விவாதத்திற்கான ஒரு அழைப்பு …

Posted by அகத்தீ Labels:






விவாதத்திற்கான ஒரு அழைப்பு



இடது திருப்பம் எளிதல்ல
இந்திய கம்யூனிசத்தின் எதிர்காலம்
ஆசிரியர் : விஜய் பிரசாத்,
தமிழில் : .சுப்பாராவ்,
வெளியீடு : பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ தெரு , தேனாம் பேட்டை ,
சென்னை -– 600 018.
பக் :352 , விலை : ரூ.260/-

"விவாதத்திற்கான ஒரு அழைப்பு" என நான் வலிந்து மகுடம் சூட்டவில்லை ; நூலாசிரியர் முடிவுரையில் (பக்கம் 348) கூறியிருப்பதை அழுத்திச் சொல்லவேண்டும் எனத் தோன்றியதால் அந்த வரியையே தலைப்பாக்கி உள்ளேன். அவ்வளவே !

"இடது திருப்பம் எளிதல்ல" என கவித்துவம் பொங்கும் - மிக முக்கியமான நிகழ்கால அரசியலோடு தொடர்புடைய- படிக்கத்தூண்டும் தலைப்பில் வெளிவந்துள்ள நூல் இது. "இந்திய கம்யூனிசத்தின் எதிர்காலம்" என்ற துணைத் தலைப்பு நூலின் பொருளடர்த்தியைச் சுட்டுகிறது . விஜய் பிரசாத் ஆங்கிலத்தில் எழுதிய நூலை அழகு தமிழில் .சுப்பாராவ் வழங்கியுள்ளார்.

இந்தியாவில் ,தமிழகத்தில் இடது மாற்றம் தேவை எனக் கருதுகிற ஒவ்வொரு இளைஞனும் கட்டாயம் படிக்க வேண்டிய விவாதிக்க வேண்டிய, உள்வாங்க வேண்டிய, நூல் இது என்பதில் ஐயமில்லை .
இடதுசாரிகள் சந்திக்கும் தோல்விகளின் பின்னணியைச் சொல்லி "கம்யூனிசத்தின் அவசியம்" பற்றிப் பேசுகிறது முதல் அத்தியாயம். " உழைக்கும் வர்க்கத்தின் சக்திக்குப் புத்துயிர் ஊட்ட இன்றைய சூழலில் வாய்ப்புகள் உள்ள பகுதிகள் என்னென்ன? இதுதான் இடதுசாரிகள் நடத்திவரும் விவாதத்தின் மையமாக உள்ளது . எந்த உள்ளார்ந்த திட்டமும் போதுமானதாக இல்லை . புதிய உத்திகள் தேவைப்படுகின்றன . புதிய சக்தி தேவைப்படுகிறது . மூன்று (கலாச்சாரம் ,
கிராமப்புறம், சேரிகள்) அம்சங்களைச் சுற்றி இந்த விவாதம் உருப்பெற்றுள்ளது ."
என இந்த அத்தியாயத்தில் நூலாசிரியர் வாதிடுவது முக்கியம் . பின் தொடர வேண்டியதும்கூட.

"உலகெங்கும் இருந்த பழைய காலனிய எதிர்ப்பு நாடுகளை போலவே, பழைய இந்தியாவும் மறைந்து விட்டது.கலாச்சார உலகின் விளிம்புகளில் காந்தியத்தின் தடம் இன்னும் இருந்தாலும் , அது மையத்தின் அருகில் கூட இல்லை." என நிகழ்கால யதார்த்தத்தைப் படம் பிடிக்கிறது"பெரும் வலதுபுறச் சாய்மானம்" எனும் இரண்டாவது அத்தியாயம் . சுதந்திரத்துக்கு முன்பு 1944ல் டாட்டா பிர்லா உருவாக்கிய "பம்பாய் திட்டம்" தொடங்கி தற்போது மோடி எழுப்பும் "மேக் இன் இந்தியா" வரை பருந்துப் பார்வையாய் வரலாற்றை நினைவூட்டி, உருவாகியுள்ள வலது சாய்மானத்தை எடுத்துக் காட்டுகிறது.

