாமி சமீபத்தில் முகநூலில் பதிவு செய்திருந்தார் ; அதனை அப்படியே கீழே தருகிறோம் :

“இரவு பத்து மணி இருக்கும். வர்ண விளக்குகள் ஆங்காங்கே இந்திர ஜாலம் புரிந்து கொண்டிருக்க விஜயா கார்டனில், வீனஸ் பிக்சர்ஸ் ‘கல்யாண பரிசு’ வெள்ளி விழாவில் விருந்துக்குப் பிறகு நான் ஓரிடத்தில் அமர்ந்திருந்தேன். சாப்பாட்டை முடித்து விட்டு, தாம்பூலத்தைக் குதப்பியபடி. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எனக்குச் சிறிது தூரத்தில் நின்றிருந்தார். நான் அவரை அழைத்தேன். என்னருகில் வந்து உட்கார்ந்து கொண்டே அவர், உங்களை நானே பார்க்க வேண்டும் என்று நினைத்தேன் என்றார் சிரித்துக் கொண்டே.


என்ன விஷயம்? என்று கேட்டேன்.கவிஞன் என்பவன், பல்வேறு இசைக் கருவிகளை வைத்து சங்கீதத்தை உண்டாக்கும் கலைஞரைப் போல, வார்த்தை களைப் பொறுக்கி எழுதுபவனா? என்று அவர் என்னிடம் கேட்டார்.

கவிஞர் கேட்ட கேள்வி என்னை திடுக்கிட வைத்தது! அதுவும் சாதாரணக் கவிஞரா அவர்!எனக்குப் புரியாத ஒன்றைக் கேட்கிறீர்கள் என்னைப் பொறுத்த வரை கவிதை என்பது இதயத்தில் சுரந்து, எண்ணத் தில் மிதந்து வருவது. சொற்களைக் கண்டு பிடித்துப் போட்டுக் கவிதை எழுதினால், அது கவிதை ஆகாது! என்றேன்.

இதை நமது சங்கீத டைரக்டர்கள் ஏன் உணருவதில்லை? மெட்டமைக்க அவர்களுக்கு நமது கவிதை ஏற்றதாக இல்லா விட்டால், மெட்டை மாற்றுவதற்குப் பதில் ஏன் கவிதையை மாற்றச் சொல்கிறார்கள்? அதற்காகச் சொற்களை எப்படிப் பொறுக்கிப் போட வரும்? என்றார் கவிஞர்.

உண்மைதான்! என்றேன் நான்.

இங்கு இது மட்டுமல்ல! நடிகர்கள் கூட கவிதைகளில் கை வைத்து விடுகிறார்கள். ஒரு பெரிய தயாரிப்பாளருக்காக நான் பாட்டொன்று எழுதினேன். அதில் வரும் கவிதையை ஹாஸ்ய நடிகர் சொல்படி மாற்றிவிட்டார் தயாரிப்பாளர்.

நடிகர்கள் தங் கள் கருத்தைச் சொல்லலாமே தவிர, பாட்டை மாற்றுவது கூடாது என்பது என் அபிப்பிராயம். அப்படிப் பார்க்கப்போனால் கவிஞர் களும் நடிகர்களைப் பற்றி குறை கூற இடம் ஏற்படும் என்றார் பட்டுக்கோட்டை.

எப்படி? என்றேன்.கவிதையில் வரும் சொற்களின் ஆழத்தையும் நயத்தையும் பொருளையும் உணர்ந்து எத்தனை நடிகர்கள் பாடி, நடித்திருக் கிறார்கள்? அதே போல் நடனத்தையும் பாவத்துடன் உணர்ந்து யார் ஆடுகிறார்கள்? நடிகைகள் காட்டும் அபிநயத்துக்கும் பாட்டுக்கும் அநேகமாகப் பொருத்தம் காணவே முடியாது. இதே போல் பாட்டு ஒரு பங்கு என்றால் அதற்கான இசை இரண்டு பங் காக இருக்கக் கூடாது!

நான் சமீபத்தில் காவடிச்சிந்து மெட்டில் ஒரு ஸ்டூடியோ முதலாளியின் படத்திற்குப் பாட்டெழுதிக் கொடுத்தேன். அதில் பாட்டில் முக்கால் பகுதியை நீக்கிவிட்டு, மற்ற பகுதிக்கு வெறும் இசையை இணைத்திருக்கிறார்கள்.

இம்மாதிரி செய்வதையும் நான் மனதார வெறுக்கிறேன். இதனால் கவிஞனுக்கு ஏற்படும் உற்சாகத்தையும் குலைத்து விடுகிறார் கள் என்று சொன்னார் கவிஞர் திலகம்.இதையெல்லாம் மனதுக்குள் போட்டுப் புழுங்கிக் கொள்ள நான் விரும்பவில்லை. இதை அப்படியே ஒரு கட்டுரையாக வடித் துத் தருகிறேன். வரப்போகும் உங்கள் இதழில் போட்டு விடுங்கள் என்றார் கவிஞர்.”

 இது பட்டுக்கோட்டையாரின் இறுதி பேட்டி , பேட்டி எடுத்தவர் பேசும் படம் நிருபர்.

இந்தச் சூழ்நிலையிலும் பட்டுக்கோட்டையார் எழுதிய பாடல்கள் நம்மை வியக்கவைக்கின்றன . ஒரு காதல் பாடலைப் பாருங்கள். 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தங்கப்பதுமை திரைப்படத்தில் இடம் பெற்றது...முகத்தை நிலவுக்கும் கன்னத்தைக் கண்ணாடிக்கும் உவமை காட்டுவது கவிஞர் இயல்பே ! ஆனால் அதிலும் கவிஞ ரின் கற்பனை புதிய சிகரங்களைத் தொட்டது

“முகத்தில் முகம் பார்க்கலாம் - விரல்நகத்தில் பவளத்தின் நிறம் பார்க்கலாம்” நகமே பவளத்தின் நிறமெனில் அந்தப்பெண் சொர்ணத்தின் வார்ப்படமாக இருப்பாளோ என எண்ண வைக்கும் ஆரம்பவரிகள்.

“வகுத்த கருங்குழலை மழைமுகி லெனச் சொன்னால்மலரினை இதழோடு இணை சேர்க்கலாம் - என்முன்வளைத்து இளந்தென்றலில் மிதந்துவரும் - கைகளில்வளையல் இன்னிசை கேட்கலாம் - மானே உன்.. முகத்தில்..”இந்தவரிகள் நெஞ்சை வருடுபவை .ஐயமில்லை . ஆயினும் அநேக கவிஞர்கள் இதனைப் போன்று பெண்களைக் வர்ணித்துக் கொஞ்சும் கவிதைகள் படைத்திடுவர் . பட்டுக் கோட்டை அவர்களில் ஒருத்தரா அல்லவே ! கிடைக்கும் வாய்ப் பில் எல்லாம் தன் புரட்சிகர சமூகப் பார்வையை உறுத்தலின்றி நுழைக்கும் வல்லமை பெற்றவன் என்று சொல்வதைவிட அப்படி கற்பனை செய்வதே அவன் இயல்பு எனலாம்.


எனவேதான் அடுத்த வரியிலேயே பாடினான் : “ இகத்திலிருக்கும் சுகம் எத்தனையானாலும்இருவர்க்கும் பொதுவாக்கலாம் - அன்பேஅதன் எண்ணிக்கை விரிவாக்கலாம்...”பார்த்தீர்களா ஆண் - பெண் சமத்துவம் கவிஞர் பாடலில் இயல்பாய் வந்து விழுகிறது. இதற்கு பொழிப்புரை, பதவுரை தேவை இல்லை. எளிமை இனிமை லட்சியம் மூன்றும் கைகோர்க் கும் வரிகள் இவை . கேட்பவர்களைச் சொக்கவைக்கும் . சிந் திக்கத் தூண்டும். அதுதான் பட்டுக்கோட்டை .

