இரட்டை வாழ்த்துகளும் எதிர்கொள்ள வேண்டிய சவால்களும் .

Posted by அகத்தீ Labels:



இரட்டை வாழ்த்துகளும்
எதிர்கொள்ள வேண்டிய சவால்களும் .

அனைவருக்கும்
ஜனவரி 1,
தை முதல் நாள்
இரட்டைப் புத்தாண்டு வாழ்த்துகள் .

மதவெறி  எங்கு முகங்காட்டினும் – எந்த வேடத்தில் வரினும் - எதுவாயினும்
அதனை வேருடன் வீழ்த்தவும் ;
சாதி ஆதிக்கத்தை சகல மட்டங்களிலும் சாய்க்கவும்
இந்தப் புத்தாண்டில் உறுதி ஏற்பீர் !
தமிழக அரசியல் களத்தில் மெய்யான மாற்றுக்காக முயற்சிகளில்
தொய்வின்றி களம் காண்பீர் ! புத்தாண்டு வாழ்த்துகள்!!!

·         திமுக – அதிமுக இரண்டு கட்சிகளும் ஊழல் கட்சியே . இரண்டு கட்சிகளின் ஆட்சியிலும் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் . கருணாநிதியின் குடும்ப அரசியலும் ஜெயலலிதாவின் ஆணவ அரசியலும் ஊரறிந்தவை .மக்களிடம் வெறுப்பை ஊட்டுபவை .தனிநபர் துதியும் அடிமைத்தனமும் இரு கட்சிகளிலும் விரவிக்கிடக்கிறது . இதுவும் இளைஞர்களுக்குக் குமட்டலாக இருக்கிறது .இரண்டு கட்சிகளும் அமலாக்கும் பொருளாதாரக் கொள்கைகளும் மத்திய அரசு பின்பற்றும் தவறான கொள்கைகளின் தொடர்ச்சியே !அதிமுக கிட்டத்தட்ட பகுத்தறிவை பூரணமாய் கைகழுவி ஆர் எஸ் எஸ் ஆசியோடு தமிழக பாஜகவின்  ‘பி டீம்” ஆகிவிட்டது . திமுக அவ்வப்போது சமூகசீர்திருத்தம் பேசிடினும் தொடர்ந்து மேற்கொள்ளும் சந்தர்ப்பவாத அரசியல் நிலைபாடு சாதி வெறி , மதவெறி சக்திகளுக்கே துணையாகிறது .ஆகவே அரசியல் களத்தில் இரண்டு கட்சிகளையும் வீழ்த்த வேண்டிய வரலாற்றுத் தேவை இருக்கிறது .மக்கள் நல முன்னணி அதன் முதல் அடிவைப்பாகட்டும் !

·         இந்த இரு கட்சிகளின் அரசியல் தோல்வியை  - திராவிட இயக்கம் என்கிற முறையில் தமிழகத்தில் முன்னெடுத்த சமூகசீர்திருத்தம் , சமூகநீதி , பகுத்தறிவு இவற்றின் தோல்வியாக சித்தரிக்க சங்பரிவார் கும்பலும் ; அவர்களது முகமூடியான சில அறிவுஜீவிகளும் ஓயாது பேசியும் எழுதியும் வருகின்றனர் . இது மிகவும் ஆபத்தான பாதை .  அடிப்படைக் கோட்பாடுகள் நீர்த்துபோகும் அளவுக்கு அரசியல் சந்தர்ப்பவாதத்தில் இரு கட்சிகளும் ஈடுப்பட்டதே அடிப்படையான கோளாறாகப் பார்ப்பதும் பிரச்சாரம் செய்வதுமே இன்றைக்கு அடிப்படைத் தேவையாகும் . திமுக , அதிமுக மட்டுமல்ல பாஜக ,காங்கிரஸ் இவற்றையும் ஒரு சேர எதிர்க்க வேண்டியுள்ளது . அதிலும் இன்றைக்கு காவி மதவெறி கடுமையாக எதிர்க்கப்பட வேண்டும் .அதன் பார்ப்பணிய தத்துவ வேரில் வெந்நீர் ஊற்ற வேண்டும் .ஆக , ஒருங்கிணைந்த பார்வையும் செயல்திட்டமும் தேவை.சமூகநீதி, சமூகசீர்திருத்தம் ,பகுத்தறிவு போன்ற தமிழகத்தின் நற்கூறுகள் முன்னிலும் வலுவாய் முன்னெடுக்கப்பட வேண்டும் .

·         “எனக்கு மட்டும் ஏன் இப்படி அடிக்கடுக்காய் துன்பம் நிகழ்கிறது” என பாமரத்தமாய் புலம்பும் அறியாமை அரசியலில் கூடாது .இந்தியாவில் எந்த மாநிலமும் ஏற்றதாழ்வற்றதாய் , சகலவிதத்திலும் நலம் கொழிப்பதாக இல்லை . மாநிலங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் சில விஜயங்களில் தமிழகம் முந்தியிருப்பதும் ; சில விஜயங்களில் பிந்தியிருப்பதும் தெரியும் .ஒவ்வொரு மாநிலத்துக்கும் சில நல்ல கூறுகளும் பல கெட்ட கூறுகளும் இருக்கிறது .

·         மத்திய அரசின் அரசியல் பொருளாதாரக் கொள்கைகளும் சமூகப் பார்வையும் பண்பாட்டு வீழ்ச்சியும் அனைத்து மாநிலங்களையும் மிகக் கடுமையாகப் பாதிக்கிறது . இன்னும் சொல்லப் போனால் மத்திய அரசின் அதிகாரக் குவியல் மாநில முன்னேற்றத்தைக் குதறிப் போடுகிறது என்பதே உண்மை . ஆகவே தமிழகத்தின் வெற்றி தோல்விகளை காய்தல் உவத்தலின்றி ஆய்வதும் ; உகந்த மாற்றை முன்வைப்பதும் ; அவ்வழியில் தொடர்ந்து பிரச்சாரம் செய்வதும் ;மிகமிக அவசியம் . தேர்தல் வரும் போகும் . ஆயின் ஒரு கொள்கை ரீதியான மாற்றை தமிழக சமூக உளவியலில் விதைக்கும் கடுமையான – சவால் மிகுந்த பணி நம்முன் உள்ளது . இவர் நல்லவர் . இவர் ஊழலை எதிர்ப்பவர் . இவர் நேர்மையானவர் என்ற மொக்கையான அளவுகோல்களைத் தாண்டி ; ஒரு கொள்கை ரீதியான மாற்றே – அதாவது முற்போக்கான இடதுசாரி மாற்றே தமிழகத்தில் ஆரோக்கியமான அரசியல் எதிர்காலமாக முன்வைக்கப்பட வேண்டும் .அதைச் சுற்றியே தொடர் உரையாடலும் மக்கள் உள்ளத்தை வெல்லும் முயற்சியும் முனைப்பும் அமைய வேண்டும் . மெல்ல ஆனால் உறுதியாக அத்திசைவழியில் நாம் நடைபயில புத்தாண்டில் சபதமேற்போம்.