" நாடெங்கிலும் உள்ள சாதிப் பிரிவினை இன்றளவும் இந்திய சோசலிசத்திற்கு கேடு விளைவித்து வருகிறது." என்கிற மைய அச்சைச் சுற்றி பின்னப்பட்டிருக்கும்" இந்திய சோசலிசத்தின் வீழ்ச்சி" என்கிற மூன்றாவது அத்தியாயம் விடுதலைப் போராட்ட காலத்திலிருந்து இந்திய அரசியல் அரங்கில் சோசலிசத்தின் பேரால் உருவான அரசியல் போக்குகளை ; அதனுடன் இணைந்தே முன்னுக்கு நிறுத்தப்பட்ட சாதிய போக்குகளை ; அதன் நல்ல மற்றும் கெட்ட கூறுகளை விவரிக்கிறது . லோஹியாவாதிகள் , திராவிட இயக்கம் உள்ளிட்ட கட்சிகள் பிற்படுத்தப்பட்ட சாதியினரை எப்படி வெல்ல முடிந்தது ? இக்கட்சிகளால் அந்த சாதியினர் பயனடைந்தனரா? இல்லையா ? இன்னும் அவர்கள் மத்தியில் இவர்களின் பிடிமானம் தொடர்வது எப்படி ? இதுபோன்ற கேள்விகள் மீதான தொடர் விவாதத்திற்கு வாசல் திறந்துள்ளது . தொடர வேண்டும்.

இன்றைய பரபரப்பு அரசியலை அலசுகிறது நான்காவது அத்தியாயம் . தலைப்பே " பரபரப்பு அரசியலின் காலகட்டம்" என்பதுதான் . டாக்டர் மன்மோகன் , 56 இஞ்ச் மோடி , அக்கா ( தீதி) மம்தா ஆகியோரை முன்வைத்து அலசுகிறது .நிபுணர்களை நம்புவது ஏன் ? பலசாலியைத் தேர்வு செய்வது ஏன் ?

"கலக அரசியல் ,சுதந்திரச் சந்தை என்ற இருவகை பரபரப்பு அரசியல்களின் செயற்களமும் , டாக்டர் , 56இஞ்சர் , அக்கா என்ற தலைவர்களின் மூன்று வகைகளும் , வலது சாரிகளுக்குச் சாதகமாக உள்ளன ." என நூலாசிரியர் சுட்டுகிறார் . ஊடக அரசியலையும் அடிக்கோடிடுகிறார். இந்த நிகழ்கால அரசியல் விமர்சனம் தற்கால அரசியல் பண்பாட்டைப் புரிந்து கொள்ளவும் ; அது குறித்து உரையாடவும் வழி செய்துள்ளது .

"சோசலிசம் இளம் பருவத்தில் இருக்கிறது. அதனிடம் தவறுகள் உண்டு." என்கிற சே குவேரா மேற்கோளோடு துவங்கும் "இடதுசாரிகள்" என்ற ஐந்தாவது அத்தியாயம் 80 பக்கங்களைக் கொண்டது . இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் சுருக்கமான வரலாறு ; இந்த வரலாறு அதன் தோற்றம் - வளர்ச்சி - பிளவுகள் - வெற்றிகள் - பின்னடைவு என ஒரு விரிந்த சித்திரத்தை சுருக்கமாகத் தருகிறது .விமர்சனமாகவும் தருகிறது . காங்கிரஸ் அரசைப் பற்றிய கம்யூனிஸ்ட்டுகளின் அணுகுமுறையில் சிபிஎம்- சிபிஐ மாறுபட்டது ஏன் ? எப்படி ? ஆயுதப்புரட்சி குறித்து சிபிஎம் மற்றும் நக்சல்களின் வேறுபட்ட அணுகுமுறை எதனால் ? மாநில அரசில் பங்கேற்றதால் ஏற்பட்ட நல்லதும் கெட்டதுமான அனுபவம் என்ன? நிலச்சீர்திருத்தம் , தொழில் வளர்ச்சி , பஞ்சாயத்து ராஜ் ஆகியவற்றின் அனுபவம் என இந்த அத்தியாயம் நிறைய செய்திகளைப் பேசுகிறது

அடுத்து 105 பக்கங்களில் நீண்டிருக்கும் ஆறாவது அத்தியாயம் "நவீன- தாராளவாத காலகட்டத்தில் கம்யூனிசம்" என்பதாகும் . தலைப்பே இதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் . கட்சியின் ஆவணங்களில் சொல்லப்பட்ட பல செய்திகள் ,சுயவிமர்சனங்களின் தொகுப்பை மொத்தமாய் படித்தது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது .மேற்குவங்க தோல்வியைப் பற்றிய அலசல்- கேரளாவில் சந்தித்த பிரச்சனைகள்- அரியானாவில் ஆணாதிக்கத்துக்கு எதிரான போராட்ட அனுபவம் - தமிழகத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி அனுபவம்- ஆந்திரப் போராட்ட அனுபவம் எனப் பலவற்றை நினைவூட்டுகிறது.

