தூத்துக்குடியின் வலியும் காயங்களும் …..

Posted by அகத்தீ Labels:

 

 

 


தூத்துக்குடியின் வலியும் காயங்களும்  …..

 

[ முஹம்மது யூசுப் தன் புதிய நாவல் “ நுழைவுவாயிலை” எப்போதோ எனக்கு அனுப்பி விட்டார். ஆயினும் காய்ச்சல் ,சளி , உறவினர் இல்லத் திருமண அலைச்சல் என நாட்கள் நகர வாசிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை .  வெள்ளிக் கிழமைதான் வாசிக்கத் துவங்கினேன் .சனிக் கிழமை வாசித்து முடித்துவிட்டேன். இரண்டு நாட்கள் மனதில் அசைபோட்டேன். இன்று எழுதுகிறேன் .]

 

 “எதுலயும் எமோஷன்ஸ் தேடக்கூடாது ,அதுக்கு பதிலா ரீசன்ஸ் தேடணும் .இந்த அகமனச் சிக்கல் கதை எழுதுற எல்லாரும் ரீடரை அழவச்சி நல்ல புக்குன்னு பேர் வாங்கிரனும்னு  பிளான் பண்ணி எமோசன்ஸை எழுத்தில பரப்புறாங்க அதுல போய் நம்ம ஆளுங்களும் விழுந்திடுறாங்க எதுலயும் ரீசன்ஸ்தான் தேடணும் ..”

 

இப்படி ஷெரிப் பாய் இந்நாவலில் இறுதிப் பகுதியில் பேசுகிறார் .பார்வையை அம்மை நோயால் இழந்தவர் நாவல் நெடுக புதிய பார்வையை வழங்கிக்கொண்டே இருக்கிறார்.

 

அவரே மீண்டும் சொல்கிறார் ,” ஆனா அவன் பேசுறது எழுதறது எல்லாம் பார்த்தா அப்படித் தெரியல . தத்துவம் ,பண்பாடு ,தொன்மம் ,கலாச்சாரம் ,வரலாறு ,அரசியல் அப்படி படிக்கிறவனாகத்தான் தெரிகிறான் படிக்கட்டும் படிக்கட்டும் தொந்தரவு பண்ணாத…”

 

இவற்றை வாசித்த போது இவை எல்லாமே முஹம்மது யூசுப்பின் சுயவாக்குமூலமாகத் தெரிவது எனக்கு மட்டும்தானா ?

 

“ எழுதட்டும், எழுதட்டும்! நாமும் வாசித்துப் பழகுவோம்!” என எனக்கும் சொல்லத் தோன்றுகிறது .

 

ஏனெனின் அவர் எழுத்தின் செல்நெறியும் அதுவாகத்தானே இருக்கிறது . ஆம் பரந்த வாசிப்பும் கனமான தகவல்களுமே இவர் எழுத்து நெடுக பலமாக உள்ளன . முந்தைய நாவல்களின் மீதான விமர்சனங்களை உள்வாங்கி இந்நாவலில் ஓரளவு தகவல் திணிப்பைக் குறைத்துள்ளார் ஆயினும் சமூகத்தை இயக்கும் வலுத்த கைகளின் வரலாற்றுத் தடத்தை வணிகத் தடத்தை இந்நூலிலும்  சுட்டியுள்ளார் .

 

 “இங்க பால் காய்ப்பு வீடு ,எங்க இருக்கு” என்ற கேள்வியோடு தொடங்கிய நாவல் ; “இங்க ஒரு துஷ்டி வீடு .சிரில்ன்னு ஒரு பையன் இறந்திட்டான்.வீடு எங்க இருக்குன்னு சொல்ல முடியுமா “ என முடிகிறது . அதற்குள் எவ்வளவு செய்திகள்! அப்பப்பா …

 

லிஸ்டன் , செல்வம் ,மார்க்கஸ் ,கருத்தபிள்ளை ,ஷெரிப்பாய்  இவர்களின் குடும்ப உறவுகள் ,வர்த்தக உறவுகள் மதம் ,சாதி ,பண்பாடு ,சாதி மதச் சண்டைகள் , அந்த சண்டைகளின் மூலம் விளைவுகள் என பெரும் பரப்புக்குள் நாவல் நீந்திக்கொண்டே இருக்கிறது . தூத்துக்குடியின் உள்ளும் புறமும் ஸ்கேன் செய்யப்பட்டு காட்சிப் படுத்தப் படுகிறது .