·         சாதி , மத வெறியர்களை அரசியல் அரங்கிலும்  தத்துவக் களத்திலும் ,  பண்பாட்டுக் களத்திலும் மிகவும் உறுதியாய் – மிகவும் வலுவாய் – மிகவும் நுட்பமாய் எதிர்கொண்டாக வேண்டும் .இதனை செய்ய ஒவ்வொருவரும் தான் சார்ந்த சாதி ,மதம் இவற்றைத் தாண்டி நிற்க வேண்டும் . ஒரு புதிய அறிவியல் ரீதியான சமூகப் பார்வையும் வாழ்க்கை அணுகுமுறையும் ஒவ்வொருவருக்கும் தேவை . இது ஒற்றை நாளில் ஒரு வேண்டுகோளில் சாத்தியப்படுவதல்ல மாறாக தொடர் முயற்சி – தொடர் பயிற்சி – தொடர் வாசிப்பு – தொடர் உரையாடல் – தொடர் போரட்டம் என முன்னெடுக்க வேண்டும் .

·         பெரியார் , அம்பேதகர் , சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் மூவரையும் முன்னிறுத்தி ; தத்துவப் போரை வேரில் தொடங்கின்  கனியாய் விளைந்து குலுங்கும் விரைவில் . ஆம். ஆம்.

·         இப்போதும் நம்பிக்கை வற்றிவிடவில்லை – இப்போதும் காலம் கடந்துவிடவில்லை – தாமதிக்காமல் முயன்றால் சாத்தியமே !  மேலே சொன்னவற்றை அசைபோடுங்கள் . இதற்காக ஒரு சிறு துரும்பையேனும் இன்றே கிள்ளிப்போட்டுத் தொடங்குவோம் . அனைவருக்கும் .புத்தாண்டு வாழ்த்துகள் .


·         பண்பாட்டுக் களத்தில் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாய் கொண்டாடுவீர் . வாழ்க்கை யதார்த்தத்தில் சம்பளம் , பிறப்பு இறப்புபதிவு என நம் வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் கலந்து விட்ட கிரிகேரியன் காலண்டர் அடிப்படையிலான ஜனவரி ஒன்று புத்தாண்டு தினத்தைக் கொண்டாடுவோம் .

அனைவருக்கும்
ஜனவரி 1 புத்தாண்டு வாழ்த்துகள்
தை முதல் நாள் வாழ்த்துகள்

ஆ ம் . இதயம் கனிந்த இரட்டை வாழ்த்துகள் .


**************************************************


“ இன்று இந்தியாவில் சிறைக்குச் செல்வது தியாகமாகக் கருதப்படுகிறது .அது துணிவாகவும் நாட்டுப் பற்றாகவும் மதிக்கப்படுகிறது. சமூகத்தால் புறக்கணிக்கப்பட வேண்டிய ரவுடிகள் , தங்கள் பிழைப்புக்கு வேறு வழியில்லாது , அரசியலில் தஞ்சம் புகுந்து , சிறை சென்று , பேரும் புகழும் பெறுவது விசித்திரமாக உள்ளது .திலகர் மற்றும் அவரது தலைமுறையினர் சிறையில் உண்மையாகவே துன்புற்றனர். ஆனால் இன்றைய சிறைவாழ்வில் பயப்படுவதற்கு ஏதுமில்லை . அது வெறும் தடுப்புக் காவல் போன்றதாகிவிட்டது .அரசியல் கைதிகள் குற்றவாளியாக நடத்தப்படுவதில்லை .அவர்கள் தனி வகுப்பில் வைக்கப்படுகிறார்கள் .துன்புறுத்தும் கொடுமைகள் இல்லை .இழப்பதற்கான பெருமை எதுவும் இல்லை .தனிமைத் துன்பங்கூட இல்லை . இதற்குத் துணிவு தேவை இல்லை . திலகர் காலத்து சிறைத் துன்பங்கள் , இன்றைய அரசியல் கைதிகளுக்கு நேர்ந்தால் கூட , அவர்கள் சமூக சீர்திருத்த வாதிகளைவிடத் துணிவானவர்கள் என்று கூறமுடியாது .தனிமனிதனை , அரசாங்கத்தைவிட , ஒரு சமூகம் அடக்குமுறைகளால் பெரிய அளவில் கொடுமைப் படுத்த முடியும் என்பதை பலர் உணர்வதில்லை .அடக்கு முறைக்கான வாய்ப்பு , வழிமுறைகள் அரசுக்கு இருப்பதைவிட சமூகத்துக்கு பரந்து விரிந்து இருப்பதால் தீவிரமாக செயல்படுத்த முடிகிறது .குற்றவியல் தீர்ப்பில் அளிக்கப்படும் எந்தத் தண்டனையும் , அளவிலும் ,கடுமையிலும் சமூகத்தைவிட்டு விலக்கிவைப்பதற்கு [ சமூக பகிஷ்காராத்துக்கு] நிகராகாது. யார் அதிகத் துணிச்சலுள்ளவர் ?சமூகத்துக்கு அறைகூவல் விடுத்து சமூக பகிஷ்கரிப்பைத் தானே வரவழைத்துக் கொள்ளும் சமூகசீர்திருத்தவாதியா ? அல்லது அரசை எதிர்த்தற்காக ஒரு சில மாதமோ , வருடமோ தண்டனை பெறும் அரசியல் வாதியா ? அரசியல்வாதி , சமூகசீர்திருத்தவாதி இவர்களின் துணிவை ஒப்பிடும் போது ஒரு வேறுபாட்டை மறந்துவிடுகிறோம் .ஒரு சமூகசீர்திருத்தவாதி சமூகத்தை எதிர்த்தற்காக , அவரைத் தியாகி என்று யாரும் கொண்டாடுவத்தில்லை.அவருடன் உறவாடுவதற்குக்கூட எல்லோரும் தயங்குவர் .ஆனால் , அரசியல்வாதி அரசை எதிர்த்துப் பேசினால் ,முழுச் சமூகமும் அவருக்குத் துணை நிற்கிறது .அவர் புகழப்படுகிறார் ; போற்றப்படுகிறார்;மீட்பர் என்ற நிலைக்கு உயர்த்தப்படுகிறார் . அதிகத் துணிவுடன் செயல்படுவது தன்னந்தனியே போராடும் சமூக சீர்திருத்தவாதியா ? பெரும் கூட்டத்தைக் கவசமாகவும் , துணையாகவும் கொண்டாடும் அரசியல்வாதியா ?ரானடே மிகப்பெரிய சமூகசீர்திருத்தவாதியாகத் துணிவுடன் செயல்பட்டவர்.”

