பிறவிப் பெருங்கடல் நீந்தி எங்கே போவாய்?

Posted by அகத்தீ Labels:


பிறவிப் பெருங்கடல் நீந்தி
எங்கே போவாய்?
சு.பொ. அகத்தியலிங்கம்

என்னதான் நீங்க நாத்திகம் பேசினாலும் வாழ்க்கையில் ஒரு நாளாவதுகோயிலுக்கு / மசூதிக்கு /சர்ச்சுக்கு போய்த்தான் ஆகவேண்டும் ; அதற்கு வேண்டியசந்தர்ப்பத்தை சாமி உருவாக்கித் தந்திடும் .அதுதான் கடவுளின் சக்தி . இல்லைஎன்று மறுக்க முடியுமா ? உங்களுக்கே அந்த அனுபவம் இருக்குமே ?
“ பாஸிட்டிவ் எனர்ஜி,” “ இன்னர் எஞ்ஜினியரிங்” இப்படி அறிவியல் பூர்வமாகஆன்மீகம் கற்றுக்கொடுக்கும் நவீன குருமார்கள் வெறுப்பை விதைப்பதில்லைஅல்லவா? அவர்களைப் பின்பற்றுவதில் தவறென்ன?
மரணம் என்பது என்ன? நித்திய வாழ்வு சாத்தியமா ? பிறவிப் பெருங்கடலைக்கடந்தபின் என்ன ஆகப்போகிறாய்? இதுபோன்ற கேள்விகளை உங்கள் பகுத்தறிவுஎப்படி எதிர்கொள்கிறது ?

முரண்பாடுகளின் மூட்டையாய்த்தான் வாழ்க்கை இருக்கிறது ; இப்படி முட்டலும்மோதலும் இல்லா நித்சலனமான வாழ்க்கை சாத்தியமில்லையா?ஆன்மீகவாதிகள் நித்சலனம் பற்றி பேசுவதில் பொருளில்லையா?
அதிர்ஷ்டம், துரதிர்ஷ்டம், விதி, ஊழ் என்றெல்லாம் சொல்லப்படுபவற்றில்ஆழ்ந்த பொருளில்லையா? ஏன் பல முற்போக்காளர்களும் கூட துரதிர்ஷ்டம்என்ற சொல்லை பயன்படுத்த்தானே செய்கின்றனர்!“யாதும் ஊரே யாவரும்கேளிர்” என்ன சொன்ன கனியன் பூங்குன்றனாரும் விதி பற்றி பேசியிருக்கிறாரே!
ஆத்திகத்துக்கும் நாத்திகத்துக்கும் இடையிலேயான மோதலும் உரையாடலும்இன்று நேற்று தொடங்கியதல்ல; பெரும் வரலாறு அதற்கே உண்டு. இன்றோநாளையோ முடிந்துவிடக்கூடியதும் அல்ல. ஆயினும் ஆன்மீகம் தன்னை நிலைநிறுத்த படும்பாடு பெரும்பாடு; நாத்திகம் மேலும் மேலும் அதிக நிரூபனங்களைப்பெற்றுவருவது கண்கூடு. இதனை சகிக்க முடியாத ஆன்மீகக் காவலர்கள் ஓட்டும்குறுக்குச்சால்களை எதிர்கொண்டே முன்செல்ல வேண்டியுள்ளது.

என்னதான் நீங்க நாத்திகம் பேசினாலும் வாழ்க்கையில் ஒரு நாளாவதுகோயிலுக்கு / மசூதிக்கு /சர்ச்சுக்கு போய்த்தான் ஆகவேண்டும் ; அதற்கு வேண்டியசந்தர்ப்பத்தை சாமி உருவாக்கித் தந்திடும் .அதுதான் கடவுளின் சக்தி . இல்லைஎன்று மறுக்க முடியுமா ? உங்களுக்கே அந்த அனுபவம் இருக்குமே ?
