பாஸ்டில் சிறை தகர்ப்பு; பசிக் கலகங்கள்…

Posted by அகத்தீ Labels:புரட்சிப் பெருநதி-16
பாஸ்டில் சிறை தகர்ப்பு; பசிக் கலகங்கள்
கிராக்குஸ், பாசூப்பைச் சுற்றி ஒரு புரட்சியாளர் குழு உருவாயிருந்தது.
இவர்களது சமூகப் பொருளாதாரப் பார்வைதான்
19ம், 20ம் நூற்றாண்டுகளின்
சோஷலிச இயக்கங்களுக்கு அடித்தளமானது  


 பிரெஞ்சுப் புரட்சியை எழுதுவதெனில் எனக்குச் சிரமமாக இருக்கிறது . காரணம் போதிய விஷயமின்மை அல்ல; ஏராளமான விஷயங்கள் குவிந்திருப்பதே என்றார் நேரு.

பிரான்ஸில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக மன்னராட்சிதான். வெர்செய்ல்ஸில் அமைந்த 14 ஆம் லூயியின் இரு அரண்மனைகளும் சர்வாதிகாரத்தின் குறியீடானது . 15 மற்றும் 16 ஆம் லூயிகளும் அவ்வாறே.
1688
முதல் 1783வரை பிரான்சும் பிரிட்டனும் ஐந்து போர்களில் ஈடுபட்டன. அரசு கஜானா காலியானது. மக்கள் மீது அரசு கடும் சுமையை ஏற்றியது.

மக்கள் மூன்று எஸ்டேட்டாக (Three Estates) பிரிக்கப்பட்டிருந்தனர். அரச குடும்பம், பெரும் நிலக் கிழார்கள் முதல் எஸ்டேட் -ரோமன் கத்தோலிக்க குருக்கள், அதிகாரிகள் இரண்டாம் எஸ்டேட் -சிறு வணிகர்கள், விவசாயிகள், உழைப்பாளிகள் மூன்றாம் எஸ்டேட். சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால், மக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர்.

மெஸ்லியரின் மரணசாசனத்தை சுருக்கி வால்டேர் வெளியிட்டார்; மேலும் வால்டேரின் வீரியமிக்க எழுத்துக்கள் கிறுத்துவ மதசபையை , பிரபுக்களைத் தாக்கின. ரூஸோவின் சமுதாய ஒப்பந்தம் எதேச்சதிகாரத்தை எதிர்த்தது; சமத்துவக் குரலை எழுப்பியது. தத்துவவியலாளர் மாண்டெஸ்கியூ சட்ட வடிவிலான அரசாங்கம் வேண்டுமென்றார் .
வால்டேர், ரூஸோ, தஆலம்பேர் உதவியுடன் ஒரு கலைக்களஞ்சியத்தை 1751 ல் தீதரே தயாரித்தார். அது அறிவியல், தொழில், விவசாயம், கலைகள் இவற்றின் பிரச்சனைகளைப் பேசியது; மதபீடத்தை தாக்கி தீதரே எழுதியதும் இடம் பெற்றது . கலைக் களஞ்சியத்தின் முதல் தொகுதியை மதபீடம் எரித்தது. ஆயினும் மீண்டும் வெளிவந்தது . மதபீடத்தை எதிர்த்தாலும் மதத்தை எதிர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களின் எழுத்துக்களும் உரையும் சிந்தனையைக் கூரேற்றின ; சுதந்திரம் , சமத்துவம்,சகோதரத்துவம் எனும் லட்சியப் பதாகையை உயர்த்திப் பிடித்தன.

