சிறையில் பிறந்த நாவல் ; லெனினை ஈர்த்தது

Posted by அகத்தீ Labels:





புரட்சிப் பெருநதி – 17


சிறையில் பிறந்த நாவல் ; லெனினை ஈர்த்தது





சிறையில் பிறந்த நாவல் ; லெனினை ஈர்த்தது




ஆயுதப்படை சூழந்து நிற்க அவர் தலைமீது
ஒரு வாள் அடித்து உடைக்கப்பட்டது.
காவலையும் மீறி திரண்டிருந்த மாணவர்களும்
இளைஞர்களும் செர்னி செவ்ஸ்கியை வாழ்த்தி
அவரை நோக்கி பூங்கொத்துகளை வீசினர்.

‘எந்த நேரத்திலும் போலீசார் என்னைக் கைது செய்யலாம் . சிறையிலடைக்கலாம் . எவ்வளவு காலம் சிறை வைப்பார்கள் ? கடவுளுக்கே வெளிச்சம் . இப்படித்தான் எனக்கு தோன்றுகிறது .இங்கு என் பணி அப்படி’திருமணத்திற்காக பெண் பார்க்கப் போன இடத்தில் இப்படித்தான் சொன்னார் அவர் . அந்தப் பெண்ணும் மனமுவந்து இசைவு சொன்னார்.

1853ல் இது நடந்தது . அவர்தான் நிக்கோலாய் காவ்ரிலோவிச் செர்னி செவ்ஸ்கி . அந்தப் பெண் ஓல்கா ஸோக்ரடோவ்னா வாஸ்லியீவா.செர்னி செவ்ஸ்கி ஒரு பாதிரியாரின் மகனாய் 1828 ல் ரஷ்யாவில் சாரட்டோ கிராமத்தில் பிறந்தார்.இறையியல் பள்ளியில் பயின்றார். ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், லத்தாலி, இத்தாலி, கிரேக்கம், பழைய சல்வோனிக் முதலிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார்.அரபு ,ஹிப்ரூ மொழிகளையும் ஓரளவு கற்றார்.

பாதிரியாராக வேண்டும் என்கிற தந்தையின் கனவை நிராகரித்தார். செயிண்ட் பீட்டர்ஸ் பல்கலையில் பயிலும் போது எம் எல் மிக்கைல் நண்பரானார். இலக்கியமும் சமூகச் சிந்தனையும் உற்ற தோழராக்கியது. அவர் பின்னர் புரட்சிக் கவிஞரென புகழ்படைத்தவர் ஹெகல், பயாபர்க் போன்றோரை கற்றறிந்து நாத்திகரானார்.கல்விப் பணியில் ஈடுபட நினைத்தார். ஜாரின் கொடுங்கோன்மையை எதிர்ப்பவராக புரட்சிகர திசையில் நகரலானார்.

1853ல் திருமணத்துக்கு பின்னர் ஆசிரியப்பணி செய்து கொண்டே ‘யதார்த்தமும் கலையின் அழகியல் உறவுகளும்’ எனும் தலைப்பில் ஆய்வில் ஈடுபட்டார். ‘சமகாலம்’ எனப்படும் ‘ஸோவரெமெனிக்’  ஏட்டில் தொடர்ந்து இலக்கிய, தத்துவக் கட்டுரைகள் எழுதினார் .

1861 ஜார் அறிவித்த நிலச் சீர்திருத்தத்தை விமர்சித்து ‘முகவரியில்லா கடிதங்கள்’ எனும் தலைப்பில் கட்டுரைகள் தீட்டினார். ‘இது மாற்றங்களின் துவக்கமில்லையா?’ உட்பட செர்னி செவ்ஸ்கி எழுதிய கட்டுரைகள் ஆட்சியாளரை மிரளவைத்தது. பத்திரிகை முடக்கப்பட்டது. செர்னியும் கைது செய்யப்பட்டு செயிண்ட் பீட்டர்ஸ் பர்க்கில் பால் கோட்டையில் சிறை வைக்கப்பட்டார்.

