மரணத்திற்கு பின் உரக்கப் பேசியவர்

Posted by அகத்தீ Labels:

புரட்சிப் பெருநதி-15


மரணத்திற்குப் பின் உரக்கப் பேசியவர்

குத்தூசி குருசாமி மொழிபெயர்க்க
பெரியார் 1936லியே இந்நூலை அச்சிட்டுள்ளார் என்பதும்;
இதுவரை ஏழு பதிப்புகளைக் கண்டுள்ளது
என்பதும் பெருமைக்குரிய செய்தி.

"மனிதர்களுடைய அக்கிரமங்களையும், குற்றங்களையும், கொடுமைகளையும், அறிவீனச் செயல்களையும் என் ஆயுள் முழுவதும் கண்டுணர்ந்தேன். ஆனால் நான் இருந்த நிலையில் அவற்றை வெளிப்படையாகச் சொல்வதற்கான தைரியமும் ,சந்தர்ப்பமும் எனக்கு இல்லை என்பதைக் கண்ணியமாக ஒப்புக் கொள்கிறேன். நான் இறந்து போவதற்கு முந்தியாவது நான் கண்ட உண்மைகளை உலகுக்கு சொல்லிவிட வேண்டுமென நினைத்திருந்தேன்.… எனது நோக்கம் எல்லாம் உங்கள் கண்களைத் திறக்க வேண்டும் என்பதுதான்….பக்தி மார்க்கமான பொய் மூட்டைகளை உங்கள் தலையில் கட்டியதற்காக எத்தனை முறை நான் என் மார்பை அடித்துக் கொண்டு கதறியிருப்பேன் தெரியுமா? நானே நம்பாத விஷயங்களை எல்லாம் வெள்ளந்தியான உங்களை நம்பும்படிச் செய்தேனே…. அந்தக் கொடுமையை நினைத்து நினைத்து எத்தனை தடவை வேதனைப்பட்டு வெட்கி தலைகுனிந்திருப்பேன் தெரியுமா?"

இப்படி மனந்திறந்திருப்பவர் ஒரு கத்தோலிக்க மதகுரு. அவர் எழுதியது ஒரே நூல்.ஆட்சியாளரும் மதபீடமும் அதனைக் கண்டு மிரண்டது.

"மதத்தையும் மாட்சிமைதாங்கிய ஆட்சியையும், எதிர்த்து எழுதுவோர், அச்சிடுபவர், விநியோகிப்பவர் யாராயினும் மரணதண்டனைக் குற்றத்திற்கு ஆளாவார்கள்"- 1757ல் பிரெஞ்சு அரசு இவரது நூலைத் தடுக்கும் நோக்குடன் வெளியிட்ட அரசாணை .

அவர்தான் ஜீன் மெல்லியர் என்ற ஜீன் மெஸ்லியர். அந்த நூல்தான் "பகுத்தறிவு அல்லது ஒரு கத்தோலிக்க மதகுருவின் மரணசாசனம்"

பிரெஞ்சு நாட்டில் வறட்சி மிகுந்த செம்பேனினுள்ள மெஸ்ர்னி கிராமத்தில் கம்பளி கைநெசவு செய்யும் ஜெராட் மெல்லியர்சிம்பொரைன் தம்பதியருக்கு மகனாய் பிறந்தார். ரெய்ம்ஸில் உள்ள இறையியல் பள்ளியில் பயின்றார். எட்ரபிக்னி வட்டார மதகுருவானார். மரணம் வரை அங்கேயே வாழ்ந்தார்.

தனித்தே வாழ்ந்தார். சில மதகுருக்கள், உறவினர்களை மட்டுமே சென்று பார்ப்பார். தினசரி கருப்பு நிற அங்கியுடன் தேவாலயப் பணிகளை நிறைவேற்றுவார்.பிளேட்டோ, பிளினி, ஓவிட், விர்ஜில், டேஸிட்டஸ், லிவியஸ், செனக்கா படைப்புகளைத் தேடிப் படிப்பார். ஏழைகளின், விவசாயிகளின் துயரம் கண்டு கண்ணீர் உகுத்தார். தன் வருமானத்தில் சிக்கனமாக வாழ்ந்து கொண்டு பெரும் பகுதியை ஏழைகளுக்கு தானம் செய்தார். அந்த பிரதேசம் பல விவசாய எழுச்சிகளைக் கண்டது. அதன் தாக்கமும் இவரிடம் உண்டு. சாதாரண மக்களின் மனதில் சம்மணம் போட்டு அமர்ந்தார்.

உள்ளூர் நிலப்பிரபுவான டி டெளலி விவசாயிகளை மிகவும் கொடூரமாய் வதைத்தான். 1716 ஆம் ஆண்டு பிரார்த்தனைகளில் அவன் பெயரைக் குறிப்பிட்டு விமர்சித்தார். மதபீடம் சினங்கொண்டது. அவருக்கு "பணிமுறை தண்டனைக் குறிப்பு வழங்க" தலைமை மதகுரு பிரான்ஸ்கோயிஸ்-டி-மெய்லி வந்தார். மெஸ்லியர் குற்றத்தை ஒப்புக் கொள்ள மறுத்ததோடு இரக்கமற்ற பண்ணையடிமைத் தனத்தையும் கடுமையாகச் சாடினார். இதனால் இன்னொரு தண்டனைக் குறிப்பு கூடுதலாகப் பெற்றார்.அவரைப் பற்றி வேறு தகவல்கள் இல்லை.

