சுதந்திரம் பற்றி சொல்லப்படாத கதைகள் …..
இந்நூலுக்கு
புதிதாய் யாரும் மதிப்புரை எழுதத் தேவை இல்லை. ஏனெனில் அறிஞர் பெருமக்கள் பலரும் இதற்கு
தகுந்த பாராட்டுரை வழங்கி இருக்கின்றனர் .
இந்நூலின் முன்பகுதில் 12 பக்கங்களில்
அவற்றின் சாரம் சுருக்கமாக இடம் பெற்றுள்ளன
.பேராசிரியர் ஜக்மோகன் அருமையான முன்னுரை வழங்கி இருக்கிறார் .
“ சுதந்திரப் போராட்டம்
பற்றிய மக்களின் வரலாறு” என பேராசிரியர்
ஜக்மோகனின் வரிகள் இந்நூலின் அட்டையின் மேல் பகுதியில் பொறித்திருப்பது அலங்காரச் சொல்
அல்ல .அத்தனையும் உண்மை .
மெய்யான போராளிகளை
புறந்தள்ளி மன்னிப்பு கேட்டு மண்டியிட்ட சாவர்க்கரை எல்லாம் கொண்டாடும் ஆட்சியாளர்
வாழும் காலத்தில் இந்நூல் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது .
இந்நூலில்
சுட்டப்பட்டுள்ள தோழர் என் சங்கரய்யா தலைமையில் நான் மக்களுக்காகப் பணியாற்றி இருக்கிறேன்
. தோழர் ஆர் .நல்லகண்ணுவோடு நெருங்கிப் பழகி இருக்கிறேன். கர்நாடாகவைச் சார்ந்த மூத்த
போராளி H .S. துரைசாமி அவர்கள் பெங்களூரில் கடைசியாகக் கலந்துகொண்ட நிகழ்வுகளில் நானும்
ஓர் ஓரமாய் பார்வையாளர் வரிசையில் இருந்துள்ளேன்.
இந்நூலில்
சுட்டப்பட்டுள்ள ஆர் .நல்லகண்ணுவைத் தவிர இதரர்கள் யாரும் இப்போது உயிரோடு இல்லை ;
ஆயினும் அவர்களின் கடைசி காலத்திலேனும் அவர்களைத் தேடித்தேடி விபரம் சேகரித்து வாய்மொழி
வரலாற்றை நுட்பமாய்ப் பெற்று இந்நூலில் பதிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது .
பகத் சிங்கிற்கும்
அவர் தோழர் சிவ வர்மாவுக்கும் நடந்த உரையாடலில் சொல்லப்பட்ட வரிகள் முக்கியமானவை ;
“ சுதந்திரத்துக்கான
சிப்பாய்களாக நாம் போராட்டச் செயல்பாட்டை விரும்புவோம்.போராடுகையிலும் சிறையில் இருக்கும்
போதும் உயிர் இழந்து தியாகிகள் ஆகிறவர்கள் பெரிதும் மதிக்கப்படுவார்கள் . அவர்கள் கட்டிடத்தின்
உச்சியில் இருக்கும் முத்துகள் மட்டும்தான் .அவை அந்தக் கட்டிடத்தில் அழகைக்கூட்ட மட்டுமே
பயன்படும் .ஆனால் அடித்தளத்தைக் கட்டிய கற்கள் ரொம்பவே முக்கியம் .அவைதாம் அடித்தளத்துக்கு
வலு கொடுப்பவை.அவைதாம் பல வருடங்களுக்கு சுமையைத் தாங்கப் போகிறவை.”
அப்படிப்பட்ட பலரை வரலாறு சொல்லாமல் விட்டுவிடும்
.தேடித்தேடி சொல்வது அவசியம் .அதனை இந்நூல் செய்துள்ளது .புகழ்மிகு இதழியலாளர் பி.சாய்நாத் ஆங்கிலத்தில் எழுதிய நூலை நன்கு தமிழாக்கம் செய்திருக்கிறார்
ராஜசங்கீதன்.
