சிக்கலின் முடிச்சை அறியாமல் தீர்வை நெருங்க முடியாது….
காலநிலைமாற்றம்
,புவிவெப்பமயமாதல் குறித்த சூற்றுச்சூழல் அக்கறையோடு
அறிவியல் பார்வையோடு எழுதப்பட்ட 28 கட்டுரைகளின் தொகுப்பே “சமகால சுற்றுச்சூழல் சவால்கள்” எனும் இந்நூல். இத்துறையில் ஆரம்பப்பள்ளி மாணவனான நான்,
வாசித்து அறிந்த சிலவற்றை இங்கு பகிர விரும்புகிறேன்.
கதாநாயகன்
/வில்லன் , தேவர்கள்/அசுரர்கள் ,பாவம் /புண்ணியம் , தீட்டு/புனிதம் என எதிரெதிர் நிலைகளை கட்டமைத்து பேசுவதும் எழுதுவதும்
புரிந்து கொள்வதும் சுலபம் . ஆயின் சுற்றுச்சூழல் சார்ந்து அப்படி பேசிவிடவும் முடியாது
. எழுதிவிடவும் கூடாது .
சுற்றுச்
சூழல் சவால்கள் மிகவும் சிக்கலானது. இதனைப் புரிந்து கொள்ள தட்டையான பார்வை ஒருபோதும்
உதவாது .இந்நூலில் உள்ள 28 கட்டுரைகளையும் வாசிக்கும் போது நூறு கோணங்கள் புலப்படுகின்றன
. ஒரு பக்கம் எவ்வளவு கடுமையான சூழலில் சிக்கி இருக்கிறோம் , இனி மனித குலம் அவ்வளவுதான்
எனத் தோன்றுகிறது . மறு பக்கம் கடுமையான முடிச்சுதான் ஆயின் அவிழ்க்க முடியும் என்கிற
நம்பிக்கை ஏற்படுகிறது.
ஒவ்வொரு பிரச்சனையையும்
தீர்வை நோக்கி நகர்த்தும் மனிதகுலம் ; ஒவ்வொரு தீர்விலும் புதிய பிரச்சனைகளைச் சந்தித்துக்
கொண்டிருக்கிறது . ஆயினும் அங்கே முடங்கி விட முடியாது முயன்று முன்னேறி புதிய தீர்வை
நோக்கி நகர வேண்டி இருக்கிறது . மீண்டும் புதிய பிரச்சனைகள் … இப்படித்தான் வளர்ச்சியும்
இருக்கும் அறிவியலும் இருக்கும் …
ஓசோன் படலத்தில்
ஓட்டை என்கிற பிரச்சனை ஓங்கி இருந்த 2000 ஆம் ஆண்டு நான் ஒரு பத்திரிகையாளர் குழுவில்
சீனா சென்றிருந்தேன் அங்கு உரையாடும் போது சீனர்கள் சொன்னார்கள் “ ஓசோன் படலம் ஓட்டைவிழுவது
உண்மைதான் ;ஆயினும் மீள முடியும் . இயற்கை தீர்வையும் தன்னுள் கொண்டுள்ளது.நாம் கொஞ்சம்
திருந்தினால் போதும் “ நாங்கள் நம்பவில்லை . சீனா அதீதமாகப் பேசுகிறது என்றே கருதினோம்.
இந்த தொகுப்பில் த.வி.வெங்கடேஸ்வரன் கட்டுரையை வாசிக்கும் போது தெளிவு கிடைத்தது .
புவி வெப்பமயமாவதில்
இருந்து மீள மரம் நடும் விழாக்கள் ,சூரிய ஆற்றல் மின்சார பரப்புரை என பொதுவாய் நாம்
பேசும் எளிய தீர்வுகள் மட்டுமே முழுமையானதுமல்ல சிக்கலில்லாததுமல்ல என்பது இந்நூலை
வாசிக்கும் போது தெளிவாகிறது .
“இஸ்திரி
செய்யாத கசங்கிய ஆடையை அணிவது குற்றம் அல்ல ;தவறும் அல்ல. ஆனால் இதுபோன்ற நடவடிக்கைகள்
மூலம் காலநிலை மாற்றத்தை தடுப்பதில் நாமும் பங்கு வகிப்போம் எனக் கூறுவது ஏமாற்றுவேலை”
என த.வி.வெங்கடேஸ்வரன் கூறியிருப்பது மிகை அல்ல .உண்மை .