மேலே உள்ளவை அனைத்தும் மகாதேவ் கோவிந்த ரானடே நினைவுச் சொற்பொழிவின்போது பாபாசாகேப் அம்பேத்கர் சொன்னவை . 1946 ஆம் ஆண்டு ஜனவரி 18 ஆம் நாள் சொற்பொழிவில் சொன்னார் .

விடுதலைப் போரில் சிறைக்கு சென்ற தலைமுறையை ஒப்பிட்டே ; அம்பேத்கர் சமூகசீர்திருத்த செயலின் கடுமையைத் தேவையை வலியுறுத்த இப்படிச் சொன்னார் . ரானடேவும் விடுதலைப் போரில் ஈடுபட்ட அரசியல் வாதிதான் ,எனினும் சமூகசீர்திருத்தமே அவரின் முதன்மை அக்கறையாக இருந்தது . இப்போது தற்போதைய நடப்புக்கு வருவோம் .

இன்றைக்கு ஊழலுக்காகச் சிறைசெல்வதே மாபெரும் தியாகமாகிக் கொண்டிருக்கிறது . சாதி , மத வெறியோடு கொலைத் தாண்டவமாடி சிறைக்குச் செல்வது மாவீரமாகிறது . மதவெறியும் , சாதி ஆதிக்கமும் , மூடநம்பிக்கைகளும் ஆளும் வர்க்க ஆதரவுடன் பேயாட்டம் போடும் கொடூர சூழல் எங்கும் நிலவுகிறது . இச்சூழலில் அரசியல் என்பதில் சமூகசீர்திருத்தமும் சமூக நல்லிணக்கமும் முக்கிய பங்குவகித்தாக வேண்டியது தவிர்க்க இயலாத வரலாற்றுத் தேவையாகும் .

இங்கு ஒரு செய்தி: சின்னஞ்சிறு திரிபுரா மாநிலத்தில் பழங்குடி மக்களுக்கும் வங்காளி மக்களுக்கும் இடையே பகைமையை விசிறிவிட்டு ; ரண்களமாக்கி விளையாடினர் மத்திய அரசும் அந்நிய கைக்கூலிகளும் .அங்கே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு முடிவெடுத்தது கட்சி ஊழியர்களுக்கு கட்டளையாகப் பிறப்பித்தது . பழங்குடியினர் மீது வங்களா தீவிரவாதிகள் நடத்தும் கொலைவெறித் தாக்குதலைத் தடுத்து பழங்குடி மக்களைப் பாதுகாப்பது கம்யூனிஸ்ட்டாக உள்ள ஒவ்வொரு வங்காளியின் கடமையாகும் . அதுபோல் வங்காளிகள் மீது பழங்குடி தீவிரவாதிகள் நடத்தும் கொலைவெறித் தாக்குதலைத் தடுத்து வங்காளி மக்களைப் பாதுகாப்பதும் கம்யூனிஸ்ட்டாக உள்ள ஒவ்வொரு பழங்குடித் தோழனின் கடமையுமாகும் . இந்தக் கட்டளையை சிரமேற்கொண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் தோழர்கள் களத்தில் போராடி உயிர்பலியாயினர் . அந்த தியாகத்தின் பரிசுதான் திரிபுராவில் தொடரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் அரசும் அங்கு மீண்ட நல்லிணக்கமுமாகும் . தீவிரவாதம் இப்படி தியாகத்தால் முறியடிக்கப்பட்டது அண்மைவரலாறு . இது செங்கொடியின் பெருமைமிகு பாரம்பரியமாகும் .

இந்தியா முழுவதுமாயினும் சரி , தமிழகமாயினும் சரி மதவெறி மற்றும் சாதி ஆதிக்கத்தை எதிர்த்து , சமூகப்பகிஷ்கரிப்புக்கு அஞ்சாமல் யார் கம்பீரமாக களத்தில் நிற்கிறார்களோ ; மூடநம்பிக்கைகளுக்கு எதிராக களத்தில்  அறிவொளி தீபத்தை யார் உயர்த்திப் பிடிக்கிறார்களோ  அவர்களே இளைஞர்கள் .வருங்காலம் அவர்களுடையதே ! எழுக ! இளைய தலைமுறையே ! எழுக ! எழுக!


******************************************




மற்றெந்த துறையையும் விட கல்விக்கு அதிகம் செலவிடப்பட வேண்டுமென்று தலைவர்கள் விரும்பினார்கள் ,தேசிய புனர் நிர்மாணத்துக்கு கல்விதான் முக்கிய கருவி என்று அவர்கள் கருதியதுதான் காரணம் ……. முதலாவதாகக் கல்விக்கு குறிப்பாக உயர் கல்விக்கான செலவுகளைக் குறைக்கும் அரசின் அனைத்து முயற்சிகளையும் எதிர்த்தனர் …”

1881-84
ஆம் ஆண்டுகளின் நிலைமை இது . அப்போது ஃபெரோக்ஸ் மேத்தா உயர்கல்விக்கான செலவைக் குறைப்பதைக் கடுமயாக எதிர்த்தார் .கல்விக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்தவரில் மிக முக்கியமானவர் கோபால கிருஷ்ண கோகலே ஆவார் .