இந்தப் பாடலின் கடைசியில் “வரம்பு கடந்திடும்..” என்கி றார் . காதலில் வரம்பு கடக்கலாமோ ! “வரம்பு மீறுதல் முறையோ ..” என இன்னொரு பாடலில் கேட்டவர். இப்பாடலில் அவர் மீறியது ஏன் ? அடுத்த வாரம் பார்ப்போம்.

நன்றி ; இலக்கியச் சோலை  தீக்கதிர்    5 மே 2014

குஷ்வந்த சிங் ; பாகிஸ்தான் ரயில்

Posted by அகத்தீ Labels:

[   
   குஷ்வந்த சிங் மரணத்துக்கு அவரது நூலை நினைவுகூர்வதைத்தவிர வேறு சிறந்த அஞ்சலி எதுவாக இருக்க முடியும் ? அதுவும் மதவெறி தலைவிரித்தாடும் தேர்தல் களத்தில்...........]



பாகிஸ்தான் போகும்ரயிலும் 
 
மதச்சார்பின்மையின் அத்தியாவசியமும்
சு.பொ.அகத்தியலிங்கம்

பாகிஸ்தான் போகும் ரயில்,
ஆசிரியர் : குஷ்வந்தசிங்

தமிழில்:ராமன் ராஜா,

கிழக்குப் பதிப்பகம்,


பொதுவாகவே நான் ஆங்கில நாவல்கள் படிக்கும் பழக்கம் உள்ளவன் அல்ல. நூற்றுக் கணக்கான மொழிபெயர்ப்பு நூல்களைப் படித்துள்ளேன், ஆயினும் என் ஆர்வம் ஏனோ ஆங்கில நாவல்கள் பக்கம் 
குறிப்பிடத்தக்க விதத்தில் திரும்பியது இல்லை. குஷ்வந்த் சிங் ஜோக்குகளைப் படித்திருக்கிறேன்.ரசித்தும் இருக்கிறேன். இருப்பினும் அவர் எழுத்துகளில் மது, மாது(ஷ்வீஸீமீ ணீஸீபீ ஷ்ஷீனீமீஸீ) சங்கதிகளே 
தூக்கலாக இருக்கும். என்னுள் படிந்த சித்திரம் இதுவே. மேலும் அவர் காங்கிரஸ் கட்சி என்கிற எண்ணம் வலுவாக என்னிடம் வினையாற்றியது. அவர் சஞ்சய் காந்தியோடு நெருங்கி இருந்ததும் என் பார்வையில் குறுக்கீடாக இருந்தது. பின்னர் அவரது அரசியல் நிலைப்பாட்டில் மாற்றம்வரினும், 

அவரை காங்கிரஸ் சார்பு மாநிலங்களவை உறுப்பினராகவே பார்த்தேன். அவர் இல்லஸ்ட்ரேட் வீக்லி போன்ற ஏடுகளின் ஆசிரியராகச் செயல்பட்டபோது அவற்றை படித்திருக்கிறேன்.அவர் எழுத்தாற்றல் மிகச்சிறப்பாக இருப்பதையும் உணர்ந்திருக்கிறேன். இந்த நாவல் குறித்து பல நண்பர்கள் கூறியபோது 
படிக்க எண்ணினும் வாய்ப்பு அமையவில்லை. நானும் அது பற்றி பெரிதாக முயற்சித்ததில்லை. கிழக்குப் பதிப்பகத்தின் வெளியீடாக, இப்போது தமிழில் வெளிவந்ததும் படித்தேன். குஷ்வந்த் சிங் என்னுள் 
விஸ்வரூபமெடுத்தார். அடடா இந்த நாவலை இதுவரை படிக்காமல் இருந்து விட்டோமே என்கிற குற்ற உணர்ச்சியே ஏற்பட்டது. 

அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்டது இந்நாவல். இன்று படிக்கும் போதும் நாட்டின் பல பகுதிகளில் நடக்கும் சம்பவங்களோடு பொருந்திப் போவது தற்செயலானது அல்ல. ஆம், மதவெறி நெருப்பு தானாகப் பற்றுவதல்ல; பற்றவைக்கப்படுவதே என்பதை இந்நாவல் உரக்கப்பேசுவதால் -
நெஞ்சில் பதிய வைப்பதால் இன்றும் உயிர்த்துடிப்புடன் இந்த நாவல் மனதைக் கவ்வுகிறது. இந்திய விடுதலையின் போது இந்தியா- பாகிஸ்தான் என இரு கூறாக்கப்பட்ட சூழலில் இந்நாவல் பிறந்துள்ளது. பாகிஸ்தான் எல்லையோர இந்தியக் கிராமமான மானோ மாஜராதான் கதைக்களம். சீக்கியர்கள் 
பெரும்பான்மையாக உள்ள கிராமம். இந்துக்கள், முஸ்லிம்கள் என அனைத்து மதத்தவரும் அருகருகே 

வாழும் அமைதியான கிராமம். எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் மிகச்சொற்பம்.நாட்டு நடப்புகள் குறித்து அதிகம் தெரிந்திராத மக்கள். உழைப்பையும் அன்பையும் தவிர வேறெதையும் அறியாதவர்கள். அந்த கிராமத்து வாழ்க்கையை அச்சு அசலாக குஷ்வந்த் சிங் நம் மனக்கண் முன் கொண்டுவந்து நிறுத்திவிடுகிறார். 

அந்த கிராமத்தில் ராம்லால் சேட் வீட்டைப் பக்கத்து ஊர் சமூகவிரோதிகள் கொள்ளையடிப்பதும்... அந்தசமயம் அரசால் பத்தாம் நம்பர் ரவுடி என முத்திரை குத்தப்பட்ட ஜக்கா சிங் ஒரு ஏழை நெசவுக்காரமுஸ்லிம் பெண் நூரனிடம் காதலால் கட்டுண்டு கிடப்பதுமாய் நாவல் மொட்டவிழ்கிறது. காதல் காட்சிகளை குஷ்வந்த் சிங் அவரது பாணியில் தீட்டியுள்ளார். கொள்ளைக்காரர்களால் ராம்லால் சேட் 
கொல்லப்பட்டதும் நாவல் சூடுபிடிக்கிறது. அதிகார வர்க்கமும் காவல் துறையும் மிக எளிதாக அந்தப்பழியை ஜக்கா சிங் மீது சுமத்துவது முதலில் அதிகார வர்க்க நடைமுறையைக் கேலிசெய்வதாக அமையினும், போகப்போக அதற்குள் மிகப்பெரிய மதக்கலவர சதி புதைந்திருப்பதை மிக நுட்பமான காட்சி சித்தரிப்புகளூடே குஸ்வந்த் சிங் நூல் நெடுகச் சொல்லிச் செல்கிறார்.அவை ஒவ்வொன்றும் இன்றையகுஜராத்தின் சில பக்கங்களையாவது நினைவூட்டாமலிருக்காது. 

