கடவுளும் மதமும் கலையை வளர்க்கவில்லையா?

Posted by அகத்தீ Labels:

கடவுளும் மதமும் கலையை வளர்க்கவில்லையா?

சு.பொ. அகத்தியலிங்கம்


·         மாதவிடாயின் போது பொதுவாக பெண்கள் எந்த நல்ல காரியத்துக்கும் போகமாட்டார்கள்.  அதன் ஒரு பகுதிதான் கோயிலுக்குள் அனுமதிக்காததும்.  இதனைப் புரிந்துகொள்ளாமல் மேற்கத்திய நாகரிகத்தில் மூழ்கிய  அதி தீவிர பெண்ணியவாதிகள் , நாத்திகர்கள், கம்யூனிஸ்ட்டுகள் கூப்பாடு போடுவது எந்தவிதத்தில் நியாயம் ?


·         ‘அர்த்த நாரீஸ்வரர்’ என பெண்ணுக்கு தன் இடப்பாகத்தை சிவன் தந்த காட்சிப் படிமத்தை பார்த்த பின்னும் இந்து மதம் பெண் சமத்துவம் பேணும் மதம் என்பதை ஏற்காமல் விதண்டா வாதம் பேசுவதேன்? வேறு எந்த மதம் பெண்ணைப் போற்றுகிறது சொல்லுங்கள்? 


·         முட்டையிலிருந்து கோழி வந்ததா ? கோழியிலிருந்து முட்டை வந்ததா ? இடக்கு மடக்காகக் கேட்கவில்லை ; பதில் சொல்ல முடியாததல்லவா ? இதுதான் தத்துவச் சண்டையின் லட்சணம் என்பதை ஏற்பீர்களல்லவா ?


·         காலையில் எழுந்ததும் சுப்ரபாதம் கேட்டுப்பாருங்கள் மனசு இதமாக இருக்கும்; கந்த சஷ்டி கேட்டுப்பாருங்கள் நம்பிக்கை பிறக்கும் . இது போன்ற ஆன்மீகம் சார்ந்த நல்ல கூறுகளை எடுத்துக் கொள்வதில் உங்களுக்கு என்ன தயக்கம் ?


·         கடவுள், மதம் இவைகளுக்கு அப்பால் இசையையும் கலையையும் வளர்த்ததில் மதத்துக்குப் பெரும்பங்கு உள்ளதல்லவா?விவாதமோ உரையாடலொ துவங்கிய பின் ; அது ஒரு புள்ளியை சுற்றிச் சுழன்றாலும் கூட அதன் வீச்சும் பார்வையும் பல தளங்களைத் தொடும் அது இயல்பே ! இங்கே ஆன்மிக விவாதம் என்பதால் அது எங்கே எப்போது எப்படி சுழன்றடிக்கும் என்று கணிப்பது கடினம் . வருவதை எதிர்கொள்வோம். வம்படிக் கேள்விகளுக்கும் அறிவியல் பூர்வமாகப் பதில் சொல்லவே முயல்வோம்.


மாதவிடாயின் போது பொதுவாக பெண்கள் எந்த நல்ல காரியத்துக்கும் போகமாட்டார்கள்.  அதன் ஒரு பகுதிதான் கோயிலுக்குள் அனுமதிக்காததும்.  இதனைப் புரிந்துகொள்ளாமல் மேற்கத்திய நாகரிகத்தில் மூழ்கிய  அதி தீவிர பெண்ணியவாதிகள் , நாத்திகர்கள், கம்யூனிஸ்ட்டுகள் கூப்பாடு போடுவது எந்தவிதத்தில் நியாயம் ?


