நீங்கள் பலர்; அவர்கள் சிலர்

Posted by அகத்தீ Labels:புரட்சிப் பெருநதி – 21 நீங்கள் பலர்; அவர்கள் சிலர்

சு.பொ.அகத்தியலிங்கம்

குழந்தைகளை 
வேலைவாங்குவதை 
தடை செய்து சட்டம் 
பிறப்பிக்கப்பட்டது’

“நீங்கள் பலர்; அவர்கள் சிலர்”  [you are many ; they are few] இந்த பொருட்செறிவான கவிதைவரிக்கு சொந்தக்காரர் யார்? எச்சூழலில் பிறந்தது? 

இங்கிலாந்தில் மான்செஸ்டர் நகரில் பீட்டர் ஃபீல்ட் எனுமிடத்தில்1819 ஆகஸ்ட் 16 திங்கட் கிழமை வாட்டும் குளிரிலும் மழையிலும் அறுபதாயிரம் நெசவாளர்கள் அணிதிரண்டனர். கடும் பஞ்சம், வாட்டும் வறுமை, கடுமையான பணி நெருக்கடி, கூலி தொடர்ந்து குறைக்கப்படுவது எல்லாம் அவர்களைப் போராட நிர்ப்பந்தித்தது. ஹென்றி ஹண்ட் தலைமை ஏற்றார். ஆட்சியாளர் கடும் அடக்குமுறையை ஏவினார். துப்பாக்கிச் சூடு நடந்தது. 15 பேர் உயிரிழந்தனர். 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதனை “பீட்டர் லூ படுகொலை” என வரலாறு பதிவு செய்துள்ளது. இதனைக் கண்டித்து...


“உறக்கம் கலைந்த சிங்கங்களைப் போல 
வெல்ல முடியாத எண்ணிக்கையில் எழுக!
நீங்கள் உறங்கிய பொழுது
உங்கள் மீது மாட்டிய சங்கிலிகளை
பனித்துளியைப் போல பூமியில் உதிர்த்திடுங்கள்
நீங்கள் பலர்; அவர்கள் சிலர்”

“அராஜகத்தின் மூடி” என்ற தலைப்பில் கவிஞர் ஷெல்லி எழுதிய கவிதை பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இந்த படுகொலை பலரின் மனச்சாட்சியை உசுப்பியது.

1819 இல் ஒன்பது வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வேலைவாங்குவதை தடை செய்து சட்டம் பிறப்பிக்கப்பட்டது. ஒன்பது வயதைத் தாண்டிய குழந்தைகளை வாரத்துக்கு 72 மணி நேரத்துக்கு மேல் வேலைவாங்கக் கூடாது எனவும் ஆணை பிறப்பிக்கப்பட்டது. 1825 இல் தொழிற் சங்கம் அமைக்கும் உரிமையும், வேலை நிறுத்த உரிமையும் வழங்கப்பட்டது. ஆனால் 1834 ல் சங்கம் அமைக்க விவசாயத் தொழிலாளர்கள் முயற்சித்த போது கைது செய்யப்பட்டு நாட்டைவிட்டே வெளியேற்றப்பட்டனர்.

“எங்கள் ஆட்சி ஏற்படும் பொழுதில்
உங்கள் ஆட்டம் முடிந்துவிடும்
அப்பொழுது பழைய உலகிற்கோர்
பிரேதப் போர்வையை நாங்கள் நெய்வோம்
அதோ கேள்! கலகம் குமுறுகிறது!” 

என்கிற பாடலை உரக்க பாடியபடியே பிரான்ஸில் லியோன்சின் நகரில் 1831இல் நவம்பர் 21 முதல் 23 வரை பட்டு நெசவில் ஈடுபட்ட தறி உரிமையாளர்களும் நெசவாளர்களும் வீதியில் இறங்கிப் போராடினர். போராட்டம் கடுமையாக நசுக்கப்பட்டது. மீண்டும் 1834இல் போராட்டம் துவங்கியது. ஏப்ரல் 9 முதல் 15 வரை நடைபெற்ற இப்போராட்டம் மேலும் பல நகரங்களுக்குப் பரவியது. பிரான்ஸில் பாட்டாளிவர்க்கம் விழித்தெழத் துவங்கிய நிகழ்வாக மார்க்ஸ் இதனைப் பார்த்தார்.

ஜெர்மனியின் பகுதியான பிரஷ்யாவில் சைலீஷிய நகரில் 1844 இல் நெசவாளர் போராட்டம் பெரும் கலகமாகவே உருவெடுத்தது. ஜெர்மானிய மகாகவியும் மார்க்ஸால் பாட்டாளி வர்க்க கவிஞனெனப் பாராட்டப் பட்டவருமான ஹென்றி ஹெய்னே நெசவாளர் போராட்டத்தையொட்டி யாத்த கவிதை; தொழிலாளர் ஊர்வலங்களில் பாடப்படலாயின.

“கிறீச்சிடும் தறியில் நாடா பறக்கிறது
இரவெல்லாம் பகலெல்லாம்
உன் விதியை நொந்து கொண்டிருக்கிறோம்
உன் சவத்துணியை நெய்து கொண்டிருக்கிறோம்.