மகாராஷ்டிராவில்
டூபான் சேனா [சூறாவழிப்படை] வைச் சார்ந்த ஹெளசாபாய் பாடில் , ஒரிசாவில் சபர் பழங்குடி
சமூகத்தைச் சார்ந்த தெமத்தி தெய் சபார் , ராஜஸ்தானைச் சார்ந்த ஷோபாராம் கெஹெர்வர்
, தெலுங்கானா வீரப்போராளி தோழர் மல்லு ஸ்வராஜ்யம் , மகாராஷ்டிரா சூறாவளிப்படையைச் சார்ந்த
கேப்டன்பாவு ,ராமச்சந்திரா ஸ்ரீபதி லாத் , காந்தியின் தொண்டர் ஒடிசா நபரங்பூரைச் சார்ந்த
பாஜி முகமது , நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்துக்காகாக வன முகாம்களில் உணவு சமைத்துக்
கொண்டிருந்த ஒடிசா லஷ்மி பாண்டா , ரவுடி கிராமம்
என ஓர் கிராமத்தையே அழைக்கும் அளவுக்கு சமர் புரிந்த ஒடிசா சமாரு பரிதா , அதே கிராமத்தில்
ஜிதேந்திர பிரதான் , ரயிலைக் கொள்ளையடித்து பிரிட்டிஷாரை கலங்க வைத்த சூறாவளிப் படையின்
கணபதி பால் யாதவ் , கணவர் பைத்யநாத் மஹாதாவுக்கு
துணையாக ஆபத்தையும் பொருட்படுத்தாது தலைமறைவுப்
போராளிகளுக்கு தொடர்ந்து உணவளித்த மேற்கு வங்க புருலியாவைச் சார்ந்த பபானி மஹாதா ,புரூலியாவின்
இன்னொரு பழங்குடிப் போராளி தெலு மஹாதோ , தோழர்கள் என் .சங்கரய்யா ,ஆர்.நல்லகண்ணு ,
H.S ,துரைசாமி என 16 பேர்களின் வீரகதைகள் இந்நூலில் உள்ளன .
1997 விடுதலை
பொன்விழா ஆண்டை யொட்டி ஒரு ஆண்டு முழுவதும் நான் தீக்கதிரில் தொடராக எழுதி பின்னர்
1998 ல் நூல் வடிவம் பெற்ற [ 2021ல் இரண்டாம் பதிப்பு ] “ விடுதலைத் தழும்பு” எனும்
592 பக்க நூலில் விடுதலைப் போரின் மறைக்கப்பட்ட வரலாற்றின் பல முகங்களைக் காட்டி இருப்பேன்.
சில நூறு போராளிகளைச் சுட்டி இருப்பேன் . நான் அதை எழுதிகிற போது என் முன் கிடந்த நூல்கள்
,தரவுகளிலிருந்து பல செய்திகளைச் சொன்னேன் .ஆயினும் சொல்லப்படாத செய்திகள் இன்னும்
அதிகம் உண்டு என முன்னுரையில் சொன்னேன் . இந்நூலில் மேலும் பல செய்திகளை முகங்களை நமக்கு
உயிரோட்டமாய் பெரும் இதழியலாளர் பி.சாய்நாத் தந்துள்ளார் . வாசிப்போம் .கற்றுணர்வோம்.
நான் அன்று முன்னுரையில் சொன்ன சில வரிகளோடு இந்த அறிமுகத்தை முடித்துக் கொள்கிறேன்.
“தேசத்தின்
விடுதலைப் போராட்ட வரலாற்றை அதன் பல முகங்களை பல கிளைகளை பலங்களை பலகீனங்களை ; எப்போது
இளைய தலைமுறைக்கு ஒளிவு மறைவு இன்றிச் சொல்லித் தருகிறோமோ அப்போதே வெற்றிப் பாதையில்
முதல் அடியை வைத்துவிட்டோம் என்று பொருள் .”
இறுதி நாயகர்கள்
, ஆசிரியர் : பி.சாய்நாத், தமிழில் : ராஜசங்கீதன்.
வெளியீடு
: பாரதி புத்தகாலயம் , தொடர்புக்கு : 044 24332924
/ 8778073949,
E mail : bharathiputhakalayam@gmail.com
/ www.thamizhbooks.com
பக்கங்கள்
: 296 , விலை : ரூ.290 /
சு.பொ.அகத்தியலிங்கம்.
04/07/2024.
0 comments :
Post a Comment