உணர்வுபூர்வமான கேள்வி என்பதால் அதிரடி பதில் மட்டும் போதாது. முதலில் மாதவிடாய் என்பது என்ன என்கிற தெளிவு வேண்டும். மருத்துவ அறிவியல்படி, ஒவ்வொரு மாதமும், கருத்தரிப்பிற்கான தயார்ப்படுத்தலுக்காக, கருப்பையின் உள் மடிப்புகளில் (எண்டோமெட்ரியம்) போதிய இரத்தம் நிரம்பி இருக்கிறது. ஒரு பெண் கர்பமடைவாரேயானால், கருப்பையில் தங்கும் கருக்கட்டிய முட்டைக்குபோதிய ஊட்டச்சத்தை வழங்குவதற்காகவே இந்த குருதி நிறைந்த மடிப்புக்கள் உருவாகியிருக்கும். பெண் கருத்தரிக்காத நேரங்களில் இம்மடிப்புகளில் உள்ள தேவையற்ற இழையங்களும், அவற்றுடன் சேர்ந்து மடிப்புக்கள் இருக்கும் நுண்ணிய குருதிக் குழாய்களிலிருந்து வெளிவரும் குருதியும் வெளியே கழிவாக தள்ளப்படுகிறது. இந்நிகழ்வு மாதந் தோறும் சுமார் மூன்று முதல் ஏழு நாட்கள் வரையில் நடைபெறுகிறது. இதனையே மாதவிடாய் என்கிறோம். இந்த மாதவிடாய் வெளியேற்றம் மாதத்திற்கு ஒருமுறை யோனிமடல் ஊடாக நடைபெறுகிறது. இறுதி நாளோ அல்லது கடைசி இரு நாட்களோ வெளியேற்றம் குறைவாக இருக்கும். சில வேளைகளில் முதல் நாள் குறைவாக இருக்கும்.


இன்னும் நிறைய மருத்துவ தகவல்களை சொல்ல இயலும் எனினும் தற்போதைய தேவைக்கு இது போதும் . இதில் ஒன்று தெளிவாகிறது . அது கெட்ட ரத்தம் அல்ல.  நீங்களும் நானும் இந்த இரத்தத்தின் ஊட்டச்சத்தில்தான் நம் தாய்மார்களின் கருவறைகளில் வளர்ந்திருக்கிறோம். ஆகவே மாதவிடாயைத் தூய்மைக் குறைவாகப் பார்ப்பது அறியாமை. குலம் தழைக்க உதிரம் தரும் பெண்மையைப் போற்றுவதே தகும் .


ஆதியில் பெண்ணின் உதிரப் பெருக்கு தீட்டாகக் கருதப்படவில்லை ; மாறாக வளப்பமாகவே கருதப்பட்டது. பெண்ணின் உதிரப்போக்கிற்கும் குழந்தை பேற்றுக்கும் தொடர்பு இருப்பதால் நிலம் நன்கு விளைச்சல் தர இரத்த நிற கரைசலை தெளிக்கும் வழக்கம்  தொல்குடிகளிடம் உண்டு. இந்த வளச்சடங்கு உலகெங்கும் உண்டு. இதனை நெற்றியில் திலகமாக இட்டுக்கொண்டதும் பழைய மரபே. இதன் நீட்சியாகவே குங்குமம் வந்தது. ஆயினும் நிலவுடைமைச் சமூகத்தில் சொத்துரிமையும் வாரிசுரிமையும் ஆணாதிக்கத்துக்கும் வழி செய்தன. அப்போதுதான் பெண் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டாள். மாதவிடாய் தீட்டாக்கப்பட்டு எதிர்நிலைக்கு தள்ளப்பட்டது.


அசாம் மாநிலத்தில் காமாக்கியா கோயிலில் வழங்கப்படும் பிரசாதம்  அம்மனின் மாதவிடாய் ரத்தம்தான் என்பது ஐதீகம். தமிழகத்திலும் பல நாட்டுப்புற தெய்வங்களை வழிபட மாதவிடாய் தடை அல்ல; குறிப்பாக தலித் மக்கள் வழிபடும் சில நாட்டார் தெய்வங்களை அக்குலப் பெண்கள் மாதவிடாய் நாளில்தான் வழிபடுவர்; காரணம் ஆண்டைகள் அப்போதுதான் அனுமதிப்பார்கள் என்பது உபதகவல் . மேல்மருவத்தூர் சக்தி பீடம் குறித்து எனக்கு பல விமர்சனம் உண்டு எனினும் மாதவிடாய் காலத்தில் யாகம் நடத்தவும் வழிபடவும் தாராள அனுமதி உண்டு. அப்படியாயின் இந்த கடவுளுக்கு மாதவிடாய் தீட்டு அல்லது தூய்மைக்குறைவு அல்ல. ஆனால் ஐயப்பனுக்கும் வேறு சில நிறுவன கடவுள்களுக்கு மட்டும் மாதவிடாய் தீட்டானது ஏன்? தூய்மைக்குறைவானது ஏன்? இந்த நியாயமான கேள்விக்கு ஆன்மீகவாதிகள் என்ன சமாதானம் சொல்லப் போகிறார்கள்? 


