படைப்பாளியின் உள்மனதை ஊடுருவி..

Posted by அகத்தீ Labels:


படைப்பாளியின் உள்மனதை ஊடுருவி…..
சு.பொ. அகத்தியலிங்கம்

பஷீர் தனிவழியிலோர் ஞானி ,
ஆசிரியர் : பேராசிரியர் எம்.கே.ஸாநு,
தமிழில் : யூமா வாசுகி,
வெளியீடு : பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ தெரு, தேனாம் பேட்டை,
சென்னை - 600 018.
பக் : 304, விலை : ரூ.180

பஷீரின் வாழ்க்கை குறித்து மலையாளத்தில் எண்ணற்ற புத்தகங்கள் வந்துவிட்டன; குறிப்பாக பஷீர் எழுதிய நூல்களின் எண்ணிக்கையைவிட பஷீர் பற்றிய நூல்களின் எண்ணிக்கை அதிகம் என்கிறார் பி.கே.பிரதாபச்சந்திரன். ஆயினும் அதிகாரப்பூர்வமான ஒரு வாழ்க்கை வரலாறு இல்லாதது முற்றிலும் ஒரு குறையாகவே இருந்தது. நிரப்ப முடியாத பள்ளம் என்று நம்மிடையே ஒரு சொற்பிரயோகம் உண்டல்லவா, அப்படிப்பட்ட ஒரு பள்ளத்தைத்தான் இந்தப் புத்தகம் நிரப்புகிறது என்கிறார் பி.கே.பிரதாபச்சந்திரன். இதுமிகைக் கூற்றல்ல என்பதை இந்நூலை வாசிக்கும் யாரும் ஒப்புக்கொள்வர்.

“ பாத்துமாவின் ஆடு”, “என் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது” இந்த இரு மலையாளப் படைப்புகள் குறித்து ஒரளவு இலக்கிய அறிமுகம் உடைய தமிழ் வாசகர்கள் அனைவரும் அறிவர். இந்த உன்னதப் படைப்புகளைத் தந்த வைக்கம் முகம்மது பஷீர் என்ற இலக்கிய ஆளுமை தமிழ் வாசகர்களுக்கு புதியவர் அல்ல ; ஆயினும் அவரின் இந்த வாழ்க்கைக் கதை முற்றிலும் வித்தி யாசமானது . படைப்பாளியின் உள்மனதை திறந்து காட்டும் அரிய முயற்சி.இந்நூல் மூன்று பாகங்களைக் கொண்டது .

முதல் அத்தியாயம் பஷீரோடு நம்மை கைகுலுக்க வைக்கிறது. அதிலும் பஷீரும் கடவுளும் என்ற அத்தியாயத்தை படித்த போது இன்றைக்கு அதை மட்டுமே தனிக்கட்டுரையாகப் பிரபலப்படுத்த வேண்டும் என்று தோன்றியது. அதில் வரும் கிட்டச்சோகனின் நிகழ்வு மனித வாழ்வில் இயல்பாய் உறைந்திருக்கும் மதநல்லிணக்கத்தின் குறியீடு. பஷீரின் உம்மாவுக்கு பாகமாகக் கிடைத்த தோட்டத்தில் உள்ள எட்டிமரத்தை விற்க நினைக்கின்றனர். அங்கே எதிரே குடியிருக்கும் கிட்டச்சோகன் பாம்பு முதலிய விக்கிரகங்களை வைத்து வழிபட்டுவருவதை அறிந்து உம்மாவிற்கும் முடிவை கைவிடுகிறார். கிட்டனின் நம்பிக் கையை மதிக்கிறார்.

ஈழவர்களிலும் அடிநிலையில் வைக்கப்படுகிறார்கள் சோகன் என்கிற பிரிவி னர். கிட்டச்சோகன் அவ்வகையினன். அன்று எந்த சமூகப் பாதுகாப்பும் அற்ற கிட்டச்சோகனை ஒதுக்கினால் யாரும் ஆட்சேபித்திருக்கமாட்டார்கள். ஆயினும் உம்மா கண்ணியமாக அவரது நம்பிக்கை உணர்வை மதித்து நடத்தினார். ஒரு நாள் கிட்டச் சோகன் செத்துவிடுகிறான். சிலநாட் களுக்கு பிறகு அவன் மனைவி உம்மாவிடம் அந்த எட்டிமரத்தை இப்போது விற்கலாமே என்று சொன்னதுடன்; சோகன் சாவதற்கு முன்னால் அந்தச் சிலைகளை தன் வீட்டு மரத்தடியில் வைத்து விட்டதாகவும் கூறுகிறார். மதநலிணக்கமும் நாகரீகமும் கை குலுக்குகின்றன. அது போல் பஷீர் நூலொன்றை பாடபுத்தகமாக்க கம்யூனிஸ்ட் அரசு முயன்ற போது கடும் எதிர்ப்பெழுந்தது. அந்த எதிர்ப்புக்கு மதச்சாயம் பூச சிலர் முயன்ற போது பஷீர் அதற்கு உடன்படா மல் அது அரசியல் எதிர்ப்பென புறந்தள்ளியதும் சரியான அணுகுமுறையாகும்.