“1891
ஆம் ஆண்டு காங்கிரஸ் மாநாட்டிலேயே கல்விக்கான ஒதுக்கீடு மிகக்குறைவாக இருப்பதை எதிர்த்திருக்கிறார் .ஐரோப்பாவில் மிக ஏழை நாடுகூட பொதுவருவாயில் கல்விக்காக 6.5 சதம் செலவிடப்பட்ட போது இந்தியாவில் ஒரே ஒரு சதம்தான் செலவிடப்படுகிறது என்றார் .”

கல்விக்கான அரசு ஒதுக்கீடு இன்னும் தேவைக்கு ஏற்ப இல்லை என்பதுடன் ; கல்வி வழங்கும் பொறுப்பையும் மெல்ல மெல்ல கை கழுவுகிறது அரசு . தனியாரின் வியாபாரப் பொருளாகக் கல்வி மாறிவிட்டது . இந்த லட்சணத்தில் உலக வர்த்தக் ஒப்பந்தத்தில்  “உயர்கல்வி ஒரு விற்பனைப் பண்டம்என மோடி ஒப்புக்கொண்டு கையெழுத்திடப் போகிறதாம் .இதன் பொருள் இந்திய பன்னாட்டு கல்வி வியாபாரி சொல்லுகிற விலைதான் . காசு கொடுக்க முடிந்தால் படி . அவன் முடிவு செய்வதுதான் பாடம் . சமூகநீதி , இடஒதுக்கீடு எல்லாம் குப்பைத் தொட்டியில் .இதற்குத் தோதாக மோடி அரசு கொண்டுவருகிறது கல்வித் திட்டம்  ; அது ராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்தை ஜிகினா தடவிக் கொடுக்கும் ஏற்பாடே !

உலகமயமும் மநுவின் வஞ்சகமும் ஒரு சேர கை கோர்க்க தயாராகிவிட்டது .

! இளைய தலைமுறையே ! மாணவக் கண்மணிகளே ! விழி ! எழு ! போராடு ! போராடு !

நாம் இளம் தலைமுறையினர்.
   
நாம் வாழ்வை நேசிக்கிறோம்.
   
நமக்குத் தேவை சமாதானம்.

நாடுகளுக்கு இடையே பகைமைப் பூசல்களை விதைப்பவர்களை எதிர்த்துக் குரல் எழுப்புகிறோம்….

வேலை வேண்டுவோர் அனைவருக்கும் வேலை கிடைக்கும் வரை …..
பள்ளிகள் , பல்கலைக் கழகங்களின் கதவுகள் அனைவருக்கும் திறக்கப்படும் வரை
இளம் தலைமுறையின் அவசரத் தேவைகள் அனைத்தும் நிறைவேறும் வரை….

நாம் எங்கிருந்தாலும்
யாராக இருந்தாலும் ….
நம் தோலின் நிறம் எதுவாக இருந்தாலும்
நமது முயற்சிகளை நிறுத்தமாட்டோம் என சூளுரைக்கிறோம் .”

-
இது 1947 இல் உலக இளைஞர் மாணவர் விழா ப்ரேக் நகரில் நடை பெற்றபோது ஏற்ற சூளுரை ….

இன்றும் இப்போதும் மீண்டும் அதே சூளுரையுடன் எழுக ! இளைய தலைமுறையே !எழுக ! எழுக !

***********************************


 “நாட்டு நலனுக்காக தன் வாழ்நாள் முழுமையும் அர்ப்பணித்த தலைவர் ஒருவருக்கு மிகவும் நன்றியோடு இருப்பதில்  தப்பில்லை . ஆனால் அவ்வாறு நன்றி காட்டுவதற்கும் ஒரு எல்லை உண்டு . ஐரீஸ் விடுதலை வீரன் ஒரு முறை சொன்னது போல எந்தவொரு மனிதனும் தம் கண்ணியத்தை இழந்து நன்றி செலுத்த இயலாது .எப்படியெனில் எந்தவொரு பெண்ணும் நன்றி செலுத்த தன் கற்பைக் காணிக்கையாக்க இயலாதது போல ; எந்தவொரு தேசமும் தன் சுதந்திரத்தை அடகுவைத்து நன்றி செலுத்த முடியாது .இந்த எச்சரிக்கை எந்தவொரு தேசத்தையும்விட இந்தியாவுக்கு மிகமிகப் பொருந்தும் . இந்திய அரசியலில் பக்தி , அல்லது அடிபணிதல் அல்லது தனிநபர் துதி வேறெந்த நாட்டையும்விட ஒப்பிட்டுக்  காட்ட முடியாத அளவுக்கு மிகமிக அதிகம் .மதநம்பிக்கையில் பக்தி என்பது ஒருவேளை ஆன்ம முத்தி அளிக்கும் பாதையாக இருக்கக்கூடும் . ஆனால் அரசியலில் பக்தியோ ,தனிநபர் துதியோ மோசமான சீரழிவுக்கும் இறுதியாக சர்வாதிகாரத்திற்குமே வழிவகுக்கும்.”

அரசியல் சட்ட நிறைவேற்றத்தின் போது 1950 ஆம் ஆண்டு பாபா சாகேப் டாக்டர் பி.ஆர் . அம்பேத்கர்  மிகுந்த ஆழ்ந்த பொருளோடு எச்சரித்து சொன்ன வரிகளே இவை .

என்றைக்கும் விட அது இன்றைக்கு ஆயிரம் மடங்கு வலிமையாக நம்முன் நிற்கிறது ; அதுவும் தமிழகத்தில் கருணாநிதி , எம் ஜிஆர் , ஜெயலலிதா ஆகியோர் வளர்த்துவிட்டுள்ள தனிநபர் துதியின் பேராபத்தை அணுதினமும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் . வெள்ளத்தில் மக்கள் சாமும் போதும்  ‘அம்மா’[?]வின் புகழ்பாடிக்கொண்டிருந்த அடிமைகள் நிலைகண்டு இரத்தக்கண்ணீர் வடிக்காதோர் யார் ?

