எத்தனை எத்தனை கட்சிகள் – 3
தமிழ்நாடு தனித்துவத்தோடு போட்ட தடங்கள்
தமிழ்நாட்டில்
பிரிட்டிஷ் ஆட்சியில் வைகுண்ட சாமிகள் (1809-1851), வள்ளலார் ராமலிங்க அடிகளார் (1823-1874), அயோத்திதாசப் பண்டிதர் (1845-1914), ரெட்டைமலை சீனிவாசன் (1860-1945), டி.ஜான் ரத்தினம்
(1846-1914), டி.பி.பாண்டியன் (1861) இப்படி பல
சீர்திருத்த முன்னோடிகள் களத்துக்கு வந்தனர். காங்கிரஸில் தீவிரமாகச் செயல்பட்டு வந்த பெரியார் பின்னர் சமூக சீர்திருத்த போருக்கு தலைமை ஏற்று வலுவாகத் தொடர்ந்தார். தமிழகத்தில் கட்சிகளின் தொடக்கத்தை இதனூடேதான் பார்க்க வேண்டும்.
“சுமார்
ஆயிரம் வருடங்களுக்கு முன் இருந்த இத்தேசத்து கல்வியில்லாத அரசர்களை, பிராமணர்கள் அடுத்து தாங்கள் மட்டும் எப்போதும் பெருமையாய் இருக்கும் பொருட்டு கல்வியைத் தங்களுக்கு உபயோகஞ் செய்து கொண்டும், அதற்கு வேண்டிய பூஸ்துதி, மான்யங்களைப் பெற்றுக் கொண்டும், மற்றவர்கள் கல்வியறிவு இல்லாமல் எப்போதும் தங்களுக்குத் தாழ்ந்த ஸ்திதியில் இருக்கவும் மோசவெண்ணங் கொண்டு, கல்வி உபயோகப்பட்டுக் கடவுள் அறிய செய்யத்தக்க, கனமாகிய பொருளை ஒவ்வொரு கல் முதலானவைகளுக்கும் பிரயோசனப்படும்படி செய்து விட்டார்கள்”
இதைப்
பேசியது பெரியாரோ அண்ணாவோ அல்ல. அவர்களுக்கெல்லாம் முன்னால் சைவ சித்தாந்த ஏடான ’தத்துவ போதனி’யில் 1862-ஆம் ஆண்டு எழுதப்பட்ட வியாசமே (அந்தக் காலத்தில் கட்டுரைகளை வியாசம் என்பார்கள்) இது.
திராவிட
இயக்கத்தின் வேர்கள்
1847-ஆம்
ஆண்டு துவக்கப்பட்ட ஒரு ஏட்டுக்கு ’திராவிட தீபிகை’ என்று பெயர். ‘திராவிட பாண்டியன்’
(1885) போன்று திராவிட என்ற பெயர் தாங்கி அன்றைய காலகட்டத்தில் டஜனுக்கும் மேற்பட்டப் பத்திரிகைகள் வந்துள்ளன. ஆக, நீதிக்கட்சி பிறப்பதற்கு முன்பே ‘திராவிடக் கருத்தியல்’ இந்த
மண்ணில் வேர் கொள்ளத் துவங்கிவிட்டது.
தமிழர்
தத்துவ மரபை எடுத்துக் கொண்டாலும் வேத மறுப்பு என்பது அதன் ஆணிவேராக இருப்பதைக் காணலாம். ‘சதுர் வர்ணம் மயா சிருஷ்டம்’
அதாவது நான்கு வர்ணங்களையும் நானே படைத்தேன் என்று சொல்லுகிற பகவத் கீதையின் உபதேசத்தை ஏற்க மறுத்து ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்கிற
சமத்துவ சிந்தனைத் தமிழ் மரபில் இரண்டாயிரம் ஆண்டுகளாய் நன்கு வேர் விட்டுத் தழைத்துள்ளது. “சாத்திரங்கள் ஓதுகிற சட்டநாதப் பட்டரே / வேர்த்திரைப்பு வந்தபோது வேதம் வந்து உதவுமா” என சித்தர்கள் சீறிய
பாரம்பரியமும் உண்டு. அதனுடைய தொடர்ச்சியாகத்தான் பார்ப்பன எதிர்ப்பு என்பது பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ஒரு இயக்க வடிவம் பெறலாயிற்று. அதற்கான சமூகத் தேவையும் சமூகச் சூழலும் அன்றைக்கு இருந்தது என்பதுதான் உண்மை.
