சும்மா கிடந்த சொல்லை எடுத்து ..[ 1 ]

Posted by அகத்தீ Labels:
சும்மா கெடந்த சொல்லை எடுத்து ...[ 1 ]


கல்யாண சுந்தரனே! கண்ணியனே!


- சு.பொ.அகத்தியலிங்கம்


“தங்கமகன் போன பின்னர் , தமிழுக்கும் கதியில்லை
வெங்கொடுமைச் சாக்காடே ! விழுவதற்கேற்ற பொருள்
மங்காத செங்குருதி மகனென்றோ எண்ணமிட்டாய் ?
கல்யாண சுந்தரனே ! கண்ணியனே ! ஓர் பொழுதும்
பொல்லாத காரியங்கள் புரியாத பண்பினனே !
சாவது இயற்கை ! சாவதற்கு நீதியுண்டு ;
நீதியிலா சாவுன்னை நெருங்கி விட்ட தென்றாலும் !
வாழும் தமிழ்நாடும் வளர்தமிழ் கலைஞர்களும்
வாழ்கின்ற காலம்வரை வாழ்ந்துவரும் நின் பெயரே ! ”

- இது பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மறைந்த பொழுது கவியரசர் கண்ணதாசன் வடித்திட்ட கண்ணீர் கவிதை. கவிதையின் கடைசி இருவரிகள் பட்டுக்கோட்டை யின் பாடல்கள் சாகா வரம் பெற்றவை - காலத்தை வென்று நிற்பவை எனப் பறையறைந்து கூறுகிறது . ஆயினும் நிலவுக்கே ஃபுளோ ரோசெண்ட் மினுக்குவண்ணம் பூச வேண்டிய யுகத்தில் பட்டுக் கோட்டையையும் வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் .


“ கண் , காது ,இருதயம் / துருப்பிடிக்கும் முன் துலக்குவீர்” என்றார் வைரமுத்து .அதற்குத்தான் இந்தத் தொடர் . இது ஆய் வல்ல . அசைபோடல் .

“பாதகம் செய்பவரைப் / பாட்டாலே உமிழ்ந்தான் / பஞ்சை களின் நிலையைப் பார்த்து உள்ளம் நெகிழ்ந்தான்” என பாரதியை கவிதையால் போற்றியவன் ; தனக்கும் அதே வரிகள் பொருந்திட வாழ்ந்தான் பட்டுக்கோட்டை என்பதுதான் சிறப்பு.

கவிதை எழுதுவதில் கிடைக்கும் சுதந்திரம் சினிமாவுக்குப் பாட்டெழு தும் போது கிடைக்காது; எனினும் அந்தத் திரைப்பட உலகிலும் கொள்கை முழக்கமிட்டவன் பட்டுக்கோட்டையன்றோ !திரைப்பட உலகின் கெடுபிடிகள் , எல்லைகள், சூழல் அன்றைக்கு எப்படி இருந்தது என்பது குறித்தும் ‘பேசும்பட’ இதழில் வெளிவந்த பட்டுக் கோட்டையாரின் பேட்டியை சந்தி ரன் வீராச்சாமி சமீபத்தில் முகநூலில் பதிவு செய்திருந்தார் ; அதனை அப்படியே கீழே தருகிறோம் :

“இரவு பத்து மணி இருக்கும். வர்ண விளக்குகள் ஆங்காங்கே இந்திர ஜாலம் புரிந்து கொண்டிருக்க விஜயா கார்டனில், வீனஸ் பிக்சர்ஸ் ‘கல்யாண பரிசு’ வெள்ளி விழாவில் விருந்துக்குப் பிறகு நான் ஓரிடத்தில் அமர்ந்திருந்தேன். சாப்பாட்டை முடித்து விட்டு, தாம்பூலத்தைக் குதப்பியபடி. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எனக்குச் சிறிது தூரத்தில் நின்றிருந்தார். நான் அவரை அழைத்தேன். என்னருகில் வந்து உட்கார்ந்து கொண்டே அவர், உங்களை நானே பார்க்க வேண்டும் என்று நினைத்தேன் என்றார் சிரித்துக் கொண்டே.


