மிரள வைத்த கையெழுத்துகள்

Posted by அகத்தீ Labels:


புரட்சிப் பெருநதி – 20


மிரள வைத்த கையெழுத்துகள்


சு.பொ.அகத்தியலிங்கம்

உலகம் முழுவதிலும் உண்மையில் வெகுஜனத் தன்மை கொண்ட
விரிவாகத் திரட்டப்பட்ட அரசியல் ரீதியாகத் துல்லியமாக
வடிவமைக்கப்பட்ட முதல் இயக்கமாக
விளங்குவது சாசன இயக்கமே என்றார் லெனின்.





அறுபது லட்சம் பேர் கையெழுத்துடன் ஆறு கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டதாக போராட்டக்காரர்கள் கூறினர். இல்லை 19 லட்சம் கையெழுத்துகள் மட்டுமே உள்ளன என ஆட்சியாளர் சாதித்தனர்; அதிலும் பெரும்பகுதி போலியானவை என்றனர். தாங்கள் அதனை சரிபார்த்துவிட்டதாகவும் கூறினர்.

13 பேர் 17 மணி நேரத்தில் 60 லட்சம் கையெழுத்தையும் சரிபார்த்துவிட்டதாகக் கூறுவதை எப்படி நம்ப முடியும் ? தொழிலாளர்கள் தங்களுக்கு பாதுகாப்பு கருதி மாற்றுப் பெயரில் கையெழுத்திட்டதை எப்படி போலியென சொல்லலாம் ? இது போராட்டக்காரர் வாதம் .எப்படியும் 30 லட்சம் பேர் அதனை ஆதரித்தனர் என்பது ஆய்வாளர் கருத்து.
எண்ணிக்கை இருக்கட்டும் ஒவ்வொருவராய் நூறு பேரிடம் விளக்கம் சொல்லி கையெழுத்து வாங்குவதே பெரும் சிரமம் . அன்றைக்கே பல லட்சம் கையெழுத்து வாங்கினர் என்பது சாதாரண விஷயமல்ல ;அதனால்தான் ஆட்சியாளர்கள் மிரண்டனர்.

19 ஆவது நூற்றாண்டில் பிரிட்டனில் நடைபெற்ற மிகப்பெரிய மக்கள் இயக்கமான சாசன இயக்கத்தின் மனுவே அது. 1838 தொடங்கி பிரிட்டனைக் குலுக்கிய – மூன்றுமுறை அரசை பதற்றமடையச் செய்த இயக்கமாகும். 1936 இல் லண்டன் உழைக்கும் மக்கள் கழகம் நிறுவப்பட்டது . அதன் தொடர்ச்சியாக வில்லியம் லவீட் முயற்சியால் ஆறு கோரிக்கைகளடங்கிய மகாசாசனம் உருவானது.

21 வயது நிரம்பிய அனைவருக்கும் வாக்குரிமை ,ரகசிய வாக்கெடுப்பு, சொத்துள்ளவரே போட்டியிட முடியும் என்கிற கட்டுப்பாடு நீக்கம், நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஊதியம், சமமான தொகுதிப் பிரிவினை, ஆண்டுதோறும் தேர்தல் என்ற முக்கிய ஆறு கோரிக்கைகள் கொண்ட மகாசாசனத்தை முன்மொழிந்து 1838 ஆம் ஆண்டு பர்மிங்காமிலுள்ள நியூஹாலில் கூட்டப்பட்டக் கூட்டத்தில் பல அமைப்புகள் இணைந்தன . சாசன இயக்கம் உருவானது . “ ஜனநாயகம் அல்லது மரணம்” என்கிற முழக்கம் எங்கும் உரக்க ஒலித்தது. “கத்தியும் முள்கரண்டியும் ரொட்டியும் வெண்ணையும் போன்றது இக்கோரிக்கைகள்” என்பார் ஜோசப் ரெய்னர் ஸ்டீபன்.