இந்திய
தேசிய காங்கிரஸை உருவாக்க முன்முயற்சி மேற்கொண்டதில் சென்னைக்கு ஒரு முக்கிய பங்குண்டு. 1884-இல் இங்குள்ள பிரம்மஞான சபையில் 17 அமைப்புகள் கூடிப் பேசிய போதுதான் விதை தூவப்பட்டது. 1884-ல் துவக்கப்பட்ட ’சென்னை
மகாஜன சபையும்’ சேர்ந்துதான் காங்கிரஸ். ஆகவே துவக்கம் முதலே தமிழ்நாடு காங்கிரஸ் பேரியக்கத்திலும் பங்கேற்றது. மூன்றாவது மாநாடு சென்னையில் 1887 டிசம்பர் 27-ல் நடைபெற்றது. அப்போது
தமிழில் பிரசுரம் வெளியிடப்பட்டதும், முந்தைய மாநாடுகளில் இருந்து மாறுபட்டு ஆங்கிலத்தில் மட்டுமே பேசாமல் (காங்கிரஸ் உருவாகும் போது ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும் என்கிற விதி ஆலன் ஆக்டேவியன் ஹியூமால் சேர்க்கப்பட்டது) தமிழிலும் பேசியது வரலாறு. அதனால் பிரிட்டிஷ் அரசு வெகுண்டு தாய்மொழியில் பிரச்சாரம் செய்வதை தடை செய்தது. அடுத்த மாநாட்டில்தான் லாலா லஜபதிராய் இந்தியில் பேசினார். ஆக தாய்மொழியைக் களத்தில்
கொண்டுவந்தது தமிழ்நாடே.
பார்ப்பனியத்திற்கு
எதிரான சிந்தனையிலும் செயல்பாட்டிலும் – அயோத்திதாசரோடு இடையறாது ஊடாடுபவராகயிருந்த ஜான் ரத்தினம், 1885-ஆம் ஆண்டு அயோத்திதாசரின் “திராவிட பாண்டியன்’
ஏட்டிற்கு ஆசிரியராகப் பொறுப்பேற்றார். இவ்வேடு “திராவிடர்’
என்ற சொல்லாடலை சமூக – அரசியல் தளத்தில் முன்வைத்து “பார்ப்பனரல்லாதார்’ என்ற
அணிசேர்க்கையை உருவாக்கியது. மேலும், “திராவிடம்’
என்ற சொல்லாடலில் மொழிக்குடும்பம், நிலப்பகுதி ஆகியவற்றுக்கு அப்பாலும் சமூக – அரசியல் தளத்தை நீட்டியது.
1891-ஆம்
ஆண்டு அயோத்தி தாசப் பண்டிதர் ’திராவிட மகாஜன சபை’ என்கிற அமைப்பை உருவாக்குகிறார். அவர் ஆரியர் எதிர்ப்பு, வேத எதிர்ப்பு இவற்றில் காலூன்றி தமிழரின் தத்துவ சித்தாந்த மரபை மீட்டு எடுக்கவும் மேன்மைப்படுத்தவும் தொடர்ந்து முயற்சிக்கிறார். அவர் ஆதி பௌத்தம் என்கிற புத்த மத மரபை முன்னிறுத்தி
மிகப்பெரிய கருத்துப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தினார். இன்று படித்தாலும் அவரது சிந்தனைகள் புத்தெழுச்சி தருபவையாகவே உள்ளன. அவர் நடத்திய ‘ஒரு பைசாத் தமிழன்’ எனும் ஏடு முக்கிய வரலாற்றுத்தடம்.
பிரிட்டிஷ்
ஆட்சியில் படித்த இந்தியர்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்று சுரேந்திரநாத் பானர்ஜி, தாதாபாய் நெளரோஜி போன்றோர் கோரிக்கை வைத்துப் பெற்றனர். இதன் மூலம் இந்தியாவில் படித்த இளைஞர்களுக்கு பிரிட்டிஷ் ஆட்சியில் உத்யோகங்கள் கிடைக்க வழி ஏற்பட்டது. இந்திய சமூகத்தில் சூத்திரர்களுக்கும் பஞ்சமர்களுக்கும் கல்வி மறுக்கப்பட்டிருந்தது. மேல் ஜாதியினர் மட்டுமே படித்து வந்தனர். அதிலும் பார்ப்பனர்கள் ஆங்கிலக் கல்வியில் முன் நின்றதால் அரசு உத்யோகங்களை அவர்கள் எளிதாகப் பறித்துக் கொண்டனர்.
