சூரியனின் பகைவன்
-சமீ அல் க்வாசம்\
நீ விரும்பினால் என் வாழ்வு பறிக்கப்படலாம்
எனது உடையையும் படுக்கையையும் விற்க நேரிடலாம்
கல் உடைப்பவனாக ஆக்கப்படலாம்சுத்தம் செய்பவனாக,
சுமை தூக்கியாக உனது அறையை சுத்தம் செய்ய பணிக்கப்படலாம்
உணவுக்காக உனது குப்பைகளை ஒதுக்க நேரிடலாம்
ஓ! சூரியனின் பகைவனே!
ஆனால், நான் சமரசம் செய்ய மாட்டேன்
நரம்பில் கடைசி நாடித்துடிப்பு உள்ள வரை
உறுதியாக நான் எதிர்ப்பேன்.
எனது கடைசித்துண்டு நிலத்தை நீ எடுக்கலாம்
எனது பாரம்பரியத்தை பறிமுதல் செய்யலாம்
எனது புத்தகங்களையும் , கவிதைகளையும் நீ தீயிலிடலாம்
எனது சதையை வெட்டி நாய்களுக்குப் போடலாம்
தாக்குதல் வலையைப் பின்னலாம்
எனது கிராமத்தின் கூரைகளுக்கு மேலே
ஓ! சூரியனின் பகைவனே!
ஆனால், நான் சமரசம் செய்ய மாட்டேன்
நரம்பில் கடைசி நாடித்துடிப்பு உள்ளவரை
உறுதியாக நான் எதிர்ப்பேன்
என் கண்களின் ஒளியை நீ பறிக்கலாம்
என்னிடமிருந்து எனது தாயின் முத்தங்களையும் பறிக்கலாம்
எனது வரலாற்றை நீ பாழ்படுத்தலாம்
எனது தந்தையையும் சுற்றத்தையும் நீ சபிக்கலாம்
எனது குழந்தைகளின் புன்னகையையும் நீ பறிக்கலாம்
வாழ்க்கையின் தேவைகளையும் ஒழிக்கலாம்
கடன் வாங்கிய தோற்றங்களில் எனது மக்களை நீ ஏமாற்றலாம்.
என்னைச் சுற்றி தாக்குதல் சுவரை நீ அடுக்கலாம்
அவமதிப்புகளால் எனது கண்களை இருளடிப்பு செய்யலாம்
ஓ! சூரியனின் பகைவனே!
ஆனால், நான், சமரசம் செய்யமாட்டேன்
நரம்பில் கடைசி நாடித்துடிப்பு உள்ளவரை
உறுதியாக நான் எதிர்ப்பேன்.
ஓ! சூரியனின் பகைவனே!
துறைமுகங்கள் அலங்காரங்களில் ஜொலிக்கின்றன.
காற்றை ஆச்சரியங்கள் நிரப்புகின்றன
இதயம் வெளிச்சமடைகிறது
அடிவானத்தில் ஓடங்கள் காணப்படுகின்றன
காற்றையும், ஆழங்களையும் சவாலுக்கு அழைத்து
கடல் போன்ற இழப்புகளிலிருந்து இல்லம் நோக்கித் திரும்புகிறோம்
சூரியன் மீண்டும் வந்தது.
கடத்தப்பட்டவர்களைச் சுமந்து கொண்டு
அவளுக்காகவும், அவனுக்காகவும்
நான் சத்தியமளிக்கிறேன் நான் சமரசம் செய்ய மாட்டேன் என்று
மீண்டும் நரம்பில் கடைசி நாடித்துடிப்பு உள்ளவரை
உறுதியாக நான் எதிர்ப்பேன்.
உறுதியாக நான் எதிர்ப்பேன்
மிக உறுதியாக.......!!!
தமிழில்: ஏ.ஆறுமுகநயினார்
(கொல்கத்தாவில்நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிளீனத்தில் மேற்குவங்கத்தில் திரிணாமுல் குண்டர்கள் தொடுத்து வரும் வன்முறை தாக்குதலை கண்டித்தும், மேற்குவங்க மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கொடியேரி பாலகிருஷ்ணன் முன்மொழிய, மத்திய செயற்குழு உறுப்பினர் அசோக் தாவ்லே வழிமொழிந்தார். அப்போது அவர் மேற்கண்ட கவிதை வரிகளை உணர்ச்சிகரமாக வாசித்தார்.)
0 comments :
Post a Comment