ஓ! கிழட்டு ஜெர்மனியே!
உனக்கொரு சாபத்தை நெய்து கொண்டிருக்கிறோம்
உனக்கொரு சாவை நெய்து கொண்டிருக்கிறோம்
நாங்கள் நெய்து கொண்டிருக்கிறோம்” 

என இறுதியில் முடியும் அப்பாடல் பாட்டாளிவர்க்கப் போராட்டத்தில் எரியீட்டியாய் மாறிப் போனது .அந்த கவிதையில் ஓரிடத்தில் சொல்லுவார்;

“குளிர் பனியில் கொடும் பசியில்
மரித்துக் கொண்டிருந்த போது
நாங்கள் கதறி அழைத்தோமே
அந்தக் கடவுளைச் சபிக்கிறோம்
வீணாக அவரை நம்பினோம்;
பிரார்த்தித்தோம்; கெஞ்சினோம்;
எங்களைஏமாற்றினார்; துன்புறுத்தினார்” 

வெறும் உணர்ச்சியில் பிறந்தது மட்டுமா இவ்வரிகள்; ஆழ்ந்த சிந்தனைச் சுடருமல்லவா? இப்படி எல்லாம் எழுதினால் அரசு வாளாவிருக்குமா? ஹெய்னே என்ற பேரை உச்சரிக்கவே தடை போட்டது. “நானே வாள் ; நானே நெருப்பு” எனப் பிரகடனம் செய்தவர் ஹெய்னே. இளவயது மார்க்ஸை இவ்வரிகள் ஈர்த்தது. அவர் தன்னையும் அப்படியே கருதி எழுதலானார்; செயல்படலானார்.

இவர் மட்டுமா? அல்ல இன்னும் பல கவிஞர்களுண்டு

“அந்த நூறு பேரும்
ஹாஸ்வெல் நகரைச் சேர்ந்தவர்கள்
ஒரே நாளில்
ஒரே நேரத்தில்
ஒரே மாதிரி இறந்தார்கள்…” 

எனத் துவங்கும் கவிதையில் சுரங்க விபத்தைப் பாடினார் ஜார்ஜ் வொர்த். இவர் மார்க்ஸின் சமகாலத்தவர். இவரை முதல் பாட்டாளி வர்க்க கவிஞரென்பார் மார்க்ஸ்.விடுதலை என்ற சொல்லை உச்சரித்தாலே அரசு வெகுண்ட காலத்தில்;

“விடுதலைக்காக கொலை செய்யப்பட்ட கல்லறைகளில்
விடுதலை வளராத கல்லறை எதுவுமில்லை
இந்த விதைகளெல்லாம்மீண்டும் 
விதைகளை உருவாக்கும்
காற்று தொலை தூரம் சுமந்து போய்
மீண்டும் விதைக்கும்
மழையும் பனியும் போஷித்து வளர்க்கும்.”

“ஓ!விடுதலையே
மற்றவர்கள் உன்னிடம் நம்பிக்கை இழந்தாலும்
என்றென்றைக்கும் நான் மட்டும்
நம்பிக்கை இழக்கப் போவதில்லை” 

எனப்பாடினார் அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மன்.லூதர்வாத மரபைச் சார்ந்த புஸ்குதென் என்பவர் கவிஞர் கதேவை விமர்சித்து எழுதும் போது “ கவிஞருடைய நூல் ஒழுக்கக்குறைவுடையது” என எழுதினார்; அங்கத நடையில் காரல் மார்க்ஸ் அதற்குப் பதில் சொன்னார்;

“கதே என்றால் சீமாட்டிகளுக்கு பயம்
முதிய மகளிர் படிப்பது சரியல்ல 
அவர் இயற்கையைக் கற்றார்
சண்டை இதுதான் – ஆனால்
மத போதனையுடன் ஏன் முடிக்கவில்லை?
அவர் லூதர் கோட்பாட்டை
மனப்பாடம் செய்திருக்க வேண்டும்.
அதைக் கொண்டு கவிதை புனைந்திருக்க வேண்டும்.
அவரிடம் அழகான ,சில சமயங்களில்
விசித்திரமான சிந்தனைகள் இருந்தன;
‘எல்லாம் கடவுள் அருள்
’என்று முடிக்கத் தவறினார்.”

மறுமலர்ச்சி காலகட்டம், அறிவொளி கால கட்டம் என அழைக்கப்பட்ட இக்காலகட்டத்தில் மேலே சுட்டிய கவிஞர்களோடு, கீட்ஸ், பைரன், புஷ்கின், விக்டர் ஹ்யூகோ, பால்சாக், வொர்ட்ஸ் வொர்த், ஷில்லர் போன்ற படைப்பாளிகள் சமூக பிரக்ஞையோடு மக்களைத் தட்டி எழுப்புவதில் உரிய பங்கு வகித்தனர். இவர்களின் சமூக, தத்துவ, அரசியல் பார்வையில் வேறுபாடு இருக்கலாம். ஆனால் மக்களை விழிப்படையச் செய்வதில் ஏதாவது ஒரு வகையில் பங்காற்றியவர்களெனில் மிகையல்ல.

இக்காலகட்டம் பல்வேறு தத்துவ ஞானிகளை மட்டுமல்ல; அறிவியல் அறிஞர்களின் புரட்சிகர கண்டுபிடிப்புகளுக்கும் உரியகாலமாயிருந்தது. இக்காலத்தின் அறிவு வெளிச்சத்தின் மீதே விடுதலைப் போர்களும் புரட்சிகளும் கருக்கொண்டன எனில் அது மிகையல்ல.

 (புரட்சி தொடரும்…)

நன்றி : தீக்கதிர் , 27/3/2017

0 comments :

Post a Comment