மெய்தான். என்னதான் நாத்திகம் பேசினும் ஏதேனும் சிலசந்தர்ப்பங்களில் கோயிலுக்குப் போவதும் சிலநேரம் சில சடங்குகளில் பங்கேற்பதும் தவிர்க்கமுடியாததாகி விடுகிறது. ஏனெனில் நாம் வாழும் வீடும் , ஊரும் , உலகமும் சாதி,மத உணர்வில் மூழ்கிக்கிடக்கும்போது நாம் மட்டும் அதனை முற்றிலும் ஒதுக்கிவாழ நினைத்தாலும் அது வந்து ஒட்டிக்கொள்ளும் ; அவை நாகரீகம், மூத்தோர்விருப்பம், குடும்பச் சூழல், பொதுப் பண்பு ஏனேனும் காரணம் பற்றி பங்கேற்புதவிர்க்க முடியாததாகிவிடுகிறது .
நாத்திகத்தை உறுதியாகப் பிரச்சாரம் செய்த பெரியார் கூட குன்றக்குடிஅடிகளாரைச் சந்திக்கச் சென்ற போது அவர் அளித்த திருநீறைப்பூசிக்கொண்டதும்; தன் வீட்டுக்கு வந்த திரு வி க குளித்து முடித்து வெளியேவந்ததும் பெரியார் அவருக்காக விபூதித் தட்டுடன் நின்றதும் பண்பாட்டுமுதிர்ச்சியின் அடையாளங்களாவே பார்க்கப்படுகிறது . நெடும்பயணம் சென்றமாவோ சில கிராமங்களில் அக்கிராம மக்களின் விருப்பத்தை ஏற்று சிலசடங்குகளை செய்ததும் மரியாதை நிமித்தமானது என்பதைப் புரிந்து கொள்ளவிஷேச பொது அறிவு தேவை இல்லை .நாத்திகம் பேசும் பல நண்பர்களின்வீடுகளில் அடுக்களையில் ஒரு ஷெல்ப்பில் சில சாமிப்படங்கள்வைக்கப்பட்டிருக்கும். மனவியோ/கணவரோ/ தாயோ / தந்தையோ விரும்பும்போது இவ்வாறு வழிவிடுவதும் - அவர் உணர்வை மதிப்பதும் குடும்ப ஜனநாயகம்பேண தேவையாகிவிடுகிறது . பொதுவாழ்வில் உள்ளோர் இதுபோன்றதர்மசங்கடங்களை நிறையவே எதிர்கொள்ள நேரிடுகிறது .
என் அண்மை அனுபவம் ஒன்றை பதிவு செய்கிறேன். என மகனுக்கோ /மகளுக்கோ கோவிலுக்குப் போய் மொட்டை போட்டத்தில்லை , ஆனால் என்பேரனுக்கு கோவிலுக்குப் போய் மொடை போடுவது என்பது குடும்பத்தில்பெரும்பாலோர் விருப்பமானது. அப்புறம் எது குல தெய்வம் என ஆராய்ச்சிதொடங்கியது . என் தந்தைவழித் தாத்தா தொடர்புடைய தேவதானப்பட்டிமூங்கிலணை காமாட்சி அம்மன் கோவிலில் மொட்டைபோட முடிவாகியது;எல்லோரும் போனோம். மொட்டை போட்டு – பொங்கல் வைத்து பூசைதொடங்கிகிற நேரம்; கோவில் பூசாரி (புரோகிதர் அங்கு வழக்கமில்லை; ஆகவேகருவறை வரை பேரன் பேத்திகளை அழைத்துச் சென்றார் இவர்) யாரும்எதிர்பாராமல் குடும்பத்தின் ‘மூத்த கண்ணி’ என்கிற முறையில் என்னை அழைத்துஅம்மன் கழுத்திலிருந்த மாலையை என் கழுத்தில் போட்டு திருநீறு பூசினார்;அங்கே மறுப்பது நாகரீகம் அல்ல ; குடும்பத்தாருக்கு தேவையற்ற சங்கடத்தையும்உருவாக்கும் . எனவே உடன்பட்டேன். இதனால் நான் ஆத்திகனாகிவிடமாட்டேன்.ஆனாலும் ஒருவர் உரிமையோடு ,
“ பார்த்தியா ! பேரன் மூலம் தாத்தாவைஇழுத்து வந்து விபூதி பூச வச்சிட்டுது சாமி” என்று கொஞ்சம் என்னைவெறுப்பேற்றலாம்; கலாய்க்கலாம் -அவ்வளவுதான் .