“ஒவ்வொரு மாதமும் எனக்கு ரத்தப் போக்கு ஏற்படுகிறது. அந்த நேரங்களிலும் நான் பிரார்த்தனை செய்வதைக் கடவுள் கோபப்படாமல் ஏற்றுக்கொள்கிறார். ஆனால், மாதவிடாய்க் காலங்களில் பெண்கள் தூய்மையற்றவர்கள் என்று மற்றவர்களும் சொல்லி வருகிறார்கள். ‘தூய்மையற்றதாக’ சொல்லப்படும் அந்தத் தாயின் கருவறைக்குள்தான் 9 மாதங்கள் நீங்கள் உயிர்த்திருந்தீர்கள் என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம்” என்று எதிர்க் குரல் எழுப்பும் புதிய தலைமுறைப் பெண்களின்வாதம் அதீதமானதுமல்ல; ஆபத்தானதும் அல்ல. ஆன்மீகத்துக்கு எதிரானதுமல்ல; பாலின சமத்துவத்துக்கும் அறிவியலுக்குமான நியாமான வேட்கையே அந்தக் குரல்!


“பெண்களே ஒதுங்கிப் போகும்போது நீங்கள் ஏன் வில்லங்கம் ஆக்கவேண்டும்,” எனக் கேட்கின்றனர் சிலர். அறியாமை ஆண்களிடம் மட்டுமல்ல பெண்களிடமும் உண்டு; அதற்காக அப்படியே விட்டுவிடலாமா ? குழந்தை ஆணா பெண்ணா என்பதை தீர்மானிப்பது ஆணின் விந்தணுவே என்பதை அறியாதவர்களாகப் பெரும்பாலான பெண்கள் இருப்பதால், பல அநீதிகளைச் சகித்துக் கொள்கிறார்கள்  என்பதால் அதனை சொல்லாமல் இருக்கலாமோ? ஸதி எனும் உடன் கட்டை ஏறுதல், விதவைகள் மறுமணம் செய்யாமலிருப்பது என்பற்றில் “இது என் தலையெழுத்து” என்றே பெண்கள் இருந்து வந்தார்கள். அதற்காக சமூகசீர்திருத்தவாதிகள் சும்மா இருந்துவிட்டார்களா? இல்லையே! விழிப்புணர்வை விதைத்தனர். போராடினர். சட்டம்கொண்டுவர வைத்தனர். பலனை சமூகம் இன்று அனுபவிக்கவில்லையா? அது போலத்தான் இது .

இங்கேயும் ஒலிப்பது கடவுள் நம்பிக்கைக்கு எதிரான குரல் அல்ல; மாறாக கடவுளை வழிபடுவதில் பாலினசமத்துவம் வேண்டும் என்பதற்கான குரலே. எந்த மதமாயினும் அது பெண்களுக்கு எதிராகவே இருக்கிறது. மாதவிடாயை தூய்மைக் குறைவாகவே சித்தரிக்கிறது. முற்போக்காளர் பணி சவால் நிறைந்தது என்பதையே கேள்வி உணர்த்துகிறது .
மாதவிடாய் குறித்த பல மாயைகளை, சம்பிராதாயங்களை, தப்பெண்ணங்களை உடைத்தெறிய வேண்டியிருக்கிறது. அதற்கு உதவியாக ஒரு ஆவணப்படம் தற்போது கைவசம் உள்ளது .  “ஆண்களுக்கான பெண்ணின் படம்” என்ற அறிவிப்போடு கீதா இளங்கோவன் இயக்கியுள்ள,  இளங்கோவன் தயாரித்துள்ள “ மாதவிடாய்” என்ற ஆவணப்படத்தை ஒவ்வொரு குடும்பமும் கூட்டாகப் பார்த்து உரையாட வேண்டும். பெண் பூப்பெய்துகிறபோது அதனை சடங்காக்கி பெண்களைச் சிறைவைக்காமல் உறவினர் சூழ இப்படத்தைப் போட்டுக் காண்பித்து தெளிவுபடுத்தலாம். ஆக ஒரு பெரும் விழிப்புணர்வு போராட்டம் நடத்த வேண்டியுள்ளது.


