எத்தனை எத்தனை கட்சிகள் – 2

Posted by அகத்தீ Labels:

 




 எத்தனை எத்தனை கட்சிகள் – 2

விடுதலைப்போரில் வேர்கொண்ட கட்சிகள்

1833 ஆம் ஆண்டு மெக்காலே பிரபு கொண்டுவந்த கல்விச் சீர்திருத்தமும் ஆங்கிலக் கல்வியும் மேல்தட்டு இந்தியர்களுக்கு அறிவு வாசலைத் திறந்து விட்டது. அதற்கு முன்பே மேல்தட்டில் உள்ளவர்களிடம் ஆங்கில மொழிப் பயிற்சி தொடங்கிவிட்டது. ஆங்கிலப் பயிற்சி வழி வந்து சேர்ந்த ஐரோப்பிய சிந்தனையின் வீச்சு அவர்களை உசுப்பியது. விளைவு சமூக சீர்திருத்தம், கல்வி, மனித உரிமை போன்றவற்றில் கவனம் செலுத்தத் தூண்டியது.

 

ராஜாராம் மோகன் ராயின் பிரம்ம சமாஜம் (1828), கேசவ் சந்திராவின் பிரார்த்தனா சமாஜம் (1867), லாலா லஜபதிராயின் ஆரிய சமாஜம் (1875), அன்னிபெசண்ட் பங்கேற்ற தியோசாபிக்கல் சொசைட்டி எனும் பிரம்மஞான சபை, கிறித்துவ மிஷனரிகள் எனத் தலை தூக்கின. மதத்துக்குள் சமூக சீர்திருத்தம் செய்வதாகவே இவை வெளிப்பட்டன. (தமிழ்நாடு பற்றி அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்). வீர் சவார்க்கரை தலையில் வைத்துக் கொண்டாடும் ஆர்.எஸ்.எஸ் வகையறாக்கள், இந்து மதத்தில் சீர்திருத்தம் கோரியகடவுள் நம்பிக்கை கொண்டஇவர்களைத் தங்கள் முன்னோடி எனச் சொல்வதில்லை என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்!

 

மகாராஷ்டிராவில் ஜோதிபா பூலே சத்யசோதக் சமாஜ் (Satyashodhak Samaj) ’உண்மை தேடிகள்அமைப்பு 24 செப்டம்பர் 1873-ல் உருவானது. சையது அஹமது கான் 1875-ல் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் தொடங்கினார். சீக்கிய மதத்தில் சீர்திருத்தம் கோரி 1873 வாக்கில் நிராங்கரி இயக்கம், நாம்தாரி இயக்கம் எல்லாம் உருவானது. இவை எல்லாம் அரசியல் கட்சி எனச் சொல்ல முடியாது ஆயினும் ஏதோ ஓர் வகையில் விடுதலைப் போரில் தன் பங்கைச் செலுத்தியவையே. 1826-ல் வங்கமொழி பிரச்சார சபா உருவானது; இதுவும் அரசியல் கட்சி அல்ல, ஆயினும் அரசியல் பேசியது.

 

சங்கங்களின் உருவாக்கம்

கல்கத்தாவில் (இன்றைய கொல்கத்தாவில்) 1837-இல்நில உடமையாளர்கள் சங்கம்தோன்றியது. அதனைத் தொடர்ந்து 1839-இல்பிரிட்டிஷ் இந்திய சோசைட்டியும், 1857-இல்பிரிட்டிஷ் இந்திய அசோசியேஷனும், 1875-இல்இந்தியன் லீக்கும், 1876-இல்இந்தியன் அசோசியேஷனும் தோன்றின. இவை பிரிட்டிஷாரிடம் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கொடுத்தன.

 

நவ்ரோஜி பக்ருதுன்ஜி, தாதாபாய் நெளரோஜி, கோவிந்த ராணடே ஆகியோரால்பம்பாய் (இன்றைய மும்பை) அசோசியேசன்தோற்றுவிக்கப்பட்டது. 1852-இல்பூனா டெக்கான் அசோசியேசனும், 1867-இல்பூனா அசோசியேசனும்துவக்கப்பட்டன. 1870-இல்பூனா சர்வஜனிக் சபைகோவிந்த ரானடேவால் கூட்டப்பட்டது.