இப்படி நாகரிகம் கருதி, மற்றவர்களது உணர்வுகளை மதித்து, உலகத்தோடு ஒட்டஒழுக நேர்வதை கொள்கையில் வழுவியதாய் மதவெறியர் சித்தரிக்க முயலுவதுஅவர்களின் சின்னப்புத்தி என்றே கருத வேண்டும் .
மேலும் நாடு முழுவதுமுள்ள கோயில்கள் அங்கே கருவறையை ஆக்கிரமித்துக்கொண்டிருப்பவர்களின் வியர்வையில் உருவானதல்ல ; உழைப்பளி மக்கள் வியர்வையிலும் இரத்தத்திலும் பூத்தது. உழைப்பாளி மக்கள் அளித்தகலைக்கொடை. அதன் சிற்பக்கலை, ஓவியக் கலை, கட்டிடக் கலை போன்றவைஇந்தியர் அனைவரின் பொதுச் சொத்து. அதை ரசிக்கவும் பாராட்டவும்ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. நாத்திகருக்கும் அந்த உரிமை உண்டு.அதற்காகக் கோவிலுக்குச் செல்வது அவர் உரிமை . நான் வெளியூர் செல்லநேரும் போது அவ்வாறு பல கோவில்களைச் சுற்றிப் பார்த்து கலையைரசித்திருக்கிறேன். வரலாறைக் கேட்டுத்தெரிந்துகொண்டிருக்கிறேன்.பகுத்தறிவாளர்கள் எவரும் இப்படிச் செய்யத் தயங்க மாட்டார்கள்.
ஆனால் என்ன நடக்கிறது? அண்மையில் குமரி மாவட்டம் சுசீந்திரம்கோயிலுக்குப் போனேன். நான் சிறுவனாக இருந்த போது சுற்றிச் சுற்றி வந்தஇடங்களை - ரசித்த சிலைகளை, இசைத்தூணை , ஓவியங்களை, சுவரில் வாசித்ததேவார, திருவாசக வரிகளை என் பிள்ளைகளுக்கும் பேரன்பேத்திகளுக்கும் காட்டமுயன்றேன். அமைதியும் கலை கொஞ்சும் எழிலும் எங்கே எனத் தேடினேன்.அங்கே கோயில் வெறும் சடங்காகியிருந்தன . வருவோர்கள் வெறுமே அர்ச்சனை,வழிபாடு இவற்றில் மட்டுமே ஈடுபட்டு வெளியேறுவதையும்; பக்தி வியாபாரம்மட்டுமே நடப்பதையும்; அங்குள்ள கலைப் பொக்கிஷங்கள் பெரும்பாலும்யாராலும் கண்டுகொள்ளப்படாமல் ஒதுக்கப்படுவதையும் கண்டுவேதனையுற்றேன். கிட்டத்தட்ட எல்லா கோயில்கள் நிலையும் இதுவே .
மகாத்மா காந்தி தன்னை இந்து என்றே சொல்லிப் பெருமைப்பட்டவர். கடவுள்நம்பிக்கையாளர். அவர் தன் சுயசரிதையில் ஒரிடத்தில் குறிப்பிடுகிறார்: “கடவுளின் எல்லையற்ற கருணையில் யாருக்காவது சந்தேகம் இருப்பின் ,அவர்கள் இந்த புண்ணிய ஷேத்ரங்களுக்குப் போய்ப் பார்ப்பார்களாக, மகாயோகியான கடவுள், தம் தெய்வீகப் பெயரைக் கொண்டே செய்யப்படும் எவ்வளவுவஞ்சகங்களையும் அதர்மங்களையும் சகித்துக் கொண்டிருக்கிறார்.”(சத்தியசோதனை, பாகம் – , அத்தியாயம் 20).
மசூதி,சர்ச் அனுபவங்களும் அப்படித்தான் என்பதை அந்தந்த நண்பர்கள்உணருவார்கள் .
“ பாஸிட்டிவ் எனர்ஜி,” “ இன்னர் எஞ்ஜினியரிங்” இப்படி அறிவியல் பூர்வமாகஆன்மீகம் கற்றுக்கொடுக்கும் நவீன குருமார்கள் வெறுப்பை விதைப்பதில்லைஅல்லவா? அவர்களைப் பின்பற்றுவதில் தவறென்ன?