‘தணிக்கைசெய்யப்படும் கட்டுரைகள் மூலம்கூட அவரால் மெய்யான புரட்சிப் போராளிகளைப் பயிற்றுவிக்க முடிந்தது’ என லெனின் பின்னர் மதிப்பிட்டார்.கவிஞர் மிக்கைலோவ் 12 ஆண்டு கடுங்காவல் தண்டனையாக சைபீரியாவுக்கு கடத்தப்பட்டார்.

செர்னி செவ்ஸ்கி நான்கு மாதம் பால் கோட்டையில் சிறைப்பட்ட காலத்தில் புகழ்பெற்ற ‘இனி என்ன செய்ய வேண்டும்?’ நாவலை எழுதினார்.இந்நாவல்தான் மாணவனாக இருந்த போது தன்னை செதுக்கியதாக லெனினே பலமுறை சொல்லியுள்ளார். புரட்சியின் முக்கிய திருப்பத்தில் லெனின் எழுதிய நூலின் தலைப்பே நாவலையொட்டி ‘என்ன செய்ய வேண்டும்’ என அமைந்தது இந்நாவ லின் மீதான ஈர்ப்பின் அடையாளம் எனலாம்.

நாவலை ஜாராட்சி தடை செய்தது. புரட்சிக்கு பிறகே அதிகார பூர்வமாய் மீண்டும் வெளிவந்தது.

மக்களின் அசமந்தத்தனம், கோழைத்தனம், லாபப்பேராசை இவற்றை இந்நாவல் பகடி செய்தது. புதிய ஜனநாயக உணர்வுமிக்க மக்களையும் காட்சிப் படுத்தியது. ‘ராக்மேட்டோவ்’ எனும் கதாபாத்திரம் ஒரு புரட்சிகரமான போராளி; அனைத்து சித்ரவதைகளையும் முகமலர்ச்சியோடு ஏற்பவன். சமூக நலனுக்கு சொந்த நலனை உட்படுத்துபவன். காந்தமாய் ஈர்த்த பாத்திரம் அது.

செர்னி செவ்ஸ்கியும் ஒரு பாத்திரமாகி தாராளவாதிக்கும் பிற்போக்குவாதிக்கும் எதிராய் தத்துவ சமர் புரிவார்.சிறைவாசத்தில் சில வரலாற்று நூல்களை மொழி பெயர்த்தார் .

29 சிறுகதைகள் எழுதினார். இருளடர்ந்த சிறையிலும் அவரது எழுத்துகள் ஒளியுமிழ்ந்தன.1864 மே 19ல் பொதுமக்கள் பார்க்கும் இடத்தில் ஆயுதப்படை சூழந்து நிற்க அவர் தலைமீது ஒரு வாள் அடித்து உடைக்கப்பட்டது. காவலையும் மீறி திரண்டிருந்த மாணவர்களும் இளைஞர்களும் செர்னி செவ்ஸ்கியை வாழ்த்தி அவரை நோக்கி பூங்கொத்துகளை வீசினர்.

1864 மே 20 ல் சைபீரியாவுக்கு கடத்தப்பட்டார். பயணம் உடல் நிலையை கெடுத்தது .மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டபோது தோழன் மிக்கைலோவை சந்தித்தார்.அவர் கடும் நோயால் பீடிக்கப்பட்டிருந்தார். சில காலத்திற்குப் பின் அவர் இறந்த செய்தியே கிடைத்தது.