19-ஆம்
நூற்றாண்டின் இறுதியில் செங்கல்பட்டில் வெங்கம் என்ற இடத்தில் ’சென்னை-செங்கல்பட்டு பிராமணர்கள் மாநாடு’ ஒன்றைக் கூட்டி அரசு உத்யோகங்களைப் பெறத் திட்டம் தீட்டிச் செயல்பட்டனர் என்பது ஒரு வரலாற்றுச் செய்தி. முதல் முதல் சாதிரீதியாக மாநாடு கூட்டி தன் சாதியினர் மட்டுமே முன்னேற வழிகண்டது இந்த நிகழ்வில்தான். இந்தப் பின்னணியில் கல்வி, வேலை வாய்ப்பில் தங்களுக்கு உரிய இடம் கிடைக்கவில்லை என்கிற மனக்குறை பார்ப்பனர் அல்லாத மேல்ஜாதிக்காரர்களிடம் மேலோங்கியது. அவர்கள் தங்களுக்கு உரிய பங்கைப் பெற ஒரு அமைப்பை உருவாக்க உந்தித் தள்ளியது.
1892-ஆம்
ஆண்டு இரட்டைமலை சீனிவாசன் ‘பறையர் மகாஜன சபை’யைத் தொடங்கினார். பின்னர் அது ‘ஆதி திராவிட மகாஜன சபை’ எனப் பெயர் மாற்றப்பட்டது. இந்த ஆதிதிராவிடர் மகாஜனசபைதான் ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் வாழ்வுரிமைக்காகத் தொடங்கப்பட்ட முதல் அரசியல் அமைப்பு எனில் மிகையாகாது.
நீதிக்கட்சியின்
உதயம்
1912-ஆம்
ஆண்டு உருவாக்கப்பட்ட ’தி மெட்ராஸ் யுனைடெட்
லீக்’ அமைப்புதான்
பார்ப்பனர் அல்லாதோருக்கான முதல் முன்னெடுப்பு. பின்னாளில் டெபுடி கலெக்டராக விளங்கிய சரவணப்பிள்ளை, ஜி.வீராசாமி நாயுடு,
பொறியியல் துறை சார்ந்த துரைசாமி முதலியார், நாராயணசாமி நாயுடு போன்றோர் இதன் முன்னணியில் நின்றனர். டாக்டர் சி.நடேசன் இதன்
செயலாளராகப் பணியாற்றினார். அந்தப் பெயர் பொருத்தம் இல்லை என அதன் உறுப்பினர்கள்
கருதியதால் ’பார்ப்பனர் அல்லாதார் சங்கம்’ என்ற பெயர் பரிந்துரைக்கப்பட்டது. அது எதிர்மறையாக இருப்பதால் சிலருக்குப் பிடிக்கவில்லை. எல்லோருக்கும் பிடித்த பெயராக ’சென்னை திராவிடர் சங்கம்’
1912 நவம்பர் 10-ஆம் நாள் துவங்கப்பட்டது. எப்படியோ திராவிட இயக்கம் ஒரு அமைப்பாக முளைவிட்டு விட்டது. இதன் தொடர்ச்சியாக 1916-ஆம் ஆண்டு நவம்பர் 20-ஆம் நாள் வேப்பேரி எத்திராஜூ இல்லத்தில் பலர் கூடி ’தென்னிந்திய நல உரிமை சங்கம்’ என்ற
அமைப்பை உருவாக்கினர். இவர்கள் நடத்திய ஆங்கில பத்திரிகையின் பெயர் ’ஜஸ்டிஸ்’.
அந்த பத்திரிகையின் பெயரால் ‘ஜஸ்டிஸ் பார்ட்டி’
என மக்களால் அழைக்கப்பட்டது. இதுவே நீதிக்கட்சி ஆகும்.
இந்த
கட்சியின் சார்பில் சர்.பி.டி. தியாகராய
செட்டியார் சொற்பொழிவு ஆற்றியது பற்றி திருவிக, தன் வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிட்டுள்ள செய்தி வருமாறு: “1916-ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் ஓய்வில் சென்னை ஹாமில்டன் வாராவதி அருகே இராஜூ கிராமணியார் தோட்டத்தில் யாழ்ப்பாணம் முதலியார் சபாரத்தினம் தலைமையில் சைவ சித்தாந்த மகாசமாஜத்தின் சார்பில் சைவர் மகாநாடு கூடியது. மகாநாடு மூன்று நாள்கள் நடைபெற்றது. மூன்றாம் நாள் பகல் ஓர் அறிக்கை வழங்கப்பட்டது. அதில் அம் மாநாட்டுக் கொட்டகையிலேயே அன்று மாலை பிராமணர் அல்லாதார் முன்னேற்றம் பற்றி பி. தியாகராயச் செட்டியார் பேசுவார் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அவ்விதமே தியாகராயச் செட்டியார் பேசினார். அவர் பிராமணர் செல்வாக்கைப் பற்றியும், அதனால் பிராமணர் அல்லாதார் நசுக்குண்டு நாசமடைவதைப் பற்றியும் பேசி, காங்கிரசை நம்ப வேண்டாம், அவற்றினால் பிராமணரல்லாதார் மயங்குறல் வேண்டாம் என்று வற்புறுத்தினார்.
