எத்தனை எத்தனை கட்சிகள் – 6
மொழிவழி மாநிலங்கள் : தோற்றமும் கட்சிகளும்
இந்தியாவில்
ஏன் இத்தனைக் கட்சிகள்? இந்தக் கேள்விக்கும் இந்தியாவில் ஏன் இத்தனை வேறுபாடுகள் என்பதற்கும் நெருங்கியத் தொடர்பு உண்டு. இந்தியா எனும் தேச வரைபடம் விடுதலைக்கு முன் இதுபோல் இருந்ததே இல்லை. குப்த சாம்ராஜ்யம், மவுரிய சாம்ராஜ்யம், மொகலாய சாம்ராஜ்யம், அசோக சாம்ராஜ்யம் உட்பட எந்த சாம்ராஜ்ய வரைபடத்தை எடுத்தாலும் இன்றைக்கு இருக்கிற இந்தியா கிடையாது. பாஜக, ஆர்.எஸ்.எஸ் ஊளையிடுகிற – வரைந்து வைத்திருக்கிற ’அகண்ட பாரத’ தேசப்படம் போல் இந்தியா என்றைக்கும் இருந்ததில்லை. பிரிட்டிஷ் ஆட்சியிலும் இந்த தேச வரைபடம் இப்படி இருந்ததில்லை. 56 சுயேட்சையான சமஸ்தானங்கள் தனித்து இயங்கின. ஆக இன்றைய ‘இந்திய
தேசம்’ என்பதே
தேசவிடுதலைப் போரில் பிறந்த ஒன்றே. அதன் வலிகளும் காயங்களும் தனி! உலகில் பல நாடுகள் அப்படித்தான்
உருவாகின. வெவ்வேறு காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட உலக வரைபடத்தை கூர்ந்து கவனித்தால் இது புலனாகும்.
மேலும்
இந்தியாவை சுற்றி வந்தால் ஒவ்வொரு நூறு கிலோ மீட்டருக்கும் உணவு, உடை, தட்பவெப்பம், வளம், பண்பாடு, நம்பிக்கை எல்லாம் மாறுபட்டிருக்கக் காணலாம். இவற்றினூடே ஓர் மெல்லிய ஒற்றுமையும் இழையோடுவதை அவதானிக்கலாம். பல்வேறு மதங்கள், பலப்பல பண்பாடுகள், பல்வேறு மொழிகள், ஆயிரக்கணக்கான சாதிகள், உபசாதிகள், வர்ணங்கள், மானிட உருவ ஏற்றத்தாழ்வுகள், இயற்கை வேறுபாடுகள், வெள்ளம், வறட்சி, நஞ்சை, புஞ்சை, காடு, மலை, தோட்டம், பாலை, கடற்கரை இப்படி எண்ணற்ற வேறுபாடுகளின் ஏற்றத்தாழ்வுகளின் சங்கமம்தான் இந்தியா.
ஆகவே
சமூகத் தேவைகள், பொருளாதாரத் தேவைகள், அரசியல் தேவைகள், பண்பாட்டுத் தேவைகள் நிச்சயம் மாறுபாடாகவே இருக்கும். அவை புறக்கணிக்கப்படும் போதோ, கண்டுகொள்ளப்படாத போதோ, எடுத்துச் சொல்லவோ, போராடிப் பெறவோ பலவேறு அமைப்புகளும் கட்சிகளும் தலைஎடுப்பது தவிர்க்க முடியாத ஒன்றல்லவா? தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் உருவானது இதன் உயிர் சாட்சி.
