தீப்பொறியின் கர்ப்பகாலம்

Posted by அகத்தீ Labels:





புரட்சிப் பெருநதி-14


தீப்பொறியின் கர்ப்பகாலம்


‘கற்றுக்கொள்!
பிரச்சாரம் செய்!
 ஸ்தாபனமாக்கு’
என்றார் ஜெர்மன் சமூக ஜனநாயக இயக்கத்தின்
முன்னணித் தலைவர் லீப்க்னெஹ்ட்.
அந்த மகாவாக்கியங்களே நமக்கு மந்திரமாக…

mm 

"அவை அனைத்தின் இடத்திலும், ஆம் அவை அனைத்தின் இடத்திலும், நாம் சுதந்திரத்தை வென்றெடுக்கும் வரை, ஒரு புரட்சிகர செய்திப் பத்திரிகை நமக்கு வேண்டும். அது இல்லாமல் முழுமையான தொழிலாளி வர்க்க இயக்கத்தின் விரிந்த ஸ்தாபனம் உருவாகாது.சதி வேலைகளில் நமக்கு நம்பிக்கை இல்லை. அரசாங்கத்தை ஒழிக்க தனி மனித புரட்சிகர அதிரடி வேலைகளில் இறங்கப் போவதில்லை. ‘ கற்றுக்கொள்!பிரச்சாரம் செய்!ஸ்தாபனமாக்கு’ என்றார் ஜெர்மன் சமூக ஜனநாயக இயக்கத்தின் முன்னணித் தலைவர் லீப்க்னெஹ்ட். அந்த மகாவாக்கியங்களே நமக்கு மந்திரமாக இருக்கிறது. இதனைக் கட்சிப் பத்திரிகை ஒன்றாலேயே செய்ய முடியும் . செய்ய வேண்டும்."

வேடிக்கை என்னவெனில் மேலே குறிப்பிட்ட வரிகளைத் தாங்கிய கட்டுரையை லெனின் எழுதினார். ஆனால் பிரசுரமாகவில்லை.

பீட்டர்ஸ்பர்க், கீவ், மாஸ்கோ நகரங்களிலும் லாத்துவியா, போலந்து, லிதுவேனியா என மேற்கு எல்லையோர பகுதிகளிலும் இயங்கிவந்த போராட்டக் கழகங்களும், ’பண்ட்’ என அழைக்கப்பட்ட யூத மத அடிப்படையில் அமைந்த யூத பொது சமூக - ஜனநாயக கூட்டமைப்பும் கூட்டாக கட்சி தொடங்க முன் கை எடுத்தன. மேற்கு எல்லையோர மின்ஸ்க் நகரில் 1898 மார்ச் மாதம் மாநாடு கூடியது. "ரஷ்ய சமூக – ஜனநாயக கட்சி" ஸசுளுனுடுஞ] பிறந்தது.மாநாட்டில் பங்கேற்றவர் 9 பேரே.

லெனின் பங்கேற்கவில்லை; அவர் அப்போது சைபீரியாவில் தண்டனை வாழ்வு நடத்திவந்தார். பிளக்கனோவ் தலைமையில் மூவர் கொண்ட மத்தியக் குழுவையும் மாநாடு தேர்வு செய்தது. கீவ் நகரில் சமூக ஜனநாயகவாதிகள் வெளியிட்டுவந்த ‘ரப்போச்செயா கெஜட்டா’ ஸதொழிலாளர்கள் கெஜட்]வை தமது அதிகாரப் பூர்வ ஏடாக கட்சி அறிவித்தது.இந்த மாநாடு பற்றி அறிந்த லெனின் மிகவும் மகிழ்ந்தார் . ரப்போச்செயா கெஜட்டாவில் எழுதுமாறு லெனினை பிளக்கனோவ் கேட்டுக்கொண்டார்.

"நமது திட்டம்", "நமது உடனடிப் பணிகள்", "ஒரு அவசரப் பிரச்சனை" உள்ளிட்ட பல கட்டுரைகளை லெனின் அனுப்பினார் . சோகம் என்னவெனில் மாநாடு முடிந்து குறுகிய காலத்தில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் மூவரில் இருவர் கைது செய்யப்பட்டுவிட்டனர். பிளக்கனோவ் தலைமறைவானார். பத்திரிகை முடக்கப்பட்டுவிட்டது .எனவே லெனின் எழுதிய கட்டுரைகள் வெளியாகவில்லை. லெனின் மறைவுக்குப் பிறகு 1925 இல் அவரது நூல் தொகுப்பில் சேர்க்கப்பட்டது. துவக்கத்தில் குறிப்பிட்ட வரிகள் அவற்றிலுள்ளவையே !

1896லியே தொடங்கிய "ரஷ்யாவின் முதலாளித்துவத்தின் வளர்ச்சி" என்கிற நூலுக்காக 500 க்கும் மேற்பட்ட புத்தகங்களைப் படித்தார். 600 பக்கங்களோடு 1899 ஆம் ஆண்டு நூல் வெளிவந்தது.

ஷூசென்ஸ்கொயே கிராமத்தில் வாழ்ந்த போதே பத்திரிகைக்கான பூர்வாங்க திட்டத்தை வரையலானார். என்ன பெயர் வைப்பது? இலக்கியங்களை அசை போட்டார். நினைவில் விரிந்தது - சைபீரியாவுக்கு ஜார் மன்னனால் நாடு கடத்தப்பட்ட டிசம்பரிஸ்ட் போராளிகளை வாழ்த்தி ரஷ்யாவின் மகாகவி புஷ்கின் எழுதிய கவிதை;

"தொலைதூர சைபீரிய கனிம வயல்களில்
எல்லையற்ற பொறுமை காப்பீர்!
நீங்கள் பட்டபாடும்; உயர்ந்த எண்ணமும் வீண் போகாது ஒரு போதும்."