மீண்டும்
பழமைக்குச் செல்வோம் , கோவணம் உடுப்போம் போன்ற வாதங்கள் சிக்கலின் இறுக்கத்தை முடிச்சை
அறியாமல் மேம்போக்காகப் பேசுகிறவையே . அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியால் உண்டான பிரச்சனைகளுக்கு
தீர்வை , கற்பனையாகவோ பழமையான முறையிலோ கட்டமைத்துவிட முடியாது , மாறாக அறிவியல் தொழில்
நுட்ப முன்னேற்றத்தில் சுற்றுச்சூழல் பார்வையை இணைத்தே தீர்வு காண முடியும் என்பதை
இந்நூலில் உள்ள பல கட்டுரைகள் நிறுவுகின்றன .
பெருகும்
மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு ,உடை ,வாழ்விடம் ,கல்வி ,வேலைவாய்ப்பு ,குடிநீர் போன்றவற்றை
அளிக்கத் திட்டமிடும் போது நாம் இயற்கையை பகைத்துக் கொண்டு இதனை செய்துவிட முடியாது
.
“ அறிவியல்
விரோத சூழல் அடிப்படைவாதிகளையும்,ஆளும் வர்க்கங்களின் வளர்ச்சி மற்றும் சூழல் தொடர்பான
மக்கள் விரோதக் கொள்கைகளையும் அம்பலப்படுத்த இத்தகைய விவாதம் உதவும்.” என வெங்கடேஷ்
ஆத்ரேயா கூறியிருப்பது இந்நூல் முழுமைக்கும் பொருந்தும்.
இன்னும் சொல்லப்
போனால் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி செயற்கை நுண்ணறிவு போன்றவை சூற்றுச்சூழல் மாசுகேட்டை
துல்லியமாய் அறியவும் அளக்கவும் விடை காணவும் எப்படி உதவுகின்றன என்பதையும் ஓர் கட்டுரை
சொல்லுகிறது .
பொதுவாய்
மரபணு தொழில் நுட்பம் ஆபத்தானது என்பது பொதுபுத்தியில் உறைந்துள்ளது .ஆயின் அதே மரபணு
மாற்ற தொழில் நுட்பம் அதீத வெப்பத்தை தாக்குப் பிடிக்கும் தாவரங்களை உருவாக்கவும் பயன்படுத்த
முடியும் என்கிறது ஒரு கட்டுரை .
“ வருங்காலத்தை
நேர்மறை எண்ணங் கொண்டு நவீன தொழில் நுட்ப உதவி கொண்டு எதிர்கொள்வோம்.புவி சூட்டைத்
தணிக்கும் முயற்சியில் ஈடுபடுவோம்.” என டி.திருநாவுக்கரசு சொல்வது நம்பிக்கை அளிக்கிறது
.
சிள் வண்டுகள்
,பறவைகள் இவற்றுக்கும் காலநிலை மாற்றத்துக்கும்
புவி வெப்பமாதலுக்கும் உள்ள தொடர்புகள் நாம் அறிய வேண்டிய செய்தி .சாலை நடுவிலுள்ள
டிவைடர்களில் புதர் வளர்க்க சொல்லும் போது . பொதுவாய் என்ன தோன்றும் , புளு பூச்சி
அதிகரிக்கும் என்றே தோன்றும் . ஆயின் அவை செய்யும் நன்மைகள் அறிவோமா ? காடு வளர்ப்போம் எனச் சொல்லும் போதே அயல்
படர் உயிரினங்களின் ஆபத்தை உணர்ந்தோமா ? சுற்றுச் சூழலுக்கு பெரிதும் தீங்கு செய்கிறவர்
யார் ஆனல் அதன் சுமை யார் மீது சுமத்தப் படுகிறது என்பதை கவனிக்காமல் நகர்ந்துவிட முடியுமா
? வளர்ந்த நாடுகளும் பெருமுதலாளிகளும்தான் சுற்றுச்சூழல் சீர்கேட்டின் முதன்மைக் குற்றவாளி
என்பதை கணமும் மறக்கலாமா ? “பழங்குடிகள் – வனம் – சுற்றுச்சூழல்” குறித்து இத்தொகுப்பில்
ஒரு கட்டுரை சேர்த்திருக்கலாமே ? ஏன் தவறவிட்டுவிட்டார்கள் ?