கொம்புசீவிவிடப்பட்ட மதவெறியால் பாகிஸ்தானில் கோரமாய்க் கொல்லப்பட்ட சீக்கியப் பிணங்கள் கூட்ஸ்களில் நிரப்பப்பட்டு அந்த ரயில் கிராமத்துக்கு வந்தது. மத வேறுபாடின்றி அக்கிராம மக்கள் பதைத்தார்கள். கண்ணீர் உகுத்தார்கள். ஆயினும் அவர்களுக்குள் அது பகைமை நெருப்பை பற்ற வித்திடவில்லை. அதிகார வர்க்கம் சும்மா இருக்குமா? முன்பு நடந்த கொலைக்காக ஜக்கா சிங்கையும், 

சம்பந்தமின்றி ஊருக்குப் புதிதாய் வந்த படித்த இளைஞனை (அவன் கம்யூனிஸ்ட் என குஸ்வந்த் சிங் பெயர் சுட்ட மாட்டார் வர்ணனை அப்படி தோற்றமளிக்கச் செய்யும்) கைது செய்கிறது.லாக் அப்பில் பூட்டுகிறது அதிகார வர்க்கம். ஆனால், உண்மையான குற்றவாளியான மல்லியைக் கைது செய்தபின் அவனை விடுதலை செய்து மதவெறிக் கோரநர்த்தனத்துக்கு முன்னிற்கச் செய்கிறது. அதிகார வர்க்கத்தின் 
மூர்க்கம்,வஞ்சகம்,பேராசை, காமக்களியாட்டம் எல்லாம் நேரடிக்காட்சிபோல் நாவலில் நகர்கிறது. மீண்டும் பிண ரயில், அகதிகள் வருகை மெல்ல மெல்ல மனோ மஜரா கிராமத்தில் மதவெறி குரோத வைரஸ் செலுத்தப்படுகிறது.ஆயினும் மக்கள் மதமாச்சரியங்களை மீறி வாழவே பிரியப்படுகிறார்கள். முயற்சிக்கிறார்கள். அவர்களால் என்ன செய்ய முடியும்?விதியின் போக்கைத் தீர்மானிப்பது சூழலும் 
ஆளும் வர்க்கமுமாய் அல்லவா இருக்கிறது? இன்றும் அதுதானே நிலைமை. அந்த கிராமத்தை 

விட்டு முஸ்லிம்கள் வெளியேறவேண்டியதாகிறது. நூரன் குடும்பம் உட்பட முஸ்லிம்கள் மிகுந்த மனச்சோர்வோடுதான் வழியனுப்பப்படுகிறார்கள்.ஆனாலும் அதிகார வர்க்கத்தின் நோக்கம் வேறாகவே இருக்கிறது. மாஜிஸ்திரேட் ஹூகம் சந்த், சப் இன்ஸ்பெக்டர் இருவரின் நடவடிக்கைகளை விலாவாரியாகப் பதிவு செய்து அதிகார வர்க்கத்தையே தோலுரித்துக் காட்டிவிட்டார். 
குரோத நெருப்பு வலிய மூட்டப்படுகிறது. நெருப்பு சூடேற சூடேற இளைஞர்கள் பலர் மனதில் விஷம் ஏறுகிறது. மனிதம் தொலைய மிருகம் பழிவாங்கப் புறப்படுகிறது. அகதிகளாய் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட உள்ள முஸ்லிம்களைப் பிணமாக்கி பிண ரயிலை அனுப்பி பழிவாங்கக் கச்சிதமாய்த் திட்டம் தீட்டப்படுகிறது. இது ஒருபுறம். மறுபுறம், அந்த நேரம் ஹூகம்சந்த் மனதை விலைமாதாய் இன்பம் தர அழைத்துவரப்பட்ட இளம்பெண் ஹஜீனா மீதான மையல் ஆட்டிப்படைக்கிறது. தன் 
மகள் வயதொத்த அந்த முஸ்லிம் பெண்ணின் மீது பரிவும் பற்றும் அவருக்குள்ளும் கல்லுக்குள் ஈரமாய் தலைநீட்டுகிறது.விழித்துக் கொண்ட மனிதம் அவரை யோசிக்க வைக்கிறது. இப்போது 

அவர் மூளையில் உதிப்பது சதியல்ல.. ஒரு புத்திசாலித்தனக் கணக்கு. ஜக்கா சிங்கின் காதலும் வெள்ளந்தியான மனிதநேயமும் முரட்டுவீரமும் உசுப்பிவிடப்பட்டால்-அத்துடன் அந்த படித்த இளைஞனும் சேர்ந்தால்... கதை மாறலாம் அல்லவா? அவர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள்.படித்த இளைஞன் ஆத்திரப்படுகிறான். குழம்புகிறான். கையைப்பிசைந்து மதுவில் மூழ்குகிறான். ஆனால் ஜக்கா சிங் ஒற்றை ஆளாய் கடவுளைக் கும்பிட்டுக் கிளம்புகிறான். அவனது நம்பிக்கைக்கு பெரிய 
தத்துவ அடிப்படை எல்லாம் கிடையாது. அன்பு... மனிதர் மீதான காதல். நல்லது செய்யும் பெரிய மனது. அவ்வளவுதான். அவனின் முயற்சி வெற்றிபெறுகிறது.சதிக்கும்பலின் திட்டம் இவனொருவனால் தவிடு 
பொடியானது.ஆனால் அதற்கு ஜக்கா சிங் தன் உயிரையே விலையாக அல்லவா தந்தான். நமக்கும் நிம்மதிப் பெருமூச்சு... இந்த நாவல் மத நடைமுறைகளை-தத்துவ ஊனங்களைப் போகிறபோக்கில் நன்றாகப் பகடிசெய்கிறது. ஒரு ஆபத்தான கதைக்கரு, கதைக்களம் கிட்டத்தட்ட வாள் முனைமேல் நடப்பது
போன்றது.அதில் குஸ்வந்த் சிங் வெற்றி பெற்றது எப்படி? 96 வயதைக் கடந்து எப்படியும் சதம் அடிப்பேன் என வாழ்ந்து கொண்டிருக்கும் அவர் தமது கடைசி நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றார். 

அதையொட்டி அவர் அளித பேட்டியொன்றில் தான் கடவுள் மத நம்பிக்கையற்று இருப்பதற்காகப் பெருமைப்பட்டார்.இறுதிமூச்சுவரை அப்படியே வாழ்வேன் என்றார்.மதச்சார்பின்மையை உயர்த்திப் பிடித்தார். இந்த உறுதிதான் 1956ல் எழுதிய இந்த நாவலை இன்றும் பேசவைக்கிறது. குஸ்வந்த்சிங் எழுத்து நடை வீரியமிக்கது. காட்சிசித்தரிப்பாயினும், மன உணர்வுகளை வெளிப்படுத்துவதாயினும், சமூக விமர்சனமாயினும், ஆசிரியர் குரலாயினும் அதனை இயல்பாகப் 
பதிவு செய்கிற வல்லமை அவருக்கு கைவரப்பெற்றிருக்கிறது. அந்த வீச்சும் வேகமும் ஆற்றொழுக்கு நடையும் சற்றும் குறையாமல் தமிழில் தந்திருக்கிற ராமன் ராஜா நம் பாராட்டுக்குரியவர். மதவெறி இன்றைக்கும் நம் சமூகத்தில் முக்கிய அஜெண்டாவாக உள்ளது. குஜராத் அதன் சோதனைக் களமாக உள்ளது. இந்நிலையில் மதவெறிக்கு எதிராக உரக்கப்பேச இந்த நாவலும் ஆயுதமாகும்

ஆளுமையின் அடையாளம்

Posted by அகத்தீ Labels:



ஆளுமையின் அடையாளம்



சு.பொ. அகத்தியலிங்கம் 

பகத்சிங் என்ற பெயரே இன்றும் இளைஞர்களுக்கு உணர்ச்சி ஊட்டிக் கொண்டிருக்கிறது. இந்தப் பெயரைக் கண்டு அன்று பிரிட்டிஷ் ஏகாதிபத்தி யம் நடுங்கியதில் பொருள் உண்டு. ஆனால் இன்றும் இப்பெயரை முடிந்த வரை ஆளும் வர்க்கம் வரலாற்றில் இருட் டடிப்பு செய்கிறது. வெறுமே தீவிரவாதி என்ற அடைமொழிக்குள் பகத்சிங் என்கிற மாபெரும் ஆளுமை யை சிறையிடுவதற்கே ஆளும்வர்க்க வரலாற்று ஆசிரியர்களும் கல்வியாளர் களும் தொடர்ந்து முயற்சித்து வருகின் றனர். ஆயினும் அனைத்தையும் மீறி சூரியனாய் இளைஞர்களின் மன வானில் பகத்சிங்கே சுடர்விட்டுப் பிர காசித்துக் கொண்டிருக்கிறான்.