இக்கவிதைக்கு விடை கூறும் முகத்தான் கவிஞர் அதோயெவ்ஸ்கி எழுதினார்;

"எங்கள் துயர்நிறை உழைப்பு வீண் போகாது எழும்
சிறுபொறி மிகப்பெருந் தீயாய்"

ஆம் "இஸ்கரா" என்றால் "தீப்பொறி" பெயரானது ."இஸ்கரா" எனும் செய்திப் பத்திரிகையும் "விடியல்" எனும் பொருள்தரும் "ஜார்யா" எனும் தத்துவ ஏட்டையும் துவக்க பத்து பக்கம் கொண்ட குறிப்பு தயார் செய்து சுற்றுக்கு விட்டார் லெனின்.
"வெளிப்படையாக சோசலிசம் பேசுகிற பாதையில் – வெளிப்படையாக அரசியல் போராட்டம் நடத்துகிற பாதையில் பயணப்பட வேண்டிய வேளை வந்துவிட்டது.சமூக - ஜனநாயகத்தின் அனைத்து ரஷ்யப் பத்திரிகையைத் துவக்குவது அந்தப் பாதையில் எடுத்து வைக்கும் முதல் அடியாகும்" என அந்தக் குறிப்பில் தெரிவித்தார்.

இப்படி கூறக் காரணம் கட்சியின் முதல் மாநாட்டை லெனின் ஆக்க பூர்வமாகவே பார்த்தார், "இந்த அதிகார பூர்வ அறிவிப்பு ஒரு மகத்தான புரட்சிகரப் பங்களிப்பைச் செலுத்தியது" என்றார் .

ஜெனீவா சென்று பிளக்கனோவுடனும் அவரது சகாக்களுடனும் விவாதித்தார். பிளக்கனோவ் பிடிவாதம் காட்டியதால் சிக்கலானது. மனம் வெதும்பி "தீப்பொறி எப்படி அணைய இருந்தது?" என உணர்ச்சி பொங்க ஒரு கட்டுரை தீட்டினார். அது வெளியிடப்படவில்லை. மரணத்துக்கு பின் ஆவணமானது.

இழுபறிக்கு பின் லெனின் சமரசம் செய்தார். பிளக்கனோவ், அக்செல்ரோத், வேரா சூசிலிச், லெனின், மார்ட்டோவ், போட்ரவ்சோவ் என அறுவர் ஆசிரியர் குழுவாயினர்; பிளக்கனோவுக்கு இரு ஓட்டு., முதல் மூவர் அவர் குழுவினர் .

1900 டிசம்பர் 24. ஜெர்மன் நாட்டில் லைப்ஸிக் எனும் நகரில் ஹெர்மன் ரெள என்கிற ஜெர்மன் சமூக ஜனநாயகவாதிக்கு சொந்தமான அச்சகத்தில்…லெனின் உற்சாகம் பொங்கக் கூவினார்.

"நமக்கே உரிய தொழிலாளர்களுடைய புரட்சிச் செய்தித்தாள் நம்மிடம் இருக்கிறது! எங்கள் செய்தித் தாளே! தாய் நாட்டுக்கு பறந்து போ! சிந்தனைகளையும் உணர்வையும் தட்டி எழுப்பு! புரட்சிக்கு அறைகூவி அழைப்பு விடு!"

பத்திரிகைத் தலைப்பை உரக்க வாசித்தார் "இஸ்கரா"பத்திரிகையின் மேற்புற வலது மூலையில் கொட்டை எழுத்துகளில் பொறிக்கப்பட்டிருந்த வார்த்தைகளை கனல் கொப்பளிக்க முழங்கினார், "எழும் சிறு பொறி மிகப் பெருந்தீயாய்!"

முதல் இதழில் "நமது இயக்கத்தின் அவசரக் கடமைகள்" எனும் தலைப்பில் தீட்டிய கட்டுரையில்…

"நமக்கு முன்னால் அதன் எல்லா பலத்தோடும் எதிரியின் கோட்டையிலிருந்து நம்மீது மழையென குண்டுகள் வீசப்படுகின்றன. நமது ஆகச் சிறந்த போராளிகள் வீழ்த்தப்படுகின்றனர்.அந்தக் கோட்டையை நாம் பிடித்தே ஆக வேண்டும் . ருஷ்யாவின் ஜீவனுள்ள. அனைத்தையும் கவரக்கூடிய - விழிப்புற்றுவரும் பாட்டாளி வர்க்கத்தின் சக்திகள் அனைத்தையும் - ருஷ்யப் புரட்சியாளர்களின் சக்தி அனைத்தையும் - ஒன்றுபடுத்தும் ஒரு கட்சியில் நாம் ஒன்றுபட்டால் நாம் அதை பிடித்துவிடுவோம். அப்போது மட்டுமே கோடிக்கணக்கான உழைக்கும் கரங்கள் விடுதலை அடையும். சிப்பாய்களின் துப்பாக்கி முனையில் பாதுகாக்கப்பட்டு வரும் பழமைவாதத்தின் கரு சுக்கல் சுக்கலாய் நொறுங்கும் என்ற தொழிலாளி வர்க்கப் புரட்சியாளர் பியோதர் அலெக்சியோவின் தீர்க்கதரிசனம் நிறைவேறும்!"

- சு.பொ.அகத்தியலிங்கம்

புரட்சி தொடரும்...


0 comments :

Post a Comment