இப்போது அடுத்த தலைவர் யார் ? தேடல் தொடங்கிவிட்டது . ரஜினி அரசியலுக்கு வருவாரா ? சகாயத்தை அரசியலுக்கு இழுக்க முடியுமா? விஜயகாந்தோ , அன்புமணியோ மாற்றாக அமைவாரா ? இப்படி தனிநபரைச் சுற்றியே தமிழ் மக்களின் சிந்தனையை செக்குமாடாய் ஓடவிட்டுக் கொண்டிருக்கின்றனர் . இதில் ஊடகங்களின் பங்கு பிரதானமானது .குறிப்பாக அச்சு ஊடகங்களும் தொலைகாட்சி செய்தி ஊடகங்களும் தவறான பாதையில் வெறியோடு கருத்துத் திணிப்பு செய்துகொண்டிருக்கின்றன .தனிநபர் சாகசத்தையும் துதியையும் மயக்கத்தையும் விதைப்பதில் தமிழ் சினிமாக்கள் கிட்டத்தட்ட அபினிபோதையாகவே செயல்பட்டுக்கொண்டிருக்கிறது .

அன்ன ஹசாரேவை ஊழல் எதிர்ப்பின் கதாநாயகனாக்கினார்கள் .இப்போது அவர் வாய்மூடி மவுனியாகிவிட்டாரே ! ஏன் ? இப்போது சகாயத்தை அழைக்கிறார் . இது சரியா ?  தீர்வா ?  இல்லை .இல்லவே இல்லை .

 தனி மனிதனின் நேர்மையும் திறமையும் முக்கியம் யாரும் மறுக்க வில்லை உப்பும் மிளகாயும் மட்டும் உணவாக முடியாது . அரிசியும் பருப்பும் காய்கறியும் தானியங்களும் மீனும் முட்டையும் அடுப்பும் பாத்திரங்களும் எண்ணையும் இன்ன பிறவும் வேண்டும் ; எல்லாவற்றுக்கும் மேல் இவற்றை சமைக்க மனிதக் கைகள்  நிச்சயம் வேண்டும் .

அதுபோல தனி மனித நேர்மை , திறமை மட்டும் போதாது ; மாற்றுக் கொள்கை தேவை ; மாற்றுப் பார்வை தேவை ; சரியான அறிவியல் அணுகுமுறை தேவை ; உழைப்பைப் போற்றும் தத்துவம் தேவை ; இவற்றை செயலாக்கும் நெம்புகோலாக கட்டுக்கோப்பான அமைப்பு அல்லது இயக்கம் நிச்சயம் தேவை . இவை எதுவும் இல்லாமல் இவரா அல்லது அவரா அல்லது உவரா என பட்டிமன்றம் நடத்தலாமே தவிர ; உருப்படியான மாறுதல் வராது .

தனிநபர் துதி மற்றும் அரசியலில் அடிமைத்தனம் இவற்றில் சீரழிந்த இன்றைய தமிழக்கத்தை மீட்க – தனிநபரை அல்ல கொள்கையை உயர்த்திப் பிடித்து – நெருப்பாற்றில் எதிர்நீச்சல் போடத் தயாராகும் ஒவ்வொரு இளைஞனும் பகத்சிங் ஆவான் ; எழுக ! இளைய தலைமுறையே !எழுக ! பகத் சிங் கனவை நனவாக்க எழுக ! புதிய அரசியல் சமூகப் பண்பாட்டை கட்டியெழுப்ப எழுக ! எழுக !

********************************************

  
. “ வண்மை, கோபம், ஆளுந்திறம் ஆண்களுக்குச் சொந்தமென்றும், சாந்தம், அமைதி, பேணுந்திறம் பெண்களுக்குச் சொந்தமென்றும் சொல்வதானது, வீரம், வன்மை, கோபம், ஆளுந்திறம் புலிகளுக்குச் சொந்தமென்றும், சாந்தம், அமைதி, பேணுந்திறம் ஆட்டுக்குச் சொந்தமென்றும் சொல்வது போன்றதே ஒழிய வேறில்லை.நாம் வேண்டும் பெண் உரிமை என்பது என்னவெனில், ஆணைப் போலவே பெண்ணுக்கும் வீரம், வண்மை, கோபம், ஆளுந்திறம் உண்டென்பதை ஆண் மக்கள் ஒப்புக் கொள்ள வேண்டும் என்பதே ஆகும் ”

இப்படிப் பிசிறின்றிச் சொன்னவர் பெரியார். பெண் என்ன நடமாடும் நகைக் கடையா ? டிரஸ் ஸ்டேண்டா ? பிள்ளைபெறும் இயந்திரமா? என்றெல்லாம் கேட்டவர் . இன்றைய நவீன பெண்ணியவாதிகள் பேசுவதையும் அன்றே பகிரங்கமாகப் பேசியவர் . எல்லாம் சரிதான் பெண் பற்றிய பார்வை தமிழ்நாட்டில் இன்று எப்படி உள்ளது ?

அண்மை நிகழ்வுகளை கூர்ந்து கவனித்தால் பெண் சமத்துவம் பற்றிய புரிதல் மிகவும் கோளாறாகவே இருப்பது பளிச்செனத் தெரிகிறது . “ எங்களைத் தெய்வமாய் புகழவும் வேண்டாம் ; அடிமையாய் மிதிக்கவும் வேண்டாம் ; சகமனுஷியாய் மதியுங்கள்” என்று பெண் சமுகம் கதறுவதில் காதில் விழவில்லையா ?

பெண்ணுக்கு உடைகட்டுப்பாடு , ஒழுக்கம் , கற்பு , அடக்கம் என்றெல்லாம் பல கூறுகளை கற்பிப்போர் ஆணுக்கும் அவை வேண்டுமென மறந்தும் சொல்வதில்லையே ! அங்கே தான் பிரச்சனை !

