இன்றைய முதியவரின் சிக்கல் :

Posted by அகத்தீ Labels:

 



இன்றைய முதியவரின் சிக்கல் :

 

நேற்றின் முதியவர் யாரேனும் உறவினர் /நண்பர் வீட்டுக்கு செல்ல நேரிட்டாலோ அல்லது அவர்கள் தம் வீட்டுக்கு வந்தாலோ அவர்களிடம் கேட்க நிறைய கேள்விகள் இருந்தன …

 

செளக்கியமா ? சுகர் பிரஸர் இல்லையே !

ஊரில் மழை எல்லாம் எப்படி ? விவசாயம் எப்படி இருக்கு ?

கோவில் கொடை முடிஞ்சிடிச்சா ?

பணி ஓய்வுக்கு பிறகு பொழுது எப்படிப் போகுது ?

பென்சன் ஒழுங்கா வருதா ?

பொண்ணுக்கு /பையனுக்கு கல்யாணம் ஆயிடிச்சா ?

பேரன் பேத்திகள் எத்தனை ?

பையன் என்ன படிக்கிறான் / எங்கு வேலை செய்யுறான் ?

உங்க மச்சான் வீட்டில / தங்கை வீட்ல / தம்பி வீட்ல எல்லோரும் சவுக்கியமா ?

நம்ம பாட்சா / பார்த்திபன் எப்படி இருக்கான் ?

 

இப்படி கேள்விகள் வந்து கொண்டே இருக்கும் .

 

அத்துடன்….

 

நல்லா உடம்ப பார்த்துக்கோ / நல்லா படி /சீக்கிரம் குழந்தை பெற்றுக்க / வேலை தேடிக்கோ / சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ இப்படி ஒவ்வொருவரிடமும் சொல்ல நிறைய உபதேசங்களும் கைவசம் இருந்தன.

 

இன்றைய முதியவருக்கோ …

 

இப்போது காலம் மாறிவிட்டது … சந்திப்புகள் அருகிவிட்டன . எப்போதாவது சந்தித்தால்கூட நலம் என்பதுக்கு மேல் விசாரிக்க எதுவும் இல்லை . சந்தித்ததில் மகிழ்ச்சி எனச் சொல்வதைத் தவிர வேறு வார்த்தைகளில்லை .  டிவி மெகா தொடரில் /அலைபேசி அழைப்பில் மூழ்கிவிடவே நேரம் போதவில்லை …

 

அதுமட்டுமல்ல ஒருவர் திருமணம் செய்து கொள்ள வேண்டுமா வேண்டாமா / பிள்ளை பெற்றுக் கொள்ளலாமா கூடாதா  / படிக்கணுமா வேண்டாமா / வேலை கிடைத்ததா இல்லையா  / என்ன மாத்திரை சாப்பிடுகிறார் / என்னவெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்….

 

இப்படி எதை எதையோ துருவி துருவி கேட்க நீ யார் ? அவரவர் விருப்பம் / அவரவர் தேர்வு . அதை நீ ஏன் நோண்ட வேண்டும் ? அதனால் உனக்கு என்ன பயன் ? அவர்கள் சொந்த விவகாரத்தை நோண்டி நுங்கெடுக்க உமக்கென்ன அதிகாரம் ? இப்படி ஆயிரம் கேள்விகள் எழுகின்றன .

 

குசலம் விசாரிக்கவும் உரையாடவும் பழைய செக்கு மாட்டு தடத்தை விடவும் முடியாமல் , புதியன எவையென தெளிவும் கிடைக்காமல்  இன்றைய முதியோர் படும் துயர் அதிகம் .

 

இன்ப துன்பங்களில் ஒருவருக்கு ஒருவர் பங்கேற்பது என்பது வெறும் சடங்காக மாறிக்கொண்டிருக்கிறதோ ?

 

வந்தோம் பார்த்தோம் போனோம் என்பதுதான் சந்திப்பு என்றாகிப் போகிறதோ ?

 

அலைபேசியில் மணிக்கணக்காய் உரையாடிக் கொண்டே இருக்கிறார்களே ! அப்படி என்னதான் பேசுவார்கள் ?

 

உரையாடல்களிலும் உறவாடல்களிலும் புதிய தடம் உருவாகிக் கொண்டு இருக்கிறதோ ? முதியோர் அதில் அன்னியப்பட்டு நிற்கிறார்களோ ?

 

[ அண்மையில் முதியோர் சிலரோடு உரையாடிய போது அவர்கள் வெளிப்படுத்திய கவலைகள் என் வழி பதிவாகி இருக்கிறது .அவ்வளவுதான்..]

 

 

சுபொஅ.

25/07/2024


0 comments :

Post a Comment