அண்ணலே !
நீர்
கூட்டாட்சி காக்க
ஜனநாயகம் பேண
மதச்சார்ப்ன்மை நிலைக்க
அரசியல் சட்டம் தந்தாய் !
இங்கே அதை பிய்த்தெறிகிறது
குரங்குக்கூட்டம்
அதிகார மமதையிலே !
இப்போது
பெற்றதைக் காக்க
பெரும் போராட்டத்தில் நாங்கள்….
எங்கள் கையில்
ஆயுதமானீர் நீங்கள் !
அண்ணல் அம்பேத்கரை திருதிராஷ்டிண ஆலிங்கனம் செய்து அழித்தொழிக்க ஆர் எஸ் எஸ் சதி செய்கிறது . காலமெல்லாம் இந்துத்துவாவை எதிர்த்த அம்பேத்கரை திடீரென சங்கிகள் உச்சிமோந்து கொண்டாடினால் அது பேராபத்தின் அறிகுறி .
அம்பேத்கரின் பேச்சுகளும் எழுத்துகளும் தொகுக்கப்பட்டுள்ளன. பல தொகுதிகளாக வெளிவந்துள்ளன . அவற்றையெல்லாம் வாசித்து ஒவ்வொருவரும் தங்களை ஆயுதபாணியாக்கிக்கொள்ள வேண்டும் .
சாதி குறித்து அம்பேத்கர் எழுதிய இரு புத்தகங்கள் அவசியம் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய நூல்கள் . “ சாதி ஒழிப்பு” மற்றும் “இந்தியாவில் சாதிகள்” என்கிற இரண்டையும்தான் சொல்கிறேன்.
சாதியை ஒழிப்பு என்ற நூல் 1936 ஆம் ஆண்டு லாகூரில் நடக்க இருந்த ஜாத்-பட்-தோடக் மண்டல் மாநாட்டுக்காக அம்பேத்கரால் எழுதப்பட்டது. உரையின் கருத்துக்களோடு மண்டலுக்கு சில முரண்பாடுகள் இருந்ததால் இந்த மாநாடு நடத்தப்படவில்லை.
பின் அம்பேத்கர் அவர்கள் இந்த உரையின் தொகுப்பினை ஆயிரத்து ஐநூறு பிரதிகளை நூலாக மே 15, 1936 இல் வெளியிட்டார்.அடுத்த ஆண்டே இந்த புத்தகத்தின்தமிழ்மொழிபெயர்ப்பு பெரியாரின் முயற்சியால் குடியரசு இதழில் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டது. மகாத்மா காந்தி இந்நூலுக்கு செய்த எதிர்வினையும் அதற்கு அம்பேத்கர் அளித்த பதிலும் சேர்த்து பின்னர் நூல் தொகுக்கப்பட்டது. இப்படி ஜனநாயகபூர்வமாக விவாதிக்கும் மரபு இக்காலத்தில் அருகிப் போய்விட்டது . எதிர் கருத்து சொன்னாலே தேஷ்விரோதி ,அந்நிய கைகூலி என்று வசைபாடும் இழிநிலை இன்று .
[கம்யூனிஸ்ட் தலைவர் ஜோஷிக்கும் காந்திக்கும் நடந்த கடிதப் போக்குவரத்தும் நூலாக வந்துள்ளது . அது கட்சி பற்றியது . அன்றைய ஜனநாயக கருத்துப் பரிமாற்ற சான்று அது ]
அதேபோல் இந்தியாவில் சாதிகள் எனும் நூல் அம்பேத்கர் சாதியை எவ்வளவு நுட்பமாக ஆய்ந்துள்ளார் எனக் காட்டும் . அவசியம் படிக்க வேண்டும் .
அம்பேத்கர் தன் வாழ்நாளெல்லாம் எழுதிக் குவித்தவற்றுள் ஆகப் பெரும்பான்மை இந்து மதத்தின் உள்ளுறையான சமூக சமத்துவமின்மையையும் மூடத்தனங்களையும் சாடுவதாகவே அமைந்துள்ளன .இது தற்செயலானதல்ல .
விடியல் வெளியிட்ட அம்பேத்கர் இன்றும் என்றும் தொகுப்பு நூலில் தீண்டாமை , இந்து மதத்தில் புதிர்கள் , பண்டைய இந்தியாவில் புரட்சியும் எதிர்புரட்சியும் ஆகிய மூன்று நூல்கள் இடம் பெற்றுள்ளன .
