விசுவாசமும் கனவும்

Posted by அகத்தீ Labels:





விசுவாசமும் கனவும்
=========================



பொழுது இன்னும் விடியவில்லை
தூக்கமும் விழிப்புமாய்
புரண்டு படுக்கிறேன் .


யாரோ என்னை
விரலால் தீண்டி இழுக்கிறார்
உதறிவிட்டு பழையபடி புரண்டு படுக்கிறேன்


மீண்டும் தீண்டல்
கண்ணைக் கசக்கி யாரெனப் பார்த்தேன்
தெரிந்த முகம் போலும் தெரிகிறது
தெரியாத முகம் போலும் தெரிகிறது
பழகிய குரலாகவும் தெரிகிறது
பழக்கமற்றதாகவும் போக்கு காட்டுகிறது


 “ யாரப்பா  நீ?”
மெல்லக் கேட்டேன்.


  “விசுவாசம்”
என்று கூறிச் சிரித்தது .


 “ விசுவாசமா ?”
என் அதிர்ச்சியை வெளிப்படுத்தினேன் .


 “ ஆம் . நான் விசுவாசமேதான்…..”


தூக்கம் முற்றாய் விடை பெற
என்னிடமிருந்து
வெடித்தன கேள்விகள்


 “யாருக்கு விசுவாசம் ?
எதற்கு விசுவாசம் ?
நபருக்கா ?
இயக்கத்திற்கா ?



விசவாசமெனில்
வாய்மூடி தலையாட்டுவதா ?
கேள்விமுறையின்றி
வழிமொழிவதா ?


யாருக்கும் மனம் நோகாமல்
கண்டும் காணாமலும்
உள்ளத்தை மூடிவிட்டு
உதட்டில் தேன் தடவுவதா ?


விசுவாசத்திற்கும்
அடிமைத்தனத்திற்கும்
விசுவாசத்திற்கும்
நவீன கேரியரிசத்திற்கும்
இருந்த மெல்லிய கோடும்
தாராளமய யுகத்தில்
அழிக்கப்படுகிறதே !


சுய சிந்தனையும்
சுயவிமர்சனம்
சுயமரியாதையும்
சுயதேடலும்
படைப்பாக்க வெறி
புதியன நாடல்
தணியா லட்சிய தாகத்துடன்
தொடரும் போதே
நீ காட்டும்
விசுவாசம் பொருள் மிகுந்ததாகும் .”


“ சரியாய் தான் யோசிக்கிறாய்
இப்படி நீ வெடிக்கத்தானே
நான் உன்னைச் சீண்டினேன்….”

விழித்துப் பார்த்தேன்
கேள்வியும் தேடலுமே
மிஞ்சி நின்றது .



- சுபொஅ



1 comments :

  1. ஞானகுரு.ந

    தனக்கு வரும்போது மட்டும் கேரியரிசம் பற்றிக் கவலைப் படுவோர் அதிகம்

Post a Comment