என்ன விஷயம்? என்று கேட்டேன்.கவிஞன் என்பவன், பல்வேறு இசைக் கருவிகளை வைத்து சங்கீதத்தை உண்டாக்கும் கலைஞரைப் போல, வார்த்தை களைப் பொறுக்கி எழுதுபவனா? என்று அவர் என்னிடம் கேட்டார்.

கவிஞர் கேட்ட கேள்வி என்னை திடுக்கிட வைத்தது! அதுவும் சாதாரணக் கவிஞரா அவர்!எனக்குப் புரியாத ஒன்றைக் கேட்கிறீர்கள் என்னைப் பொறுத்த வரை கவிதை என்பது இதயத்தில் சுரந்து, எண்ணத் தில் மிதந்து வருவது. சொற்களைக் கண்டு பிடித்துப் போட்டுக் கவிதை எழுதினால், அது கவிதை ஆகாது! என்றேன்.

இதை நமது சங்கீத டைரக்டர்கள் ஏன் உணருவதில்லை? மெட்டமைக்க அவர்களுக்கு நமது கவிதை ஏற்றதாக இல்லா விட்டால், மெட்டை மாற்றுவதற்குப் பதில் ஏன் கவிதையை மாற்றச் சொல்கிறார்கள்? அதற்காகச் சொற்களை எப்படிப் பொறுக்கிப் போட வரும்? என்றார் கவிஞர்.

உண்மைதான்! என்றேன் நான்.

இங்கு இது மட்டுமல்ல! நடிகர்கள் கூட கவிதைகளில் கை வைத்து விடுகிறார்கள். ஒரு பெரிய தயாரிப்பாளருக்காக நான் பாட்டொன்று எழுதினேன். அதில் வரும் கவிதையை ஹாஸ்ய நடிகர் சொல்படி மாற்றிவிட்டார் தயாரிப்பாளர்.

நடிகர்கள் தங் கள் கருத்தைச் சொல்லலாமே தவிர, பாட்டை மாற்றுவது கூடாது என்பது என் அபிப்பிராயம். அப்படிப் பார்க்கப்போனால் கவிஞர் களும் நடிகர்களைப் பற்றி குறை கூற இடம் ஏற்படும் என்றார் பட்டுக்கோட்டை.

எப்படி? என்றேன்.கவிதையில் வரும் சொற்களின் ஆழத்தையும் நயத்தையும் பொருளையும் உணர்ந்து எத்தனை நடிகர்கள் பாடி, நடித்திருக் கிறார்கள்? அதே போல் நடனத்தையும் பாவத்துடன் உணர்ந்து யார் ஆடுகிறார்கள்? நடிகைகள் காட்டும் அபிநயத்துக்கும் பாட்டுக்கும் அநேகமாகப் பொருத்தம் காணவே முடியாது. இதே போல் பாட்டு ஒரு பங்கு என்றால் அதற்கான இசை இரண்டு பங் காக இருக்கக் கூடாது!

நான் சமீபத்தில் காவடிச்சிந்து மெட்டில் ஒரு ஸ்டூடியோ முதலாளியின் படத்திற்குப் பாட்டெழுதிக் கொடுத்தேன். அதில் பாட்டில் முக்கால் பகுதியை நீக்கிவிட்டு, மற்ற பகுதிக்கு வெறும் இசையை இணைத்திருக்கிறார்கள்.