அதில் முதல் நூலுக்கான முன்னுரையில் அம்பேத்கர் குறிப்பிடுகிறார்,“ அறிவைப் பெறுவதற்கு ஆராய்ந்து உண்மை காணும் ஆர்வம் முதலில் ஏற்பட வேண்டும் . இந்த ஐயம் வரவேண்டுமானால் ஐயம் எழுப்பும் மனப்பாண்மை முதலில் வரவேண்டும்.”
மேலும் எப்படி பார்ப்பனியம் சந்தேகிக்காமல் நம்பச் சொல்கிறது . ‘ஐயமுற்றோன் அழிவான்” என்கின்றன இந்து மத சாஸ்திரங்கள் . “ இந்த விவேகமற்ற கருத்தின் பிடியிலிருந்து இந்து மனதை விடுவிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது.” என்கிறார் அம்பேத்கர் .
ஆம் இந்து சமூகத்தை பழமையின் பிடியிலிருந்தும் மூடத்தனங்களில் இருந்தும் அறியாமையிலிருந்தும் விடுவிக்கும் தருணம் ; என்றைக்கும்விட இன்றைக்கு மிகமிகமிக முக்கியமான கடமையாக நம்முன் விஸ்வரூபமெடுத்துள்ளது . . மோடி ஆட்சியும் சங்பரிவார் கூத்துகளுமே அதற்குச் சாட்சி ! .
உடனே மற்ற மதங்களில் அநீதி ,மூடநம்பிக்கை இல்லையா என துருப்பிடித்த வாதத்தைத் தூக்கிக்கொண்டு வரவேண்டாம் . இந்து மதத்தில் மட்டுமல்ல கிறுத்துவம் ,இஸ்லாம் உட்பட ஏன் பவுத்தத்தில்கூட நிறைய குவிந்துவிட்டன . அவரவர் வீட்டை சுத்தம் செய்வது அவரவர் கடமை . அடுத்த வீட்டுள் மூக்கை நுழைத்தால் அது மதவெறி .
அம்பேத்கர் இந்துவாய் பிறந்தார் .இந்துமத தீண்டாமையால் வதைபட்டார் .இந்துவாக சாகமாட்டேன் என முடிவெடுத்து மதம் மாறினார் .அது ஓர் அறிவுபூர்வமான கலக நடவடிக்கை .
1]இந்துக்கள் ஒரு போதும் மாட்டு இறைச்சி சாப்பிட்டதில்லையா ?
2]மாட்டு இறைச்சி சாப்பிடுவதை இந்துக்கள் கைவிடுவதற்குக் காரணங்கள் எவை ?
3] பார்பனர்கள் சைவ உணவு சாப்பிடுபவர்களாக ஏன் ஆனார்கள் ? [ முன்பு சாப்பிட்டதற்கு ஆதாரங்கள் உண்டு ]
4] மாட்டு இறைச்சி சாப்பிடுவது ஏன் தீண்டாமைக்கு வழி வகுத்தது ?
5] தீண்டாமை எப்போது தோன்றியது ?
இப்படி கேள்விகளை எழுப்பி விடை தேடியவர் அம்பேத்கர் .அவர் எழுத்தில் அதை எல்லாம் வாசியுங்கள் .
“கற்பி ! புரட்சி செய் ! ஒன்றுபடு !” என்பது அம்பேத்கரின் வழிகாட்டல் .
இன்று இந்துத்துவமும் கார்ப்பரேட்டும் இணைந்து பார்ப்பன் - பனியா கூட்டாக எழுந்துவரும் சூழலில் ஆபத்து மிகப் பெரிது .
இதனை எதிர்கொள்ள கருப்பு ,நீலம் ,சிவப்பு ஒற்றுமை மிக அவசியம் .பெரியார் ,அம்பேத்கர் ,மார்க்ஸ் மூவரும் நமக்குத் தேவை . மூன்றும் சமூகநீதிக்கான , சமூக சமத்துவத்துக்கான ,சமூக மாற்றத்துக்கான கருத்தியல்களே ! சமூகநீதி ,சமூக சமத்துவம் ,சமூக மாற்றம் மூன்றும் பல்வேறு படிநிலைகளே ! இவற்றுள் வேற்றுமையும் உண்டு ஒற்றுமையும் உண்டு . வேற்றுமை நட்பு முரண். பகை முரணல்ல . ஒற்றுமை காலத்தின் தேவை ! அதுவே பாசிசத்தை வீழ்த்தும் ஆயுதம் .
ஏப்ரல் 14 அம்பேத்கர் பிறந்த நாள் நாம் சபதமெடுக்கும் நாளாகட்டும்!!
சுபொஅ.
0 comments :
Post a Comment