1614
க்கு பிறகு 19.5.1789 அன்று 16 ஆம் லூயி பேராயத்தை வெர்செயில்ஸில் கூட்டினான். கூட்டம் துவங்கியதும் மன்னன் தன் அதிகாரச் சின்னமாய் தலையில் துணியைக் கட்டினான். மூன்றாம் எஸ்டேட் மக்கள் வழக்கம் போல் மண்டியிட்டு பணியாமல் தலையில் துணிகட்டி சுயமரியாதையை நாட்டினர். புதிய வரிகளை ஏற்க மறுத்து தேசிய அசெம்பிளியை உருவாக்குவதாக மக்கள் அறிவித்தனர். மன்னர் வெகுண்டார்.

அரசன் மூன்று எஸ்டேட்டையும் தனித்தனியே கூட்டிட முயன்றான். மக்கள் எதிர்த்தனர். கூட்ட அரங்கை மன்னன் பூட்டிவைத்தான். மக்கள் அருகிலுள்ள டென்னிஸ் மைதானத்தில் கூடி தேசியஅசெம்பிளியைப்பிரகடனப்படுத்தினர் .அரசுக்கு பல நிபந்தனைகளை விதித்தனர். மோதல் முற்றியது. வரிக்கொள்கையை எதிர்த்த நிதி அமைச்சர் நெக்கரை மன்னன் பதவி நீக்கம் செய்தான். ராணுவத்தைக் குவித்து மக்களைக் மிரட்டினான்.

அதிகாரத்தின் குறியீடாக இருந்த -100 அடி உயரமும் 80 அடி அகழியும் கொண்ட பாஸ்டில் சிறையை நோக்கி1789 ஜூலை 14 இல் பாரீஸ் நகரில் மக்கள் திரண்டனர். ஹோட்டல் திஸ்லா வேலிட்டில் கைப்பற்றப்பட்ட பீரங்கியை மக்கள் இழுத்துவந்தனர் .மோதலில் 83 பேர் கொல்லப்பட்டனர். சிறை தகர்க்கப்பட்டது. அங்கிருந்த ஆயுதங்கள் மக்கள் கைக்கு மாறின. கலவரம் பரவியது.

1789
ஆண்டில் கடைசி ஆறு மாதம் மட்டிலும் 250 பத்திரிகைகள் வெளியிடப்பட்டன. ரோபஸ்பியர் தலைமையில் ஜாக்கோபின் கிளப், டாண்டன், ஹெபர்ட் இடம் பெற்ற கோர்டிலேயர் கிளப் கிராண்டோன் தலைமையிலான குழு , ஜான் போல் மாராவின் மக்கள் நண்பன் கிளப், சகோதரக் கழகம் மனித உரிமைக் கழகம் என பலதும் செயல்படலாயின.

வேலை நிறுத்தங்கள், பசிக்கலகங்கள் எழுந்தன. முன்னாள் நடிகையான க்ளேர் லாகூம் தலைமையில் பெண்கள் உணவுகேட்டு அணிவகுத்தனர் .டி ஜான் நகரில் பட்டினியால் பரிதவித்தோர் ரொட்டி கேட்டு திரண்ட போது லூயி மன்னனும் அவன் மனைவியும் புல்லைத் தின்னுங்கள் என ஆணவத்தோடு பதில் சொன்னார்கள்.
மக்களின் எழுச்சி 1790 இல் மன்னனை சில சீர்திருத்தங்களுக்கு உந்தித்தள்ளியது. நாடு 83 கம்யூன்களாகப் பிரிக்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு வழிவகுத்தது. மதகுருக்கள், நிலப்பிரபுக்களைக் கட்டுப்படுத்த முயன்றது. தொழிலாளர்களை நசுக்கியது. உரிமையற்றவராக்கியது. இதனால் தொழிலாளர்கள் திரண்டனர். துப்பாக்கிச் சூட்டில் தொழிலாளிகள் இறந்தனர். மோதல் தொடர்ந்தது.