இதுபோன்ற சுவை யான ஆழமான செய்திகளைச் சொல்லும் முதல் பாகம்.முதல் பாகத்தில் அவரது சுதந்திரப் போராட்ட அனுபவம் உயிர்த்துடிப்புடன் பதிவாகியிருக்கிறது. அத்துடன் அவர் ஊர்சுற்றியாய் தேசம் முழுவதும் சுற்றித்திரிந்து பெற்ற அனுபவச் செழுமை நன்கு வெளிப்படுகிறது. ராகுல சங்கிருத்தியாயனின் ஊர்சுற்றிப் புராணம் ஒருவகை கிளர்ச்சியான அனுபவம் தரும். இங்கு பஷீரின் இன்னொரு வகையான அனுபவம் நம்மை ஈர்க்கும். ஆழ்ந்த புத்தகப் படிப்பு ஒரு வகையான அறிவு தீபத்தைச் சுடரச் செய்யும். எங்கும் அலைந்து திரிந்து - பல தரப்பட்டோர்களோடு ஊடாடி உறவாடி பெறும் ஞானமே தனி. பஷீருக்கு இரண்டும் வாய்த்தது என்றும் சொல்லலாம். அதைவிட இரண்டு வாய்ப்பையும் உருவாக்கிக் கொண்டார் என்பதே பொருத்தம்.

இரண்டாம் பாகம் பஷீர் என்ற எழுத்தாளர் உருவான கதையைச் சொல்கிறது . பஷீரின் கதைகள் எல்லாமே அவரின் அனுபவங்கள் தான். ஆனால் அனுபவங்களை அப்படியே நகலெடுப்பவரல்ல பஷீர். அதற்கு உயிர் கொடுக்கும் வித்தைதான் பஷீரின் எழுத்துத்தவம். “ என் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது” கதை மட்டுமே அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுதப்பட்டது. மற்றெல்லா கதைகளையும் அடித்து திருத்தி மாற்றி மாற்றி எழுதியவர் பஷீர் . ஆம், தான் எழுதுவதுதான் எழுத்து என கதைத் தொழிற்சாலையாக அவர் ஒரு போதும் திகழவில்லை .

சிலையைச் செதுக் குவது போல், சித்திரம் தீட்டுவதுபோல் சிரத்தையோடு செயல்பட்டார் என்பதோடு அதற்காக பிரசவ அவஸ்தையை அனுபவித்தார். அந்த அனுபவம் இரண்டாவது , மூன்றாவது பாகங்களில் விரவிக்கிடக்கிறது .சுத்தசுயம்புவாக பஷீரை நூலில் படம்பிடித்துக் காட்டவில்லை . தனிமனித பலம் பலவீனங்களோடு அவர் சித்தரிக்கப் பட்டிருக்கிறார். அவரது சக இலக்கிய வட்டம் முக்கியமானது. பி.கே.பாலகிருஷ் ணன், போஞ்ஞிக்கரை ராபி, எம்.பி.கிருஷ்ணபிள்ளை, பெருன்னதாமஸ், பொற்றே காட், கேசவ்தேவ், தகழி, ப்ராக்குளம் பாசி இன்னும் பலர் அவரின் சபையில் உண்டு. அவர்களின் வாக்குமூலங்கள் கடிதங் கள் மூலம் பஷீரின் குணச்சித்திரம் கறுப்பு வெள்ளையாக இந்நூலில் தீட்டிக்காட்டப்பட்டுள்ளது.

புகழ்பெற்ற கேசவ்தேவோடு பஷீருக்கு ஏற்பட்ட நட்பும் உரையாடலும் தொழிலாளி வர்க்கத்திற்காக இலக்கியம் படைக்கவேண்டும் என்கிற உறுதியை அவருள் விதைத்து. அதேசமயம் ஒவ்வொரு படைப்பையும் முடிந்தவரை வசீகரமாக்குவதற்கான சிந்தனை பஷீரின் இலக்கிய வாழ்வில் நிரந்தரமாக இருந்ததை நூலாசிரியர் பொருத்தமாகச் சுட்டிக்காட்டுகிறார்மூன்றாவது பாகம் கொஞ்சம் அவரின் சொந்த வாழ்க்கையைப் பேசும். திருமணத்தைப் பேசும். அவரின் புத்தகக்கடை முயற்சிகளைப் பேசும். அதற்கும் மேல் அவரின் குடும்ப விவகாரங்கள் நூலை ஆக்கிரமிக்கவில்லை.