 ‘அர்த்த நாரீஸ்வரர்’ என பெண்ணுக்கு தன் இடப்பாகத்தை சிவன் தந்த காட்சிப் படிமத்தை பார்த்த பின்னும் இந்து மதம் பெண் சமத்துவம் பேணும் மதம் என்பதை ஏற்காமல் விதண்டா வாதம் பேசுவதேன்? வேறு எந்த மதம் பெண்ணைப் போற்றுகிறது சொல்லுங்கள்? 


முந்தைய கேள்வியின் தொடர்ச்சிதான் இது. நீங்கள் சிவாஜிகணேசன் நடித்து ஏ.பி. நாகாராஜன் இயக்கிய ‘திருவிளையாடல்’ படம் பார்த்திருப்பீர்கள். அதில் ஆணாதிக்கத்தின் மொத்த வடிவமாய் சிவன் கர்ஜிக்கிற காட்சியும் வசனமும் மறந்து போகுமோ! சாதாரண பெண்ணாயினும் ஈசனின் மனைவியே ஆயினும் பெண்ணாய் பிறப்பதே பெரும்பாவம் என சக்தி புலம்புவதையும்கூட மறுந்திருக்க முடியாது. தாயை மையமாகக் கொண்டிருந்த சமூகத்திலிருந்து தந்தையை மையமாக்கிய சமூகத்தை நோக்கி சமூகம் நகர்த்தப்பட்டபோது எதிர்கொள்ள நேர்ந்த எதிர்ப்பின் வடிகாலாகவே சில சமரசக் கதைகள் புனையப்பட்டிருக்கும். அர்த்த நாரீஸ்வரர் புனைவும் அத்தகையதே . சரிபாதி பெண்ணென சிவனே ஒத்துக்கொண்ட பின்னும் பெண்ணுக்கு ஆலயங்களில்கூட சமநிலை வழங்கப்படவில்லை என்பதே உண்மை . முந்தைய கேள்வி பதிலே இதனை படம்பிடிக்கும் .


எப்படி தாய் தெய்வங்களை ஓரங்கட்டிவிட்டு தந்தை தெய்வங்கள்  முன்னிலைப் படுத்தப்பட்டன  - அதாவது ஆண்குறி பிம்பமான லிங்கம் வழிபாட்டில் முன்னிலைப் படுத்தப்பட்டது - என்பதை வரலாற்று ரீதியாக பார்க்க வேண்டும். இது உலகெங்கும் நடந்தது. எல்லா மதங்களிலும் நடந்தது . லண்டனில் ஒரு தேவாலயத்தில் ஆண்குறி வழிபாடு தொடர்கிறது. மேலும் அறிய ரோசலின் மைல்ஸ் எழுதி, இராதாகிருஷ்ணன் மொழிபெயர்ப்பில் வந்துள்ள ‘உலகவரலாற்றில் பெண்கள்’ என்ற புத்தகத்தைத் தேடிப் படியுங்கள். 
பொதுவாகப் பெண் சிற்பங்கள் எல்லாம் இடது பக்கமாகவே அமைக்கப்படுவது ஏன்? சில சிற்பங்களில் வலது பக்கமாகவும் அமைந்தது எதனால்? வெளிப்பார்வைக்கு மிக எளிதாக தோன்றும் இக்கேள்வி இந்து மதத்தில் பெண்ணுக்கு வழங்கப்பட்டிருக்கிற அடிமை நிலையின் வெளிப்பாடே என்பதை தக்க சான்றாதாரங்களுடன்   ‘தமிழகச் சிற்பங்களில் பெண் தொன்மம்’ எனும் நூலில் முனைவர் பெ.  நிர்மலா நிறுவுகிறார்.

