கள அனுபவத்தோடு
மூட இருளகற்றும்
அறிவு ஒளி !
சு.பொ.அகத்தியலிங்கம்
தமிழுக்குத் தாமதமாக வரினும் சரியான நேரத்தில் மிகத் தேவையான ஆயுதமாய்
வந்து சேர்ந்துள்ளது இந்நூல் பேய், பிசாசு , சோதிடம் இல்லாத ஏடுகள் இல்லை
(விதிவிலக்குகள் தவிர) ; ஊடகம் இல்லை என்கிற சூழலில் ; அறிவியல் கண்டு
பிடிப்புகளைப் பயன்படுத்தி மூடநம்பிக்கைகளை வலுப்படுத்தும் அரசியல் சமூகச்
சூழலில்; அவற்றினை அம்பலப்படுத்தும் இந்நூலை வெளியிட்ட அலைகள் பதிப்பகத்துக்குப்
பாராட்டுகள் .
இரண்டு நூலிலும் சேர்த்து மொத்தம் 200 கட்டுரைகள் உள்ளன . இவற்றில்
இப்பிரச்சனை குறித்து பொதுவாய்ப் பேசும் கட்டுரைகளைவிட கள அனுபவம் சார்ந்த கட்டுரைகளே
அதிகம் .
நான் பேயைக் கண்டு பயப்படமாட்டேன் என வெற்று ஆரவாரம் செய்யாமல் , “ ஆன
மறுதை’ என்ற பிசாசை கோவூர் கண்டு சொன்னது சுவையான அனுபவம் . அவரும் அவர் மனைவியும்
நள்ளிரவில் அந்த இடத்தைக் கடக்கும் போது ; “அய்யோ !யானை! யானை!” என குஞ்சம்மை
குரல் கொடுக்க ; அக்காட்டில் யானை கிடையாது என்பதால் அது “ ஆனை மறுதை” என்கிற
பிசாசாகத்தான் இருக்க வேண்டும் அல்லவா?.ஒரு நிமிடம் நிற்கவைத்தது . அப்புறம்தான்
வழிதவறி வந்த ஒரு காரை அங்கே பார்க்க செய்துவிட்டு அதன் டிரைவர் குறட்டைவிட்டுத்
தூங்குவதைக் கண்டனர் .அப்படியானால் சற்று மிரண்டது ஏன் ? அதற்கு விளக்கம்
சொல்கிறார்;
“எனக்கும் குஞ்சம்மைக்கும் பேய் பிசாசில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் ; அந்த
மரத்தில் அவை வாழ்கின்றன என பலமுறைக் கேட்டு – அது எங்கள் உள் மனதில் பதிந்து
கிடந்தது – ஓட்டுநரின் குறட்டை ஒலி கேட்டதும் மனதில் உண்டான அச்சத்தில் உள்மனதில்
தேங்கிக் கிடந்த கதைகளுக்கு உருவம் உண்டானது . முதலில் அங்கே பார்த்த
குஞ்சம்மைக்கு அது யானையாகவே தென்பட்டது .அவருக்கு சிறுவயதில் அச்சத்தைப்
பிறப்பித்த உயிரினமாக அது இருந்திருக்கக்கூடும் . யானை என்று அவர் சொன்னதும் என்
மனதிலும் யானையின் உருவம் எழுந்து வந்தது.” என உண்மையின் தெறிப்போடு அவர்
சொல்கிறார் .
அவர் செல்லும் இடங்களில் மூடநம்பிக்கை/ உங்கள் முட்டாள்தனம் என இகழாமல் ஏன்
ஏன் ? எப்படி ?எதனால் ? என அலசி ஆராய்ந்து கண்டு விளக்கினார் . அதுதான் கோவூரின்
தனித்தன்மை .இன்னொரு கள அனுபவம் :
“ நான் உனக்கு நல்ல பாடம் புகட்டியே தீருவேன் .நீ என்னுடைய மனைவியைக்
கெடுத்துவிட்டாய் ! உன்னையும் உன் குழந்தையையும் கொல்வேன்…” என லீலாவதி கூப்பாடு
போட்டாள் . அவள் கணவர் மரணமடைந்து விட்டார் என இராணுவத் தலைமையகத்திலிருந்து தகவல்
வந்த சிறிது நேரத்திலேயே கூப்பாடு .