கடல் சார்
சவால்கள் ,நெகிழி சவால்கள் ,வேளாண் சவால்கள் ,நிலத்தடி நீர் சவால்கள் ,நகர்மய சவால்கள்
,போக்குவரத்து சவால்கள் ,ஒளி மாசு என பல்வகையில்
சூற்றுச்சூழல் நெருக்கடிகளை இந்நூல் பேசுகிறது . “ நீலம் இல்லாவிட்டால் பச்சை இல்லை”
என்கிறார் அறிவியலாளர் சில்வியா எர்ல் . கடலைப் பாதுகாக்காமல் புவியின் சூழலை மேம்படுத்த
முடியுமா ? நெகிழிகள் மூலம் அதுவும் மக்கா நெகிழிகள் மூலம் சூழ்ந்துள்ள பேரபாயம் இன்னும்
இந்திய சமூகத்தின் பொது புத்தியில் உறைக்கவே இல்லையே எப்படி சரி செய்வது ?
பொதுவாய்
சூற்றுச்சூழல் தூய்மைவாதிகள் மார்க்சியத்தை எதிராக நிறுத்துவார்கள் .ஆனால் மார்க்சியம்தான்
சுற்றுச்சூழல் குறித்த மெய்யான அக்கறை கொண்டிருக்கிறது . ஒருதலைப் பார்வையை கொள்ளாமல்
ஒருங்கிணைந்த பார்வையைத் தருகிறது .அதனை உள்வாங்க இந்நூல் உதவுகிறது .
இந்நூலின்
கடைசி கட்டுரையில் ஆயிஷா நடராஜன் சுற்றுச்சூழல் குறித்த முக்கியமான ஒன்பது ஆங்கில நூல்களை
அறிமுகம் செய்திருக்கிறார் .வாய்ப்புள்ளோர் அவற்றை தேடி வாசிக்கலாம்.
இந்நூலை வாசிக்கும்
போது பல்வேறு புதிய சொற்களை நாம் அறிந்தாக வேண்டி இருக்கிறது .அவற்றை எல்லாம் நினைவில்
வைத்திருப்பது சுலபமல்ல . ஒரு முறைக்கு இரு முறை வாசிப்பதும் , அந்தக் கலைச் சொற்களை
அடிக்கோடிட்டு வைத்து தேவைப்படும் போது திருப்பிப் பார்ப்பதும் அவசியமாகிறது .
இவையனைத்தும்
சுற்றுசூழல் நெருக்கடியின் பல்வேறு முகங்களை முனைகளை சிக்கல்களை நமக்கு புரிய வைக்க
மூயற்சிக்கின்றன . பிரச்சனைகளும் எளிதல்ல .தீர்வுகளும் எளிதல்ல .பிரச்சனைகள் ஒரே நாளில்
வெடித்ததல்ல காலவெளியில் நாம் அறிந்தும் அறியாமலும் செய்தவற்றின் எதிர்வினைகளாகும்
.தீர்வு ஒரே நாளில் ஒரே கஷாயத்தில் கிடைத்துவிடாது . நெடிய போராட்டம் .அறிவியல் பார்வையுடன்தான்
போராடியாக வேண்டும் .அதற்கு இந்நூல் வழி ஒரு திறப்பு உருவாகட்டும் !
பெருகும்
மக்கள் தொகைக்கு வாழ்வளித்துக் கொண்டே புவியைக் காப்பாற்றி அடுத்த தலைமுறையிடம் கையளிக்க
நாம் நேற்கொள்ள வேண்டிய போராட்டத்தில் இந்நூல் ஒர் தொடக்க ஆயுதமாகட்டும் !
சமகால சுற்றுச்சூழல் சவால்கள் , [bookday.in சுற்றுச்சூழல் மலர் ]
தொகுப்பாசிரியர்கள்
: எஸ் .விஜயன்
, த.வி.வெங்கடேஸ்வரன் , ஆயிஷா நடராஜன் ,செ.கா ,ஸ்ரீகுமார் ,டயானா
வெளியீடு
: பாரதி புத்தகாலயம் , தொடர்புக்கு
: 044 24332924 / 8778073949,
E mail : bharathiputhakalayam@gmail.com / www.thamizhbooks.com
பக்கங்கள் : 272 , விலை : ரூ.400 /
சு.பொ.அகத்தியலிங்கம்
25/07/2024.
0 comments :
Post a Comment