இந்நூல் நம்மை அழவைக்க அல்ல

Posted by அகத்தீ Labels: ,

 

இந்நூல் நம்மை அழவைக்க அல்ல




கண் கலங்காமல் இக்கதைகளைப் படிக்க முடியவில்லை . ஏதோ அழுகாச்சிக் கதை என நினைத்துவிடாதீர் , வெறுப்பு அரசியலின் ஆழமான சமூக ரணங்களை சுட்டும் அழுத்தமான கதைகள் .

‘மெளனத்தின் சாட்சியங்கள்’ மூலம் நம் மனதைக் கனக்க வைத்த சம்சுதீன் ஹீரா இப்போது ‘மயானக்கரையின் வெளிச்சம்’ மூலம் நம் இதயத்தைப் பிடித்து உலுக்குகிறார் .

பத்து கதைகளும் பத்து செய்திகளை அதுவும் காலத்தின் எச்சரிக்கைகளை உரக்கச் சொல்கிறது . ‘ ஒரு பெயரற்றவன் பற்றிய குறிப்பிலிருந்து ‘ முதல் கதை . அவன் பாபாவா , பிச்சைக்காரனா , முசல்மானா . பைத்தியக்காரனா , அவனுள் இருக்கும் அன்பின் ஊற்று எத்தகையது எல்லாவற்றையும் சொல்லிவிட்டு மதவெறி பைத்தியங்களால் அவன் உயிரோடு கொளுத்தப்படும்போது கதை படித்துக்கொண்டிருந்த எனக்கு எதிர்த்து கத்த வேண்டும் போல் இருந்தது .

கொரானாவால் பிழைப்புதேடி வந்தவர் பட்ட வலியை சொல்லிவிட்டு மதவெறியின் கோரத்தையும் சொல்லிவிட்டு “ கருணைகூர்ந்து நீங்கள் இந்தக் கதையை கொஞ்சம் முன்கூட்டியே முடித்துவிடுங்கள்.” என கதாசிரியர் கெஞ்சும் போது நெஞ்சுவெடித்துவிடும் போல் இருக்கிறது .

பத்துகதையையும் விவரிப்பது சரியல்ல . நீங்களே படியுங்கள் . சமகாலத்தின் நிகழ்வுகளிலிந்து கதைக்கருவைத் தேர்ந்தெடுத்துள்ளார் . வெறுப்பரசியலின் பலியாடாக்கப்பட்டுள்ள இஸ்லாமிய சமூகத்தின் உள்ளிருந்தும் வெளியிருந்தும் பார்த்து படைத்துள்ள இக்கதைகளில் எங்கேயும் ஒட்டுமொத்த இந்துவையோ முஸ்லீமையோ எதிர் எதிராய் நிறுத்தவில்லை .மாறாய் மதவெறி ஊட்டப்பட்ட சுயநலமிகளையும் , வெறுப்பு அரசியலையும் ,மாட்டுக்கறி அரசியலையும் , குடிஉரிமைச் சட்டத்தின் சுயரூபத்தையுமே தோலுரிக்கிறார் .

‘ நான ஒருத்தல்’ [ ‘நாண ஒறுத்தல்’ என்பதே எழுத்துப் பிழையால் இப்படி தலைப்பாகி இருக்குமோ ] எனும் கதை மத அடிப்படையில் யாரையும் வெறுக்காதீர் இழிவு செய்யாதீர் எனச் சொல்லும் மனிதநேயர் எப்படி இழிவுபடுத்தப்படுவர் , பழிவாங்கப்படுவர் என ஆழமாகச் சித்தரிக்கிறது .இக்கதையில் தூக்கில் தொங்கியது திவ்யாவா நம் சமூகத்தின் மனச்சாட்சியா ?

குடிஉரிமைச் சட்டத்தின் விளைவுகளை கற்பனையாய் ஆனால் வரும் ஆபத்தை யதார்த்தமாய் சொல்லும் நூலின் தலைப்பாய் அமைந்துள்ள ‘ மயாணக்கரையின் வெளிச்சம்’கதையின் முற்றாய்ப்பாய் நூலாசிரியர் சொல்கிறார்,

“ஆவேச முழக்கத்தோடு ஒரு பெரிய மக்கள் திரள் முகாமின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தது…”

ஆம் ,இந்நூல் நம்மை அழவைக்க அல்ல வெறுப்பரசியலுக்கு எதிராய் ஆர்த்தெழ வேண்டுகிற துயரத்தின் பதிவுகள் .

மயானக்கரையின் வெளிச்சம்
ஆசிரியர் : சம்சுதீன் ஹீரா
வெளியீடு : பாரதி புத்தகாலயம் ,
7 ,இளங்கோ தெரு , தேனாம்பேட்டை , சென்னை -600 018.
தொலை பேசி : 044 – 24332424 ,24332924 ,24356935

பக்கங்கள் : 120 , விலை : ரூ.120/

- சுபொஅ.

0 comments :

Post a Comment