கோட்சே யார் ? அவனை இயக்கியது எது ?

Posted by அகத்தீ Labels:

 


கோட்சே யார் ? அவனை இயக்கியது எது ?

 

 ” கோட்சே என்பவன் தனிமனிதல்ல . அவனுக்கும் அவன் செய்த கொலைக்கும் பின்னால் ஒரு மிகக்கொடூரமான மனிதவிரோதத் தத்துவம் இருக்கிறது.அதனை புரிந்து கொள்ள வைப்பதே இந்நூலின் மிக முக்கியமான நோக்கமாகும்.”என்கிறார் திரேந்திர கே ஜா .

 

அவர் எழுதிய “ நாதுராம் கோட்சே : உருவான வரலாறும் இந்தியா குறித்த அவனது பார்வையும் “ நூலை வாசித்து முடித்த பின் நூலாசிரியர் நோக்கம் வீண் போகவில்லை என உறுதியாகச் சொல்கிறேன். இ.பா.சிந்தன் ஆற்றொழுக்கு நடையில் தமிழில் தந்துள்ளார். வாழ்த்துகள் .

 

இராமச்சந்திர விநாயக் கோட்சே என இயற்பெயர் கொண்ட நாது [ மூக்குத்திக்காரன்] என வீட்டாரால் அழைக்கப்பட்ட நாதுராம் கோட்சே என்கிற சித்பவன் பார்ப்பான் யார் ? அவன் ஏன் காந்தியைக் கொன்றான் ? அவனை இயக்கிய தீய சக்தி எது ? அவனை ஆட்கொண்டு கொலைகாரனாக்கிய நச்சு தத்துவம் எது ? அவனுக்கும் ஆர் எஸ் எஸ் க்கும் உள்ள தொடர்பு என்ன ? அவனுக்கும் இந்து மகாசபைக்கும் உள்ள தொடர்பு என்ன ? அவனுக்கும் இந்து ராஷ்ட்டிர தளத்திற்குமான தொடர்பு யாது ?அவனுக்கும் சாவர்க்கருக்கும் இடையிலான உறவு எத்தகையது ?இவைகளுக்கு இடையேயான உறவின் மையப் புள்ளி யாது ? ஆப்தே அவனோடு சேர்ந்தது எப்படி ? கோட்சேவின் நீதிமன்ற வாக்கு மூலம் அவனின் தயாரிப்பா ,வழக்கறிஞர் தயாரிப்பா ? அவன் சொன்ன பொய்களும் பொய்களின் பின்னால் இருக்கும் உண்மைகளும் யாவை ? ஆர் எஸ் எஸ் சும் , சாவர்க்கரும் அவரின் இந்து மகா சபையும் கோட்சே செய்த கொலைக்கும் தமக்கும் சம்பந்தம் இல்லை என நாடகமாடியது ஏன் ? பார்பன மேலாண்மை ராஜ்யமே இந்துராஷ்டிரம் என்கிற கருத்தியலை சாதுரியமாக இந்து என்கிற முகமூடிக்குள் மறைத்து நஞ்சை விதைக்கும் ஹெட்கேவர் ,கோல்வார்கர் , சாவர்க்கர் வகையறாக்களின் மெய்யான கனவு எது ? காந்தி அவர்கள் கனவுக்கு எதிரியும் தடையும் என அவர்கள் கருத நேர்ந்தது எப்படி ? நாதுராம் என்கிற பயந்தாங்கொள்ளி பெரும் கொலைகாரனாக மாற ஆர் எஸ் எஸ் தத்துவ விஷம் எப்படி உதவி இருக்கிறது ?

 

இப்படி உங்களுக்கும் எனக்கும் வரும் ஐயங்களுக்கு வெறும் கதையாக அல்ல ஆதாரபூர்வமாக விடை சொல்லி இருக்கிறது இந்நூல் .

 

இன்றும் காந்தியைக் கொன்ற கோட்சேவை தேசபக்தராக போற்றும் சங்கிகள் உலவுகிறார்கள் .உள்ளுக்குள் புகழ்ந்து வெளியில் சொல்ல முடியாமல் நடிக்கிற  சங்கி அறிவிஜீவிகள் உண்டு .ஆர் எஸ் எஸ் ஐயும் சாவர்க்கரையும் தேசபக்தராக போற்றிவிட்டு கோட்சே மட்டுமே கொலை செய்தான் என கதையளக்கும் பேர்வழிகள் உண்டு . இவர்களுக்கெல்லாம் தக்க பதிலடியாய் இருப்பது இந்நூல் .ஒவ்வொரு இளைஞனும் கட்டாயம் வாசித்தாக வேண்டும்.