 

தூத்துக்குடியின் வளர்ச்சியையும் அதன் பின்னே உள்ள உந்து சக்திகளையும் தனக்கே உரிய கோணத்தில் படம்பிடிக்கிறார் . செவத்தையா புரமா ? சிவத்தையா புரமா ? வெறும் கேள்வி அல்ல .மதவெறுப்பின் விதை . கன்னியாகுமரியா கன்னிமேரி மாவட்டமா என மண்டைக்காட்டு கலவரத்துக்கு முன்பு நடந்த சர்ச்சையை நினைவு படுத்துகிறது.

 

தூத்துக்குடி துப்பாக்கி சூடு கிளைமாக்ஸாக நாவலில் கையாளப் பட்டிருந்தாலும் அதன் வேரைத் தேடிய பயணமாகத்தான் நாவல் அமைந்துள்ளது . லிஸ்டன் தன் தந்தை மாரிதாஸை துப்பாக்கிச் சூட்டிலும் மகன் சிரிலை மதவெறியர் கொடுங்கரத்திலும் பலிகொடுத்துவிட்டு நிற்கும் கோரம் தனிமனித தவறுகளால் நிகழவில்லை .கொலைக்கரங்கள் எது என்பதுதான் முஹம்மது யூசுப்பின் தேடலாக நுழைவாயிலில் உள்ளது எனில் மிகை அல்ல .

 

செல்வம் ,தங்கபாண்டி ,கருத்தபிள்ளை , மதவெறியரோ சாதிவெறியரோ அல்ல ஆயின் சமூகச் சூழல் அவர்களுக்குள்ளும் நிகழ்த்தும் ஆட்டமும் மாற்றமும் இயல்பாக பதிவாகியுள்ளன .மாசணமும்கூட சூழ்நிலையின் கைதிதான். மதவெறி எப்படி தனிமனித கோபதாபங்களை சாதுரியமாய் காய்நகர்த்தி கொலைகளத்தில் கொண்டுபோய் நிறுத்திவிடுகிறது என்பதை நாவல் தன் போக்கில் பதிவு செய்துள்ளது .

 

பொதுவாய் இந்நாவலில் பெண் கதாபாத்திரங்கள் வெறும் குடும்பப் பெண்களாகவே வந்து போவதாய் படுகிறது .மாசணத்தின் மனைவி பகவதி ,செல்வம் வீட்டு பெண்கள் சற்று லேசான ஆறுதல் . மதவெறியும் சாதிவெறியும் வர்த்தக லாபவேட்டைக்காகாகத் தூண்டப்படும் ஓர் நகரத்தில் வலுவான பெண்களை ஏன் சித்தரிக்கவில்லை என்பது என் கேள்வி . இந்நாவலின் களமான இந்து கிறுத்துவ நாடார் மற்றும் மீனவப் பெண்கள் மிகவும் துணிச்சல் மிக்கவர்களாயிற்றே .குமரிமாவட்ட அனுபவத்தோடு இதனைச் சொல்கிறேன்.

 

இந்நாவல் துறைமுக நகர் சார்ந்து இயங்குவதால் அதன் வர்த்தகம் , அதன் நெளிவு சுழிவு ,ஆதிக்கம் ,கழுத்தறுப்பு ,போட்டி எல்லாம் கதாபாத்திரங்கள் வழி நம்மிடம் சொல்லப்பட்டுவிடுகிறது . இங்கே நம்பிக்கையின் இடம் மிக முக்கியமாகிவிடுகிறது .

 

“லிஸ்டா! எங்க இருக்க ,கடைக்கு வா ,என் தங்கச்சி மவன் டிரக் வித்திட்டு திரியுறான்னு உங்க வீட்ல சொன்னியாமே ,விட்டா நார்கோடிக்கு போன் போட்டு சொல்லுவ போல இருக்கு ,விசுவாசமா இருப்பேன்னு வேலைக்கு சேர்த்தா என் குடும்பத்து மேலேயே பீய அள்ளி வீசி இருக்க.கடைக்கு வா மொதல்ல” என்றது மார்க்கஸ் மொதலாளியின் காட்டமான குரல் .