 

பிரிட்டிஷ் இந்தியன் அசோசியேசன்சென்னைக் கிளை காஜுலு லட்சுமிநரசிம்ம செட்டி, ஏகாம்பர முதலியார், வி.ராமானுஜாச்சாரியார் முயற்சியால் 1852-ல் துவக்கப்பட்டது. கருத்து வேறுபாட்டால்மெட்ராஸ் நேட்டிவ் அசோசியேசன்என பெயர் மாற்றிக் கொண்டது. பெரும்பாலும் அரசு ஊழியர்களே இருந்ததால் ஸ்ரீ சுப்பிரமணிய ஐயரும், எம்.வீரராகவாச்சாரியாரும் இன்னும் சிலரும் இந்து பத்திரிகை அலுவலகத்தில் கூடிசென்னை மகாஜன சபையை உருவாக்கினர்.

 

மொத்தத்தில் ஆங்கிலக் கல்வியானது சீர்திருத்த சிந்தனையையும் விழிப்புணர்வையும் மீட்டிவிட்டன எனில் மிகை அல்ல. இன்றும் ஆங்கிலக் கல்வி எனில் ஆர்.எஸ்.எஸ் கூட்டத்துக்கு வெறுப்பாய் இருப்பது இதனால் தான்; ஆம் சனாதனப் பிடியிலிருந்து இந்துக்கள் இம்மியும் நகர்ந்துவிடக்கூடாது என்பதுதான் அவர்களின் குறி.

 

காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளின் தோற்றம்

1884-ல் சென்னை அடையாறில் பிரம்மஞான சபையில் சந்தித்த மேற்கண்ட அசோசியேசன் தலைவர்கள் 17 பேர்தேசிய மாநாட்டைகல்கத்தாவில் நடத்தத் திட்டமிட்டனர். முதல் கூட்டமும் கல்கத்தாவில் நடைபெற்றது. அடுத்து பம்பாயில் கூடி கட்சியை உருவாக்க முயற்சித்தனர். 1877-இல் டில்லியில் பிரிட்டிஷ் ராணி பங்கேற்ற தர்பாரின் போது இந்தியா முழுவதுமிருந்து வந்த பிரதிநிதிகள் சந்தித்தனர். ’இதுவே இந்திய அரசியலின் முதல் காங்கிரஸ்என்பது பூனா சர்வஜனிக் சபையின் கருத்து.

 

பம்பாயில் தாதாபாய் நெளரோஜியை முந்திக்கொண்டு 1885-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆலன் ஆக்டேவியன் ஹியூம் மாநாட்டைக் கூட்டி இந்தியதேசிய காங்கிரஸ் கட்சியைத் துவக்கிவிட்டார். ஆலன் ஆக்டேவியன் ஹியூம், வில்லியம் வெட்டர்பர்ன், டபிள்யூ.சி.பானர்ஜி, தாதாபாய் நெளரோஜி போன்றோர் உடன் இருந்தனர்.

இந்த ஆலன் ஆக்டேவியன் ஹியூம் மேற்கு வங்க மாவட்டம் ஒன்றில் துணை மாஜிஸ்ட்ரேட்டாக இருந்தவர். பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்திய முதல் சுதந்திரப்போர் எனப்படும் சிப்பாய் எழுச்சியை ஆராயப் புகுந்தார். படித்த மேல்தட்டு வர்க்கத்தினரிடையே பெருகும் அதிருப்தி எரிமலையாய் வெடிக்கும் முன் நீராவி எஞ்சினில் சேப்டி வால்வு போல் ஒரு கட்சி தேவை என டப்ரின் பிரபுக்கு அறிக்கை கொடுத்தார். அவர்கள் இருவரும் சேர்ந்து உருவாக்கிய திட்டமேகாங்கிரஸ் கட்சி.

 

விடுதலைப்போர் ஆங்காங்கு நடந்த போதிலும் வழிகாட்ட நாடு தழுவிய ஓர் அரசியல் கட்சி 1885-இல் தான் தோன்றியது. அப்போது அது கிட்டத்தட்ட சனிக்கிழமை கிளப் (Saturday Club) என்பது போல் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை லீவு நாட்களில் கூடித் தீர்மானங்களை நிறைவேற்றும் அமைப்பு போல்தான் செயல்பட்டது. தென் ஆப்பிரிக்காவிலிருந்து 1915-ல் மகாத்மா காந்தி திரும்பி வந்து தீவிர அரசியலை முன்னெடுக்கும் வரை காங்கிரஸ் வெகுஜனக் கட்சியாகப் பரிணமிக்கவில்லை எனக் கூறின் மிகை இல்லை.