இப்படி
உருவான நீதிக்கட்சிக்கு 1944-ஆம் ஆண்டு சேலம் மாநாட்டில்தான் ’திராவிடர் கழகம்’ என்று பெயர் சூட்டப்பட்டது. அந்த மாநாட்டின்போதே திராவிடர் கழகம் என்று பெயர் சூட்டக்கூடாது, ‘தமிழர் கழகம்’ எனப் பெயர் வைக்க வேண்டும் என கி.ஆ.பெ. விசுவநாதமும் அவரது கூட்டாளிகளும் குரல் எழுப்பினர்.
திராவிடர்
இயக்கத்தின் தோற்றத்தை 1891-ஆம் ஆண்டு அயோத்திதாசர் உருவாக்கிய திராவிட மகாஜன சபையில் துவங்குவதா? 1912-ஆம் ஆண்டு உருவான சென்னை திராவிடர் சங்கத்தில் துவங்குவதா? 1916-ல் உருவான தென்னிந்திய
நல சங்கத்தில் துவங்குவதா? எல்லாவற்றிற்கும் முன் ஜான் ரத்தினம் ஊட்டியில் ஒரு மாநாடு கூட்டி உருவாக்கிய திராவிடர் கழகத்தைத் துவக்கமாகச் சொல்வதா? தென் இந்திய நலவுரிமை சங்கம் 1944-ல் திராவிடர் கழகமாகப்
பெயர் மாற்றம் பெற்றதில் துவங்குவதா? அறிஞர்கள் விவாதித்து முடிவெடுக்கட்டும்.
’நீதிக்கட்சி’ சமூக
இயக்கமாகத் தோன்றினாலும் விரைவிலேயேத் தேர்தலில் பங்கேற்கிற இயக்கமாகிவிட்டது. நீதிக்கட்சியில் பங்கேற்ற பலர் ஜமீன்தார்கள், மன்னர்கள், சர் ராவ் பகதூர் பட்டம் பெற்றவர்கள் என்பது கசப்பான உண்மை. அண்ணாவே ஜரிகைக் குல்லாக்காரர்கள், அரண்மனைவாசிகள் என இவர்களைக் கேலி
பேசியதுண்டு. ஆயினும், காங்கிரஸ் கட்சி தேர்தலில் பங்கேற்காத சூழலில் – நிலவரி கட்டுகிறவர்கள் மட்டுமே வாக்களிக்க உரிமை உள்ளவர்கள் என்ற பின்னணியில் நீதிக்கட்சி வெற்றி பெற்று 16 ஆண்டுகள் ஆட்சியில் இருந்திருக்கிறது. அப்போதுதான் கம்யூனல் ஜி.ஓ. எனப்படுகிற
இடஒதுக்கீடு முறைக்கு முதல் வித்து போடப்பட்டது.
சமூக
நீதி என்ற வகையில் இடஒதுக்கீட்டைப் பிற்படுத்தப்பட்ட சமூகம் இன்று அனுபவிக்கிறது எனில் அதன் தொடக்கம் இந்த ஜி.ஓ.தான்.
மேலும் கோயில் சொத்துகளைப் பாதுகாக்க சட்டம் இயற்றியதும் தேவதாசி முறையை ஒழித்ததும் இதுபோன்ற பல சமூக சீர்திருத்த
செயல்களுக்கு நீதிக்கட்சி ஆட்சியில் முன்னுரிமை வழங்கப்பட்டது அடிக்கோடிட்டு காட்டத்தக்கன. பின்னால் சமூக நீதி மற்றும் சமூக சீர்திருத்த முயற்சிகள், போராட்டங்கள், வெற்றிகள் அனைத்திலும் நீதிக்கட்சியின் ஆரம்பகாலப் பங்கை மறுக்கவே முடியாது.