மக்களை
ஒன்றிணைப்பதில் மொழிக்கு முக்கியப் பங்குண்டு. மொகலாய ஆட்சிகளில் பாரசீக மொழிக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் சமூகத்தில் கசப்புணர்வை விசிறிவிட்டது. தாய்மொழிவழி விடுதலைப் பிரச்சாரத்தைக் கண்டு பிரிட்டிஷ் அரசு பயந்தது. ஆகவே தாய்மொழி ஏடுகளுக்கும் நூல்களுக்கும் கெடுபிடி அதிகமானது. ஆயினும் ஆங்கிலக் கல்வியின் மூலம் கிடைத்த நவீன அறிவியல் வெளிச்சமும் வெள்ளைக்காரர்களோடு ஏற்பட்ட தொடர்பும் படித்த மேல்தட்டு வர்க்கத்தினரை தனித்துக் காட்டியது.
மொழிவழி
மாநிலப் போராட்டம்
மறுபுறம்
மேற்கு வங்கம், ஒரிசா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் மொழி உணர்வு தலைதூக்கியது. ஒடியாவில் 1895-ஆம் ஆண்டு மகாநதியின் கரையோரத்தில் அமைந்த சம்பல்பூர் நகரில் மொழிப் போராட்டம் தொடங்கியது எனில் மிகை அல்ல. முதலில் வங்க மாகாணத்திலும் பின்னர் பீகார் மற்றும் ஒரிசா மாகாணத்திலும் வாழ்ந்த ஓரியா மொழி பேசும் மக்கள் தங்களுக்கென தனி மாநிலம் வேண்டும் என்று கோரினர். மன்னர்கள் ஆதரித்தனர்.
அந்த
மொழிவழி மாநிலப் போராளி நீலகாந்த தாஸ் 1927-ல் சைமன் கமிஷனிடம்
மனு அளித்தார். 1930-இல் லண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் பீகார் – ஒரிசா சட்டப்பேரவை சார்பில் பங்கேற்ற பார்லகேமுண்டி மகாராஜா கிருஷ்ண சந்திர கஜபதி மொழிவழி மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தினார். 1936 ஏப்ரல் 1 அன்று அதிகாரப்பூர்வமாக ஒரியா மொழி பேசும் மக்களுக்குத் தனி மாகாணம் பிறந்தது. இந்திய வரலாற்றில் மொழிவழி மாகாணமாக முதலில் உதயமானது ஒரிசா. தற்போது ஒடியா.
காங்கிரஸ்
கட்சிக்குள் மொழிப்பிரச்சனை வந்தது. இந்தியாவை இந்தி மூலம்தான் ஒருங்கிணைக்க முடியும் ஏனெனில் அதுதான் பெரும்பான்மை மக்களின் மொழி, ஆகவே இந்தியே இந்திய இணைப்பு மொழி என்று தவறான முடிவுக்கு காங்கிரஸ் வந்தது. ஆயினும் பிரச்சார வசதிக்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, வங்க கமிட்டி என பிரித்தது. மொழி
வழி மாநிலம் அமைப்பதாக உறுதி அளித்தது.
பிரிட்டிஷ்
ஆட்சியில் சில மாகாணங்களில் ஆட்சி செய்யும் வாய்ப்பு காங்கிரஸுக்கு கிடைத்த போது இந்தியைத் திணித்தது. தமிழ்நாட்டில் அதற்கு எதிராகப் போராட்டம் கிளர்ந்தெழுந்தது என்பது வரலாறு. மொழி வழி மாநிலங்கள் அமைவதே அவர்களின் பண்பாட்டோடு இணைந்தது. ஆட்சி செய்ய எளிதானது. கல்வி, நிர்வாக, வணிகத் தேவைக்குத் தாய்மொழியே ஆதாரம் என்பது விடுதலை அடையும் வரை நேருவின் கருத்தாக இருந்தது.
1948 ஜனவரி
25 (சுடப்படுவதற்கு சில நாட்கள் முன்பு) பிரார்த்தனைக் கூட்டத்தில் பேசிய மகாத்மா காந்தி, “நாம் இப்போது ஆட்சியில் இருப்பதால் நாம் உறுதி மொழிகொடுத்த மொழிவழி மாநிலம் என்பதை நிறைவேற்றும் தருணம் வந்துவிட்டது” என்றார்.