 

பூரண சுதந்திரம்எனும் கோரிக்கை 1920-களின் துவக்கத்திலேயே பேசு பொருளாயினும்; 1921, 1922, 1923 ஆண்டுகளில் கம்யூனிஸ்டுகளும் தொழிலாளி வர்க்கமும் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்ட போதும்; 1929-இல் தான் காங்கிரஸ் மாநாடு ஏற்றுக்கொண்டு பூரண சுதந்திரத் தீர்மானத்தை முன்மொழிந்தது. அதுவரை டொமினியன் அந்தஸ்து, அதாவது குடியேற்ற நாட்டு அந்தஸ்தே கோரிவந்தது. 1930 ஜனவரி 26 ஆம் நாள்தான் முதல் சுதந்திர தினத்தை காங்கிரஸ் கட்சி கொண்டாடியது.

 

வலதுசாரி மற்றும் இடதுசாரி இயக்கங்கள்

பாஜகவின் முன்னோடியான இந்து மகாசபை 1920-களிலேயே தலைதூக்கியது. 1925-இல் ஆர்.எஸ்.எஸ் துவங்கப்பட்டு விட்டது. ஆக வலதுசாரி மதவாத அரசியல் இயக்கம் களத்துக்கு வந்துவிட்டது. ஜனசங்கம் என்கிற அரசியல் கட்சி 1951-இல் துவக்கப்பட்டாலும் அதன் தாய் நிறுவனம் முன்பே களத்துக்கு வந்துவிட்டது. 1977 வரை ஜனசங்கமாகச் செயல்பட்டு, பின் ஜனதா கட்சியில் இணைந்து அப்புறம் பிரிந்து 1980-இல் பாரதிய ஜனதா கட்சியாக உருமாறியது. (விபரம் இன்னொரு அத்தியாயத்தில்).

 

1917 ரஷியப் புரட்சிக்கு முன்பே சோஷலிசம், கம்யூனிசம் போன்ற கருத்துகள் இந்தியாவுக்கு வந்துவிட்டன. தேசிய தலைவர்கள் பலர் இதனால் ஈர்க்கப்பட்டனர். ஆயினும் தெளிவான இலக்கு நோக்கித் திரும்பவில்லை. 1920-இல் கம்யூனிஸ்ட் கட்சி உதயமானது. பிறந்த உடனேயே தாஷ்கண்ட் சதி வழக்குகள் ஒன்றல்ல இரண்டல்ல ஐந்து வழக்குகள் (1922-27), கான்பூர் சதி வழக்கு (1924), மீரட் சதிவழக்கு (1929) என வரிசையாக சதி வழக்குகளை கம்யூனிஸ்ட் கட்சி சந்தித்தது. தொடர்ந்து பகிரங்கமாகச் செயல்பட முடியாத சூழலில் காங்கிரஸ் கட்சிக்குள் சோஷலிஸ்ட் கட்சி ஓர் குழுவாகவும், அந்த சோஷலிஸ்ட் கட்சிக்குள் கம்யூனிஸ்டுகள் ஓர் குழுவாகவும் செயல்பட்டனர்.

 

காங்கிரஸ் கட்சியின் தோற்றமே பல்வேறு பிரிவினர்கள் சங்கமமாகவே அமைந்ததைப் பார்த்தோம். வலதுசாரி, இடதுசாரி, மதவாதி, சோஷலிஸ்ட், தாராள முதலாளித்துவ சிந்தனையாளர் (லிபரல் கேப்டலிஸ்ட்), மாநில, வட்டார, சாதிய வாதிகள் எனப் பல தரப்பாளரும் இருந்தனர். இந்திய விடுதலை பொது செயல்பாட்டுக் களமானது. ஆனால் அந்த வேறுபாடுகள் சுதந்திரத்திற்குப் பின்னர் காங்கிரசிலிருந்து பிரிந்து பல கட்சிகள் உதயமாக வழிவகுத்தன.

 

1905 வங்கப் பிரிவினையைத் தொடர்ந்து அகில இந்திய முஸ்லீம் லீக் உருவானது. இந்தியாபாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தனியானது. முஸ்லீம்களிடையேயும் வேறு சில கட்சிகளும் செயல்படத் துவங்கின; அம்மதத்துக்குள் நிலவிய சில பிரிவுகளின் எதிரொலி அது.