ஆணும் பெண்ணும் நட்பாய் கைகுலுக்க முடியும் ; தோழமையுடன் கைவீசி நடக்கமுடியும் ; தோள் இணைந்து போரிட முடியும் ; அறிவு பூரவ்மாய் உரையாட முடியும் ; கரம் கோர்த்து சமூகத் தொண்டாற்ற முடியும் என்பதுதான் ஒரு சமூகம் நாகரீக சமுதாயம் என்பதன் அளவுகோல் .ஆணும் பெண்ணும் தங்கள் வாழ்வை தாங்களே முடிவெடுக்கும் வல்லமை பெற்றவர் . உரிமை பெற்றவர் . காதல் மணம் பண்பாடு மட்டுமல்ல ; மனித உரிமையும் ஆகும் .இங்கே அது கேள்விக் குறியாக்கப்படும்போது எங்கே சமத்துவம் பூக்கும் ? சேர்ந்து வாழ்வதோ – பிரிந்து வாழ்வதோ – தனித்து வாழ்வதோ அவரவர் உரிமை . அவரவர் விருப்பம் ; இதனை ஏற்க விரிந்த மனம் இருக்கிறதா நம்மிடம் ? அப்புறம் நாம் நாகரீகம் அடைந்து விட்டதாய் எப்படி நம்பமுடியும் ?

இங்கே நாம் நாகரிக மடையவில்லை .மதவாதிகள் ,சாதிவெறியர்கள் ,இனக்காவலர்கள் , மொழிப்பற்றாளர் எல்லோரும் பெண்களை புகழ்ந்து கொண்டே இரண்டாந்தர குடிமக்களாக்குவதில் ஒன்றாயிருக்கிறார்கள் .பெண் சமத்துவம் கோருவோர் மீது சேறுவாரி அடிக்கின்றனர் . இங்கே பெண்சமத்துவத்தை புரிந்து கொள்வதில் காணப்படும் குழப்பம் ஆண்களிடம் மட்டுமல்ல பெண்களிடமும் உண்டு . ஆணை மையப்படுத்தியே அனைத்தையும் அணுகுகிற பார்வையே ஆணாதிக்கம் . இது இரு பாலரிடமும் இருப்பதுதான் வேடிக்கை .
பெண்களை கீழானவர்களாக்கும் சடங்குகள் , சம்பிரதாயங்கள் ,பழக்க வழக்கங்கள் இவற்றைப் பேணிக்காப்பதில் பெண்கள் பெரும்பங்காற்றுவதுதான் நகைமுரண்.

ஆக , நம் மண்ணில் ஆணும் பெண்ணும் சமமெனக் கொண்டு ; அறிவில் ஓங்கி ; ஆற்றலில் சிறந்து வாழ்ந்திட பெரும் போராட்டமே நடத்தியாக வேண்டும் !இங்கே இந்தியாவை இப்போது பாஜக ஆள்கிறது . மோடி ஆள்கிறார் என்பது வெளிப்படையான காட்சி ; ஆனால் இந்த ஆட்சியை ஆட்டிவைக்கும் சூத்திரக்கயிறு ஆர் எஸ் எஸ் கையில் . அந்த ஆர் எஸ் எஸ் சிலோ மருந்துக்குக் கூட ஒரு பெண் கிடையாது . ராஷ்டிரிய சுயம் சேவக் – அதாவது ஆர் எஸ் எஸ் என்பதில் உள்ள சுயம் என்பது பெண்களுக்குக் கிடையாதாம் . எனவே அதன் துணை அமைப்பான சுயம் இல்லாத  “ராஷ்டிரிய ஸ்திரி சமிதியில் ” [ இதனையும் ஆர் எஸ் எஸ் என்று சொல்லி வெளியே ஏமாற்றுவர்]தான் பெண்கள் இருக்க முடியும். இப்படி முமுக்க முழுக்க ஆண்களே கொண்ட ஆர் எஸ் எஸ் தாம் பின்னிருந்து  மோடி ஆட்சியை இயக்குகிறது .ஆண் பெண் சமத்துவத்துகான போராட்டம் இங்கே எவ்வளவு கடினமானது . எவ்வளவு அவசியமானது என்பதை உணர்க !

முது கிழவன் பெரியார் பேசியதில் எழுதியத்தில் சிறிதேனும் செயலில் காட்டின் அதுவே முதல் தொடக்கமாகும் . பெண் சமத்துவம் வெறும் பேச்சல்ல ஒவ்வொருவர் உள்ளத்திலும் துளிர்த்து - வீட்டில் துவங்கி – வீதியில் கனிந்து – ஊர் , சேரி , நகரம் வேற்றுமை தகர்ந்து – நாட்டில் ஓங்கி – நாடிநரம்பில் கலந்து வளர்ந்திட கனவு காண்பது முதல் புள்ளி .அதோடு நிற்காமல்  அதற்காக ஒவ்வொருவரும் ஒரு அடியேனும் எடுத்துவை த்திட முயன்றாக வேண்டும்

இளைய தலைமுறையே ! ஆண் பெண் சமத்துவத் தேடல் , புரிதல் , செயலாக்கல் இவை ஒவ்வொருவர் உள்ளத்திலும்  இரு பாலரிடமும் துவங்க வேண்டும் ! அடுத்து வீட்டில் அமுலாக வேண்டும் ! சொல்வது எளிது ! செயலாக்க உறுதி வேண்டும் ! இதில் காணும் முன்னேற்றமே நம் நாகரீகத்தின் முதல் அளவுகோலாகும் . இதனை நோக்கி இளைய தலைமுறையே ! எழுக ! உறுதியோடு போராடுக ! முன்னேறுக !

****************************************************

  “  ‘புரட்சி  நீடூழி வாழ்க!’ என்று நாம் ஏன் முழங்க வேண்டும் ? புரட்சியையும் மாறுதலையும் நாம் ஏன் விரும்ப வேண்டும் ? இந்தியா இன்று பெரிய மாறுதலை வேண்டி நிற்பதென்னவோ உண்மைதான் .நாம் விரும்பும் அப்பெரிய மாறுதல் நிகழந்த பின்பும் – இந்தியா சுதந்திரம் பெற்ற பின்பும் – நாம் சும்மா இருக்க முடியாது .