மேலும் “மொழிவழி மாநிலம் அமைந்தால் பிராந்திய மொழிகளுக்கு ஊக்கம் கிடைக்கும். எல்லா பிராந்தியங்களிலும் ஹிந்துஸ்தானி கல்வி மொழியாவது அபத்தமானது. அதற்காக ஆங்கிலத்தைப் பயன் படுத்துவது என்பது இன்னும் அபத்தமாகி, நகைப்பிற்கு இடமாகும்”
என்றும் சொன்னார். அத்துடன் மொழிவழி மாநிலம் ஒன்றியத்திற்கு கட்டுப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதையும் காந்தி கறாராக அக்கூட்டத்தில் வலியுறுத்தினார்.
பிராந்திய
மொழி என்ற சொற்பதமே ராஷ்டிரிய மொழி என்ற ஒன்றை மறைமுகமாக ஒப்புக்கொள்வதாகும். அவரவர் தாய்மொழி என்பதே சரி. அனைத்து மொழியும் சமம் என்பதே சரி. ஆனால், நேருவால் மொழிவழி மாநிலம் என்பதை உடனடியாக அமலாக்கிட முடியவில்லை. ராஜாஜி, வல்லபாய் படேல் போன்ற தலைவர்களின் கடும் நிர்ப்பந்தம், இந்தி மொழி பேசுவோரின் கடும் அழுத்தம் காரணமாக நிர்வாக வசதிக்கான மாநிலங்கள் தட்சிண பிரதேஷ், உத்திர பிரதேஷ், மத்திய பிரதேஷ் என்பது போன்ற யோசனைகளையே ராஜாஜி முன்மொழிந்தார்.
மொழி
வழி மாநிலங்களை வலியுறுத்தி பொட்டி ஸ்ரீ ராமுலு 1952 அக்டோபர் 12 அன்று சென்னையில் சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கினார். ‘விசால ஆந்திரம்‘
என தோழர் சுந்தரய்யாவும், ’தங்க வங்கம்’ என தோழர் பவானி
சென் குப்தாவும், ‘ஐக்கிய கேரளம்’ என தோழர் இ.எம்.எஸ் நம்பூதிரிப்பாடும், ’ஐக்கிய தமிழகம்’ என தோழர் ப.ஜீவானந்தமும் எழுதிய சிறு வெளியீடுகள் மொழிவழி மாநிலக் கனலை விசிறிவிட்டது. கம்யூனிஸ்டுகள் நாடு முழுவதும் இப்போரில் இணைந்து நின்றனர். 1952 டிசம்பர் 12-ல் பொட்டி ஸ்ரீ
ராமுலு உண்ணாவிரதத்தில் உயிர் இழந்தார். நாடு முழுவதும் உருவாக்கிய கோபக் கனல் 1952 டிசம்பர் 19 அன்று நேருவை ஆந்திராவை தனி மாநிலமாக அறிவிக்கச் செய்தது.
மாநிலப்
பிரிவினை சுமுகமாக நடைபெறவில்லை. எல்லைகளை வகுப்பதில் கசப்புணர்வுகளை விதைத்தன. மும்பை குறித்து மகாராஷ்டிராவில் பெரும் போராட்டங்களும் விவாதங்களும் மையம் கொண்டன. படிப்படியாய் மொழிவழி மாநிலங்கள் அமைந்தன. இந்த மொழிவழி மாநிலங்களுக்கான உரிமைப் போரில் பல்வேறு மாநிலங்களில் பல வலிமையான தலைவர்களை
முன்னிறுத்தியது. அதன் தொடர் விளைவாக மாநிலக் கட்சிகள் பலமடைந்தன. காங்கிரஸுக்குள் இருந்த தலைமை மற்றும் கருத்துவேறுபாடுகளும் ஆங்காங்கு பல கட்சிகளைப் பெற்றெடுக்கும்
களமாயின. மொழிவழி மாநிலங்கள் தோற்றம் மாநில வளர்ச்சி, உரிமை இவற்றில் ஆக்கபூர்வமான முன்நகர்வானது.
ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்துவாவின் நிலைப்பாடு
அப்போது
ஆர்.எஸ்.எஸ் என்ன நிலைபாடு எடுத்தது தெரியுமா? ஆர்.எஸ்.எஸ் ஆரம்பத் தலைவர்களில் ஒருவரும் அதற்கு தத்துவ முகம் அளித்துவருமான கோல்வால்கர் 1954-ல் பம்பாயில் என்ன
பேசினார் தெரியுமா?
”பன்மை
சச்சரவை வளர்க்கிறது. ’ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு கலாச்சாரம்’ ஆகியவையே
என் கொள்கைகள் …. ஒருவரை தமிழராகவோ, மகாராஷ்டிரர் ஆகவோ, வங்காளியாகவோ பார்ப்பது நாட்டின் வல்லமையைக் குழிதோண்டி புதைப்பதாகும். அவர்கள் அனைவரும் தங்களை இந்துக்கள் என்றே அழைக்க வேண்டும்.”
ஆக,
மொழி வழி மாநிலங்களையோ பண்பாட்டையோ ஆர்.எஸ்.எஸ் ஏற்கவே இல்லை என்பதுதான் உண்மை. மொழிவழி மாநிலம் போன்றே அம்பேத்கர் முன்மொழிந்த – முற்போக்கான சமூகம் அமைய தேவையான – ‘இந்து சீர்திருத்த சட்டம்’
(Hindu Civil Code) பெருத்த
விவாதமானது. அம்பேத்கரை மனமுடைய வைத்தது. 1951 செப்டம்பர் 27 அன்று சட்ட அமைச்சர் பொறுப்பில் இருந்து அம்பேத்கர் ராஜினாமா செய்தார்.
நாடாளுமன்றத்திலும்
வெளியிலும் முன்னும் பின்னும் நடந்த விவாதங்கள் போராட்டங்கள் அனைத்தும் இந்திய சமூகத்தில் இந்து பழமைவாதத்தின் உடும்புப் பிடியைப் பறைசாற்றின. இந்துத்துவ சக்திகள் காங்கிரஸ் கட்சிக்குள்ளும் வெளியிலும் பல முகமூடிகளோடு உலவுவது
வெட்டவெளிச்சமானது.
காங்கிரசிற்குள்
செயல்பட்ட இந்துத்துவ முகாம் குறித்து அன்றைக்கே சர்ச்சில் எச்சரித்துள்ளார். 1931-ல் ‘இந்தியாவிற்கு நமது கடமை’ எனும் தலைப்பில் பேசிய போது குறிப்பிட்டார், “இந்தியாவை பிராமணர்களிடம் விட்டுவிடுவது கொடுமையான செயல்.” (காங்கிரஸில் பிராமணர்கள்தாம் ஆதிக்கம் செலுத்தினார்கள் என்பது அவர் கருத்து. பெருமளவு உண்மையும் கூட). மேலும் சொன்னார், “பிரிட்டிஷார் வெளியேறினால் அவர்கள் நிறுவிய நீதி, மருத்துவம், ரயில்வே, பொதுப் பணித்துறைகள் அடங்கிய முழு அமைப்பும் அழிந்துவிடும்.” அடுத்து சொன்னதுதான் முக்கியம், “இந்தியா விரைவாக பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்டக் காட்டுமிராண்டித்
தனத்துக்குச் சென்றுவிடும்.“ அவர் எச்சரித்த பேரபாயத்தை இந்துத்துவ வெறி கொண்ட பாஜக இன்றைக்கு அமலாக்கிக் கொண்டிருக்கிறது.