கார ணம், அவனது ஆளுமைத் திறன்.பகத்சிங்கின் ஆளுமை இன்றைய இளைஞர்களுக்கு மிகச்சிறந்த வழி காட்டியாகும். இதுகுறித்து எண்ணற்ற எடுத்துக்காட்டுகளை முன்வைக்க இயலும். ஆயினும் இங்கே ஒன் றிரண்டை மட்டும் சுட்டிக்காட்ட விழை கிறேன். ஆளுமை என்பது ஆற்றல் நீரோட்டத்தோடு நீச்சலடிப்பதல்ல. எதிர்நீச்சல் போடுவதாகும். செக்கு மாடாக ஒரே வட்டத்தில் சுற்றிச் சுற்றி வருவதல்ல. உழவு மாடாக ஆழமாகவும் அகலமாகவும் உழ உதவுவதாகும். ஆளுமை என்பது தொலைநோக்கு கொண்டது. சுயநலம் இல்லாதது. விளைவுகளை எதிர்கொள்ள தயாராக இருப்பது. இலட்சிய உறுதியோடு இருப்பது.

துணிவோடு சாவல்களை சந்திப்பது. ஆழமான அறிவுத்தேடலும் விசாலமான மனசும் கொண்டிருப்பது. இவை அனைத்துக்கும் பகத்சிங் எடுத் துக்காட்டாக இருக்கிறான்.பகத்சிங்கை சிறையிலிருந்து விடு விக்க அவரின் தந்தை முயற்சித்த போது எப்படியாவது விடுதலை கிடைத் தால் போதும் என்று சும்மா இருக்க வில்லை. தந்தையை கண்டித்து அன் போடு அவன் எழுதிய கடிதம் பகத்சிங் கின் மன உறுதிக்கும் தெளிந்த சிந்த னைக்கும் சாட்சியாகும். அதில் தந்தை தன்னைக் கேட்காமல் மனு அளித்தது தவறு என்றும், அது தனக்கு மிகுந்த மனவேதனையைத் தருவதாகவும் குறிப்பிட்டான். தந்தை என்ற முறை யில் அவர் மகன் மீது காட்டிய பாசத்தை பகத்சிங் புரிந்துகொண்டு அதே சமயம் தனது லட்சியத்திற்கு அந்த பாசம் இடையூறாக வரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தான். அந்த நெடியக் கடிதத்தில் ஒரு இடத்தில் குறிப்பிடு கிறான், எனது உயிர் அந்த அளவிற்கு அருமையானது அல்ல. எனது கோட்பாடு களை விலையாகக் கொடுத்து வாங்கும் அளவிற்கு அது ஒன்றும் அத்தனை மதிப்புடையதல்ல.

எனது வழக்கைப் போலவே மிகவும் கடும் குற்றச்சாட்டு களுடனான வழக்குகள் என் சக தோழர்களுக்கும் உண்டு. தாங்கள் அனைவரும் ஒரே பொதுவான கொள்கை வழி நின்று கடைசி வரை ஒரே மாதிரி அதற்காக எவ்வளவு விலை கொடுக்க வேண்டியிருந்தாலும் சரி, செயல்படுவ தென முடிவு செய்திருக்கிறோம். இதில் பகத்சிங்கின் லட்சியக் கட்டுப்பாடும் பொது வாழ்வின் இலக்கணமும் ஒரு சேர வெளிப்படுவதைக் காணலாம். இதுதானே ஆளுமையின் முக்கிய வரையறை.ஒருவர் இளமையில் கடவுள் மறுப் பாளராக திகழ்வது எளிது, இயல்பானது. பகத்சிங்கும் இளமையில் அவ்வாறு திகழ்ந்ததில் வியப்பில்லை. ஆனால், பிரச்சனைகள் குரல் வளையை நெரிக்கும் போது, சோதனைகள் அடுத்தடுத்து வறுக்கும்போது எதிர்காலம் நிச்சயமற்ற தாய் தெரியும்போது அப்போதும் கடவுள் மறுப்பு பேசுகிறவர்கள் மிகவும் சொற்பம். மரணபயம் எல்லாவற்றையும்விடக் கொடுமையானது. அதுவும் மரணத் தேதி ஒருவருக்கு நிச்சயிக்கப்பட்டு விட்டப் பிறகு ஒருவர் உணர்ச்சி வசப்படாமல் தொடர்ந்து அறிவுப்பூர்வ மாக செயலாற்றுவது என்பது அபூர்வ மானது. அது மிக உயர்ந்த ஆளுமையும் ஆகும்.

பகத்சிங் சிறையிலிருந்த காலத் தில் அதுவும் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுவிட்டப் பின்பு அவரது சக சிறை தோழன் ஃபணீந்திரநாத் கோஷ் என்பவர் பகத்சிங்கை பலமுறை சந் தித்து விவாதம் செய்தார். ஃபணீந்திர நாத் கடவுள் நம்பிக்கையாளர். அவர் பகத்சிங்கை கடவுள் பக்கம் திருப்பு வதற்காக பலமுறை விமர்சனம் செய் தார். அவருடைய கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் பதில் சொல்லு கிற விதத்தில் சிறையிலிருக்கிறபோது எழுதிய நூலே நான் ஏன் நாத்தி கனானேன். அந்த நூலில் கடைசியில் எழுதினான், இன்னல்கள் அனைத் தையும் அதிகபட்சத் துணிவுடன் எதிர் கொண்ட நாத்திகவாதிகளைப் பற்றி நான் படித்திருக்கிறேன். எனவே, நானும் எனது கடைசி மூச்சிருக்கும் வரை தூக்குமேடையிலும் கூட தலை நிமிர்ந்து நிற்பதற்கே முயற்சித்துக் கொண்டிருக்கிறேன் என்றான். சொன்னபடியே பகத்சிங் இறுதிவரை நாத்திகராக திகழ்ந்தான் என்பது அவ னுடைய அறிவார்ந்த ஆளுமையின் உயர்ந்த எடுத்துக்காட்டு.

பகத்சிங் சாகசப் பிரியன் அல்ல. இன்னும் சொல்லப்போனால் இந்த சாகசங்களைவிட அதிமுக்கியப் பணி கள் உண்டு என்கிற தெளிந்த தொலை நோக்கு அவனிடம் இருந்தது. சாதாரண மாக ஆக்சன்களில் பங்கெடுப்பவர் களையும் தூக்குமேடை ஏறுபவர்களை யும்தான் புகழ்தேடி வருகிறது. அவர்கள் நிலை ஒரு பெரிய மாளிகையில் தலை வாசலில் பதிக்கப்பட்ட வைரம் போன் றது. ஆனால், அஸ்திவாரத்திற்குள் விழுந்து கிடக்கும் ஒரு சாதாரண கல்லுக் குள்ள முக்கியத்துவம் அந்த வைரத் திற்கு இல்லை என்றான். மேலும் அவன் கூறுகிறான், நமது இயக்கம் வைரங் களைத் திரட்டியதே தவிர அஸ்திவாரக் கற்களை சேர்த்து வைக்கவே இல்லை. அதனால்தான் நாம் இத்தனை மாபெரும் தியாகங்கள் புரிந்தும் மாளிகையை கட் டவே ஆரம்பிக்கவில்லை. இன்று நமக் குத் தேவை அஸ்திவாரக் கற்களே. இப் படிக் கூறியதோடு இல்லாமல் தொடர்ந்து வலியுறுத்தினான்.