இவ்வுலகில் மாறுதல் அடையாததெல்லாம் நசிந்து போகும் . இயற்கை நாளுக்கு நாள் நொடிக்கு நொடி மாறிக்கொண்டே இருக்கிறது . மாறி மாறி  வளராது வாளா இருப்பதெல்லாம் மரணமடைகிறது . ஓடுகிற நீர் தூயதாக இருக்கிறது ; அதன் ஓட்டத்தைத் தடுத்தால் நாற்றமெடுத்துவிடுகிறது. மனித வாழ்க்கையும் ஒரு தேசத்தின் ஜீவனும் இதைப் போன்றனவே .

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மூப்பு நம்மை வந்தடைகிறது . குழந்தைகள் சிறு பெண்களாகவும்,சிறுபெண்கள்பருவமங்கையராகவும்,பருவமங்கையர்பேரிளம்பெண்களாகவும்,பேரிளம்பெண்கள்கிழவிகளாகவும்மாறுகிறார்கள்.இம்மாறுதல்களுக்கு நாம் உட்பட்டே தீரவேண்டும் .ஆனால் உலகம் மாறுகிறது என்பதையே பலர் ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள் .அவர்கள் தங்கள் மனக்கதவுகளை அடைத்துத் தாளிட்டுப் புதிய கருத்துகளை உள்ளே விடமாட்டேன் என்கிறார்கள் . சிந்தித்துப் பார்ப்பது என்றாலே அவர்கள் பயந்து நடுங்குகிறார்கள் .

இதன் முடிவு என்ன ?உலகம் அவர்களைப் பற்றிக் கவலை கொள்ளாமல் முன்னேறிச் செல்கிறது.உலகம் அவ்வாறு மாறிமாறிச் செல்லும் போது புதிய நிலைமைக்கு ஒத்துப்போக முடியாத சிலர் இருக்கும் காரணத்தால் பெரிய குழப்பமும் கொந்தளிப்பும் ஏற்படுகிறது.

[1931ல் இதனை எழுதிய போது ]நூற்று நாற்பது ஆண்டுகளுக்கு முன் பிரெஞ்சுப் புரட்சி ஏற்பட்டது ;பதிமூன்று ஆண்டுகளுக்கு முன் ரஷ்யப் புரட்சி தோன்றிற்று. இம்மாதிரி பெரிய புரட்சிகள் உண்டாகின்றன .

நமது நாட்டில் இன்று ஒரு பெரும் புரட்சி நடந்து நிகழந்து கொண்டிருக்கின்றது.நமக்குச் சுதந்திரம் வேண்டும் .ஆனால், சுதந்திரம் மட்டும் போதுமா ?அதைவிட இன்னும் அதிகம் வேண்டும் .நெடு நாள் பாசி நிறைந்த நீர் தேங்கி நிற்கும் குட்டைகள் , அழுகல் நாற்றம் மூக்கைத் துளைக்கிறது .துர் நீரை எல்லாம் இறைத்துப் போக்கிவிட்டு  எங்கும் தூய நன்னீர் கொணர்ந்து விட வேண்டும் . நம் நாட்டின் அழுக்கைக் கழுவி வறுமையைத் துன்பத்தை நீக்க வேண்டும் .இப்பெரியத் திருப்பணியில் நம்முடன் கைகோர்த்து உழைக்காது விலகி நிற்போருடைய மாசுகளை நம்மால் இயன்றவரை அகற்ற வேண்டும் .அது பெரியதொரு காரியம் .இதை நிறைவேற்ற நாள் பல செல்லலாம் . ஆனால் இதை நாம் உடன் ஆரம்பித்துவிட வேண்டும் – புரட்சி நீடூழி வாழ்க!”

இப்படி உண்ர்ச்சியைக் கொம்பு சீவிவிடுபவர் மேநாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு . இவர் சிறையிலிருந்து தன் மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதங்கள் புகழ்பெற்றவை .1931 ஜனவரி 8 ஆம் நாள் எழுதியக் கடிதத்தில் குறிப்பிட்டவையே மேலே சொன்னவை .இக்கடிதங்களெல்லாம் ‘ உலக சரித்திரம்’ என்கிற பெயரில் இரண்டு பாகமாக புத்தகமாகவே வந்துள்ளது . தன்னை சோஷலிசம் பக்கம் திருப்பியதில் இந்நூலுக்கு பெரும் பங்குண்டு என்பார் தோழர் இ.எம்.எஸ்.இன்றும் இளைய தலைமுறை கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகங்களில் இதுவும் ஒன்று .

நேரு முற்போக்கானச் சிந்தனையாளர் ; காந்தியின் பத்தாம் பசலித்தனமான பல கொள்கைகளைக்  கடுமையாக எதிர்த்தவர் . எனினும் காந்தியின் நம்பிக்கையைப் பெற்று  - காந்தியால் ஆட்சித் தலைமைக்குத் தகுதியானவர் என அடையாளம் காட்டப்பட்டவரும் இவரே . இதுதான் வரலாற்று விசித்திரம் .
நேருவில் காலக்கட்டம் பல நல்லதும் பல கெட்டதும் கலந்த கலவையே .அவர் மீது கடும் விமர்சனம் நமக்கு உண்டெனிலும் அவரின் பங்களிப்பை நாம் மறுக்க இயலாது . அது போகட்டும் . அவர்  மேலே சொன்ன  “ சுதந்திரம் மட்டும் போதுமா ? அதைவிட இன்னும் வேண்டும் …” என்கிற பேச்சு இன்னும் கனவாகவே இருக்கிறது .

நேரு , அவர் மகள் இந்திரா , பேரன் ராஜீவ் என பலர் ஆண்டபின் நிலைமை மாறவே இல்லை . அப்படியே தொடர்கிறது . அவர் கொள்ளுப் பேரன் ராகுல் பிரதமர் கனவோடு வலம் வருகிறார் . ஆனால் வசந்தக் காற்று ஏழைகள் பக்கம் வீசவே இல்லை .இன்னும் எத்தனை நாள் காத்திருப்பது ?