செர்னி மருத்துவத்துக்கு பின் கட்டாய உழைப்புக்காக சுரங்கத்துக்கு அனுப்பப்பட்டார்.செர்னிக்கு ஏழாண்டு காவல் முடிந்தும் பொது மன்னிப்பு மறுக்கப்பட்டு மேலும் 12 ஆண்டு கடுங்காவல் விதிக்கப்பட்டு வில்யூயின் சிறையில் அடைக்கப்பட்டார் . ப்ரோலோக் நாவல், ஒரு பெண்ணின் கதை: தி டிசண்டட் ஆப் பார்ப்பரோஸா என்ற கதையின் மூன்று அத்தியாயங்கள், முடிவில்லாத நாடகம் உள்ளிட்ட நாடகங்கள் மற்றும் சில படைப்புகளை சாதுரியமாக 1871ல் தன் மனைவிக்கு அனுப்பிவைத்தார் .
1857 ஆம் ஆண்டு சீர்திருத்த நடவடிக்கைகளை பின்னணியாக வைத்து சைபீரிய சிறைவாசத்தின் போது செர்னி எழுதிய புகழ் பெற்ற படைப்பே , ‘ப்ரோலோக்’ . முதல் பாகம் லண்டனில் வெளியிடப்பட்டது. இதரவை அவர் மறைவுக்குப் பின்னரே வெளிவந்தது.1883ல் சைபீரியாவிலிருந்து இர்குட்ஸுக்கு கொண்டுவரப்பட்டார். அங்கு மனைவியையும் குழந்தைகளையும் சந்தித்தார். சிறுவயதில் பிரிந்தது; இப்போது அலெக்சாண்டருக்கு 29 வயது –மிக்கைலுக்கு 25 வயது .

பிறகு ஓல்காவுக்கு அனுப்பப்பட்டார். ‘வாழ்க்கைப் போராட்டத்தின் பயன் பற்றிய சித்தாந்தம்’ எனும் கட்டுரையை 1888 ல் வெளியிட்டார். 1860 புரட்சியின் முக்கிய வீரர்களான நெக்ரஸோவ், டோப்ரோலியூபோவ் நினைவலைகளை எழுதினார். ‘டோப்ரோ லியூபோவின் வாழ்க்கை வரலாற்றுக்கான விபரங்கள்’ நூலை வெளியிட முயன்றார். ஆனால், இந்நூல் செர்னி மறைவுக்குப் பிறகு 1890ல் வெளியிடப்பட்டது.

உடல்நிலை சீர்கெட்டது. உறவினர்கள், நண்பர்கள் முயற்சியால் 24 ஆண்டு சிறைவாசத்துக்கு பின்னர் 1889ல் சொந்த ஊரில் இருக்க அனுமதிக்கப்பட்டார், நான்கே மாதங்களில் 1889 அக்டோபர் 17 ஆம் நாள் மரணமடைந்தார்.இறுதிச் சடங்கில் இரங்கல் கூட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டது; எனினும் மக்கள் வெள்ளம் அந்த கிராமத்தை மூழ்கடித்தது.புரட்சி வெற்றி பெறும் வரை செர்னி செவ்ஸ்கி என்ற பெயரையும் அவரது படைப்புகளையும் ‘அபாயகரமானதாகவே’ ஆட்சியாளர்கள் கருதினர்.

‘செர்னி செவ்ஸ்கி உண்மையில் தலை சிறந்த எழுத்தாளர். 1850 முதல் 1888 வரையிலான காலகட்டத்தில் ஒருங்கிணைந்த தத்துவார்த்த பொருள் முதல்வாதத்தின் தரத்தை அவரால் மட்டுமே கட்டிக்காக்க முடிந்தது. நியோகாண்டின்கள், நேர்நிலைவாதிகள், அனார்க்கிஸ்டுகள்,குழப்பவாதிகள் போன்றோரின் இழிவான முட்டாள்தனங்களை வெறுத்தொதுக்கியவர் செர்னி செவ்ஸ்கியே’ என்றார் லெனின்.

‘இனி என்ன செய்ய வேண்டும்’ நாவல் புரட்சிக்கு இளைஞர்களைச் செதுக்கிக்கொண்டே இருந்தது.
புரட்சி தொடரும்…
நன்றி : தீக்கதிர் , 27/2/2017



0 comments :

Post a Comment