தியாகமும் உயிர்பலி யும் இரண்டுவிதமானவை. ஒன்று குண் டடிபட்டும் தூக்கிலிடப்பட்டும் மரணத் தைத் தழுவுவது, இதில் கவர்ச்சி அதி கம் இருந்தாலும் கஷ்டம் குறைவு தான். 2வது வாழ்க்கைப்பூராவும் மாளிகை யை சுமந்து கொண்டிருப்பது . போராட் டம் நடந்து கொண்டிருக்கும் போது, நமக்கு எதிரான சூழ்நிலையில் நமது தோழர்கள் ஒவ்வொருவராக நம்மை விட்டுப் போய்க்கொண்டிருக்கும் போதும் நாம் ஒரு சில தேறுதல் வார்த் தைகளுக்காக தவிக்கிறோம். அப்படிப் பட்ட நேரங்களில் தட்டுத் தடுமாறாமல் தமது லட்சியபாதையை விட்டுச் செல் லாதவர்கள் மாளிகையின் சுமையால் அசைந்து கொடுக்காதவர்கள், பளு வுக்கு பயந்து தோள்களை கீழே இறக்காதவர்கள், ஒளிமங்கிவிடக் கூடாது என்பதற்காகத் தம்மைத்தாமே எரித்துக் கொள்பவர்கள், பாதையில் இருள் சூழ்ந்துவிடக்கூடாது என்பதற் காக தம்மை மெழுகுவர்த்தியைப் போல் கரைத்துக் கொள்பவர்கள் உயிர்த் தியாகம் புரிபவர்களைக் காட்டிலும் சிறந்தவர்கள் இல்லையா...? ஆம் பகத்சிங் வெறும் உயிர்த்தியாகங்களை நமக்கு போதிக்கவில்லை. அவனும் புரிந்து கொள்ளவில்லை.

அர்ப்பணிப்பும் தொலைநோக்கும் கொண்ட நெடிய பய ணத்தைத் தான் அவன் கனவு கண்டு கொண்டிருந்தான். அவனுடைய ஆளு மை நொடியில் மடியும் மின்மினிப்பூச்சி போன்றதல்ல. யுகங்களைத் தாண்டி ஒளிரும் நட்சத்திரம் போன்றது.தொழிலாளிகளையும் விவசாயி களையும் திரட்டுவதுதான் தான் கொண்ட லட்சியத்தை அடைய உறுதியான வழி முறை என்பதை பகத்சிங் ஒருபோதும் மறக்கவில்லை. அவன் நாடாளுமன்றத் தில் வெடிகுண்டை வீசியபோதும் கூட அதில் யாரையும் உயிர்பலியாக்க வேண் டும் என்கிற தீய நோக்கம் இருக்கவில் லை. மாறாக இந்த நாட்டு மக்கள் தங்களு டைய தூக்கத்திலிருந்து விழித்தெழ அது வெடியோசையாக இருக்க வேண் டும் என்றே கருதினான். அவ்வாறே செயல்பட்டான். குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு தனது லட்சியத்தை பிரகடனம் செய்தான். வெள்ளைக் காரை அகற்றிவிட்டு அந்த இடத்தில் இந்திய முதலாளிகள் அமர்வதால் எந்த நன் மையும் தொழிலாளிகளுக்கும், விவசாயி களுக்கும் ஏற்படப்போவதில்லை என் பதை பிசிறில்லாமல் எடுத்து வைத் தான்.

சுரண்டல் ஆதிக்க நுகத்தடியி லிருந்தும் அந்நிய ஆதிக்க நுகத்தடியி லிருந்தும் ஒரு சேர விடுதலைப்பெற வேண்டும் என்பதே பகத்சிங் நோக்க மாகவும் முழக்கமாகவும் இருந்தது.1. இன்குலாப் ஜிந்தாபாத் (புரட்சி வெல்லட்டும்) 2. தொழிலாளி வர்க்கம் வெல்லட்டும். 3. ஏகாதிபத்தியம் ஒழியட் டும் என்ற மூன்று லட்சிய முழக்கங் களையே மையமாகக் கொண்டு பகத் சிங் செயல்பட்டான் என்பதை நினை வில் கொள்ள வேண்டும். அதுமட்டு மல்ல மானுடத்தை நேசிப்பதில் நாங்கள் யாருக்கும் குறைந்தவர்கள் அல்ல. எங்களுக்கு யாரிடத்திலும் தனிப்பட்ட முறையில் பகைமை இல்லை. நாங்கள் எல்லோரையும் எப்போதுமே அன்போடுதான் நேசித்து வந்தோம். என்பதை மீண்டும் மீண்டும் சொன்னது மட்டுமல்ல. சொன்னபடி நடந்தும் வந்தான். தனிநபர் கொலை களையோ அர்த்தமற்ற வெடிகுண்டு வீச்சுகளையோ பகத்சிங் ஒருபோதும் ஏற்றுக்கொண்டவனல்ல. சமூகத் தின் சகலப் பிரச்சனைகளையும் ஆழ மாகவும் நுட்பமாகவும் அலசி அதற்குத் தீர்வுகாண வேண்டும் என எப்போதும் துடித்துக் கொண்டிருந்தவன்.

பயங்கர வாதம் ஒருபோதும் புரட்சியாளர்களின் நோக்கம் அல்ல என்பதை அறிந்தவன் மற்றவர்களுக்கும் உணர்த்தியவன். அதே நேரத்தில் தேசத்திற்காகவும் உழைக்கும் மக்கள் நலனுக்காகவும் மரணத்தை ஆலிங்கனம் செய்யவும் தயாரான ஆயிரக்கணக்கான இளைஞர் களால்தான் உண்மையான விடியலை கொண்டு வரமுடியும் என்பதிலும் அசைக்க முடியாத நம்பிக்கைக் கொண் டிருந்தான். ஆயினும், தனிநபர்களால் இவற்றை சாதிக்க முடியாது. லட்சிய நோக்குடைய அறிவியல்பூர்வமான தொலைநோக்குத் திட்டம் கொண்ட நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட தொழி லாளி விவசாயிகளின் கட்சித் தேவை என்பதை சோசலிசமே சமூகத்தின் எதிர்காலம் என்பதனை பகத்சிங் உணர்ந்திருந்தான். அதனை அழுத்த மாக மீண்டும் மீண்டும் அவனுடைய வார்த்தைகளில், பேச்சிலும் எழுத்தி லும் கடிதங்களிலும் குறிப்புகளிலும் சிந்தனைகளிலும் பதிவு செய்து கொண்டே இருந்தான்.ஒரு சிறு கட்டுரையில், பகத்சிங் கின் மொத்த ஆளுமையையும் வரைந்து காட்டுவது எளிதானதல்ல. ஆயினும் அவன் ஆரம்பம் முதல் இறுதி வரை அளவற்ற அறிவுத்தேடலுடனும், எல் லையற்ற மன உறுதியுடனும் திகழ்ந் தான்.

குறுகிய சாதி, மத, இன எல்லை களைத் தாண்டியவனாக புதிய உலகக் கண்ணோட்டம் கொண்டவனாக சோச லிச சமூகத்தின் தூதுவனாக சமூக மாறுதலின் சாரதியாக ஒட்டுமொத்தத் தில் இந்திய இளைஞர்களின் நம்பிக் கையின் குறியீடாக திகழ்ந்தான். மகாத் மாக்கள் அவனது பாதையை ஏற்க வில்லை. எதிர்த்தனர், விமர்சித்தனர், கைகொடுக்கத் தயங்கினர், கைவிட் டனர். ஆனால், இளைஞர்கள் அவனை கொண்டாடினர். மக்கள் தங்கள் நெஞ்சில் அவனை வரைந்து கொண் டனர். இந்திய சமூகத்தின் குறிப் பாக இளைஞர் சமூகத்தின் மனச்சாட்சி யாய் இன்றும் அவன் விளங்குகிறான். நாளையும் அவ்வாறே விளங்குவான்.

நன்றி : தீக்கதிர்  23-03-2014

காளியே ஆயினும்..

Posted by அகத்தீ Labels:







ஒரு சிறுகதையை முன்வைத்து ..


காளியே ஆயினும்....