பெரியாரைப்
பொறுத்தவரை காங்கிரசில் தன் பயணத்தைத் துவக்கியவர். பார்ப்பன எதிர்ப்பு, வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் என பல அம்சங்களில்
காங்கிரசோடு முரண்பட்டு 1925-இல் ’சுயமரியாதை இயக்கம்’ கண்டார். சிங்கார வேலர், ஜீவானந்தம் போன்றோர் அவரோடு இருந்தனர். சுயமரியாதை இயக்கம் தமிழகத்தில் ஒரு மிகப் பெரிய சமூக சீர்திருத்த கருத்தியல் எழுச்சிக்கு வித்திட்டது எனில் மிகையல்ல. பெரியார் காங்கிரசை எதிர்ப்பதற்கும் பார்ப்பனர் அல்லாதார் நலன் காப்பதற்கும் நீதிக்கட்சியை பயன்படுத்த முனைந்தார். அவர்களோடு நெருங்கினார்.
இந்த
இடத்தில்தான் க.திருநாவுக்கரசு ஒரு
கருத்தை ‘நீதிக்கட்சி வரலாறு’ எனும் தன் நூலில் சொல்லுகிறார். திராவிட இயக்கத்தின் பிரம்மாண்டத்தையும் பிரம்மிப்பையும் தெரிந்து பெருமிதம் கொள்கின்றோம் என்றவர் ஓரிடத்தில் கூறுகிறார், ‘பிட்டி தியாகராயர் காலந்தொட்டு நீதிக்கட்சிக்குள் நிலவிய குழுவாதப் போக்குகளை பெரியார் விமர்சித்துள்ளார். பெரியார் ரசவாதம் செய்யவில்லையெனில் 1926-லேயே நீதிக்கட்சி முடிந்து போயிருக்கும்.’ திருநாவுக்கரசின் இந்த நிர்ணயிப்பை ஏற்று அந்நூலின் முன்னுரையில் கி.வீரமணி வழிமொழிந்திருப்பது
கவனத்துக்குரியது.
இது
பெரிதும் உண்மை. நீதிக்கட்சியின் பக்கம் வந்த பெரியார் இச்சூழலில் இருந்து அதனைக் காக்க நினைத்தார். நாடாளுமன்ற அரசியலுக்குள் போவதால்தான் சமூக சீர்திருத்தக் கொள்கைகளில் சமரசம் செய்து கொள்ள நேருகிறது. எனவே, நமக்கு நாடாளுமன்ற அரசியல் வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து திராவிடர் கழகத்தை சமூக சீர்திருத்த இயக்கமாகவே நடத்தலானார். அதே சமயம், குலக்கல்விக்கு எதிரான போராட்டம், இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம், இட ஒதுக்கீட்டுக்கான போராட்டம் என
பலவற்றை நடத்தினார்.
ஆனால்,
ஆட்சியைப் பிடிக்கும் ஆசை கொண்டவர்கள் மெல்ல மெல்ல மாற்று வழி தேடினார்கள். அதன் பரிணாம வளர்ச்சிதான் திமுக (1949 செப்டம்பர் 17) என்ற கட்சி உதயமானது. அண்ணா வார்த்தைகளில் சொல்வதானால் அறைக்குள்ளிருந்த நீதிக்கட்சியை பெரியார் ஆலமரத்தடிக்குக் கொண்டு வந்தார். ஆனால் அதைவிடப் பெரிய வெட்ட வெளிக்கு அதைத் தொடர்ந்து கோட்டைக்கு நான் (அண்ணா) கொண்டு வந்திருக்கிறேன். பெரியாரோ ஆலமரத்தடியே போதுமென்று அங்கேயே நின்றுவிட்டார்.
காங்கிரஸ்,
பார்வேர்ட் பிளாக், சோஷலிஸ்ட் கட்சி, முஸ்லீம் லீக், இந்து மகாசபா, ஆர்.எஸ்.எஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்டு பல கட்சிகளுக்கு துவக்க
காலத்திலேயே தமிழ்நாட்டிலும் கிளை உருவாகிவிட்டது. வடக்கே உருவான எந்தக் கட்சிக்கும் தெற்கே கிளை ஒன்றேனும் இருக்கும். தமிழ்நாட்டில் நிச்சயம் ஒரு கிளை உடனே பிறந்துவிடும். ஆனால் தமிழ்நாட்டில் வேர்பிடித்த எந்தக் கட்சிக்கும் வடக்கே கிளை காண்பது அரிது. இதன் அரசியலும் பேசப்பட வேண்டும். இனி இந்தியா முழுவதிலும் தமிழ்நாட்டிலும் கட்சிகள் உடைந்தது, இணைந்தது, புதிதாய் பிறந்தது, பிறந்து கொண்டிருப்பது இவற்றின் விபரங்களையும் கொஞ்சம் புரட்டத்தான் வேண்டும்.
தொடரும்…
-சு.பொ.அகத்தியலிங்கம்

0 comments :
Post a Comment