 

பொதுவாக நான் நூலறிமுகம் செய்யும் போது சில பத்திகளை மேற்கோள் காட்டுவேன் ஆனால் இந்நூலுக்கு அப்படிச் செய்யவில்லை ஏனெனில் ஒவ்வொரு பத்தியும் மிக முக்கியமாகவே எனக்குப் படுகிறது .எனவே நீங்களே வாசித்து நான் சொன்னது உண்மை என உணர்க .கோட்சே கதாநாயகனும் அல்ல ; வில்லனும் அல்ல ; ஆர் எஸ் எஸ் விஷத் தொட்டியில் புழுத்த விஷ ஜந்து  என்பதே இந்நூல் உணர்த்தும் உண்மை .

 

கடந்த சில வருடங்களாக இந்துத்துவா குறித்தும் ,காந்தி குறித்தும் ,காந்தி கொலை குறித்தும் ,ஆர் எஸ் எஸ் குறித்தும் , மதவெறி குறித்தும் ,குஜராத் ,மும்பை உள்ளிட்ட இந்துத்துவ வெறியாட்டங்கள் குறித்தும் ஏராளமான நூல்கள் தமிழுக்கு வந்து சேர்ந்துள்ளன .அவை பெரிதும் வரவேற்கப்படுகின்றன .இடதுசாரிகளாலும் பெரியாரிய அம்பேத்கரிய இயக்கங்களாலும்தான் இது சாத்தியமாகிறது என்கிற உண்மை சங்கிகளுக்கு எரிச்சலூட்டுகிறது . ஆகவேதான் புத்தகக் காட்சி எனில் அவர்களின் நவதுவாரங்களும் பற்றி எரிகிறது .

 

இந்த நூலும் சரி  நான் படித்த பிற நூல்களும் சொல்லும் அடிப்படையான செய்தி என்ன தெரியுமா ? பார்ப்பனா மேலாண்மையை ஏற்கும் பார்ப்பன பணியா நலன் பேணும் அரசே இந்த இந்துத்துவ கூட்டத்தின் பெருங்கனவு,வர்ணாஸ்ரமும் மதுதர்மமுமே அவர்கள் இலக்கு .

 

அவர்கள் பேசும் இந்துத்துவா என்பது பார்ப்பன பணியா நலனே . சூத்திரன் ,தலித் ,பிறமதத்தவர் எல்லாம் அவர்களுக்குத் தொண்டூழியம் செய்யப் பிறந்தவரே. இந்து என பொதுவாய்ச் சொல்வது ஓர் ஏமாற்று நாடகமே .

 

பெரியார் தொண்டால் தமிழ்நாடு உணர்ந்த அளவுகூட பிற மாநிலங்களில் விழிப்புணர்வு ஏற்படவில்லை .[ தமிழ் நாட்டிலும் இப்போது சனாதனக் குரல் கேட்கத் துவங்கியுள்ளது .இந்நூற்களை இன்னும் வலுவாய்க் கொண்டு செல்ல வேண்டும்]கேரளாவில் சமூக சீர்திருத்த இயக்கம் வேர்கொண்டது அதனை பின்னர் கம்யூனிஸ இயக்கம் சுவீகரித்துக் கொண்டது . ஆனால் மற்ற மாநிலங்களில் இது நடைபெற வில்லை .இடதுசாரிகள் போதிய கவனம் செலுத்தத் தவறிய இடமும் இதுவே .

 

அந்த வகையில் நேற்றைய இடதுசாரிகளைவிட இன்றைய இடதுசாரி இளைஞர்கள் அதுகுறித்து அதிகம் வாசிப்பது பேசுவது எழுதுவது  நம்பிக்கை ஊட்டுகிறது .

 

இந்த விழிப்புணர்வின் ஓர் பகுதியே இந்நூலை வாசிப்பதுமாகும்.

 

இந்த நூலை தமிழுக்கு கொணர்ந்து சேர்த்த இ .பா/சிந்தனுக்கும் ,எதிர் வெளியீட்டிற்கும் என் பாராட்டுகள் .இ.பா.சிந்தனை பார்க்கும் போது ,

“தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து

மன்னுயிர்க் கெல்லாம் இனிது.” [திருக்குறள் : 68] எனும் வள்ளுவன் வாக்கே நினைவுக்கு வருகிறது ! வாழ்த்துகள் மகனே !

 

 

நாதுராம் கோட்சே : உருவான வரலாறும் இந்தியா குறித்த அவனது பார்வையும்,

ஆசிரியர் : திரேந்திர கே.ஜா, தமிழாக்கம் : இ.பா.சிந்தன்,

எதிர் வெளியீடு , 96 .நியூ ஸ்கீம் ரோடு ,பொள்ளாச்சி – 642002.

04259 226012 / 99425 11302.

பக்கங்கள் : 400 , விலை : ரூ.500/

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

 

 


0 comments :

Post a Comment