‘சாமானியன்’ பெயரில் மட்டுமல்ல...

Posted by அகத்தீ Labels:


புரட்சிப் பெருநதி – 19


‘சாமானியன்’ பெயரில் மட்டுமல்ல...தன் முயற்சிகள் எல்லாம் பயனற்றுப் போவதையும்
தன் படைப்புகளுக்கு தொடர்ந்து
தடை விதிக்கப்படுவதையும் தாங்கிக்கொள்ள முடியாமல்
துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலைக்கு முயன்றார்.

"சித்தாந்த ரீதியான ஜெர்மன் நாட்டின் சோஷலிசம் ஒரு போதும் அவர்களை மறக்காது; மாறாக அந்த மூவரின் தோள் மீதுதான் அது நிற்கிறது…" என ஏங்கெல்ஸ் புகழாரம் சூட்டிய மூவருள் செயிண்ட் – சைமன் முதலில் இருப்பார். ஃபோரியரும், ஓவனும் அடுத்து வருவர்.

1760 இல் பாரீஸில் ஒரு தளபதிக்கு முதல் மகனாய் - செல்வச் செழிப்போடு பிறந்தவர் கிளாட் – ஹென்றி – டி செயிண்ட் சைமன். பள்ளிப் பருவத்திலேயே மேதைகளின் தொடர்பைப் பெற்றவர். ஜீ அலெம்பர்ட்டின் தொடர்பு அவருள் மறுமலர்ச்சி விதையைத் தூவியது, பதிமூன்று வயதில் கடவுள் மறுப்பு பேசினார். தேவாலயத்தில் ஞானஸ்தானம் பெற மறுத்தார். அதிர்ச்சி அடைந்த தந்தை சிறை வைத்தார். திருந்துவார் என நினைத்தார். ஆனால், சிறைக்காவலரை கத்தியால் குத்திவிட்டு தப்பித்தார்.

17 வயதில் ராணுவத்தில் சேர்ந்தார். விரைவில் இளநிலை அதிகாரியானார். அமெரிக்கா சென்று ஜார்ஜ் வாஷிங்டனோடு விடுதலைப் போரில் பங்கேற்றார்.அதற்காக பாராட்டும் விருதும் பெற்றார். ஆனால் பிரிட்டிஷ் அரசு மன்னிக்கத் தயாரில்லை. சைமன் நாடு திரும்பும் வழியில் கைது செய்து ஜமைக்காவில் காவலில் வைத்தது. 1784 இல் தான் நாடு திரும்ப முடிந்தது.

ராணுவத்தில் பணியாற்றிய சைமன்; 1789 ஆம் ஆண்டு புரட்சிக் கனல் மூண்டதும் அதனை ஆதரிக்கத் தொடங்கினார் . பிரெஞ்சு மொழியில் விவசாயிகளை ‘சாமானியன்’ எனும் பொருள் தரும் ‘பான் ஹோம்’ எனக் குறிப்பிடுவர். சைமன் தனக்கு பான் ஹோம் என பெயர் சூட்டிக் கொண்டது அலங்காரத்துக்கல்ல; அவரது உள்ளம் சாமனியர் நோக்கியே நகர்ந்தது.

தான் கனவு கண்டது போல் புரட்சிக்கு பின்னர் நாட்டு நிலை இல்லை என்பதால் -தன் பாணியில் தன் கனவுக்கு உயிர் கொடுக்க முயன்றார்.ஸ்பெயின் நாட்டு நண்பர் பாரன் ரிட்டர்னுடன் இணைந்து திருச்சபை, பிரபுக்கள் நிலத்தை வாங்கி ஏழை விவசாயிகளுக்கு மிகக்குறைந்த விலையில் விற்றார் .

மறுபுறம் புரட்சியின் ஒரு பிரிவினரான ஜாக்கோபின்களின் சர்வாதிகாரப் போக்கைக் கண்டித்தார். கைது செய்யப்பட்டு காற்றும் வெளிச்சமும் இல்லாத லக்ஸம்பர்க் சிறைக் கொட்டடியில் அடைக்கப்பட்டார். 1794 இல் தான் விடுவிக்கப்பட்டார்.வியாபாரக் கூட்டாளி ரிட்டர்ன் எடுத்த முடிவால் சைமன் பெரிதும் நட்டப்பட்டார்.

அவருக்கு திருமணம் நடந்தது; அதுவும் மனமுறிவில் முடிந்தது. சொந்த வாழ்விலும் பொதுவாழ்விலும் நம்பிக்கை நொறுங்கிப் போனது."மனித சமுதாயத்தின் ரணங்களைக் குணமாக்க புரட்சி அல்ல; விஞ்ஞானமே வழி" என அவரது சிந்தனை விரிந்தது.

ஐரோப்பா முழுவதும் பயணித்தார். பல விஞ்ஞானிகளோடு உரையாடினார். தெளிவற்ற கற்பனாவாதத் திட்டங்களாலான - "ஜெனிவாவில் வசிக்கும் ஒருவர் சமகாலத்தவருக்கு எழுதிய கடிதம்" என்கிற தன் முதல் படைப்பை 1803 இல் வெளியிட்டார்.கையிலிருந்த பணம் கரைந்ததால் அடகுக் கடையில் குமஸ்தா வேலை செய்து கொண்டே இரவில் விஞ்ஞானம் சார்ந்து கட்டுரைகள் எழுதினார். பழைய நண்பர் டியார்ட்டின் உதவியோடு "19 ஆம் நூற்றாண்டு விஞ்ஞானப் படைப்புகளுக்கு ஓர் அறிமுகம்" எனும் நூலை வெளியிட்டார். டியார்ட்டின் திடீரென இறந்துவிட -செல்வத்தில் பிறந்தவர் தன்னுடைய உடையை விற்று ரொட்டி வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.முழுமையான ஈர்ப்பாற்றல் ,மனிதனுக்கான விஞ்ஞானம் ,இயந்திரத் தொழில் அமைப்பு என பல கட்டுரைகள் எழுதினார்.