 

விடுதலைக்கு முன்பே தலித் விழிப்புணர்வும் அது சார்ந்த இயக்கங்களும் தோன்றிவிட்டன. 1944-ல் என்.சிவராஜ், பி.ஆர்.அம்பேத்கர் முயற்சியால் கூட்டப்பட்டபட்டியலின மக்களுக்கான கூட்டமைப்புதான் தலித் நலனை முன்னிறுத்தும் அரசியல் குறித்து அகில இந்திய அளவில் முதன் முதல் சிந்தித்தது. அதற்கு முன்பே தமிழ்நாட்டில் 1892-லேயே இக்கருத்து வேர்விட்டது. அது தனி. இந்த கூட்டமைப்பு இரண்டு வருடங்கள் முன்புதான் 1942 ஜூலையில் நாக்பூரில் துவக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 1956-இல்தான் அம்பேத்கர் குடியரசு கட்சியைத் துவக்கினார். பஞ்சாப், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, .பி எங்கும் சுதந்திரத்துக்கு முன்பே பல்வேறு தலித் அமைப்புகள் வேர்விட்டுவிட்டன.

 

1927-இல் உழைப்பாளர் உழவர் கட்சி (The Workers and Peasants Party) உருவானது. இது காங்கிரஸ் கட்சிக்குள் முற்போக்கு சிந்தனையை விதைக்க கடும் முயற்சி செய்தது. தனித்தும் செயல்பட்டது. இடதுசாரிகளோடு பலநேரம் இணைந்தும் செயல்பட்டது.

 

1939 நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்இந்தியன் தேசிய காங்கிரஸின் பார்வேர்ட் பிளாக் (The Forward Bloc of the Indian National Congress) எனத் தனியாகச் செயல்படத் துவங்கினார். அவர் மறைவுக்குப் பிறகு 1956-ல் பார்வேர்ட் பிளாக் என்ற பெயரில் தனிக் கட்சியாகத் தேர்தலில் போட்டியிட்டது; இன்றும் தொடர்கிறது. ஜெயபிரகாஷ் நாராயணன், ராம் மனோகர் லோகியா, அச்சுத பட்வர்த்தன் முயற்சியால் 1934-இல் சோஷலிஸ்ட் கட்சி பிறப்பெடுத்தது. விடுதலைக்கு பிறகும் பீகார், உத்திரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் பிற்படுத்தப்பட்ட மக்களின் வலுவான குரலாக ஏதாவது ஒரு பெயரில் வெளிப்பட்டுக்கொண்டே இருந்தது. இன்றும் இருக்கிறது. பின்னர் விரிவாகப் பார்ப்போம்.

 

விடுதலைப் போரில் பல்வேறு தீவிரவாதக் குழுக்கள் செயல்பட்டன. அவற்றுள் சில மத பிற்போக்குச் சிந்தனையைத் தூக்கிப் பிடித்தன. ஆனால் 1926-இல் உருவான பகத் சிங்கின் நவஜவான் பாரத் சபா என்பது ஹிந்துஸ்தான் குடியரசு சங்கம் (Hindustan Republican Association), ஹிந்துஸ்தான் சோஷலிஸ்ட் குடியரசு சங்கம் (Hindustan Socialist Republican Association – HSRA) ஆகியவற்றின் முகமாக இருந்தது. பெயரே அதன் முற்போக்கு முகத்தைப் பறைசாற்றும். மார்க்சிய லெனினிய சிந்தனையின் முன்னத்தி அமைப்பானது. இது ஏராளமான இளைஞர்களை இவ்வழியில் ஈர்த்தது.

 

இங்கே நிறைய தகவல்களை அள்ளிக் கொட்டி இருப்பது வெறும் தகவல் அறிவுக்காக அல்ல. விடுதலைப் போரிலேயே பல்வேறு கட்சிகளுக்கான தேவையும் தோற்றமும் இருந்தன என்பதைப் புரியவைக்கவே. இவற்றிலிருந்து உருவான பல்வேறு குழுக்கள், கட்சிகள், பிளவுகளை அதன் பின்னணியை பின்னர் பார்ப்போம். அதற்குள் தமிழ்நாட்டு விவரங்களில் ஒரு பருந்துப் பார்வை செலுத்தி வருவோம்.

 

தொடரும்

 

-சு.பொ.அகத்தியலிங்கம்

 

 


0 comments :

Post a Comment