பள்ளிக்கூடம் விரட்டியது ; ஆர்வமும் அர்ப்பணிப்பும் விஞ்ஞானியாக்கியது .

Posted by அகத்தீ Labels:

 

பள்ளிக்கூடம் விரட்டியது ;

ஆர்வமும் அர்ப்பணிப்பும் விஞ்ஞானியாக்கியது .

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

 

கலிலியோ ,ஐன்ஸ்டீன் , மேரிகியூரி ,சர் சி.வி.ராமன் போன்ற சில அறிவியல் மேதைகளின் வாழ்க்கை வரலாற்றையே நாம் கொஞ்சம் அறிவோம் . பொதுவாய் தலைவர்கள் வாழ்க்கை வரலாற்றைத் தேடிப் படிப்பதுபோல் அறிவியல் மேதைகளின் வாழ்க்கை வரலாற்றை தேடிப் படிப்பதில்லை . அது பிழைதான் ,ஆனாலும் அதுவே கசப்பான உண்மை .

 

அறிவியலார்களின் வரலாறு அறிவியலின் வரலாறாகவும் இருப்பதால் படித்து புரிந்து கொள்ள கொஞ்சம் பொறுமையும் ஆழ்ந்த கவனமும் தேவைப்படுகிறது .அப்படி ஓர் நூல்தான் , “மக்கள் விஞ்ஞானி மைக்கேல் ஃபாரடே” .ஆசிரியர் வே.மீனாட்சிசுந்தரம் .

 

மைக்கேல் ஃபாரடே மின் இயலின் தந்தை என்பதை பள்ளிப் பாடபுத்தத்தில் வாசித்திருப்போம் . அதையும் தாண்டியது அவரது பங்களிப்பு எத்தகையது என்பதை ஏராளமான விவரங்களுடன் இந்நூல் தரும் செய்திகள் மலைக்க வைக்கின்றன.

 

 “‘இர்ர்’ என்ற சொல்லை உச்சரிக்க இயலாத இவனை புகைக்கூண்டு துடைக்க அனுப்புங்கள்…” என ஆசிரியையால் விரட்டப்பட்டான். அந்த ஏழைச்சிறுவன் பின்னால் உலகமே வியக்கும் விஞ்ஞானி ஆனான் .அவன்தான் மைக்கேல் ஃபாரடே .

 

பிழைப்பு தேடி லண்டன் தேம்ஸ் நதிக்கரையில் குடியேறிய ஏழைக் கொல்லனின் மகனே ஃபாரடே . தேம்ஸ் நதி என்றதும் கற்பனையை விரிக்காதீர் . ஒரு காலத்தில் நம்ம ஊர் கூவம்போலவே நாறிக்கிடந்தது .சாக்கடை நிரம்பி வழிந்தது . அந்த நதியை தூய்மைப்படுத்த ஆலோசனை சொல்லும் நிபுணர் குழுவில் பின்னர் ஃபாரடே இடம் பெற்றான் என்பது வரலாறு .

 

சிம்னி /புகைக்கூண்டைத் துடைக்கும் வேலைக்கு போகிறான் ஃபாரடே அந்நாளில் ஏழைக் குழந்தைக்கு அதுவே புகலிடமானது . ஜோனாஸ் ஹன்வே என்பவர் சுருக்கி விரியும் குடையைக் கண்டுபிடித்தவர் . இவர் குழந்தைத் தொழிலாளி முறைக்கு எதிராய் குரல் கொடுத்தவர் .இவர் எப்போதும் அம்பர்லாவோடு[ குடையோடு] வருவதால் அம்பர்லாமேன் என அறியப்பட்டார் . இவரை அந்த வயதிலேயே ஃபாரடே அறிந்திருந்ததால் அதைச் சொல்லி அந்த நச்சுமிகுந்த வேலையிலிருந்து விடுபட்டான் .

 

அதன் பின் புத்தக பைண்டராக வேலை செய்தான் . ஒரு புறம் பைண்டிங்க் ,மறுபுறம் தேடித்தேடி படிப்பதும் எழுதுவதும் , பழைய காயலான் கடை பொருட்களை வைத்து அறிவியல் சோதனை . இப்படி ஒரு விஞ்ஞானி உருவாக முடியுமா ? ஆனால் அப்படி ஆனவர்தான் ஃபாரடே என்கிறது வரலாறு .