மனைவியை இறந்த கணவனின் ஆவி பிடித்துக் கொண்டதாக ஊரே நம்பியது . கோவூர்
தலையிடுகிறார் ; வேறொரு ஆணோடு அவளுக்கு இருந்த முறையற்ற உணர்வின் குற்ற
உணர்ச்சியும் ; இறந்தவர் ஆவிக்கு எல்லாம் தெரியும் என்கிற தவறான நம்பிக்கையும்
அவரை இப்படி பேய்பிடித்தவராக்கியது எனக் கண்டறிந்து சொல்லி மனநல சிகிச்சை மூலம்
குணமாக்கினார் . இதில் உச்சப் பட்ச திருப்பம் என்னவெனில் செத்ததாக தகவல் வந்தது
பிழையென இராணுவம் செய்தி அனுப்ப ; விரைவில் அவரும் திரும்பி வந்தார் .
இலங்கையில் ஒரு மலையாள மந்திரவாதி சில தந்திரங்களைச் செய்தும் , வள்ளத்தோள்
கவிதையை மந்திரம் போல் உச்சரித்தும் ஏமாற்றி நாடகமாடியதை ;எல்லா மொழியும் பேசுவேன்
எனச் சொன்ன ஒரு டாக்டர் சும்மா எதையோ உளறிவிட்டு அந்த மொழி இந்த மொழி என கதைத்த
மனப்பிறழ்வை ; புனிதம் என்று சொல்லப்படுகிற கட்டுக்கதைகளை கோவூர் அவர் பாணியில்
கட்டுடைத்து காட்டுகிறார்.
ஏவல், பில்லி சூனியம், சோதிடம், தெய்வீக அனுபவம் எதைப் பற்றி டாக்டர்
கோவூர் பேசினாலும் அதனை எள்ளி நகையாடாமல் நிரூபியுங்கள் எனச் சொல்வதும்;
பாதிக்கப்பட்டவரை ஏளனமாகப் பார்க்காமல் நோயாளியாய் கரிசனத்தோடு அணுகித்
தீர்ப்பதும்; அதன் மூலம் மூடநம்பிக்கை இருளகற்றுவதும் குறிப்பிடத்தக்கது.
மூடநம்பிக்கைக்கு எதிரான பிரச்சாரத்தை வறட்டுத்தனமாக அல்லாமல் நடைமுறை
அனுபவங்களோடு சொல்லுவதும் செய்து காட்டுவதும் மிக நுட்பமானது .
“தங்களுடைய உடலையும் உடமைகளையும் நான் சோதனையிட்ட பிறகு , அற்புதமோ,
தெய்வீகமோ ஆன சக்தியால் நீறு ,தங்கநகைகள், சிலைகள், பழங்கள், ஆகிவற்றில் எதையேனும்
உருவாக்கிக் காட்டினால் அந்த விஷயத்துக்காக ரூ.75,000 வரை எந்தத் தொகையும் பந்தயம்
வைக்கத் தயாராக இருக்கிறேன் என்பதை அறிவிப்பதற்காகவே இந்தக் கடிதத்தை
எழுதுகிறேன்…..”என சாய்பாபா , பன்றிமலை சாமி, ஹடயோகி எஸ் எஸ் ராவ் உள்ளிட்ட
பலருக்கும் கோவூர் சவால்விட்டதும்; அவர்கள் நழுவியதும் சுவாரஸ்யமானது மட்டுமல்ல ;பித்தலாட்டத்தை
வெளிக்கொணர்வதாகவும் அமைந்தது .
சாய்பாபாவுக்கு மட்டுமல்ல யூரிக்கெல்லர் என்கிற இஸ்ரேல் நாட்டு அவதார
சாமியாருக்கும் கோவூர் சவால் விட்டார் “ மூடி முத்திரையிடப்பட்ட ஓர் உறையினுள்
இருக்கும் கரன்சி நோட்டின் வரிசை எண்ணை அவரால் சொல்ல முடியுமெனில் 16,000 டாலர்
பரிசு தருவதாக கடிதம் அனுப்பினார் . ஏற்கவில்லை ஏனெனில் தெய்வீக ஆற்றல் என
அப்பாவிகளை ஏமாற்ற முடியும் ; கோவூரைப்போல் நுணுகிப் பார்ப்போரை ஏமாற்ற இயலுமா ?
சாய்பாபாவுக்கும் சரி – கெல்லருக்கும் சரி விஞ்ஞானம் அறிந்த சிலரே பக்தர்களாய்
இருந்தது எப்படி ஏன்பதையும் வெளிப்படுத்துகிறார் .அவர்கள் ஏஜெண்டுகளே என
நிரூபிக்கிறார் .
முஸ்லிம்கள் நடத்தும் ராத்தீப் சடங்கில் வாளை வயிற்றில் குத்திய பின்பும்
காயம் ஏற்படாமலிருக்கும் நுட்பத்தை எடுத்துக் காட்டுகிறார் .