சு.பொ.அகத்தியலிங்கம்
[ இந்த அலசலின் சுருக்கப்பட்ட வடிவம் இன்றைய தீக்கதிர் இலக்கியச் சோலையில் இடம் பெற்றுள்ளது . முழுக்கட்டுரையையும் வாசிக்க விரும்புவோர் இங்கு வாசிக்கவும் ]
இடம் பெயர்தல் வாழ்க்கையின் நியதி . வேலையின் நிமித்தம் - பஞ்சம் பிழைக்க - கலவர பூமியிலிருந்து உயிர் பிழைக்க - ஆதிக்கத்தை எதிர்க்க வலிமையற்று ; என பலவாறாக அன்றாடம் இடம் பெயர்தல் நடக்கிறது . நடோடிகள் , அகதிகள் , வந்தேறிகள்  இப்படி பலவிதமாய் வாழ்க்கைச் சூறாவழி குதறிப்போடுகிறது .
ஆயினும் பொதுவாக சாமிகள் இடம் பெயர்வதில்லை ; சாலை விரிவாக்கம் போன்ற விதிவிலக்குகள் தவிர . பிள்ளையாரைத் திருடி பிரதிஷ்டை செய்வதே வழக்கம் . என்றாலும் ஏழைகளின் குலசாமிகள் இடம் பெயர்வதில்லை . வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசத்தில்  அணைக்காக கிராமமே பெயர்க்கப்பட்ட போது பேயத்தேவர் தன் குலதெய்வத்தை தம்மோடு கொண்டுவர முயன்ற காட்சி கண்ணில் நீரை வரவழைக்கும் . சிரிக்கத்தெரியாதவன் மட்டுமல்ல அழத்தெரியாதவனும் மனிதனில்லை .
ம.காமுத்துரையின் “ இடம் பெயர்தல் ”பண்பாட்டு பாசிசம் சர்க்கரையாய் பேசி நெய்தடவி கழுத்தறுப்பதை நுட்பமாய் பதிவு செய்கிறது .

“கோயிலு கோயிலுன்னு விழுந்தடிச்சு வேல பாக்கறியே.. அங்க என்னா மாசாமாசம் சம்பளமா
எண்ணித்தர்ராக..? ஒண்ணுக்கும் ஆகாதுன்னுதான ஓன் அண்ணந்தம்பியெல்லா இத ஓங்கிட்ட தட்டி
விட்டுட்டுட்டாங்க.. அதப் புரிஞ்சிக்காம நிய்யும் என்னத்தியோ பொதயலக் காக்குறமாதிரி பேயா
அலஞ்சி, பெருச்சாளியா கொடஞ்சிக்கிட்டிருக்க.” கருத்தம்மாளின் பாட்டு ஓயாதொலித்தது

அவளைப்போல பூசாரிவேலையை அத்தனை அலட்சியமாய் போட்டுவிட்டுப் போய்விட
முடியாது. ஜாதிக்குச் சொந்தமான கோயில்தான் என்றாலும், கருவறைக்குள் நுழைய தன்குடும்பம்
தவிர யாருக்கும் பாத்யதை இல்லை. பங்காளிகள் வந்து போகலாம். ஆனால் தனக்கு இருக்கும்
உரித்து யாருக்கும் கிடையாது அந்த ஒருபெருமைதான் முருகேசனை பம்பரமாய் ஆட்டுகிறது. ஆனால் அங்கும் இங்கும் பணம்புரட்டி கோயிலை நிர்வகிப்பது அவ்வளவு சுலபமாக இல்லை . ஆயினும் கோயிலை பெருமைப்படுத்த முருகேசம் மற்றவர்களை காப்பியடிக்க ஆரம்பித்தார் .
விளக்குபூசை ஒன்றை காப்பியடித்து பெண்களை வரச் செய்து ’சொந்த மக்களுக்கு’ கோயிலின்
ஞாபகத்தை உருவாக்கினார். அதன் தொடர்ச்சியாகத்தான் மார்கழி முப்பதும் திருப்பாவை பாடி
பொங்கலும் பூசையும் அதிகாலையில் நடத்த முடிந்தது. அது சிலபேருக்குப் பொறுக்கவில்லை.

“இல்லாத வழக்கத்த ஆரம்பிக்கிற..!” என்றனர்.

“காவு குடுத்து கறி படைக்கிறதுதே நம்ம வழம... தெரியாதா?..”

“ரோட்டுமேல கோயில வச்சுக்கிட்டு ஆள்வராம வவ்வால் அடைஞ்சி கெடக்கே..சாமி..! ”

“சரிப்பா...... பூசாரிக்கி பொங்கதிங்க ஆச வந்திருச்சு..”

“ஆனா இதுக்கெல்லா சமுதாயத்துல இருந்து படி குடுக்க முடியாது முருகேசா. அம்புட்டு
வசதி நம்மட்ட கெடயாது. தெரியும்ல..”

“அத நாம் பாத்துக்கறே..சாமி ஒங்க பிள்ளைகள மட்டும் கோயிலுக்கு தவறாம அனுப்பிச்சு
விடுங்க..” – என்று எதோ ஒரு வேகத்தில் சொல்லிவிட்டார்.

“பனிக்காலத்தில அவெவெ வேலவெட்டிக்கி வெளியேறவே நேரமில்லாமத் திரியிறாங்கெ.. நீ
என்னமோ பகுமானமா பஜனைக்கி வாப்பா...ங்குற....ம் ?”

ஆனாலும் படித்த, அரசு வேலைபார்க்கிற சிலபேர் முருகேசனுக்கு ஒத்துழைப்புத்
த்ந்தார்கள். அவர்கள்தான் மார்கழி பஜனைக்கு மைக் வைக்கச்சொன்னார்கள். அதுஒரு
பெரியசெலவாக இருந்தாலும் முருகேசனால் சமாளிக்க முடிந்தது. மைக் வந்ததும் திருப்பாவையும்
திருவெம்பாவையும் வேற’ஆளுக’ வந்து படித்தால் நன்றாக இருக்கும் என போஸ்ட்டாபீஸில்
வேலைபார்க்கும் நாகராசனின் சம்சாரம் பிரியப்பட்டது.

எதோ ஒரு உள்ளுணர்வில் ‘அதுக்கெல்லா தோதுப்படாது’ என பலமாய் மறுத்த முருகேசன்
தானே படிக்க ஆரம்பித்தார். புத்தகம் வாசித்து பிற்பாடு பூசையும் நடத்துவது கொஞ்சம்
சிரமமாய்த்தான் இருந்தது. எப்படியோ அந்தம்மாள் கொஞ்சநாளில் ஒரு குருக்களை அழைத்து
வந்துவிட்டார். அவர் வந்ததில் முருகேசனுக்கு ஒருவகையில் வசதியாய் இருந்தது. அவர் பாசுரங்கள்
படிக்கிற நேரத்தில் பொங்கல் வைத்துவிட்டு அம்ம்னுக்கு அலங்காரம் முடித்துவிடலாம்.

குருக்கள்வந்து ராகம்போட்டு திருப்பாவை - திருவெம்பாவை படித்ததில் கூடுதலாய் ஒரு கூட்டம் வந்து சேர்ந்தது. தினமும் சர்க்கரைப் பொங்கல் என்ற தளுகை மெனுவில் மாற்றம் உண்டாக்கினார் குருக்கள். திருவாதிரைக்கு அரிசிக்களியும், கூடார வெள்ளிக்கு புளியோதரையும், வளர்பிறை தேய்பிறை கிழமைகளைக் கணக்கிட்டு வெண்பொங்கல் முதலான பிரசாதங்கள் புதுபுதுசாக உருவாகின. அப்போதுதான் முருகேசனுக்கு ஒருபயம் கவியத் துவங்கியது. விதவித மான பிரசாதத் தயாரிப்பில் தான் தோற்றுவிடக் கூடாதே என்பதற்காக கருத்தம்மாளிடம் வந்து யோசனை கேட்கலானார்.

அவளுக்குக் கடுப்பாகிப் போனது ‘’ ந்தா, கூட்டுச்சாறு, கோழிச்சாறு, கறிக்கொழம்பு, கருவாட்டுக்கொழம்பு இப்பிடி எதியாச்சும் தெரிஞ்சதக் கேளு.. சும்ம்ம்மா.. வெம்பொங்களு வேகாதபொங்களு.. தேங்காசோறு, மாங்காசோறுன்னு உயிர வாங்காத..”

