மிகத் தேவையான அறிவியல் செய்திகள் .

Posted by அகத்தீ Labels:

 

மிகத் தேவையான அறிவியல் செய்திகள் .




கோ கரானா என்றவர் , காய்த்திரி மந்திரம் சொல்லச் சொன்னவனர் , ஜெபம் செய்யச் சொன்னவர் ,கோமியம் குடிக்கச் சொன்னவனர் , விளக்கு பிடிக்கச் சொன்னவர் ,கைதட்டச் சொன்னவர் ,அப்பளம் நொறுக்கச் சொன்னவர் இப்படி இப்படி பலவிதமாய் மூடத்தனங்களை விதைத்தவர்கள் எல்லாம் கரானா தடுப்பூசிபோட்டுக் கொள்வதும் , அந்தப் படத்தை முகநூலில் பகிர்வதும் , “அறிவியலே வெல்லும் , அறிவியல் பார்வையே ஓங்கணும்,” என உரக்கச் சொல்கிறது .

ஆயினும் கரானா குறித்த பல்வேறு தப்பான கருத்தோட்டங்கள் ஓவ்வொருவரிடமும் இருக்கத்தான் செய்கிறது .அளவு கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கலாம் . அவ்வளவுதான் .

ஹேமபிரபா எழுதிய “ இதுதான் வைரல்: அறிவியல் பார்வையில் கரோனா” எனும் நூல் நம் தப்பான அபிராயங்களைத் தகர்க்கிறது . அறிவியல் பார்வையை ஊட்டுகிறது . தனித்தனி கட்டுரையாக நாளிதழ் ஒன்றில் படித்ததை நூலாக மொத்தமாக படிக்கும்போது தெளிவு கூடுகிறது

“மனிதன் ஆய்வகங்களில் உருவாக்க இயலாத வைரஸ் இது,” என விளங்க வைத்து நோய் தோற்றம் மற்றும் பரவல் குறித்த பல்வேறு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முதல் அத்தியாயம் தொடங்கி ; பெரியவர்களுக்கு நோய் தடுப்பாற்றலை உருவாக்க நாம் போடவேண்டிய பல்வேறு தடுப்பூசிகளைச் சுட்டும் கடைசி அத்தியாயம் வரை எளிமையான அதே சமயம் மிகத் தேவையான அறிவியல் செய்திகள் . ஓவ்வொன்றும் நமக்கு விழிப்புணர்வு ஊட்டுகின்றன .

நான் 88 பக்க நூல் முழுவதையும் விளக்கப் போவதில்லை . நிச்சயம் நீங்கள் படிப்பீர்கள் ! பயன் பெறுவீர்கள் ! அந்த நம்பிக்கை எனக்கு உண்டு .இங்கே ஒரே ஒரு செய்தியை மட்டும் சுட்டுகிறேன் .

“ நம் நோய் தடுப்பாற்றல் மண்டலம் கோடிக்கணக்கான வெவ்வேறு செயல்பாடுகளைக் கொண்ட எதிரணுக்களை தன்னிடத்தே வைத்திருக்கும் . கரோனா வைரஸ் என்றில்லை வேறு எந்தக் கிருமி நுழைந்தாலும் ,அதற்கேற்ற எதிரணுவை நோய்த் தடுப்பாற்றல் மண்டலம் உற்பத்தி செய்யும்.”

இதை இந்நூல் சரியாகப் பதிவு செய்கிறது . போலி அறிவியலாளர் இதையே அழுத்திச் சொல்லி ஆகவே எந்த நோயாயாயினும் அதை நம் உடம்பே சரி செய்துவிடும் .மருந்து தேவை இல்லை . தடுப்பூசி வேண்டவே வேண்டாம் என விவாதம் செய்கின்றனர் . ஆகவேதான் நோய்த் தடுப்பாற்றல் மண்டலம் குறித்து சரியாக பதிவு செய்த நூலாசிரியர் ஹேமபிரபா மேலும் சொல்கிறார் ,

“எவ்வளவு விரைவாக நம்முடைய நோய்த் தடுப்பாற்றல் மண்டலம் சரியான எதிரணுவைக் கண்டறிந்து உற்பத்தி செய்வதைப் பொறுத்ததே , நோய்க்கிருமி வெல்வதோ அல்லது உடல் வெல்வதோ அமைகிறது .”

நாவல் கரோனா வைரஸுக்கு நாம் தடுப்பூசிப் போட்டுக்கொண்டிருந்தால் எதிரணுவைக் கண்டறிந்து நம் நோய்தடுப்பாற்றல் மண்டலம் விரைந்து செயல்படும் ; இல்லையேல் எதிரணுவை கண்டுபிடிக்க தாமதமாகும் அது சாவுக்கு காரணமாகும் என்கிறார் நூலாசிரியர் .

தடுப்பூசியின் அரசியல் ,பொருளாதாரம் பற்றி நமக்கும் நிறைய கேள்விகள் உண்டு . இந்நூலின் பார்வை பரப்புக்கு அப்பாற்பட்டது அது . எனவே அதைத் தனியாக பேசலாம் . இந்நூல் கரானாவின் அறிவியல் அடிப்படையைப் புரிய உதவும்.

இதுதான் வைரல்: அறிவியல் பார்வையில் கரோனா ,
ஆசிரியர் : ஹேமபிரபா ,
பாரதி புத்தகாலயம் , 7 ,இளங்கோ தெரு ,தேனாம்பேட்டை ,சென்னை -600018.
தொலைபேசி : 044 -24332424 ,24332924 ,24356935.
பக்கங்கள் : 88 , விலை : ரூ 90/

சு.பொ.அ.

0 comments :

Post a Comment