டாக்டர் கோவூர் இந்து, கிறித்துவம் , முஸ்லிம் உள்ளிட்ட எந்த மத
புராணக்குப்பைகளையும் ஏற்காமல் கேள்விக்கு உட்படுத்துவது இந்நூலில் இன்னொரு
சிறப்பு.
“உலகம் நாகரிகம் அடையாத கட்டத்தில் வாழ்ந்த பண்டைய மனிதனின்
சட்டத்தொகுப்புகளும் சன்மார்க்க ஆச்சாரங்களும் மரபுகளும் அடங்கிய பைபிள் ,தற்கால
மனிதர் பின்பற்றக் கூடியது அல்ல. பத்து கட்டளைகளையோ சில மொழிகளையோ ஆங்காங்கே
எடுத்துக்காட்டுகிறவர்கள்கூட வேண்டுமென்றே தன்னலத்தோடு பலவற்றை மறைத்து
விடுகிறார்கள் .பைபிளை நடுநிலையோடு படித்தால் பக்குவமற்ற மனங்களை வழிதவற வைக்கின்ற
மதநூல்தான் அது என்பது புலனாகும்.” என்பதோடு அதற்கான சான்றாதாரங்களையும்
அடுக்குகிறார் .
டாக்டர் கோவூர் கேரளத்தில் கிறித்துவக் குடும்பத்தில் பிறந்தவர். கொல்கத்தா
சென்று தாவரவியல் படித்தார். அங்குதான் அவருக்கு பகுத்தறிவு முளைவிட்டது.
குஞ்ஞம்மையை திருமணம் செய்தார் .ஆசிரியப் பணி நிமித்தம் இலங்கை சென்றார் . அங்கு
மனோதத்துவம் பால் நாட்டம் கொண்டார் .`ஹிப்னாட்டிசம் பயிற்சி பெற்றார் .
பில்லிசூனியம் ,பேய் இவை குறித்து ஆய்வு செய்தார் . பகுத்தறிவாளராக இருப்பினும்
கல்லூரி பணி காரணமாய் பகிரங்கமாய் செயலாற்றவில்லை .1959 ல் ஓய்வு பெற்றது தொடங்கி
1978 ல் மரணமடைகிறவரை தெய்வீக ஆற்றல் மறுப்பு பிரச்சாரத்தை முழுநேரமும் செய்தார்
கேரளம், தமிழ்நாடு, ஆந்திரம் மகாராஷ்டிரம் ,கர்நாடகம் , மத்தியபிரதேசம், ஒடிசா என
விரிவாகப் பயணம் செய்தார்.
அவர் தொடர்ந்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். அன்றாடம் எழுகிற
பிரச்சனைகள், சவால்கள் இவற்றிற்கு அவர் முகம் கொடுத்து எழுதிய கட்டுரைகளே இவை .
ஆகவே தொடர்ச்சி இருக்காது .தாவித்தாவிச் செல்லும் . ஆயினும் ஒவ்வொன்றும் ஒரு
செய்தியை உரக்கச் சொல்லும் ;ஒரு மூட இருட்டை ஓட்டும் . மலையாளத்திலிருந்து த.அமலா
தமிழாக்கி தந்துள்ளார் .வாரிகா, மாதிகா ,தொவில் ,காற்றாடியார் இப்படி ஏராளமான
மலையாள அல்லது இலங்கைச் சொற்கள் கையாளப்பட்டுள்ளன. பதிப்பாசிரியர் அதில் கவனம்
செலுத்தியிருக்கலாம் . இந்த நூலை தமிழாக்கம் செய்த அமலாவை எப்படிப் பாராட்டினும்
தகும் .
அறிவியல் ,தர்க்கம் , மனோதத்துவம் , துப்பறிதல் என பன்முக பரிமாணங்களோடு
மூடநம்பிக்கைகளைத் தகர்க்க கோவூர் எடுத்த முயற்சியை மேலும் வளர்த்து
முன்னெடுத்துச் செல்ல வேண்டியது காலத்தின் கட்டளையாகும் ; அதற்கு இந்நூல்
அடித்தளம் அமைக்கட்டும்!
பக் : 408 , விலை : ரூ. 300 /
2, கடவுள் மதக் கட்டுக்கதைகளும் காசு பறிக்கும் சாமியார்களும்
பக் : 432 , விலை : ரூ.325 /
ஆசிரியர் : டாக்டர் கோவூர் ,
தமிழாக்கம் : த.அமலா ,
வெளியீடு :அலைகள் வெளியீட்டகம்,
5/ 1 ஏ , இரண்டாவது தெரு , நடேசன் நகர் ,
இராமாவரம் , சென்னை – 600 089.
நன்றி : தீக்கதிர் ,புத்தகமேசை, 19/3/2017
0 comments :
Post a Comment