 

முதலாளிகள் மீதான விசுவாசம் ,மதத்தின் மீதான விசுவாசம் ,சாதி விசுவாசம் எல்லாம் மக்களை என்னபாடு படுத்துகிறது ; லாபவெறி இவற்றில் நீந்திக் களிக்கிறது என்பதை தூத்துக்குடி வாழ்வோடு பேசும் நாவலே இது .இந்தியா முழுவதும் நடந்த சாதி ,மத கலவரங்களின் உள் நுழைந்து தேடினால் அங்கே வர்த்தக லாபவெறியும் தொழில் போட்டியும் கூடாரமடித்து உட்கார்ந்திருக்கும் . தூத்துக்குடியும் விலக்கு அல்ல .நாவலும் அதைத்தான் பேசுகிறது .

 

உள்ளமாரி , மாமாரி என்கிற உள்கதையோடு சிப்பியையையும் அதனுள் முத்துவையும் கண்டெடுத்த தொன்மக்கதையை ஷெரிப் பாய் வழி நமக்கு கடத்தி இருக்கிறார் முஹம்மது யூசுப் .அருமை .

 

காதலும் காமமும் ஊடாடும் நெய்தல் ,மருதம் நிலம் சார்ந்த புனைவில் அதற்குரிய இடம் எங்கே முஹம்மது யூசுப் எனக் கேட்டுவைப்போம்.

 

ஈழத்தமிழ்ர் பிரச்சனை , எம்ஜிஆர் அரசியல் , தூத்துக்குடிக்கும் இலங்கைக்குமான தொடர்பு எல்லாவற்றையும் யூசுப் அவருக்கே உரித்தான கோணத்தில் கதையோடு பிசைந்துள்ளார் . கிறுத்துவர்களின் பங்களிப்பு குறித்து பேசும் போது சந்தேகபடுவது பிழையல்ல ; எந்த அந்நியருக்கும் உள் நோக்கம் நிச்சயம் இருக்கும் . அதேவேளை தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் கிறுத்துவர்களின் பங்களிப்புக்கு உரிய இடம் கொடுக்கப்பட வேண்டும் என்பது என் கருத்து .முன்பும் இவர் நாவல் விமர்சனத்தின் போதும் இதைச் சுட்டியுள்ளேன்.

 

கப்பலில் ஆர்டர் கிடைக்க மதுப்புட்டிகளும் லஞ்சமும் மட்டும் அல்ல ; சில வரலாற்றுத் தகவல்களும் கூட தேவைப்படுகிறது என்பதைச் சொல்லும் அத்தியாயம் ; வெள்ளைக்காரரோ எவரோ ஒவ்வொருவருக்கும் அவரவரின் மூதாதையர்களைத் தேடும் வரலாற்று ஆர்வத்தை சுட்டிச் செல்கிறது .

 

நெய்தலும் மருதமும் காலப்போக்கில் வளர்சியினூடே எப்படி திரிந்து சுற்றுச்சூழல் சவாலாய் மாறுகிறது என்பது ஊடும்பாவுமான செய்தி . இங்கே சுற்றுசூழல் மாசுமடுதல் இயற்கையோடு நில்லாமல் மனித மனங்களிலும் நிகழுவதை முஹம்மது யூசுப் சொல்லுகிறார். தூத்துகுடியின் புவியியல் ,பொருளாதாரம் , திமுக ,அதிமுக , பிஜேபி , மீனவர் துயரம் அவர்களின் தேவை எல்லாம் நாவலில் பின்னிக் கிடக்கிறது .இங்கு யூசுப் பேசும் அரசியலில் முழுமையாய் உடன் படாதவர்களும்கூட ஓர் உண்மையை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.

 

“ஸ்டெர்லைட்டு சேட்டு கம்பேனி , உப்பு சேட்டு கம்பேனி , பருப்பு சேட்டு கம்பேனி , அவுரி சேட்டு கம்பேனி .சீ ஃபுட் எக்ஸ்போர்டும் சேட்டுதான், ஹார்பர் சேட்டுதான் , ஊரை சுற்றி நிக்கிற விண்ட் மில் காத்தாடி கம்பேனியும் சேட்டுதான் ,ஊரே ஜெகஜோதியாய் அமர்க்களமாய் இருக்கு” என்று சிரித்தான் சிரில் .