 

ஃபாரடேக்கு தான் கண்டது ,படித்தது ,நடந்தது என அனைத்தையும் டைரியில் பதிவு செய்யும் வழக்கம் இருந்தது . நண்பர்களுக்கு கடிதமும் எழுதுவான் . இவருடைய டைரிக் குறிப்புகளும் கடிதங்களும் அவரின் வாழ்க்கைப் போக்கை படம் பிடிக்க உதவின .

 

ஒரு முறை தன் சக ஆய்வாளர் டின் டால் ஜான் என்பவருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறான்,

 

“…. என்னைப் பொறுத்தவரை பகலிலும் இரவிலும் ஆய்வகத்தில்தான் இருந்தேன் . எப்போதாவதுதான் அம்மாவைப் பார்க்கச் செல்வேன். அதுவும் அம்மா கேட்ட பிறகுதான் போவேன் .நான் ஓர் புத்தக விற்பனையாளன் , அடுத்து புத்தக பைண்டர் , இப்போது தத்துவவாதியானவன் ……… …….புத்தக பைண்டராக இருந்த பொழுது மனதுக்கு இனிய மாற்றாக இரசாயணத்தையும் பிற தத்துவங்களையும் படிப்பவனாக இருந்தேன் .அவற்றில் முன்னேற ஆர்வம் கொண்டேன் .ஒரு ஆறுமாத காலம் கண்ட கண்ட வேலை செய்தேன் .பின்னர் ஒத்துவராத எஜமானிடம் பணிபுரிந்தேன் . ஆய்வாளர் அய்யா ஹம்ஃபிரே டேவி காட்டிய ஆர்வத்தால் அவரது உதவியாளன் ஆனேன் .”

 

ஒரு பத்தியில் சொன்னாலும் அந்தப் பாதை மிகவும் கரடு முரடானது .பின்னர் டேவியும் ஃபாரடேவும் கிட்டத்தட்ட இரட்டையர்கள் போல் பயணித்தனர் .ஆய்வு செய்தனர் . டேவி இல்லை என்றால் ஃபாரடே இல்லை என்று சொல்லிவிடலாம் . அவர்கள் இருவரின் நட்பும் முரணும் இந்நூலில் சரியாக பதிவாகி உள்ளது .

 

ஆய்வக எடுபிடியாக குடுவைகளை சுத்தம் செய்பவராக வேலைக்குச் சென்ற ஃபாரடே அறிவியல் ஆய்வாளனாக பரிணாமம் பெற்ற வரலாற்றை , வலியை ,அவமானத்தை ,சந்தித்த ஆபத்தை ,விபத்துகளை , அன்றைய சமூக யதார்த்தத்தை , அறிவியலின் வரலாற்றை என எல்லாவற்றையும்  பிசைந்து இந்நூல் சொல்கிறது .

 

 “ நியூட்டன் ,கலிலியோ இயற்கையின் இயல்பை அளக்க கணக்கியலை உருவாக்க விதை போட்டனர் அதுபோல் பன்முக இயல்புகளை கண்டறிய கோட்பாடுகளை உருவாக்க மைக்கேல் – டேவி இருவரும் விதை போட்டனர் எனலாம் .உயிரைப் பணயம் வைத்தே மனித குலத்தை இருளில் இருந்து வெளிச்சத்தில்  வாழவைக்க சேவை செய்தனர் என்பதை மறுக்க முடியாது .” என்கிறார் நூலாசிரியர் ,

 

மின்சாரம் என்பது ஓர் திரவம் என்கிற கருத்தோட்டம் முதற்கொண்டு அன்று விஞ்ஞானிகளிடையே பகிரப்பட்ட பல்வேறு தவறான கருத்தோட்டங்கள் எப்படி மாறின . மின்சாரத்துக்கு எதிர்காலம் இல்லை என்று கருதியவர் அன்று இருந்தனர் .இன்று மின்சாரம் இல்லாமல் உலகம் இயங்குமா ? இதைக் கண்டு பிடிக்க நடந்த போராட்டத்தின் ஆரம்ப அத்தியாயங்களே இந்நூல் எனவும் சொல்லலாம்.

