போராட்டக்காரனின் சுயகதை மட்டுமல்ல ..
“ இணுங்கு” என்கிற தலைப்பைப் பார்த்ததும் இது ஓர்
நாவல் என்றுதான் நினைப்பார்கள் . முதல் மூன்று அத்தியாயங்களை படிக்கும் போதும் ,கடைசி
அத்தியாயத்தைப் படிக்கும் போதும் ; அதே எண்ணம்தான் மேலிடும் . ஆயின் இது சுயசரிதை என்பதுதான்
ஆச்சரியமளிக்கும்.
மலைகளின்
மீது காதல் கொண்ட ஒருவரின் எழுத்தாய் நூல் தொடங்கி வற்றா அந்தக் காதலோடு இந்நூல் நிறைவு
பெறுகிறது .
தோழர் போஸ்பாண்டியன்
பூர்வீகம் ராமநாதபுரம்தான் எனினும் இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் தலையார் தேயிலைத்
தோட்டம் . தேவிகுளம் ,பீர்மேடு ,மூணாறு ,இடுக்கி என இவரின் கால் நடந்து கடந்த மேற்குத்
தொடர்ச்சி மலையின் இயற்கை எழில் இவர் நெஞ்சோடு கலந்த நூலில் அருவியாய் வழிந்தோடுகிறது
.பூகோள விவரிப்பு அம்மண்ணின் மைந்தர் என பறை சாற்றுகிறது . “ஓய்வறியா பயணக் காதலன்” என்பதை இந்நூலை வாசிக்கும்
ஒவ்வொருவரும் ஒப்புக்கொள்வர் .
இவரின் தந்தை
தீவிர காங்கிரஸ்காரர். அக்னிதத் என்கிற பட்டப் பெயரிலே அறியப்பட்டவர் . முற்போக்கான
வீட்டுச் சூழல் .தந்தை ஊரார் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் சாதிமறுப்புத் திருமணம்
செய்து கொண்டவர் . தாய் தாயம்மாள் தந்தை சீனிச்சாமி
என்ற அக்னிதத்தும் ஆசிரியப் பணியில் இருந்தனர்.வீட்டு சூழலே சுதந்திர சிந்தனைக்கும்
பொது வாழ்வுக்கும் ஊக்கம்தருவதாக இருந்தது .
போஸ்பாண்டியன்
படிக்கும் போதே இந்திய மாணவர் சங்கப் போராளி , பின்னர் வங்கிப் பணிக்கு வந்த போது அதே
போர்க்குணம் தொடர செயல்பட்டவர் . வங்கி மேலாளர்கள் பொதுவாய் நிர்வாகத்துக்கு ஆதரவாய்
இருக்கும் போது இவர் ஊழியர்கள் நலனுக்காகக்
குரல் கொடுத்தவர் . பாண்டியன் கிராம வங்கியின் போர்க்குணமிக்க தொழிற்சங்க வரலாற்றில்
சில ஏடுகளை தன் சுயசரிதையோடு புரட்டிக் காட்டியுள்ளார் போஸ்பாண்டியன் .
அடுத்து மிக
முக்கியமானது அறிவொளி இயக்கத்திலும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்திலும் இவர் ஆற்றிய
பணிகளும் பெற்ற அனுபவங்களும் நினைத்து மகிழ்வதற்கானது மட்டுமல்ல .உலகுக்கு உரக்கச்
சொல்லப்பட வேண்டிய செய்தியும்கூட .
“முக்கியமாக
அறிவொளி இயக்கம் மக்களிடம் கல்வியறிவோடு சேர்த்து ,தலைமைப் பண்பையும் உருவாக்கியது
.அறிவொளி இயக்கம் செயல்படத் துவங்கிய பிறகே கிராமங்களிலும் ஊராட்சிகளிலும் சுய உதவிக்
குழுக்களின் தலைவராக பெண்கள் முன்னிலை பெறுவது அதிகரித்தது . அறிவொளியின் சாதனையாக ,இந்த முப்பது ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பெண்கல்வி
அடைந்திருக்கும் உச்சத்தை சுட்டிக்காட்ட முடியும் . அறிவொளி இந்த மாபெரும் முன்னேற்றத்தின்
நம்பிக்கை ஊற்றாக இருந்தது “ என போஸ் பாண்டியன்
கூறியிருப்பதை அசை போட்டுப் பார்க்கிறேன். அறிவொளி காலத்தின் தினமலர் ஏடு தினசரி அறிவொளி
இயக்கத்தின் மீது சேறுவாரி இறைத்ததையும் இடதுசாரி கம்யூனிஸ்ட் புரட்சிப் பிரச்சாரம்
செய்வதாக எழுதி குவித்ததையும் நான் இணைத்துப் பார்க்கிறேன். அறிவொளி இயக்கம் செய்த
சாதனை இன்னும் விரிவாக ஆழமாக ஆய்வு பூர்வமாக பதிவு செய்யப்பட வேண்டும் என்பது என் தனிப்பட்ட
கருத்தும் வேண்டுகோளும் ஆகும் .
இவரின் அன்பு
மனைவி இந்திரா மேல்நிலைப் பள்ளி ஆசிரியை .ஆசிரியர் போராட்டங்களில் பங்கேற்றவர் . குடும்பமே
இணைந்து களத்தில் நின்றிருப்பது பாராட்டுக்குரியது .
அண்மையில்
நானும் என் இணையரும் பெங்களூரில் இருந்து திருச்செந்தூர் செல்ல நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்
ரயிலில் பயணப்பட்ட போது அதே பெட்டியில் தோழர் போஸ்பாண்டியன் குடும்பமும் பயணித்தது
.நான் அவரை கடந்துசெல்லும் போது எங்கோ பார்த்த
முகமாக இருக்கிறதே என யோசித்து கேட்க , இருவரும் கைகுலுக்கி பழைய நினைவுகளில் மூழ்கினோம்
. நூல் எழுதிக் கொண்டிருப்பதாய் அப்போது சொன்னார் .
தோழர் மாதவராஜ்
அணிந்துரையும் , கார்த்திக் புகழேந்தியின் அன்புரையும் வாசிக்கும் போது கூடுதல் நெகிழ்வு
உண்டாகிறது .
நூலில் ஒரு
குறை. போஸ்பாண்டியன் அவர் மனைவி ,தந்தை ,தாய் உள்ளிட்ட குடும்ப புகைப்படங்கள் சிலவற்றையும்
சில போராட்டப் படங்களையும் இணைத்திருக்கலாம் .ஏனெனில் வரலாற்று ஆவணத்துக்கு இவை அவசியமல்லவா
?
வாசிப்பீர்
! இது ஓர் போராட்டக்காரனின் சுயகதை மட்டுமல்ல ..நாம் அறிய வேண்டிய வரலாற்று நினைவூட்டலும்கூட
…
இணுங்கு
, [ ஒரு போராட்டக்காரரின் நினைவுக் குறிப்புகள்]
ஆசிரியர்
: P.S.போஸ்பாண்டியன் ,
வெளியீடு
: SIBA ,எண்- 8 வது தெரு , சிபா இல்லம் , அஜீஸ் நகர் , அருப்புக் கோட்டை -626101 .
தொடர்புக்கு : 91 94866 67510 .பக்கங்கள் : 142
, விலை : 200 /
சு.பொ.அகத்தியலிங்கம்.
11/07/2024.
0 comments :
Post a Comment