1836 இல் இந்த இயக்கம் சார்ந்தவர்களால் வெளிக்கொணரப்பட்ட “நார்த்தன் ஸ்டார்” என்ற ஏடு ஆளும் வர்க்க ஏடான டைம்ஸுக்கு சமமானது. ஆலை வாயில்களில், உணவகங்களில் படிப்பறிவற்ற தொழிலாளர்களுக்கு இந்த ஏட்டை உரக்க வாசித்துக் காட்டும் புதிய கலாச்சாரம் எங்கும் வேகமாய் பரவியது. கோரிக்கை சாசனத்தில் ஆர்வமுடன் உழைப்பாளிகள் கையொப்பமிட்டனர். சாசன இயக்கக் கூட்டங்களில் பல்லாயிரவர் திரண்டனர். ஆட்சியாளர் மிரண்டனர்.  1839 இல் ஜான் ஃபிராஸ்ட் நாடு கடத்தப்பட்டார் .ரோபர்ட் பெடயிக் மூன்றாண்டு கடும் தண்டனைக்கு ஆளானார் .1840 ஜனவரியில் 22க்கும் மேற்பட்ட சாசனவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் .

1840 க்குள் கிட்டத்தட்ட சாசன இயக்கத் தலைவர்கள், முன்னணி ஊழியர்கள் பெரும்பகுதியினர் கைது செய்யப்பட்டுவிட்டனர் . ஆட்சியாளர்கள் சாசனத்தின் கோரிக்கைகளை ஏற்க மறுத்ததுடன் கேலியும் கிண்டலும் செய்தனர் . இதனால் கலகங்களும் வேலைநிறுத்தமும் எங்கும் பரவியது. 1842 இல் லங்காஷயரில் வேலைநிறுத்தம் வெடித்தது. ஒவ்வொரு ஆலையாக தொழிலாளர் கூட்டமாகச் சென்று உலைகளை நிறுத்தி வேலை நிறுத்தத்தை முன்னெடுத்தனர். தொழிற்சாலை பகுதிகளுக்கு ராணுவத்தை அனுப்பும் அளவு நிலைமை கடுமையானது. அடக்குமுறை தாண்டவமாடியது. சாசன இயக்கத்தில் கருத்து மோதல் முன்னுக்கு வந்தது . ஒரு சாரார் முதலாளித்துவ தாராளவாதிகளுடன் சேர்ந்து நீண்டகால கிளர்ச்சிக்குத் தயாராக வலியுறுத்தினர் . இவர்கள் தார்மீகக் கட்சி எனப்பட்டனர் . லவீட் இதன் தலைமை ஏற்றார் .தீர்மானகரமான ஆயுதமாக ஒட்டுமொத்த எழுச்சிமிக்க வேலைநிறுத்தத்தை முன்வைத்தோர் பெளதீக சக்திக் கட்சி எனப் பட்டனர். ஒ கொன்னர் இதன் தலைமை ஏற்றார். இந்த முரண்பாடு இயக்கத்தை சற்று சுணங்க வைத்தது.

எனினும் பிரிட்டனில் ஏற்பட்ட தொழில் மந்தம் , அயர்லாந்து பஞ்சம், பிரெஞ்சு நாட்டு எழுச்சிகள் இவற்றால் சாசன இயக்கம் மீண்டும் எழுந்தது. 1847 இல் கிட்டத்தட்ட உச்சியைத் தொட்டது. புதிய கோரிக்கை சாசனத்தை தயாரித்து பல லட்சம் கையெழுத்தோடு நாடாளுமன்றம் நோக்கி அணிவகுத்தனர் .30 லட்சம் கையெழுத்துகள் பெற்றிருந்தனர் . நாற்பதாயிரம் பேர் உறுப்பினராக இருந்தனர். எழுச்சி கனன்றது. பியர்கஸ் ஒ கொன்னர் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டது உற்சாகத்தை அளித்தது .1848 ஏப்ரல் 10 ஆம் நாள் தெற்கு லண்டனில் கென்னிங்டன்னில் ஒரு சிறப்பு மாநாடு கூடியது .ஒரு லட்சம் பேர் திரண்டனர் .மக்களின் கோபம் தகித்தது .அரசு லண்டனை இராணுவ முகாமாகவே மாற்றிவிட்டது .