 

இந்த சிரில்தான் மதவெறியர் ஏவிய கொலைக்கரத்தில் பலியானான் . விபத்து என மகுடம் சூட்டப்பட்டது .சூத்திரக் கயிறு குஜராத்தில் . இவன் தாத்தா மாரிதாஸ் கொலையின் சூத்திரக் கயிறும் குஜராத்துதான்.

 

இது முக்கியமான செய்திதான் .ஆயின் இங்கு வடவர் எதிர்ப்பு என்பது வெறுமே கூலிக்காரனை எதிர்ப்பதாகவும் தெலுங்கர் எதிர்ப்பாகவும் மட்டுமே மடை மாற்றம் செய்யப்படுவது  குறித்த விழிப்புணர்வும் தேவை .

 

 “இதற்கு முன் நான்கு நாவல்களை[ மணல் பூத்த காடு , கடற்காகம் , தட்டப்பாறை , அரம்பை] எழுதி முடித்ததும் ‘அப்பாடா’ எதையோ அடைந்துவிட்டோம் என்ற சந்தோஷம் மனதில் தோன்றும் . இது பிறந்த ஊரைப் பற்றிய அலசும் கதை என்பதால் மிகவும் இறுக்கமாக அமர்ந்திருக்கிறேன். எனக்கு என்ன சொல்லவென்று தெரியவில்லை.” என முஹம்மது யூசுப் முன்னுரையில் சொல்லியிருக்கிறார் .  எந்தப் பக்கம் தொட்டாலும் தீப்பிடிக்கும் உள்ளூர் சூழல் இவரை பல இடங்களில் அடக்கி வாசிக்க வைத்திருக்கிறதோ என எனக்கும் பட்டது .ஆயினும் அந்த பொறுப்புணர்ச்சியும் தேவைதானே !

 

நுழைவாயிலில் நுழைந்து தூத்துகுடியின் சமூக அரசியல் தனிமனித வாழ்வை தரிசிப்பீர் !

 

மும்பையில் இருக்கும் “ GATEWAY OF INDIA” போல் தூத்துக்குடியிலும் “ GATEWAY OF TAMILNADU” என ஓர் கடலோர நுழைவு வளையம் தேவை என முஹம்மது யூசுப் முன்மொழிவதை நாம் வழிமொழிவோம்.

 

நாவலில் ஒரு இடத்தில் ஷெரிப்பாய்  மூலம் முஹமதுயூசுப் சொல்வதோடு நூல் அறிமுகத்தை நிறைவு செய்வோம்,

 

 “நபி பிறந்த வீடு சவூதி அரேபியால மெக்கால இன்னமும் இருக்கு. அதை லைப்ரரியா மாத்திட்டாங்க. உலகத்தில வேற எந்த சமயம் சார்ந்த தலைவருக்கும் மொதல்ல அவரு பிறந்த வீடுன்னு ஒன்னு கண்டுபிடிக்கப்பட்டிருக்கான்னு தெரியல. அப்படியே வீடு இருந்தாலும் அது லைப்ரரியா மாறி இருக்க வாய்ப்பே இல்ல. இதுல இருந்து என்ன தெரியுது? முஸ்லீம்ஸ் படிக்கனும், வாசிக்கனும் புத்தகம் சார்ந்து இயங்கனும் இஸ்லாமிய வாழ்வியல் சார்ந்த எல்லாத்தையும் பண்பாடு, கலாச்சாரம், தொன்மம் நாட்டாரியல் வழக்காருன்னு ஒன்னு விடாம பதிவு செய்யணும். பழமைங்கிறது இந்த நிலத்துல முன்னாடி இருந்த உன்னோட அடையாளம் அதை மறந்திராத.”

 

நுழைவாயில்  [நாவல்] , ஆசிரியர் : முஹம்மது யூசுப் ,

வெளியீடு :யாவரும் பப்ளிஷர்ஸ், தொடர்புக்கு :9042461472 /9841643380

editor@yaavarum.com , www.yaavarum.com பக்கங்கள் :460 . விலை : ரூ.560/

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

28/2/2022.

 

 

 

 


0 comments :

Post a Comment