"இன்றைய துன்ப துயரங்களுக்குக் காரணம் நிலப்பிரபுத்துவ அமைப்பிலிருந்து இயந்திர விஞ்ஞான அமைப்புக்கு மாறுவதில் உள்ளது .புதிய அமைப்பு தோன்றும்வரை இது தொடரும்" என்றார். இவரின் "அறிமுகம்" நூல் இதனை விவரித்தது. அறிமுகத்தின் இரண்டாம் பாகத்தில் பிரெஞ்சுப் புரட்சி முற்றுப் பெறாமல் இருப்பதையும்; அதன் காரணங்களையும் இயல்பாக அலசினார். தொடர்ந்து "மனிதாபிமானிகளுக்கு எழுதிய கடிதம்" உள்ளிட்டவை புதிய அமைப்பு உருவாக வேண்டிய தேவையைச் சொல்லியது.

ரஷ்ய டிசம்பரிஸ்ட் இயக்கத்தை சார்ந்த லியூன் உடன் ஏற்பட்ட தொடர்பு சைமனிடம் பெரும் மாற்றத்தை விளைவித்தது. சமூகத்தை புனரமைக்கச் செய்யும் முயற்சிகள் எல்லாம் பயனற்றுப் போவதையும் தன் படைப்புகளுக்கு தொடர்ந்து தடை விதிக்கப்படுவதையும் தாங்கிக்கொள்ள முடியாமல் 1823 இல் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலைக்கு முயன்றார். ஒரு கண் பார்வையை இழந்தார். மீண்டு எழுந்தார்.

"தொழிலதிபர்களுக்கான குறிப்புரை", "இலக்கிய தத்துவத் தொழில் பேருரைகள்" நூல்களை 1823-24 ஆம் ஆண்டுகளில் வெளியிட்ட பின் 1825 இல் நிலைத்த புகழுக்குரிய "புதிய கிறுத்துவம்" நூலைப் படைத்தார். முற்றுப் பெறா அந்நூலில் முதலாளித்துவ சமுதாயத்தை புலன் விசாரணை செய்தார். அனைத்துத் தீமைகளுக்கும் காரணம் எதுவென கேள்வி எழுப்பினார். புரட்சியை தீர்வாகக் காண மறுத்தார். பண ஆதிக்கம், சுரண்டல், போலித்தனம், ஏமாற்று ஆகியவற்றைக் கொண்ட சமூக அமைப்புக்கு மாற்றாக ஒரு கற்பனை சமூகத்தை வரைந்து காட்டினார். வேலை செய்வது அனைவருக்கும் கட்டாயக் கடமையாக்கப்பட்ட சமூகம்; அதில் தொழிலாளிகள், கைவினைஞர்கள், முதலாளிகள் எல்லோரும் இருப்பர். பணம் படைத்தோர் மக்கள் சேவகர்களாக விளங்குவர். புதிய தொழில்மய ஆட்சியில் மக்கள் நலன் பேண விஞ்ஞானிகள், தொழிலாளர்கள் ஒரு புறமும், முதலாளிகள் இன்னொரு புறமுமாய் ஒத்திசைவோடு செயல்படுவர்.கிறுத்துவத்தின் மனிதாபிமான கூறுகளோடு திருச்சபை ஒழுங்குபடுத்தும் கருவியாக்க முனைந்தார் .

1825 இல் சைமன் இறந்த பிறகே அவரது சிந்தனை தீவிரமாக பரவியது. குறிப்பாக 1826 -28-30 ஆம் ஆண்டுகளின் செயிண்ட் சைமனிஸ்ட் என்றழைக்கப்பட்ட அறிவுஜீவிகளும் போராளிகளும் பிரெஞ்சு சமூகத்தில் மட்டுமின்றி ஐரோப்பா முழுவதும் குறிப்பிடத்தக்க பாத்திரம் வகித்தனர் .அவரது கற்பனாவாத சோஷலிசத்தில் பல பித்துக்குளித்தனங்கள் இருப்பினும் அவர் தலைசிறந்த சிந்தனாவாதி என ஏங்கெல்ஸ் கொண்டாடினார்.
பிரெஞ்சு கற்பனாவாத சோஷலிசம் மார்க்சியத்தின் தோற்றுவாய்களில் ஒன்றென லெனின் எடுத்துக்காட்டினார் ; புதிய சமூகத்தைப் படைக்கும் சமூக சக்தி எதுவென்பதை அடையாளம் காணத் தவறியது அதன் முக்கிய பலவீனமென்றார். மரணத்தை தழுவதற்கு சில நொடிகள் முன்னால்கூட தனது லட்சிய சமுதாயம் கைக்கூடும் என் சைமன் நம்பினார் "நாளை நமதே" என்பதே அவரின் கடைசி வார்த்தையாகும்.புரட்சி தொடரும்…
- சு.பொ.அகத்தியலிங்கம்
நன்றி : தீக்கதிர் , 13 /3/20170 comments :

Post a Comment