 ‘புரட்சி நீடூழி வாழ்க!’ எனப் பேசுவதும் எழுதுவதும் மிகமிகச் சுலபம் . ஆயின் எதிர்கொள்ள வேண்டிய தடைகள் – சந்திக்க வேண்டிய சூறாவளிகள் – தாண்ட வேண்டிய எரிமலைகள் – நீந்திக் கடக்க வேண்டிய நெருப்பாறுகள் அநேகம் ! அநேகம் ! தயங்கி நிற்க இனியும் நேரமில்லை .

இளைய தலைமுறையே ! எழுக ! படைதிரட்டுக ! முதலில் சமூக உளவியலை புரட்சிக்குச் சாதகமாக்கிட – சிந்தனைப் புரட்சிக்கு விதை தூவுக ! புரட்சிக்கு நாள் குறிக்க இயலாது ! சூடேற்று ! நெருப்பை எரியவிடு ! ஒரு நாள் கொதிநிலையை எட்டும் ! பாய்ச்சல் வேகத்தில் முன்னேறும் . இளைய தலைமுறையே ! எழுக ! எழுக !


***********************************************************


 “தம் சொந்த நாட்டில் நிக்கோலாய் லெனின் அரசியல் சிந்தனைத் தத்துவம் ஆகியவை ஏற்படுத்திய மாபெரும் புரட்சி அழிக்கப்படலாம் . ஒருக்கால் மக்கள் சிலரின் தன்னலப் போக்கினால் ஒதுக்கித் தள்ளப்படலாம் . ஆனால் ,அது மீண்டும் உயிர்த்தெழுந்து இறுதியாக உலகம் முழுவதும் பரவும். கடைசியாக அது உலகம் முழுவதும் உள்ள தொளிலாளரின் வாழ்க்கையை மிகவும் சிறப்புள்ளதாக்கும்.”
- இவ்வரிகள் சோவியத் யூனியன் தகர்வுக்குப் பிறகு யாரோ ஒருவர் நம்பிக்கையூட்ட  சொன்னவை அல்ல ;சோவியத் யூனியன்  நீலவானில் செந்தாரகை என ஒளிர்ந்து கொண்டிருந்த ஆண்டுகளில் – ரபீந்திரநாத் தாகூரும் , , எஸ் எஸ் கிருஷ்ணனும் இன்ன பிறரும் சோவிய யூனியனை கொண்டாடுவதற்கு முன்பே  -1934 லியே தீர்க்க தரிசனத்துடன் இப்படிக் கூறியவர் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் .
மார்க்சிய சிந்தனையே மனித குல துன்ப துயரங்களுக்கு மாமருந்து என தன் வாழ்வின் இறுதி நாள் வரை எழுதியும் பேசியும் வந்தவர் சிங்கார வேலர் . “ இப்போதெல்லாம் பொதுவுடைமைக்காரர்களை ‘ மாஸ்கோ ராஸ்கல்’ என்று கூறுவது பேஷனாகிவிட்டது .அந்த வகையில் நான் ‘ மாஸ்கோ ராஸ்கல்’ என அழைக்கப்படுவதில் பெருமைப் படுகிறேன்.” என அன்றே நெஞ்சு நிமிர்த்தியவர்.மார்க்சிய தத்துவத்தை மிக எளிமையாய் சாமானியரும் புரிந்து கொள்ளத்தக்க விதத்தில் எடுத்துச் சொன்ன சிந்தனையாளர் அவர் . மார்க்சியத்தை இந்த மண்ணுக்கு ஏற்ப பிசைந்தவர் .

“ எங்களின் குருபீடம் மாஸ்கோவும் அல்ல ; பீஜிங்கும் அல்ல ; இந்தியாவில் இந்திய உழைப்பாளிகளைத் திரட்டி ; இந்தியப்புரட்சியை நடத்த முயல்பவர்கள்” என நூறுமுறை அல்ல ஆயிரம் முறை தெளிவுபடுத்தினும் நமது வர்க்க –வர்ண எதிரிகள் நம்மை அவதூறு செய்துகொண்டேதான் இருக்கின்றனர் . அவர்கள் எப்படியேனும் நம் வெற்றியைத் தள்ளிப்போட முயன்று கொண்டேதான் இருப்பார்கள் . அனைத்தையும் மீறித்தாம் நாம் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்தாக வேண்டும் . சிங்காரவேலரின் ஒரு எச்சரிக்கை எவ்வளவு பொருள் பொதிந்தது என்பதே கீழே நீங்களே படித்து உணர்ந்து கொள்ளுங்கள் .

 “ சாதியும் , மதமும் , சொத்துரிமையும் முதலாளிகள் தங்கள் செல்வத்தையும் , செருக்கையும் , ஆதிக்கத்தையும் , [ சுரண்டும்] உரிமையையும் காப்பதற்கு கட்டிக்கொண்டிருக்கும் கோட்டை மதில்கள் என அறிய வேண்டும் . இந்த வாயில்கள் திறந்திருக்கும் வரை சமதர்மமும் நிலையாதெனவும் அறிய வேண்டும் . ஆதலின் சமதர்மம் நிலைத்து [ அன்றையக் கணக்கில்] 5 கோடி பாமர மக்கள் மிருக வாழ்விலிருந்து மனித வாழ்வை அடைய வேண்டுமானால் முதலாளிகள் மதில்களைத் தரைமட்டமாக்கி கோட்டையும் வாயிலுமற்றுப் போகச் செய்ய வேண்டும்.” என கோபத்தோடு சொன்னார் சிங்காரவேலர் .

சாதி ஆதிக்கம் , மதவெறி இவற்றுக்கு எதிரான போர் ; இடதுசாரி மாற்றை நோக்கிய போராட்டத்தில் மிக முக்கியமானது ; தவிர்க்க முடியாதென்பதை அறியலாம் .எழுவோம்.

“ நாம் வெல்லுவோம் ! நாம் வெல்லுவோம் ! ஓர் நாள்” என்கிற நம்பிக்கைப் பாடலை உரக்க இசைத்து எழுக ! இளைய தலைமுறையே ! எழுக ! சோஷலிசமே ஒரே மாற்று .. ஒரே தீர்வு என்பதை சிந்தனையால் செயலால் நாளும் உணர்ந்து .. … உணர்த்தி …. எழுக ! இளைய தலைமுறையே ! எழுக !

*********************************************************************







0 comments :

Post a Comment