முன்னிலும் மேம்பட்ட காதலும்….

Posted by அகத்தீ Labels:

 

காதல்… காதல் ..[3]

முன்னிலும் மேம்பட்ட காதலும்….

 


கிராமத்தைத் தாண்டாத வாழ்வு . வேளாண்மை, நெசவு,கைதொழில் வணிகம் போன்ற சில துறைகளைச் சுற்றியே உழைப்பும் பிழைப்பும். அதிகபட்சமாகப் போனால் முப்பது நாற்பது கி.மீ சுற்றளவுக்குள் கொள்வன ,கொடுப்பன ,உறவு, நட்பு, பிழைப்பு எல்லாம் . அன்றைய வாழ்வும் காதலும் பண்பாடும் அந்த வட்டத்துக்குள் மட்டுமே செக்குமாடாய் சுற்றிச் சுற்றி வந்தன .

 

ஆயின் இன்று வேலை நிரந்தரமில்லை ,வாழ்விடம் நிரந்தரமில்லை , ஓடிக்கொண்டே இருக்கிறோம் . மாவட்டம் மாவட்டமாய் – மாநிலம் மாநிலமாய் – நாடு நாடாய் ஓடிக்கொண்டே இருக்கிறோம். நம் உணவு உடை பழக்க வழக்கம் எல்லாம் அசுர வேகத்தில் மாறிக் கொண்டே இருக்கின்றன. .தேவை ,விருப்பம் ,ஆசை ,கனவு ,இலட்சியம் எல்லாம் விரிந்துகொண்டே போகின்றன . இன்றைய வாழ்வும் காதலும் நேற்றையப் போல அப்படியே தொடருமோ ?

 

 

வாழ்நிலை நம் சிந்தனையில் எதிரொலிக்காதா ? நம் வாழ்வும் காதலும் அதற்கொப்ப தன்னை தகவமைத்துக் கொள்ளாதா ? இன்னும் எந்த யுகத்தில் இருந்து கொண்டு பண்பாட்டு விழுமியம் என கதைக்கிறீர்கள் ? பண்பாடும் காலச்சூழலுக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொள்ளவில்லை எனில் தூக்கி எறியப்படும் அல்லவா ?

 

மேலே குறிப்பிடுபவை அனைத்தும் சில நாட்கள் முன்பு நடை பயிற்சியின்யூடே மூத்த குடிமக்களாகிய நாங்கள் சிலர் உரையாடிய போது வெளிப்பட்டவற்றின் சாரம் . வழக்கமாக எங்கள் உரையாடலில் அரசியலும் சொந்த சோகமுமே அடைத்திருக்கும் . அன்றைக்கு காதலும் வாழ்வும் பேசு பொருளாயின .காரணம் காதலர் தினச் செய்திகளே !

 

வீட்டுக்கு வந்த பின்னும் என்னுள் அந்த உரையாடல் சார்ந்த சிந்தனை நீண்டது .  “கம்யூனிஸ்ட் அறிக்கை”யில் சொல்லப்பட்ட வரிகளை மீண்டும் வாசித்தேன்.

 

 “ இதுநாள் வரையில் ,மரியாதைக்கு உரியதாக இருந்த ,பயபக்தியுடன் பார்க்கப்பட்டு வந்த ,வாழ்க்கை தொழில் ஒவ்வொன்றையும் முதலாளித்துவ வர்க்கம் மகிமை இழக்கச் செய்துவிட்டது . அது மருத்துவரையும் , வழக்குரைஞரையும் ,மதகுருவையும் ,கவிஞரையும் விஞ்ஞானியையும் தன்னிடம் ஊதியம் பெறும் கூலி உழைப்பாளர்களாய் மாற்றிவிட்டது .

 

முதலாளித்துவ வர்க்கம் ,குடும்பத்திடமிருந்து அதன் உணர்ச்சிபூர்வ உறவுத் திரையைக் கிழித்தெறிந்துவிட்டது .குடும்ப உறவை வெறும் பண உறவாகக் குறுக்கிவிட்டது .”

 

 “சரி ! அப்படி எனில் காரல் மார்க்ஸ் ஏன் காதலித்தார் ? குடும்பமாக ஏன் வாழ்ந்தார் ? ”என உரையாடலில் உறவினர் ஒருவர் என்னிடம் குறுக்குசால் ஓட்டியது நினைவுக்கு வந்தது .

 

குதர்க்க வினாக்களுக்கு நாமும் குதர்க்கமாகவே பதில் சொல்லிவிடலாம் .ஆயினும் பொறுப்போடு சொல்வதே நம் மரபல்லவா ? முதலாளித்துவம் இப்படிச் செய்கிறது என்கிற பிரஞ்ஞை உள்ள ஒருவர் அதனை எதிர்த்து நிற்பதும் வாழ்வதும் இயல்புதானே.ஓர் லட்சியத்தை வரித்துக் கொண்டவர்கள் அப்படி வாழ்ந்துகாட்டவும் போரிடத்தானே செய்வார்கள் ; பக்திமான்கள் நிறைந்த வீட்டிலிருந்து தோன்றிய பகுத்தறிவாளர் போல .

 

 

ஒரு கருத்து மக்களைக் கவ்விப் பிடிக்கும் போது அது மாபெரும் இயற்பியல் சக்தியாகிவிடுமல்லவா ? இதைச் சொன்னதும் அவர்தானே ! காதலும் வாழ்வும் அப்படித்தான். மார்கஸ்சும் எங்கெல்ஸும் விதிவிலக்கல்ல அவர்களும் விதிவிலக்கல்ல.