மனிதர்கள் சுதந்திரமாகப் பிறக்கிறார்கள், சுதந்திரம், சமத்துவம் உரிமை கொண்டவர்களாக வாழ்கிறார்கள் என்கிற புகழ்பெற்ற வாசகங்களுடன், தனியுடைமையைப் பாதுகாத்துக் கொண்டே, எல்லோருக்கும் வாக்குரிமையோடு ஒரு முதலாளித்துவ சுதந்திரத்தை பிரான்ஸ் 1792 செப்டம்பர் 20 நாள் உறுதி செய்தது.
ஆதிக்கப் போட்டியில் ஜேக்கோபின், கிராண்டோன் என மாறி மாறி கில்லட்டினுக்கு இரையாக்கினர். அரசியல் கொந்தளிப்பும் விறுவிறுப்புமாய் நிகழ்ச்சிகள் தொடர்ந்தன. 1799 ல் நெப்போலியன் போனாபட் அரியணை ஏற வழிவகுத்தது.

வரலாற்றாசிரியர் கிறிஸ் ஹார்மன் கூறுகிறார், உலக வரலாற்றில் புரட்சியின் ஒட்டுமொத்த தாக்கத்தை மிகச்சரியாகப் பார்க்கும் வரலாறுகள், பாரீஸின் அதிநெருக்கடியான ஏழைகள் வாழும் பகுதிகளில் அதன் குறுகிய தெருக்களில் நடந்தவற்றைக் குறைத்துக் கூறும் அபாயம் உள்ளது. இந்த இடங்களில்தான் மக்கள் தம் செக்ஷன்களில் மாரா, ஹெபர்ட் ஆகியோரின் எழுத்துக்களை மணிக்கணக்கில் படித்து விவாதித்தனர். உணவுப் பதுக்கல்காரர்களை வேட்டையாடினர். அரச விசுவாசிகளைத் தேடினர். ஈட்டிகளைத் தீட்டிக்கொண்டு பாஸ்டில் சிறை நோக்கி அணிவகுத்தனர். அரசியலமைப்பு சட்டரீதியான முடியாட்சிக்கு பதிலாக கிராண்டோன்களையும் கிராண்டோன்களுக்கு பதிலாக ஜோக்கோபின்களையும் பதவியிலமர்த்தி எழுச்சிகளுக்கு திரண்டனர். ஆயிரக்கணக்கில் போர்முனைக்கு சென்றனர் .கிராமங்களில் புரட்சியைப்பரப்பினர்.

மேலும்; 1796 ல் கொல்லப்பட்ட கிராக்குஸ், பாசூப்பைச் சுற்றி ஒரு புரட்சியாளர் குழு உருவாயிருந்தது. இவர்களது சமூகப் பொருளாதாரப் பார்வைதான் 19ம், 20ம் நூற்றாண்டுகளின் சோஷலிச இயக்கங்களுக்கு அடித்தளமானது என்றார்.

பிரெஞ்சு புரட்சி ஒடுக்கப்பட்ட போதிலும், வரலாற்றை படிக்கும் ஒவ்வொருவரும் அதை வெற்றிகரமானதென்றே கருதுகின்றனர். இந்தப் புரட்சி பூர்ஷ்வா ஜனநாயகம். பூர்ஷ்வா சுதந்திரத்திற்கு அடித்தளம் இட்டது என்றார் லெனின்.

பிரெஞ்சு புரட்சி ஒரு பூர்ஷ்வா புரட்சி என்பதில் ஐயமில்லை. அதனுடைய தன்மை பூர்ஷ்வா அடிப்படையில்அமைந்ததால், உழைக்கும் மக்களை அது சுரண்டலிலிருந்து விடுவிக்கவில்லை என்று தெளிவாக சொன்னார் மார்க்ஸ்.

பிரெஞ்சு தேசியகீதத்தின் சில கனல் வரிகள்

எங்களின் வாளும் கேடயமும்
சுதந்திரமே
இதற்குமுன்
கொடுங்கோலர்களின்
எல்லா ஆயுதங்களும்
பயனற்றவையே !
நன்றி : தீக்கதிர் ,20/2/2017.

புரட்சி தொடரும்


0 comments :

Post a Comment