இந்த
இடத்தில் நுராணி நினைவூட்டிய ஓர் செய்தியை நினைவூட்டுவது சாலப் பொருத்தமே. அது என்னவெனில்; நீண்ட நேரம் அமைதியாக இருந்த நேரு, பின்னர் மெதுவாக ஒவ்வொரு சொல்லையும் உச்சரித்து தீர்க்கமாகச் சொன்னது இதுதான், ”குறித்துக் கொள்ளுங்கள் இந்தியாவின் அபாயம் கம்யூனிசமல்ல, வலதுசாரி இந்து மதவாதம்தான்” என
விஜயசங்கர் மொழிபெயர்த்த “ஆர்.எஸ்.எஸ்: இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல்” என்ற
நூலில் ஏ.ஜி.நூரானி
சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த
எச்சரிக்கைகள் எவ்வளவு பொருத்தமானவை. இந்து மகாசபை – ஆர்.எஸ்.எஸ் இரண்டும் ஒரே கருத்தியலின் வெவ்வேறு முகங்களே. ஜனசங்கம் இவற்றின் கள்ளக்குழந்தை என நேரு சொன்னது
சரியானதே. ஜனசங்கத்தின் புதிய முகமே பாரதிய ஜனதா கட்சி. எவ்வளவு பிரச்சனைகளும் முரண்பாடுகளும் முட்டி மோதினாலும் சவாலாயினும் ஜவஹர்லால் நேருவின் ஆளுமை மிக்கத் தலைமையும் நவீனத் தொலை நோக்குப் பார்வையும் காங்கிரஸின் வலிமை நீடிக்க மையமானது. வலது சாரிகள் நேரு மீது இன்றுவரை கொண்டிருக்கும் எரிச்சலின் வன்மத்தின் காரணம் புரிகிறதா?
முதலாளித்துவ
பொருளாதார வளர்ச்சி என்பது பிராந்தியங்கள், மாநிலங்கள், வட்டாரங்களிடையே பெருத்த வேறுபாடுகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் உருவாக்கிவிட்டன. இச்சூழல் கசப்பை மேலும் கடுமையாக்கியது. வடகிழக்கு மாநிலங்களில் பல்வேறு இனக்குழுக்களும் பழங்குடிகளும் தங்களின் இருத்தலுக்கும் அடையாளத்துக்கும் தொடர்ந்து போராட வேண்டியவர்கள் ஆனார்கள். தாங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் மாற்றாந்தாய் மனப்பாண்மையுடன் நடத்தப்படுவதாகவும் அவர்கள் கருதியதில் நியாயம் உண்டு. ஆக, அங்கு பல சிறிய கட்சிகளும்
போராட்ட குழுக்களும் தோன்றியது வியப்பல்ல; விளைவு. அசாம், திரிபுரா, மணிப்பூர், மேகாலயா, நாகலாந்து, மிசோரம், அருணாசல பிரதேசம் இவை எழும் ஏழு சகோதரிகள் என அழைக்கப்பட்டன. இங்கு
தொழில் வளர்ச்சி கிட்டத்தட்ட இல்லை என்பதே உண்மை. பண்பாடும் உரிய அங்கீகாரம் பெறவில்லை. இதனால் அங்கே தேசியக் கட்சிகளல்ல பிராந்திய, பழங்குடி மற்றும் இனம் சார்ந்த கட்சிகள் களத்தில் இறங்க இன்னும் அதன் சிக்கல் தீரவில்லை. இந்துத்துவாவும் கிறுத்துவ மிஷினரிகளும் இங்கு அரசியலில் தலையீடு செய்கின்றன. நாம் இத்தொடரின் நிறைவுப் பகுதியை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். அதற்கு முன் கம்யூனிஸ்ட் கட்சிகளைப் பற்றி ஒரு சிறு குறிப்பைப் பார்ப்போம்.
தொடரும்…
-சு.பொ.அகத்தியலிங்கம்
0 comments :
Post a Comment