 சிற்பத்தில் ஆணுக்கு அடங்கிய மனைவியாக - மதம் பாராட்டும் பத்தினியாக பெண்ணை காட்டுகிற போது இடது பக்கம்  பெண்ணை நிறுத்துவதும்; ஆணுக்கு அடங்காமல் திமிறுகிற பெண்ணை அல்லது எதிர்த்துப் போராடுகிற பெண்ணை அல்லது காமநுகர்ச்சியை சித்தரிக்கும் வேளையில் பெண்களை வலது பக்கம் சித்தரிக்கிறார்கள் என்பதும் இந்நூலில் வலுவான ஆதாரங்களுடன் எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது. அதேபோல மேல் கீழ் என சிற்பங்களை செதுக்குவதும், உயர்வுதாழ்வு அடிப்படையில்தான் என்பதையும்; துய்மை புனிதம் என்பன போன்ற எதிர்நிலைக் கருத்தாக்கங்களும் ஆணாதிக்க மனோநிலையின் அடிப்படையில் சிற்பங்களை செதுக்குவதிலும் கூட எப்படியெல்லாம் பிரதிபலிக்கிறது என்பதையும் இந்நூல் நெத்தியடியாக உரைக்கிறது . 


இந்து மதம் மட்டுமல்ல எல்லா மதங்களுமே பெண்களைக் கீழாகவே சித்தரித்துள்ளன; இஸ்லாம், கிறுத்துவம், புத்தம் எல்லாவற்றிலும் மாதவிடாயைத் தூய்மைக்குறைவானதாகக் காட்டுவதுடன், மத வழிபாட்டிலும் அதன் தலைமையிலும் பாலின ரீதியாக பெண்ணுக்கு சம்பங்கு மறுக்கப்படுவதும் தொடர்கிறது. அதை எதிர்த்த போராட்டங்களும் அதன் விளைவாய் சில நெகிழ்தல்களும் ஆன்மிக தளத்தில் மேலோட்டமாக அங்கொன்றும்இங்கொன்றுமாக  நடந்துள்ளன என்றாலும் இன்னும் ஆணாதிக்கப் பிடி வலுவாகவே உள்ளது. இவற்றைச் சொல்வது விதண்டாவாதமல்ல;  பாலின சமத்துவத்துக்கான நியாயமான வாதமே!


முட்டையிலிருந்து கோழி வந்ததா ? கோழியிலிருந்து முட்டை வந்ததா ? இடக்கு மடக்காகக் கேட்கவில்லை ; பதில் சொல்ல முடியாததல்லவா ? இதுதான் தத்துவச் சண்டையின் லட்சணம் என்பதை ஏற்பீர்களல்லவா ?தத்துவத் தளத்தில் நெடுநாட்களாக நடக்கும் விவாதம் இது. முட்டை எங்கிருந்து வந்தது? கோழியிலிருந்து வந்தது. கோழி எங்கிருந்து வந்தது? முட்டையிடமிருந்து வந்தது (நாமக்கல் பண்ணைகளின் கோழி வளர்ப்பு முறை வேது ;அதனை இந்த விவாதத்தோடு போட்டுக் குழப்ப வேண்டாம்). இப்படியே கேட்டுக்கொண்டே போனால் செக்குமாடு மாதிரி ஒரே வட்டத்தைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டே இருக்க வேண்டியதுதான். இது நிலைத்த சுழற்சி வட்டம் (எட்டர்னல் ரிட்டர்ன்) என ஆன்மீகம் திருப்தியடைந்து விடும். ஆனால் பகுத்தறிவு திருப்தி அடைய முடியாது .

கேள்வியை பின்னோக்கி கொண்டுபோனால்? இன்றைய கோழியின் முந்தைய பூர்வோத்திரத்தைத் தேடிப் பயணித்தால் ? டார்வினின் பரிணாமக் கோட்பாட்டைத்தான் - அதாவது படிமலர்ச்சிக் கோட்பாட்டைத்தான் - வந்தடைய வேண்டும் . அப்போது கோழியின் முந்தைய பரிணமாம் மட்டுமல்ல அதற்கு முந்தி முந்தி எனப் போய் ஓருயிரி எனப்படும் ஒரு செல் உயிரினத்தை அடைவோம் . ஆக ஓருயிரியிலிருந்துதான் படிநிலைவளர்ச்சி பெற்று கோழி வந்தது.


