அன்றாடம்
ஆறுகால பூஜை !
பூஜைக்கு
ஒரு அலங்காரம்
விதவிதமாய்
நெய்வேத்தியம்
திருக்கல்யாணம்
திருவிழா
பல்லக்கு
பவனி தேரோட்டம்
ஸ்தல புராணப் பெருமை
மூலவர் உற்சவ
மூர்த்தி
அள்ளக் குறையாத
உண்டியல்
மனங்குளிர பக்தி பரவசம் !
கண்முன் நடக்கும்
அநீதிகளைக்
கண்டும் காணாத
கடவுளருக்குத்தான்.
ஒரு வேளை
பூஜைக்கு
கதியற்ற கடவுள்கள்
அழுது வடியும்
விளக்குகள்
பக்தர்கள்
சஞ்சாரமற்ற
பகவான் சன்னதிகள்
நாளும் கிழமைக்கும்
உபயதாரருக்கு
காத்திருப்பு
நைந்த கந்தலோடு
வியர்வையில்
நாறும்
வழிபோக்கு
பக்தரின்
விழிநீர்
தரிசனம்
அடர்வனத்தில்
மயாணக்கரையில்
ஊருக்கு ஒதுக்குப் புறத்தில்
திறந்த வெளியில்
மழையில் வெயிலில்
கிடந்துழலும்
எம் குலசாமிக்கு எப்போதேனும்
கொடை நேர்த்திக்கடன்
கிடாவெட்டு
எம் வேண்டுதலை
சாபத்தை வசையை
கேட்டு சாமியாடிவழி
ஆறுதல் சொல்லும்
பிள்ளையார்
வெங்கடஜலபதி படம் போட்ட
கல்யாணப் பத்திரிகையை ஆசிர்வதிக்கும் மனசு
கூடவே இருப்பதாய்
ஒரு தெம்பு
உரிமையோடு
கனவில் பேசும் குலசாமி!
எல்லா சாமியும்
வெறும் கல்தான் – ஆனாலும்
வர்க்க வேற்றுமையும்
வர்ண பாகுபாடும்
துலக்கமாய்
துருத்தி நிற்கும் !
மந்திரம்
சொல்லும் ஐயருக்கு தெரியும்
நம் சாமி
அவர்களுக்கானதல்ல – ஆகவேதான்
”உங்க குலதெய்வத்த
கும்பிட்டுக்கோங்க !”
பழிக்கு நான்
பொறுப்பல்ல நீங்கதான்
என தள்ளிவிடும்
நரித்தந்திரம்
அர்த்தம்
புரியாமலும் பகட்டுக்காகவும்
வறட்டுச்
சடங்குகளில் பாழாகும்
பணமும் பொழுதும்
பகுத்தறிவும்….
சுபொஅ.
08/10/24.
0 comments :
Post a Comment