இப்படி உள்ளே நுழைஞ்ச பார்ப்பணியம் ஒட்டகத்துக்குள் தலையை நுழைச்ச கதையாய் ஆகிப்போனது . சிவன் , விஷ்னு ,மகாலட்சுமி என ஒவ்வொண்ணா உள்ளே வந்தது . திருவிளக்கு பூசைன்னு பெண்களை ஸ்பெஷலாக இழுக்க ஏற்பாடானது . பரம்பரை காளி மெல்ல மெல்ல ஓரம் கட்டப்பட்டாள் .
“ஒங்க தெய்வத்துக்கு பலி குடுக்கிற வழக்கமெல்லாம் உண்டா..?”

“பலி..ன்னா.. காவு தான.. அதெல்லாங் குடுப்பம்ங் சாமி..”

“வேற..? “

“வே...ற..யாராச்சும் நேந்துக்கிட்டாங்கன்னா..சாவ... கோழி ..அறுப்பாங்க..”

“கோயிலுக்கு ஏடு வாசிச்சிருக்கீங்களா..? ‘

......... ........... ..........

“மனுசரப்போல கோயிலுக்கும் ஏன் வீடுகளுக்கும் கூட தொட்ர்ச்சி இருக்கு... ஊர் மாற்றம்
கண்டதிலிருந்து ஒங்க தெய்வம் பசியோட அலையுது அது யாருக்காச்சும் தெரியுமா..? அதனோட
இயல்பான சக்தி பாதிக்கப் பட்டிருக்கு, பவர் இல்லாம பாவமா நிக்கிது. அதனால சமுதாயத்துல
பொறுப்பில இருக்கவங்க குடும்பத்தில சேதாரம் ஏற்பட வாய்ப்பு இருக்கு. ஏற்பட்டிருக்கலாம். “ ஏதோ
ஒரு ஏட்டுசுவடியை கையில் வைத்துக்கொண்டு பேசினார்கள்.

அவர்கள் சொல்வது பூராவும் வாஸ்தவமாகவே இருந்தது. போன மூணாம்மாதம் தலைவராய் இருந்த கருப்பன் லாரியில் லோடுஇறக்கிக் கொண்டிருந்தபோது நெஞ்சுவலி வந்து துள்ளத்துடிக்கச் செத்துப்போனார். முதல்வருசம் கைகால்வராமல்போன பெரியதனம் இன்னமும் வீட்டில் முடங்கிக்கிடக்கிறார். நாட்டாமை சுகர் பிரசர்னு ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்குமாய் அலைகிறார். இப்படி பெருசுகள் பூராவும் விழுந்துகிடப்பது இதனால்தானா...! தரைவிரிப்பில் உட்கார்ந்திருந்த அத்தனைபேருக்குமே கவலை அதிகரித்தது.

’’ஒங்களப் பயமுறுத்தறதுக்காகச் சொல்லல.. எங்களுக்கு சொல்லப்பட்டதச் சொல்றம்..”

“சுடுகாட்டு அம்பாளுக்கு பொணவாடைதான் சுவாசம். நீங்க சுவாசத்தத் தடை பண்றீங்க..

அதனால ஒங்க அம்பாள்மூச்சுத்திணறிக்கிட்டிருக்கா..”

உட்கார்ந்திருந்தவர்களுக்கு மூச்சுமுட்டுவது போலிருந்தது..

இருதரப்பிலும் அமைதி ஊடாடியது.

“அப்பன்னா ஆத்தாள கொண்டுக்குப் போயி சுடுகாட்ல வச்சிரணுமா..”

உட்கார்ந்திருந்தவர்களில் ஒருகுரல் அவசரமாக ஒலித்தது.

“அதுக்கு எடம் இருக்கா.” பீடத்தில் அமர்ந்திருந்தவர்களிடமிருந்தும் ஒருகுரல் அவசரமாய் வந்தது.

“அதுக்காக ஆள் பேர்வராத எடத்திலயா போயா சாமிய வப்பாக..? பொண்ணுபொடுசுக
போய்வரவேணாமா..” கீழிருந்தே ஆட்சேபமும் எழும்பியது.

“ந்மக்காக தெய்வத்த அலக்கழிக்கக் கூடாது..”

“பேசாம இப்ப இருக்க கோவில்லயே ஒருபலிபீடத்த கட்டி வக்கெக்கலாம்ல..”

“அது முடியாது. “ குருக்கள் கொஞ்சம் பலமாய் குரல் உயர்த்திச் சொன்னார்.,” அய்யப்பனுக்
கான ஆலயத்த உருவாக்கியாச்சு. அவருக்கான ஆச்சாரமும் அனுஷ்டானமும் எல்லாருக்கும்
தெரியும். பலிங்கற வார்த்தையே அய்யப்பனுககு ஆகாது அப்பறம் ஒங்க இஷ்டம்..”

“அப்ப....? “ ஏதோ முட்டுச்சந்தில் சிக்குண்ட ஆட்டுமந்தைபோல அத்தனை பேரும்
பரிதவித்தனர்

இப்படி விரட்டியடிப்பது பார்ப்பணியத்தின் நுட்பமான யுத்தியாகும் .திருப்பதியில் மலைக்காளி இடம் சைவர்களாலும் பின்னர் வைணவர்களாலும் வஞ்சகமாகப் பறிக்கப்பட்டு இப்போது  வெங்கடாஜலபதியாய் மாற்றப்பட்டு மக்களையும் ஏற்கச்செய்துவிட்டனர்.பழமையின் மிச்சசொச்சமாய் மொட்டையடிப்பதை மட்டும் தொடர்கின்றனர் . பதினோராம் நூற்றாண்டுவரை அதாவது பரிபாடல் காலம் வரை தமிழகத்தில் முருகனும் வள்ளியும் மட்டுமே கோலோச்சினர் . அப்புறம் வடநாட்டு சுப்ரமணியனும் தமிழகத்து முருகனும் ஒன்றாக்கப்பட்டு வள்ளிஎனும் முருகனின் மனைவியே தெய்வயானையின் சக்காளத்தியாக்கப் பட்டாள் .
குமரி மாவட்ட வரலாற்றோடு பிசையப்பட்ட பொன்னீலனின் “ மறுபக்கம் ” நாவல் பாரம்பரிய இசக்கியம்மன் வழிபாட்டை பார்ப்பணிய வழிபாடு ஆக்கிரமித்ததை விவரிக்கும் . ஒற்றைக் குரலாயினும் அதற்கு எதிரான வலுவான குரலுடன் நாவல் நிறைவு பெறும் .
இச்சிறுகதையும் அதன் நீட்சிதான் . ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களின் பண்பாட்டை எப்படி பார்ப்பணியப் பண்பாடு விழுங்கும் - அதுவும் யானை தானே தன் தலையில் மண்ணை வாரிப்போட்டுக் கொண்டதைப்போல நடக்கும் என்பதை நுட்பமாய் சித்தரிக்கிறது . இது கதைமட்டுமல்ல நிகழ்கால அரசியலும் கூட ..



முதுமை அவர்களுக்கல்ல

Posted by அகத்தீ Labels:




முதுமை அவர்களுக்கல்ல

- சு.பொ.அகத்தியலிங்கம்.