இதே போல் மாமரம் எதிலிருந்து வந்தது? மாங்கொட்டையிலிருந்து. மாங்கொட்டை எதிலிருந்து வந்தது? மாமரத்திலிருந்து. கோழிபோலவே இங்கு ஒரு செக்கு மாட்டு வட்டம். இங்கும் தாவரங்களின் பரிணாமத்தைத் தேடிப் பயணம் போனால் ஒரு ஸெல்லில் போய் நிற்கும். இது ஒரு புறம் இருக்கட்டும்.


கோழி முட்டைகளை இடும்; முட்டைகளிலிருந்து மேலும் பல கோழிகள்; மேலும் அதிக முட்டைகள்; மேலும் அதிக கோழிகள். அது போல மாங்கோட்டை, மாமரம், மாங்கொட்டைகள், மாமரங்கள் என வட்டம் விரியும் . திரும்பத் திரும்ப புறப்பட்ட  இடத்திற்கே வரினும் அது முன்னிலும் உயர்ந்த மட்டம் .


இதைத்தான் மார்க்சியம் “ நிலைமறுப்பின் நிலை மறுப்பு” என்கிறது. இயக்கவியலின் மூன்றாம் விதி இது. மேலும் இந்த நிலை மறுப்பு மேல்நோக்கிச் செல்லும் சுழலேணியாக (அஸ்செண்டிங் ஸ்பிரல்) சுழலேணி முன்னேற்றமாக (ஸ்பிரல் பிராகிரஸ்) அமையும் என்கிறார் மார்க்சிய மெஞ்ஞானம் நூலில் ஜார்ஜ் பொலிட்ஸர் .

சமூகமும் அப்படித்தான் வறுமையைப் பங்கு போட்ட ஆதிப் பொதுவுடைமை என கூறப்படும் ஆதிமனிதன் யுகம், ஆண்டான் யுகம் , நிலப்பிரபுத்துவ யுகம், முதலாளியுகம், மீண்டும் எல்லொருக்கும் எல்லாம் கிடைக்கும் பொதுவுடைமையுகமாக எழப்போகும் புதுயுகம் என வட்டம் விரியும் . 

இதனை லெனின், “ ஏற்கெனவே கடந்துவிட்ட கட்டங்கள் திரும்பத் திரும்ப வருவதுபோலத் தோன்றுகின்ற வளர்ச்சிப் போக்கு இருக்கிறது . ஆனால் அவற்றை ஒரு மாறுபட்ட  முறையில் அல்லது புதிய முறையில் மேலும் உயர்ந்த அடிப்படையில் , நேர் கோட்டிலல்ல , சுழல் ஏணிப்படி போன்ற முறையில் திரும்பத் திரும்ப அது கொண்டு வருகிறது,” என்று குறிப்பிடுகிறார்.

அதே சமயம்  “ ஓர் ஒத்திசைவான வெளிப்பாடாக” இல்லாமல் “முரண்பாடுகளின் வெளிப்பாடாக” வளர்ச்சி நடை பெறுகிறது . ஆம் , விதையைக் கிழித்துக்கொண்டுதான் செடி- மரம் ; மரத்தின் காம்பை அறுத்துக்கொண்டுதான் விதை . முட்டையிடுகிற கோழிக்குத்தான் நோக்காடு தெரியும் ; முட்டையையை உடைத்துக் கொண்டுதானே கோழிக்குஞ்சு வரும் .
இது வெறும் தத்துவச் சண்டை அல்ல ; அறிவியல் அணுகுமுறை ; இயங்கியல் பார்வை. இந்த வளர்ச்சி விதி - அதுதான் “ நிலை மறுப்பின் நிலை மறுப்பு” எனும் விதி - மிக முக்கியமானது . அடுத்துவரும் பகுதிகளில் இதனை மேலும் முன்னெடுப்போம். 


காலையில் எழுந்ததும் சுப்ரபாதம் கேட்டுப்பாருங்கள் மனசு இதமாக இருக்கும்; கந்த சஷ்டி கேட்டுப்பாருங்கள் நம்பிக்கை பிறக்கும் . இது போன்ற ஆன்மீகம் சார்ந்த நல்ல கூறுகளை எடுத்துக் கொள்வதில் உங்களுக்கு என்ன தயக்கம் ?


