ஹேமபிரபா எழுதிய “ இதுதான் வைரல்: அறிவியல் பார்வையில் கரோனா” எனும் நூல் நம் தப்பான அபிராயங்களைத் தகர்க்கிறது . அறிவியல் பார்வையை ஊட்டுகிறது . என்பதை ஏப்ரல் 7 ஆம் தேதியன்று சமூகவலைதளங்களில் நூலறிமுகம் மூலம் குறிப்பிட்டிருந்தேன் .
அதில் ஓரிடத்தில் “தடுப்பூசியின் அரசியல் ,பொருளாதாரம் பற்றி நமக்கும் நிறைய கேள்விகள் உண்டு . இந்நூலின் பார்வை பரப்புக்கு அப்பாற்பட்டது அது . எனவே அதைத் தனியாகப் பேசலாம் .” என்றும் குறிப்பிட்டிருந்தேன்.
அறிவியலாய் அறிய அந்நூல் . இப்போது அரசியலாய் அறிய “ கியூபாவின் மருத்துவப் புரட்சி” எனும் 72 பக்க நூல் . இந்நூல் கொரானா காலத்தில் நம்மிடம் மேலோங்கிய பல கேள்விகளுக்கான விடையை ,அரசியல் பார்வையை நமக்கு அளிக்கிறது . [ இரண்டு நூலையும் ஒன்றன் பின் ஒன்றாய் வாசிக்க வேண்டுகிறேன் .]
1960 முதல் இன்றுவரை சுமார் நாலு லட்சத்திற்கும் அதிகமான மருத்துவர்களை உலகெங்கும் அனுப்பி நோயிலிருந்து மனித குலத்தை மீட்க தன்னலம் கருதா தொண்டு செய்துள்ளது கியூபா.
‘ உலகுக்குத் தேவை குண்டுகள் அல்ல ; மருத்துவர்கள்” என்கிற ஃபிடல் காஸ்ட்ரோவின் முழக்கத்தை முன்னுரையில் எஸ்.வி.ராஜதுரை மிகச்சரியாகச் சுட்டுகிறார் கியூபா சோஷலிச இடதுசாரி ஆட்சிகள் நடக்கும் நாடுகளுக்கு மாத்திரமல்ல ,இடதுசாரிக் கொள்கைகளை சிறிதும் கடைப்பிடிக்காத சர்வாதிகார நாடுகளுக்கும் மருத்துவ சேவையை வழங்கி இருப்பதையும் கோடிட்டுக் காட்டுகிறார் .
கியூப அரசு லாப நோக்கமின்றி மருந்துகள் மற்றும் மருத்துவசேவை அனைவருக்கும் கிடைக்க பாடுபட்டதை இந்நூல் விவரிக்கிறது . நம் நாட்டில் பாரம்பரிய மருத்துவம் அல்லது மாற்று மருத்துவம் என்ற பெயரிலான மருத்துவ முறைகள் , இங்கிளீஸ் வைத்தியம் என சொல்லுகிற அலோபதி மருத்துவம் என இரண்டு உள்ளன . “கியூபாவில் …… …… கியூப மருத்துவம் இவை அனைத்தையும் அடக்கிய ஒரே முறையை முன்வைக்கிறது .” [ கோடிட்ட இடத்தில் மொழி பெயர்ப்பில் சிக்கல் உள்ளது .அடுத்த பதிப்பில் சரி செய்க ] ஆனால் “ கியூபாவில் நீங்கள் மருத்துவப் படிப்பு படித்தால் ,ஹோமியபதியின் மருத்துவத்தில் எல்லா கூறுகளையும் சேர்த்தே கற்றுக் கொடுப்பார்கள்.” இது நாம் கூர்ந்து கற்க வேண்டிய முக்கியச் செய்தி ; ஈயடிச்சான் காப்பியாக அல்ல ,நம் அனுபவத்தோடு குழைத்து அறிக. புதிய புதிய மருந்துகளைக் கண்டுபிடிப்பதிலும் பெரும் ஈடுபாட்டைக் காட்டும் கியூபா எதையும் அறிவியலாய் அணுகுவதே அதன் சிறப்பு.
கியூபாவை கொரானா தாக்கிய ஒரிரு வாரங்களில் நோயின் கோரப்பிடியிலிருந்து மொத்த கியூபாவையும் மீட்டது சாதாரணச் செயல் அல்ல . வீடுவீடாகச் சோதனை , நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிட்சை , தொடர்பில் இருந்தோரை கண்டறிந்து பாதுகாப்பு , திடீர் ஊரடங்கு எனினும் உணவுக்கும் இதர அடிப்படைத் தேவைகளுக்கும் மக்களை அலையவிடாமல் வீடுதேடி உதவி என விரைந்து செயல்பட்டது கியூப அரசு .
தடுப்பூசியே வேண்டாம் என கூப்பாடு போடும் போலிகள் அங்கில்லை பல்வேறு நோய்களுக்கான கியூப தடுப்பூசி பற்றிய பட்டியலைப் பார்க்கும் போது அவற்றை இன்னும் நாம் கேள்விப்படவே இல்லை .” எந்த மருந்தை கியூபா தயாரித்தாலும் அதை மலிவான விலையில் பிற நாடுகளுக்கு கொடுக்கும் . அமெரிக்க ஏகாதிபத்தியம் போல் அதிக விலையில் விற்பதை கியூபா என்றைக்குமே ஆதரிக்காது “
“பேரிடர் சுற்றுலாவாக” மேலைநாட்டு மருத்துவர் ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கி சேவை செய்வதாக சுற்றுலாவந்த போது ,கியூப டாக்டர்கள் முகாம்களிலேயே மக்களோடு தங்கி மருந்தோடு நம்பிக்கையையும் சேர்த்தளித்தனர் .
காஸ்ட்ரோ ,செகுவேரா இரண்டு பெரும் தலைவர்களும் வகுத்தளித்த மருத்துவக் கொள்கை புரட்சிகரமானது – அறிவியல் பூர்வமானது - உயர்ந்தபட்ச மனித நேயமுடையது என்பதை ; பல்வேறு கொடும் தொற்றுகளை கியூபா எதிர்கொள்ள அப்பாதை எப்படி உதவியது என்பதை இரண்டு கட்டுரைகள் மற்றும் ஓர் நேர்காணால் மூலம் இந்நூல் சொல்கிறது .
இந்நூலை மொழியாக்கம் செய்த ஆசிக் அன்வர் , மோகன் பிரபாகரன் , வேல்சுந்தர் ஆகியோருக்கும் ஒருங்கிணைத்த ராஜசங்கீதன் அவர்களுக்கும் வெளியிட்ட தமுஎகச மத்திய சென்னை மற்றும் பாரதி புத்தகாலயத்துக்கும் எம் பாராட்டுக்கள் .
கியூபாவின் மருத்துவப் புரட்சி ,
வெளியீடு : தமுஎகச மத்திய சென்னை ,
பாரதி புத்தகாலயம் , 7 ,இளங்கோ தெரு ,தேனாம்பேட்டை ,சென்னை -600018.
தொலைபேசி : 044 -24332424 ,24332924 ,24356935.
பக்கங்கள் : 72 , விலை : ரூ 70/
சுபொஅ.
0 comments :
Post a Comment