உச்சகட்டத்தில் வீழ்ச்சி தொடங்கியது. ஒன்றுபட்ட முதலாளித்துவ சக்திகளின் தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாததாலும் ; தொழிலாளி வர்க்க அமைப்பாக சரியாக கெட்டிப்படாததாலும் ;பல குழுக்களாக இணைந்த சாசன இயக்கத்தில் கருத்து மோதல் வலுவடைந்ததும் தோல்விக்கு காரணமாயின.  சாசன இயக்கத் தலைவர்களில் ஒருவரான ஜேம்ஸ் பிராண்டேரீ ஒ பிரியன் மெய்யான புத்திசாதுர்யத்துடன் வர்க்கப் போராட்டம் குறித்தும், முதலாளித்துவ அரசின் வர்க்க குணாம்சம் பற்றியும் புரிதலை வளர்த்தெடுக்க பெரிதும் முயன்றார். “வலுவின்மைகள் தெளிவாகத் தென்பட்ட போதிலும் சாசன இயக்கம் இங்கிலாந்தின் ஒட்டு மொத்த பாட்டாளிவர்க்கத்தையும் தட்டி எழுப்புவதில் வெற்றி பெற்றது மட்டுமல்லாது ,உலகப்பாட்டாளி வர்க்கத்திற்கு பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், அதன் திசைவழியில் அளவிடற்கரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் இருந்தது” என்கிறார் ‘சர்வதேச பாட்டாளி வர்க்க இயக்கம்’ நூலில் சுகுமால் சென் .

“ஆங்கில ஆலைத் தொழிலாளர்கள் இங்கிலாந்துக்கு மட்டுமல்ல நவீன பாட்டாளி வர்க்கத்திற்கே சாதனை நாயகர்கள்” என்பார் காரல் மார்க்ஸ். போராட்டம் முறியடிக்கப்பட்டாலும் கோரிக்கைகள் வென்றன என்பது ஒரு வரலாற்று நம்பிக்கையாகும் .ஆறு கோரிக்கைகளில் கிட்டத்தட்ட அனைத்துமே சட்டப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துவிட்டது. அதுமட்டுமின்றி சாசனவாதிகளும், பொருளாதாரவாதிகளும் வலியுறுத்திய 10 மணி நேர வேலைநாள் என்பது பெண்களுக்கும் குழந்தைத் தொழிலாளிகளுக்கும் என வரம்புகட்டிய முறையிலேனும் அமலுக்கு வந்தது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.
உலகம் முழுவதிலும் உண்மையில் வெகுஜனத் தன்மை கொண்ட – விரிவாகத் திரட்டப்பட்ட – அரசியல் ரீதியாகத் துல்லியமாக வடிவமைக்கப்பட்ட முதல் இயக்கமாக விளங்குவது சாசன இயக்கமே என்றார் லெனின்.

“சமூகமும் ஆட்சியாளர்களும் இதனை உணர்ந்து சரி செய்யத் தவறினால்; உழைப்பாளர் பிரச்சனை இன்றைய சமூகத்தில் பெரும் பிரச்சனையாக வெடிக்கும்” என பிரெஞ்சுக் கவிஞரும் வரலாற்றாளருமான லமார்ட்டீன் எச்சரித்தார். ஐரோப்பா விரைவில் அந்நிலையைக் கண்டது.
நன்றி : தீக்கதிர் 20/3/2017


0 comments :

Post a Comment