எப்போது மரணமடைந்தார்? 1729 ஜூன் 27 ஆம் தேதி மெஸ்லியர் கையெழுத்தோடு மதகுரு பொறுப்பைத் துறந்த ஆவணம் கிடைத்துள்ளது. புதிய மதகுரு ஜூலை ஆறாம் தேதி நியமிக்கப்பட்டுள்ளார். இடைப்பட்ட காலத்தில் அவர் இறந்திருக்கக்கூடும்.
மறைவுக்கு பின்னர் அவர் வீட்டு காகிதக் குவியலுக்கிடையே "மரண சாசனம்" எனும் தலைப்பிட்ட 366 பக்க ஆவணம் இரண்டு பிரதிகள் கண்டெடுக்கப்பட்டன. மூன்றாவது பிரதி செயிண்ட் மினிச் சோல்ட்டில் இருந்த மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டிருந்தது. தகவல் பறந்தது. பிரதிகளைக் கைப்பற்ற அதிகாரிகள் விரைந்தனர். அதற்குள் ஒரு பிரதி மாயமாய் மறைந்துவிட்டது. பின்னர் அது மேலும் பல பிரதிகளாகி ரகசியமாக வலம் வரத்துவங்கின.

இந்நூலின் கையெழுத்துப் பிரதியை வால்டேர் 1736ல் படித்தார். அதில் உள்ள சில கருத்துகளில் அவருக்கு உடன்பாடில்லை; குறிப்பாக தனியுடைமைக்கு எதிரான வாதத்தை நிராகரித்தார். அதேசமயம் மதத்துக்கு எதிரான அவரது வாதம் வால்டேரைக் கவர்ந்தது.

"ஜீன் மெஸ்லியரின் புத்தகமானது மதவெறியர்களுக்கும் மதப்பித்தர்களுக்கும் ஒரு மருந்தாகும். இப்புத்தகம் மாத்திரம் உலகம் முழுவதும் பரவுமானால் கிறிஸ்துவ மதத்தின் கதி என்னவாகும் - பொதுவாக எல்லா மதங்களின் கதியும் என்னவாகும்" எனக் கேட்டார். நூலின் தேர்ந்தெடுத்த பகுதிகளை மட்டுமே தொகுத்து 1762ல் வெளியிட்டார். அந்த சுருக்கப்பட்ட வடிவம்கூட பிரெஞ்சு தேசத்தில் புரட்சிக்கு உந்து சக்தியாயின.

குத்தூசி குருசாமி மொழிபெயர்க்கபெரியார் 1936லேயே இந்நூலை அச்சிட்டுள்ளார் என்பதும்; இதுவரை ஏழு பதிப்புகளைக் கண்டுள்ளது என்பதும் பெருமைக்குரிய செய்தி.

உலகம் முழுமைக்கும் நாயகனான ஒரே கடவுள் உலகம் முழுமைக்கும் பொதுவான ஒரே மதத்தை ஏன் படைக்கவில்லை? பக்தர்கள் சித்ரவதைபடுவதை கடவுள் பார்த்துக் கொண்டிருக்கலாமா? என்று கேள்வி எழுப்பினார்.

கொடுங்கோலர்களுக்கு பாவமன்னிப்பு கிடையாது- நல்லொழுக்கத்துக்கும் கடவுளுக்கும் சம்பந்தமில்லை -எல்லா தண்டனைக்குரிய குற்றத்திற்கும் தனியுடைமைக்கும் தொடர்பு இருக்கிறது என்றார்.பொருள் முதல் வாத நாத்திக போதனைசுரண்டல் சமூக அமைப்புக்கு எதிரான கண்டனம்ஒவ்வொருவரும் உழைத்துவாழும் ஒரு சமூகக்கனவு என இந்நூல் புரட்சி கனலை விதைத்தது!

இவரை பாரீஸ் கம்யூன் எழுச்சியின் முன்னோடிகள் போற்றியதும்; பிரெஞ்சு கற்பனா சோஷலிசத்தின் முன்னோடி என்று கொண்டாடியதும்; இவர் எழுத்துகளை இளைஞர்கள் படிக்க வேண்டுமென லெனின் ஆசைப்பட்டதும்; நினைவுத் தூபியில் இவர் பெயரை பொறித்ததும் இந்நூலின் முக்கியத்துவத்தைச் சொல்லும் .

"மக்களை மூடராக்கவே எல்லா மதங்களும் முயன்றிருக்கின்றன . மக்களுக்கும் உலகத்துக்கும் உள்ள சம்பந்தம் ,கடமைகள் ,லட்சியங்கள் முதலியவற்றை மக்கள் சரியாக அறிந்து கொள்ளா வண்ணம் மதங்கள் முட்டுக்கட்டை போட்டே வந்திருக்கின்றன. மதங்கள் வகுத்திருக்கும் தடைகளை அகற்றினால்தான் உண்மை பகுத்தறிவு, ஒழுக்கம் முதலியவைகளின் உற்பத்தி ஸ்தானங்களையும்நற்குணங்களுக்கு காரணம் என்ன என்பதையும் அறியமுடியும். நமது துன்பங்களுக்கு காரணங்களை அறியவும் பரிகாரம் தேடவும் முயன்றால்; மதங்கள் தப்பாக வழி காட்டுகின்றனமதங்கள் கூறும் பரிகாரங்களோ நம் துன்பங்களைக் குறைப்பதில்லை - பன்மடங்கு அதிகரிக்கின்றன. ஆகவே லார்டு போலிஸ்புரோக் கூறியபடி கூறுவோமாக; மதம் ஒரு பண்ட்ரா பெட்டி கிரேக்க புராணப்படி வில்லங்கமான தீய பெட்டி ] அதை மூடுவது கஷ்டமானால்அது திறந்து கிடக்கிறது என எச்சரிக்கை செய்ய வேண்டியது அவசியமாகும்."

இன்றைக்கும் பொருந்துகிறதே !


நன்றி : தீக்கதிர் , 13/02/2017.


0 comments :

Post a Comment