மென்மையான இசை நெஞ்சை வருடும் ; அதிலும் அதிகாலையும் இரவு தூங்கும் போதும் மென்மையான இசை இன்னும் இதமானது . புல்லாங்குழலிசையில் நனைந்து பாருங்கள் மனசு இறக்கை விரிக்கும் . ஆகவே இசையில் மயங்குதல் மனித இயல்பு. ஏனெனில் இசை மனிதன் உழைப்போடு பிறந்தது. மனிதனின் இந்த மனோவியலை மிகச் சரியாக மதம் பயன் படுத்திக் கொண்டதன் ஒரு வடிவமே  சுப்ரபாதம், கந்த சஷ்டி கவசம் போன்றவை , 
கிறுத்துவ மதத்தில் கீதங்கள் உண்டு, குரானை அரபுமொழியில் வாசித்தால் அதன் கவித்துவமும் ஓசைநயமும் அப்படியே அமைந்திருக்கும் . ஆக எல்லா மதங்களிலும் இதுபோல் உண்டு . 
இவற்றை கேட்க விரும்புவோர் கேட்கக் கூடாதென யாரும் தடை போடவில்லை . அவர்கள் விருப்பம். உரிமை . ஆயின் அதற்கு புனிதம் கற்பிக்க வேண்டாம்; அறிவியல் முலாம் பூச வேண்டாம்  என்பதுதான் எம் வேண்டுகோள் .


எந்த சொற்களுமின்றி புல்லாங்குழலிசையை கேட்டுப்பாருங்கள்.  இதே ஒத்தடம் கிடைக்கும். வேறு ஏதேனும் இசையைக் கேட்டுப்பாருங்கள், இதே வருடல் நிச்சயம் கிடைக்கும். வேறு ஏதேனும் மென்மையான பாடலை காலையும் இரவும் அசை போட்டுப் பாருங்கள். இதே மகிழ்ச்சி கிடைக்கும் . சுப்ரபாதமோ கந்த சஷ்டியோ கேட்பதால் சிறப்பாக எதுவும் நடந்துவிடாது. அப்படி நடக்கும் என்பது   “மந்திரத்தால் மாங்காய் விளையும்” என்பது போன்ற கயிறு திரிப்பே. இசைக்கு மயங்காதார் யார்? ஆனால் அதற்கு மதம் எதற்கு ?


கடவுள், மதம் இவைகளுக்கு அப்பால் இசையையும் கலையையும் வளர்த்ததில் மதத்துக்குப் பெரும்பங்கு உள்ளதல்லவா?


இசையும் பாடலும் எப்படித் தோன்றின, வளர்ந்தன என்பதை சற்று உற்று நோக்கின் கேள்வியின் அறியாமை விளங்கும். உழைப்போடு பிறந்ததுதான் இசையும் பாடலும். பாரம் சுமக்கும் போது, படகு ஓட்டும்போது, ஏற்றம் இறைக்கும்போது என ஒவ்வொரு உழைப்பு சார்ந்தும் இசையும் பாடலும் எழுந்தன . ஜார்ஜ் தாம்சன் “ மனித சமூக சாரம்” எனும் நூலில் இதனை நன்கு அலசி ஆய்ந்து சொல்லியிருப்பார் . 

 பாரதிகூட அதனைச் பாடுவானே !
   “ஏற்றநீர்ப் பாட்டின் இசையினிலும், நெல்லிடிக்குங்
கொற்றொடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒலியினிலும்,
சுண்ண மிடிப்பார் தஞ் சுவைமிகுந்த பண்களிலும்,
பண்ணை மடவார் பழகுபல பாட்டினிலும்,
வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்கக்
கொட்டி யிசைத்திடுமோர் கூட்டமுதப் பாட்டினிலும்,
வேயின் குழலொடு வீணைமுதலா மனிதர்
வாயினிலுங் கையாலும் வாசிக்கும் பல்கருவி
நாட்டினிலுங் காட்டினிலும் நாளெல்லாம் நன்றொலிக்கும்
பாட்டினிலும், நெஞ்சைப் பறிகொடுத்தேன் பாவியேன்.”