 

காதல் ,குடும்பம் போன்ற கருத்துகள் வானத்திலிருந்து குதிக்கவில்லை . கடவுளோ மதமோ அருளியது அல்ல .வரலாற்றின் நிகழ்வுப் போக்கில் வளர்ந்தவை “குடும்பம் –தனிச் சொத்து –அரசு ஆகியவற்றின் தோற்றம்” குறித்து பி.எங்கெல்ஸ் எழுதிய நூல் இன்றைக்கு வாசிக்க வேண்டிய முக்கிய நூல்.

 

முந்தைய சமூகத்தின் முந்தைய தலைமுறையின் கருத்தும் பண்பாடும் பல தலைமுறை தொடரும் . ஆயின் அப்படியே மாறாமல் தொடருமா என்பதுதான் கேள்வி.

 

உங்களின் குடும்பத்தையே உற்றுப் பாருங்கள்! தாத்தாக்கள் பாட்டிகள் பெரியப்பாக்கள் சித்தப்பாக்கள் என பெரும் குடும்பமாய் இருந்த நிலையா  உங்கள் அப்பா அம்மா காலத்திலும் இருந்தது ? இல்லையே ! தினசரி குறைந்தது ஐம்பது அறுபது பேருக்கு சமைக்கும் குடும்ப  வாழ்வா தொடர்ந்தது ? இல்லையே ! அப்பா அம்மா மகன் மருகள் பேரப்பிள்ளைகள் என்கிற ஒரு குறுகிய வட்டமே நம் அப்பா தலைமுறைக் கூட்டுக் குடும்பம் ஆயிற்று.இன்று தனித் தனி அலகுகளாய் குடும்பம் . அதுவும் நிற்க உட்கார நேரமின்றி ஓடிக் கொண்டே இருக்கும் வாழ்க்கைச் சூழல் .

 

கூட்டுக் குடும்பத்திலும் காதல் இருந்தது வாழ்வு இருந்தது ஆனால் பெண்கள் வாய் மூடி மவுனச் சுமை தாங்கியாய் ,கைத்த உணர்ச்சிகளும் கர்ப்பம் தரிக்கும் என்கிற விதியின் விளையாட்டுப் பொம்மைகளாய் இருந்தனர் .விதியை மீறி காதலை வாழ்வை சமத்துவமாய் சுவைக்க முனைந்தோரும் இருந்தனர் .ஆனால் அது போராட்ட வாழ்வாகவே இருந்தது .அங்கே காதல் அதனை உறுதியாக எதிர்கொள்ள துணைநின்றது . இந்த முரண்பாடுதான் வாழ்க்கை .

 

ஆதிக் காதலின் சுதந்திர வெளி பின்னர் அமையவில்லை . காதலை செல்வமும் ஆதிக்கமும் நசுக்கியது – விரட்டியது – விரட்டிக் கொண்டிருக்கிறது .மதம் ,சாதி ,இனம் ,வர்க்கம் ,பண்பாடு எல்லாம் செல்வம் ஆதிக்கம் ஆகியவற்றின் கூட்டாளிகளாகி காதலைக் குதறின . காதலை வாழ்வை மீட்க பெரும் போராட்டம் தேவைப்படுகிறது .

 

முன்னிலும் மேம்பட்ட காதலும் வாழ்வும்தான் இன்றைய இளைய தலைமுறையின் தேடல் . இங்கே ஆணும் பெண்ணும் சம பங்காளியாய் எச்சூழலிலும் தன் சுயத்தை இழக்காதவர்களாய் வாழத் தலைப் படுகிறார்கள். மதம் ,சாதி ,இனம் ,பண்பாட்டு தளைகளை மீறி கைகோர்த்து பயணிக்க முனைகின்றனர் .

 

இந்தப் போராட்டத்தில் சிலர் வழுக்கி விழுகிறார்கள் .சிலர் மல்லுக்கட்டு கிறார்கள். இது தவிர்க்க இயலாத வாழ்க்கைப் போர் ; அடிபட்டு விழுந்து எழுந்து காயங்கள் சிராய்ப்புகளுடன் கற்றுத் தேற வேண்டும். வேறு வழியே இல்லை .மெய்யான காதலும் மெய்யான வாழ்க்கையுமே நம் இலக்கு .அதற்குப் போராடித்தான் ஆகவேண்டும்…

 

இன்றைய இளைய தலைமுறை காதல் என்பது ….

 

 “யாயும்  ஞாயும்  யாரா  கியரோ?

எந்தையும்  நுந்தையும்  எம்முறைக்  கேளிர்?

யானும்  நீயும்  எவ்வழி  அறிதும்?

செம்புலப்  பெயல்நீர்  போல

அன்புடை  நெஞ்சம்  தாம்கலந்  தனவே!"

குறுந்தொகைப் பாடலை உளம் கொள்வோம்!

கூண்டுக் கிளியாய் சிறகை இழக்கவும் மாட்டோம்!

அவரவர் வெளியில் உயரே உயரே பறப்போம்!

அன்பின் நதியில் நீராடி மகிழ்வோம் !

எங்கள் காதலும் புதிது ! வாழ்வும் பதிது !

புதுயுகத்தின் நெடுங்கணக்கைத் தொடங்குவோம் !!

 

குறிப்பு : மாட்டைக் கட்டிப் பிடிக்கும் மூளையைத் தொலைத்த சங்கிகளுக்கும் சனாதனிகளுக்கும் உணர்ச்சியும் அறிவும் கிடையாததால் அவர்களுக்காக இக்கட்டுரை எழுதப்படவில்லை .

 

சுபொஅ.

10/2/2023.

 

 

 

 


 


0 comments :

Post a Comment