அவர் பொதுமனிதன். அவரது வாழ்க்கையினை அந்த எல்லையின் வரம்பிலிருந்தும்; அதே நேரத்தில் குறுக்குவெட்டாய் அந்தப் படைப்பாளியின் மனோ உலகத்தை உடைத்துக் காட்டுவதிலும்; அதற்குக் களமான சூழலை விவரிப்பதிலும் இந்நூல் வெற்றிபெற்றுவிட்டது. சப்தங்கள் நூல் உருவாக்கிய சர்ச்சை, பாத்துமாவும் ஆட்டுக்குட்டியும் உருவாகிய பின்னணியும் வலியும். இப்படி படைப்பின் ஊற்றை காட்டுகிறது இந்நூல் . மேலும் அந்த படைப்பின் வீச்சையும் நம்மை உணர வைக்கிறது . 33 புத்தகங்களுக்கும் 12 விருதுகளுக்கும் சொந்தக் காரரான இவர் தனிமையின் உபாசகர் என்பதும்; பெரும் கூட்டங்களிலிருந்து ஒதுங்கியிருக்கவே பிரியப்பட்டார் என்பதும் மிக முக்கியச் செய்தி.

அது மட்டுமல்ல ஒரு முறைக்கு இருமுறை மனநோய் சற்று அதிகமாகி சிகிச்சை பெற்றதும் அறிய வேண்டிய செய்தி.இவர் தன் எழுத்துக்களில் கம்யூனிஸ்டுகளை கிண்டல் செய்தபோதும் கேரளத்தில் கம்யூனிஸ்டுகள் அதைப் பொருட்படுத்தாமல் இவரது எழுத்துகளைக் கொண்டாடினர் என்பது அடிக்கோடிடவேண்டிய செய்தி. அது போல் புலமைக் காய்ச்சலின்றி சக எழுத்தாளர்களோடு உரையாடுகிற உயர்பண்பு மேலோங்கி இருந்தது என்பதும் கற்க வேண்டிய பாடம் . பஷீர் இறை நம்பிக்கையாளர் . இஸ்லாம் மீதும் குரான் மீதும் காதல் கொண்டவர் . ஆனால் மனிதகுலத்தின் மீது மாறாக் காதலை மட்டுமே இவரின் எழுத்துகள் வெளிச்சம் போட்டன . சமூகத்தின் இருண்ட பகுதிகளை இவரது எழுத்து காட்சிப்படுத்திய போதும் விமர்சித்த போதும் அதில் மானுட அன்பே ஓங்கி நின்றது . அவரது எழுத்து வெற்றியின் சூட்சுமம் இதுவே. இதனை இந்நூலின் போக்கோடு நெடியின்றி தந்துள்ளார் ஆசிரியர் .

“சிக்கலான ஒரு தனித்தன்மைதான் பஷீருடையது .மேல்தளத்தில் தெரிகிற குறும்புகளும் தமாஷ்களுக்கும் கீழே நிறைய நன்மையும் ஆன்மிகமும் கருணையும் அவரில் மலர்ச்சியுடனிருந்தன. அதனால்தான் சமூகம் கொண்டாடுகிற ஆசாரப் பிரக்ஞையில் அதில் ஏமாற்றுக்குத் தானே இடம் அவர் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை . அவருக்குள் ஒரு எதிர்ப்பாளர் இருந்தார். ‘அனர்க நிமிஷம்’ நிகரற்ற நொடி எனும் நூலில் ‘அனல் ஹக்’ படிப்பவர்களால் அந்த மர்மமான மனதிற்குள் எட்டிப் பார்க்கலாம். அந்த உள் உலகம் ஒருவரை தனித்தவராக்குகிறது . ‘ தனிமையின் தீரம் ’ என்னவென்று அவரால்தான் அனுபவித்தறிய முடியும் . அதையும் அறிய முயன்றபடிதான் நான் சம்பவங்களைத் தேர்ந்தெடுத்து வரிசைப்படுத்தியிருக்கிறேன்” என்கிறார் நூலாசிரியர் எம்.கே.ஸாநு. ஆம் பஷீரின் மனோ உலகம் இந்நூலின் ஊடும்பாவுமாய் பின்னப்பட்டுள்ளது இந்நூலின் சிறப்பு.

நன்றி : தீக்கதிர்  , புத்தகமேசை , 25 -5-2014.

குறிப்பு : தீக்கதிரில் இந்த மதிப்புரை வெளியான போது  யூமா வாசுகியின் மொழிபெயர்ப்பு குறித்து எதுவும் சொல்லாது விட்டுவிட்டேன் . இத்தவறினை காலையில்  பி.கே.ராஜன் சுட்டிக்காடியதும் உறைத்தது . வருந்தினேன் . யூமா வாசுகியை அலைபேசியில் அழைத்து என் மன்னிப்பைக் கோரினேன் . ஆனால் ஒன்று , மொழிபெயர்ப்பு என்ற உணர்வே எனக்கு ஏற்படாமல் மொழிபெயர்த்தது அல்லவா இந்த தவறுக்குக் காரணம் .

0 comments :

Post a Comment