தோலில் முதுமையின் வடுக்கள் , உடம்பில் தளர்ச்சி , ஆனால் வார்த்தை களில் தெளிவு ; ஏற்றுக்கொண்ட பாதை யில் சறுக்கலின்றி இந்த நிமிடம் வரை சலிப்பில்லாப் பயணம்; இதுதான் அவர் களை நோக்கி நம்மை பொறாமை யோடு பார்க்கவைக்கிறது.
" உலக அளவில் முக்கியமான ஒரு புத்தகத்தை தமிழ்ல முழுமையா , விரிவா கொண்டுவந்துட்டோம்கிற மன நிறைவு ஒருபக்கம் இருந்தாலும் , நாம வெளியிலேர்ந்து கொண்டுவந்து சேர்க்க வேண்டிய படைப்புகள் இன்னும் கடல ளவு இருக்கேங்கிற கடமையும் நாம இருக்குற உடல்நிலை எதுவரைக்கும் அனுமதிக்கும்கிற உண்மையும் ஏக்கத்தைத்தான் உருவாக்குது ”இதைச் சொல்லுகிறவர் இளைஞரோ நடுத்தர வயதுக்காரரோ அல்ல; அகவை எண்பதைக் கடந்துவிட்டவர். ஒரு நூலுக் குச் சொந்தக்காரர் அல்ல; தமிழ் அறி வுத்தளத்தில் பல காத்திரமான படைப் புகளைத் தந்த ஆளுமை .பெரியார், சுயமரியாதை இயக்கம் , சாதி எதிர்ப்பு , மார்க்சியம் , மனித உரிமை என இவர் பதித்த தடம் அதிகம் .அவர்தான் எஸ்.வி. ராஜதுரை .

ஏற்ற இறக்கங்களை கம்யூ னிஸ்ட் இயக்கம் சந்தித்த போதும் அதன் மீது மாளாக் காதலுடன் இருக்கும் இந்த கிழவர் ‘ சோஷலிச மீசை இன்னும் கறுக் கும்’ என்கிற கவித்துவ வரிகளை நினை வூட்டுகிறார்.கம்யூனிஸ்ட் அறிக்கையை புதிதாக பிழையற மொழியாக்கம் செய்ததுடன் அது குறித்த விளக்கங்களுடன். இப் போது அவர் தமிழ் அறிவுலகிற்குத் தந்தி ருக்கும் கொடை போற்றுதலுக்குரியது . இப்படைப்பு குறித்து அவர் மனநிறை வடைகிற நேரத்திலேயே இன்னும் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறதே உடல் ஒத்துழைக்க மறுக்கிறதே என முதுமை யிலும் கவலைகொள்வது குன்றா சமூக அக்கறையின் பெரும் சாட்சி அன்றோ ! இவரிடம் கனிந்து நிற்கும் உழைப்பை , தேடலை , சமூகப் பொறுப்பை இளைஞர் கள் வணக்கம் செய்தால் மட்டும் போதாது வரித்துக் கொள்ளவும் வேண்டும்.

நான் செத்த பிறகு சடங்குகள், சம்பிரதாயங்கள், மேளம் ,வெடி , மாலை மரியாதை எதுவும் செய்ய வேண்டாம் ; படத்திறப்புகள்கூட வேண் டாம் ; எரித்து விடுங்கள் என 92 வயது கி.ராஜநாராயணன் குமுதத்தில் வேண்டு கோள் விடுத்ததைப் படித்த போது ; 20 வயதுகளில் இடைச்செவல் கிராமத்தில் ஆயுதப்புரட்சிக்கு பதியம் போட்ட இளைஞனின் கம்பீரம் சற்றும் குறையாமல் இருப்பதைக் காண முடிகிறது .பள்ளிப்படிப்பையே தாண்டாத அவர் புதுவைப் பல்கலைக் கழகத்தில் சிறப்புப் பேராசிரியராய் உயர்ந்தது எப்படி ; வாசிப்பு என ஒற்றை வார்த்தையில் சொல்லிவிடலாம் .

புத்தக வாசிப்பு மட்டு மல்ல மனிதர்களை வாசித்ததும், கிராம வாழ்க்கையை ரத்தமும் சதையுமாய் வாசித்ததும் தான்.கோபல்ல கிராமமும் , வேட்டியும் , நாட்டுப்புற கதைகளும் , கரிசல் காட்டு இலக்கியமும் காலந்தோறும் கி.ரா பேரை சொல்லி நிற்கும் .அவரது எழுத் தில் வீசும் கரிசல் காட்டு மனிதர்களின் வாசம் ஒருபோதும் நம்மை விட்டு அக லாது . அவரைப் பின் தொடரும் கரிசல் காட்டு படைப்பாளி படையொன்று உண்டு.வாழ்வின் இறுதி அழைப்பை எதிர்பார்க்கும் நேரத்திலும் அவரது வாசிப்பு வேட்கையும் எழுத்து வேட் கையும் நமது சோம்பேறித்தனத்தின் மீது சவுக்காய் விழுகிறதே ! இளையதலை முறை வெறியோடு பின்பற்ற அவரிடம் நிறைய நிறைய இருக்கிறது .
“ எந்த இடத்தில் உங்களுக்கு வேர்கள் இருக்கிறதோ அந்த இடத்தில் இருப்பது நல்லது .அந்த வேர்கள் அறுந்து போய்விட்டது . இப்போது புதிதாக வேர்களைக் கண்டுபிடிக்க வேண்டி இருக்கிறது . சில சமயம் வேர் பிடித்துக் கொள்கிறது. சில சமயம் பிடிக்கிறது இல்லை.” என்கிறார் 83 வய தான அசோகமித்திரன்.
“நாலு வரு ஷத்திற்கு முன்பே இறுந்து விடுவேன் என நினைத்த அவருக்கு இப்போது தமிழக அரசு விருது கொடுத்து கவுரவித் திருக்கிறது . விருதை வாங்க 20 படிக்கட் டுகள் ஏறவேண்டுமா என்பது இவரது தற்போதைய கவலை.கணையாழி இதழின் ஆசிரியராக இருந்தவர். அப்பாவின் சிநேகிதர், 18வது அட்சக்கோடு போன்ற பல படைப்புகளின் சொந்தக்காரர். நாவல் ,சிறுகதை இரண்டிலும் முத்திரை பதித்தவர்.

கவிதை குறித்து சந்தேகப் பார்வை கொண்டவர் . தண்ணீர் தண்ணீர் என கோமல் சாமிநாதன் அரசியலும் சமூக மும் கலந்து தயாரித்த நாடகமும் சினி மாவும் சக்கைப் போடு போட்ட காலத்தில் இவர் தனிமனித பாலியல் வாழ்வோடு பிசைந்து எழுதிய தண்ணீர் எதிர்திசையி லான பயணமாகும் . இவரது இலக்கியக் கோட்பாட்டில் மாறுபட்டவரும் இவரது எழுத்தை விரும்பி ரசிப்பார்கள் .“படைப்புக்கு எடிட்டர் ரொம்ப அவசியம்” என இன்றும் கூறும் இவர் ; தயங்காமல் மாற்று கருத்துகளை இப் போதும் முன்வைக்கிறார் .பரந்த கூர்மை யான வாசிப்பும் எழுத்தும் இந்த நொடி வரை ஜீவத்துடிப்போடு இவரை வைத்தி ருக்கிறது . “ உடம்பு முடியுதோ இல் லையோ ஒரு நாளைக்குக் குறைஞ்சது மூணு மணி நேரம் படிச்சுடுவேன். வாசிப்பு என்னை வேற உலகத்துக்கு கொண்டுபோயிடும்” அந்த முயற்சியும் உழைப்பும் படைப்பு வரம் வேண்டி நிற்கும் புதிய தலைமுறை கறாராகப் பின்பற்ற வேண்டியவை அல்லவா ?

உடற்கூறியலில் செல்லின் வளர் சிதை மாற்றம் வயதாக வயதாக எதிர் திசையில் நகரும்.ஆனால் மரணம் அணைக்கிற வரை தன்னைப் புதுப்பித் துக் கொண்டே இருப்பவன் தான் படைப் பாளி. மேலே சந்தித்த மூவரும் தாங்கள் படைப்பாளி என்கிற கவுரவத்தை உயர்த்திக் காண்பிக்கிறார்கள்..அதற்கு அவர்கள் நல்ல வாசகர்களென்பதும் ; இடைவிடா தேடலில் உழல்பவர்க ளென்பதும் முக்கியம் . இதைவிடவா அவர்கள் வாழ்க்கை பெரிய செய்தி சொல்ல வேண்டும் ?