இம்மாதிரி செய்வதையும் நான் மனதார வெறுக்கிறேன். இதனால் கவிஞனுக்கு ஏற்படும் உற்சாகத்தையும் குலைத்து விடுகிறார் கள் என்று சொன்னார் கவிஞர் திலகம்.இதையெல்லாம் மனதுக்குள் போட்டுப் புழுங்கிக் கொள்ள நான் விரும்பவில்லை. இதை அப்படியே ஒரு கட்டுரையாக வடித் துத் தருகிறேன். வரப்போகும் உங்கள் இதழில் போட்டு விடுங்கள் என்றார் கவிஞர்.”

 இது பட்டுக்கோட்டையாரின் இறுதி பேட்டி , பேட்டி எடுத்தவர் பேசும் படம் நிருபர்.

இந்தச் சூழ்நிலையிலும் பட்டுக்கோட்டையார் எழுதிய பாடல்கள் நம்மை வியக்கவைக்கின்றன . ஒரு காதல் பாடலைப் பாருங்கள். 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தங்கப்பதுமை திரைப்படத்தில் இடம் பெற்றது...முகத்தை நிலவுக்கும் கன்னத்தைக் கண்ணாடிக்கும் உவமை காட்டுவது கவிஞர் இயல்பே ! ஆனால் அதிலும் கவிஞ ரின் கற்பனை புதிய சிகரங்களைத் தொட்டது

“முகத்தில் முகம் பார்க்கலாம் - விரல்நகத்தில் பவளத்தின் நிறம் பார்க்கலாம்” நகமே பவளத்தின் நிறமெனில் அந்தப்பெண் சொர்ணத்தின் வார்ப்படமாக இருப்பாளோ என எண்ண வைக்கும் ஆரம்பவரிகள்.

“வகுத்த கருங்குழலை மழைமுகி லெனச் சொன்னால்மலரினை இதழோடு இணை சேர்க்கலாம் - என்முன்வளைத்து இளந்தென்றலில் மிதந்துவரும் - கைகளில்வளையல் இன்னிசை கேட்கலாம் - மானே உன்.. முகத்தில்..”இந்தவரிகள் நெஞ்சை வருடுபவை .ஐயமில்லை . ஆயினும் அநேக கவிஞர்கள் இதனைப் போன்று பெண்களைக் வர்ணித்துக் கொஞ்சும் கவிதைகள் படைத்திடுவர் . பட்டுக் கோட்டை அவர்களில் ஒருத்தரா அல்லவே ! கிடைக்கும் வாய்ப் பில் எல்லாம் தன் புரட்சிகர சமூகப் பார்வையை உறுத்தலின்றி நுழைக்கும் வல்லமை பெற்றவன் என்று சொல்வதைவிட அப்படி கற்பனை செய்வதே அவன் இயல்பு எனலாம்.


எனவேதான் அடுத்த வரியிலேயே பாடினான் : “ இகத்திலிருக்கும் சுகம் எத்தனையானாலும்இருவர்க்கும் பொதுவாக்கலாம் - அன்பேஅதன் எண்ணிக்கை விரிவாக்கலாம்...”பார்த்தீர்களா ஆண் - பெண் சமத்துவம் கவிஞர் பாடலில் இயல்பாய் வந்து விழுகிறது. இதற்கு பொழிப்புரை, பதவுரை தேவை இல்லை. எளிமை இனிமை லட்சியம் மூன்றும் கைகோர்க் கும் வரிகள் இவை . கேட்பவர்களைச் சொக்கவைக்கும் . சிந் திக்கத் தூண்டும். அதுதான் பட்டுக்கோட்டை .

இந்தப் பாடலின் கடைசியில் “வரம்பு கடந்திடும்..” என்கி றார் . காதலில் வரம்பு கடக்கலாமோ ! “வரம்பு மீறுதல் முறையோ ..” என இன்னொரு பாடலில் கேட்டவர். இப்பாடலில் அவர் மீறியது ஏன் ? அடுத்த வாரம் பார்ப்போம்.

நன்றி ; இலக்கியச் சோலை  தீக்கதிர்    5 மே 2014

0 comments :

Post a Comment