 

சந்நியாச மனோநிலையில் இருந்த ஃபாரடே தன் மனதை சாராவிடம் பறிகொடுத்து காதலில் விழுந்தார் “ எனது மனைதச் சாய்க்க தலையணையாய் இருப்பாயா ?” என கடிதம் எழுதி காதல் பேசினார் , காதல் பின்னர் திருமணத்தில் முடிந்தது . மிக சுவையான கதை .[ தமிழ் சினிமா டைரக்டர்ஸ் வாசித்தால் ஓர் நல்ல சினிமா கிடைக்கலாம்.]

 

வெடிக்கும் தன்மை கொண்ட நைட்டிஜன் குளோரைடு எனும் ரசாயணப் பொருளைக் காய்ச்சி பிரித்துப் பார்க்கும் சோதனையில் ஆய்வகத்தில் இரண்டு விரல்களை இழந்தார் ,கண்பார்வையும் பாதித்தது . தொடர்ந்து நச்சு வாயுவை நுகர்ந்ததால்  உடல் நலன் பெரிதும் பாதிக்கப்பட்டது . நைட்ரஸ் ஆக்சைடை சுவாசித்து போதை ஏற்றிக்கொள்ளும் பழக்கம் தொற்றியது .எல்லாமுமாய்ச் சேர்த்து ஃபாரடேவை மனச் சிதைவுக்கு ஆளாக்கியது . விரைந்து மரணத்தைத் தழுவினார் .

.

 

சாந்த மேனியன் ஏசுவின் மீது ஈர்ப்பும் அன்பும் கொண்ட தந்தை இவனிடம் அடிக்கடி சொல்லுவார் “லண்டன் தெருக்களே பலவற்றைக் கற்றுத்தரும்” .ஆம் அவன் அப்படித்தான் பரிணமித்தான் . அறிவியலாளன் ஆனான் .மானுடத்தை நேசித்தான் .ஒரு வேளை அன்று நீட் தேர்வு இருந்திருக்குமானால் ஃபாரடே என்றொருவனை மனிதகுலம் கண்டிருக்காது .மின்சாரம் காண மேலும் ஒரு நூற்றாண்டு ஆகியிருக்கலாமோ !

 

இவர் கண்டு சொன்ன அறிவியல் பாதை எப்படி மனிதகுல மேம்பாட்டுக்கு உதவியது என்பதையும் ; மக்கள் விஞ்ஞானி என மார்க்ஸ் கொண்டாடியதையும் இந்நூல் சுட்டுகிறது .

 

அன்று விஞ்ஞானம் எப்படி இருட்டில் தட்டுத்தடுமாறி நடந்தது ; விஞ்ஞானிகளிடமே எப்படி பல தப்பான கண்ணோட்டங்கள் இருந்தன ?  எப்படி முட்டிமோதி விஞ்ஞானம் தன் பாதைக்கு  வந்தது ? என்பதின் தகவல்களும் இந்நூலோடு பிணைந்த செய்தி .

 

 “ஃபாரடேவின் வாழ்க்கையைத் தமிழில் கூறத்துணிந்த நான் எழுத்தாளன் அல்ல ; நான் தருகிற தகவல்கள் ஒரு வாசகனை சிறந்த அறிவியல் இலக்கியத்தைப் படைக்கும் எழுத்தாளனாக்கிவிடும் ஆற்றல் கொண்டது.” என தன்னடக்கமாக நூலாசிரியர் வே.மீனாட்சிசுந்தரம் கூறுவது மிகை அல்ல உண்மை . தகவல் பெட்டகமாக இந்நூல் உள்ளது .சமூகமாற்றம் விழைகிற ஒரு சாதாரண வாசகன் இந்நூலை ஒரு முறைக்கு பலமுறை வாசித்து செரித்துக் கொள்வது அவசியம் .

 

மக்கள் விஞ்ஞானி மைக்கேல் ஃபாரடே,

ஆசிரியர் :வே.மீனாட்சிசுந்தரம்,[ அட்டையில் இன்ஷியல் பிழையாக உள்ளது]

 

வெளியீடு : சிந்தன் புக்ஸ், 327/1 திவான் சாகிப் தோட்டம் ,டி.டி.கே.சாலை, இராயப்பேட்டை  ,சென்னை – 600014.

அலைபேசி :9445123164. Email : kmcomrade@gmail.com

பக்கங்கள் : 152 , விலை ;ரூ.150/

makkal-vignaani-michael-faraday_FrontImage_108.jpg

0 comments :

Post a Comment