தொலைக்காட்சியும் இதர ஊடகங்களும் உருவாக்கும் படுவேகமான நுகர்வு பழைய கலாச்சார ஏற்பாடுகளை மாற்றி எழுதுகின்றன என்பதைக் சுட்டும் நூலாசிரியர் அய்ஜாஸ் அகமதுவின் ஒரு மேற்கோளைச் சுட்டுகிறார் ,"இந்திய நடுத்தர வர்க்கம் முழுவதும் அடிமைப்பட்டுப்போன ஒவ்வொரு தொலைக்காட்சி பார்க்கும் நேரமும் ,சில வகையான தத்துவத்தை , கலாச்சார ரசனையைப் பெற்றுக்கொள்ளும் ஒரு படிப்பு வட்டமாக மாறிவிட்டது.பொருளாதார ரீதியில் வர்க்க ஏணியில் மாறாது தங்கி இருக்கும் நிலையில் உள்ளவர்கள் மத்தியில் ஒரு அமெரிக்க வாலிபன் பிம்பமாகத் தன்னை மாற்றிக் கொள்ளவும் , தான் வர்க்க ரீதியாக உயர்ந்து விட்டதாகக் கற்பனை செய்து கொள்ளவும் உதவுகிறது" . "ஆங்காங்கே சின்னச்சின்ன அளவில் நடக்கும் இடது கலைகளின் கூட்டு முயற்சி இந்தத் தாக்குதலை தடை செய்ய முடியாது." என்கிறார் நூலாசிரியர் .
ஆம்.மெய்தான் . அதேசமயம் இந்த சமூக உளவியலை வென்றெடுக்க குறிப்பாக இந்திய சமூகத்தின் மூன்றில் ஒரு பங்காக உள்ள இளைய தலைமுறையை வென்றெடுக்க என்ன வழி ? ஆழமான விவாதம் தேவைப்படுகிறது .

இன்றைய மத,இன வெறிக்கும் நவீன தாராளமயத்துக்கும் உள்ள உறவும் ; உளவியல் யுத்தமும் பற்றிப் பேசாமல் ; அதற்கெதிரான ஆயுதங்களை கூர்மைப் படுத்த இயலுமா ? இந்நூல் பேச மறந்த இன்னொரு பொருளாகும் .

"இந்தோ - கம்யூனிசம்" என தலைப்பிடப்பட்ட ஏழாவது அத்தியாயம் இன்றைய சூழ்நிலைக்கேற்ப கம்யூனிச தத்துவப் புரிதலை ஈரோ கம்யூனிசப் பாணியில் திருத்த வேண்டுமா என்கிற கேள்வியை முன்வைத்து விவாதிக்கிறது .

"ஒரு வெகுஜனத் தளம்தான் முக்கியம் என்று இடதுசாரிகள் கருதுகிறார்கள் . மாற்றத்துக்கான அரசியலை நல்ல வாதங்களால் மட்டும் வென்றுவிட முடியாது . நாட்டை வழி நடத்த நல்ல வழிமுறைகளைக்கூறும் நூறு கொள்கை ஆவணங்கள் , அவற்றிற்குப் பின்னால் அரசியல் அதிகாரத்தின் சக்தி இருந்தாலன்றி ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியாது .சரியான கருத்துகள் ஒருபோதும் போதுமானவையாக இருப்பதில்லை. அவை சரியானவை என்ற காரணத்தால் நம்பப்படுவதில்லை .அல்லது சட்டமாக்கப் படுவதில்லை .நம் சக்தியில் நம்பிக்கை கொண்டோர்; நிறுவனங்கள் மூலம் போராட அவற்றைப் பயன்படுத்தி ; அந்த சக்தியை ஒருங்கிணைப்போர் கைகளில் அவை இருக்கும்போதுதான் அவை நமக்குக் காலத்தின் கருவியாக மாறுகின்றன." என உறுதியாய் சொல்லும் நூலிது .

"இந்த நூல் இந்திய வரலாற்றைப் பற்றி முறையாகவோ அல்லது இந்தியச் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுடன் தொடரும் கம்யூனிச அலை பற்றி முறையாக ஆராய்ந்துள்ளதாகவோ நிச்சயம் நினைக்கவில்லை . ‘ நோ ஃபிரீ லெப்ட்ஒருஉயிரோட்டமான படைப்பு விவாதத்திற்கான அழைப்பு" என முடிவுரையில் நூலாசிரியரே சொல்லியதற்கு மேல் வேறென்ன சொல்ல....

" இடதுசாரிகளின் தேர்தல் தோல்விக்கான எதிர்வினை அரசியல் தற்கொலை அல்ல ; ஆராய்வதும் ; வேலை செய்வதும்தான்." இந்நூல் நமக்கிடும் கட்டளை இதுவே ! ஆராய விவாதம் தேவை . அதற்கு இந்நூல் ஒரு கண்ணியாகட்டும் .


- சு.பொ.அகத்தியலிங்கம் .  புத்தக மேசை . தீக்கதிர் 29-11-2015


0 comments :

Post a Comment