உண்மையும் அதுதானே! மேலும் ஆதி மனித குலம் எழுத்து வடிவம் அறியும் முன்பு  பேச்சு வழக்கு மட்டுமே இருந்த போது வழிபாடு , மந்திரம் எல்லாமே செவிவழி கேட்டு நினைவில் நிறுத்த வேண்டியிருந்ததால் ; ஓசை நயம் மிக்க செய்யுள் / பாடல் வடிவத்திலேயே அமைந்தன . குறிப்பாக அன்றைய நம்பிக்கை சார்ந்து உருவான மந்திரம் கூட கவிதையின் ஆதிமூலமாயிற்று எனலாம் . இதன் தொடர்ச்சி மத வழிபாட்டில் பாடல் இடம் பெறலாயிற்று . 


மக்கள்  உழைப்பின் களைப்பு நீங்க ஆட்டமும் பாட்டமுமாய் கழிந்த நாட்களே கலைக்கும் இலக்கியத்துக்கும் மூலவிதை தூவின. மக்களிடமிருந்த கலையை தங்களின் கருத்துப் பரப்பலுக்கு மதங்கள் மிகவும் சாமர்த்தியமாகப் பயன் படுத்திக் கொண்டன என்பதே உண்மை.


அதோடு மட்டுமல்ல, நிறுவன மதம் மேட்டுக்குடியோடு கைகோர்த்து கலையிலும் ஒரு கோடு போட்டு பிரித்ததைப் பார்க்கலாம். கர்நாடக சங்கீதம், பரதநாட்டியம் போன்றவை எப்படி வர்ண மேலடுக்குக்குக் கொண்டுபோகப்பட்டது என்பதற்கு விளக்கம் தேவைப்படாது. தேவதாசி முறை அதன் இன்னொரு இருண்ட பக்கத்தைக் காட்டும். அது போராடி ஒழிக்கப்பட்டது. அனுபவம் பல ஆதிக்க கூறுகளைப்பேசும். ஆனால் நாட்டுப்புறக் கலையும் மக்களின் கலையும் ஆதிக்க எதிர்ப்பிலேதான் வளர்ந்தது; வாழ்கிறது. இசையை கலையை வளர்த்ததில் உழைப்புக்கும் உழைப்போருக்குமே பெரும் பங்குண்டு; மதத்துக்கு அல்ல என்பதை உறுதியாகக் கூற முடியும் . 


தவில், நாதஸ்வரம் போன்றவற்றில் மேட்டுக்குடியினர் ஈடுபட்டு சாதனை எதுவும் படைத்ததாகத் தெரியவில்லையே என ஒருவர் என்னிடம் ஐயம் கேட்டார். அதிக உழைப்பை வியர்வையை வேண்டும் இக்கலைகளை ஒடுக்கப்பட்ட மக்களே இன்றும் சுமந்து நிற்கிறார்கள். ஆகம விதிகளுக்கு உட்பட்ட நிறுவன கோவில்களில்தேவாரமும் திருவாசகமும் கருவறைக்கு கர்ப்பகிரகத்துக்கு வெளியே பிரகாரத்தோடு நிறுத்தப்பட்டது போல, தவில் , நாதஸ்வரம் போன்றவைகளும்  கர்ப்பகிரகத்துக்கு தொலைவிலேயே நிறுத்தப்பட்டதும் உறுத்திடும் நிஜமல்லவா? ஆக, இசையிலும் கலையிலும் கூட சமத்துவம் கோரிய குரல் வலுக்கவேண்டியுள்ளது ; அப்படியிருக்க மதம் கலை வளர்ச்சிக்கு எப்படி துணை நின்றதாகக் கொள்ள இயலும் ? மதங்கள் தம் தேவைக்கு இவற்றைப் பயன்படுத்திக் கொண்டன என்பதே உண்மை.


நன்றி : தீக்கதிர் வண்ணக்கதிர் 20-12-2015.
https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif


1 comments :

  1. உரிமைக்குரல்

    ARUMAI...SUPER ....SU.PO.

Post a Comment