“ மனசே ரிலாக்ஸ்,” “ ஆர்ட் ஆப்லிவிங்,” “ பாஸிட்டிவ் எனர்ஜி,” “ இன்னர்எஞ்ஜினியரிங்” எனப் பல பெயர்களில் உலாவரும் இந்த கார்ப்பரேட் சாமியார்கள்பற்றி முன்பே பேசியிருக்கிறோம். அவர்களின் பிரச்சாரம் தீதற்றது என்கிற தங்கள்வாதத்துக்கு மட்டுமே இப்போது பதில் காண்போம் . இவர்கள் தியானம் , யோகாஇவற்றை ஆங்கில மாவில் பிசைந்து; கொஞ்சம் அறிவியல் முலாம் பூசி அதிகவிலைக்கு விற்கிறார்கள். இவர்கள் மேல்தட்டு மத்தியதரவர்க்கத்தை நோக்கியேகுறிவைப்பதால் வழக்கமான ஆன்மீகச் சொல்லாடல்கள் தங்கள் குருஜிபிசினெஸ்சுக்கு போதாது என்பதால் ; நவீன மொழியில் – ஆங்கிலத்தில் –கொஞ்சம் ஃபேக் சயின்ஸ் கலந்து அதே கீதா உபதேசத்தையே விற்பனைசெய்கிறார்கள் .
அதே சமயம் சமூகநீதி, சமத்துவம் போன்றவற்றை மட்டந்தட்டியும் திறமை ,தகுதி என உடுக்கை அடித்தும் – சமூகப் பிரஞ்ஞையற்று தான் , தன் திறமை , தன்தகுதி , தன் முன்னேற்றம், தன் வளர்ச்சி என தன்னைப் பற்றி மட்டுமே யோசிக்கிறசுயநலமியாய் - ஒவ்வொருவரையும் தனித்தனி குடுவைக்குள் அடைக்கிறகாரியத்தை கார்ப்பரேட் சாமியார்கள் செய்கிறார்கள் .
நமது பாரம்பரியப் பெருமை என்கிற பெயரில் சனாதனக் கருத்துகளை பத்தாம்பசலிக் கருத்துகளை நியாயப்படுத்துகிறார்கள். புலால் மறுப்பை உயர்வாகசொல்லுகிறார்கள் .பிராமணியச் சிந்தனைகளை நாசுக்காக பரப்புகிறார்கள். “நாம்மட்டுமே உயர்ந்த பண்பாட்டின் சொந்தக்காரர்கள்,” என்கிற தொணியில்ஆரம்பித்து பிற மதங்களை துச்சமாகக் கருதும் மனோநிலையையும் ; அவர்களைதிருத்துவது என்கிற பெயரில் தமது கருத்தோட்டங்களைத் திணிப்பதை சரியானசெயல் என எண்ணச் செய்கிறார்கள். இப்படி மரத்துப் போன இதயம் என்னசெய்யும்? மதவெறி ஆட்டத்தை மவுனமாய் ரசிக்கும்; நியாயப்படுத்தும்; தனக்குஎன்ன லாபம் என்று மட்டும் பார்க்கும் .
ஆம் .அதாவது ஸ்லோ பாய்சனாக மதவெறியை மூளைக்குள் செலுத்துகிறகாரியத்தைத்தான் இந்த கார்ப்பரேட் சாமியார்கள் செய்கிறார்கள் .இவரிடம் பக்திசெலுத்தியவர்கள் அண்மை சமூக வாழ்வில் இப்படி நடந்துகொள்வதை சமூகவலைத்தளங்களில் காணலாம். நடைமுறையில் இந்த கார்ப்பரேட் சாமியார்கள்பெருமுதலாளிகளுடனும் மதவெறி அமைப்புகளுடனும் கூடிக்குலவுவதைக்காணலாம் . கிறுத்துவம் உள்ளிட்ட மதங்கள்சார்ந்தும் இதுபோன்ற சாமியார்கள்உண்டு .
“ஆன்மீகத்தை நவீன அறிவியலுடன் குழைத்துத் தரும் பணி ஒரு லாபகரமானகுடிசைத் தொழிலானதற்கு முன்னோடியாக இருந்த “ஃபிரிஜோ காப்ரா” என்பவர்பற்றி ப.கு. ராஜன் ‘புரட்சியில் பகுத்தறிவு’ எனும் நூலில் விளக்குகிறார். இவர்கள்ஒருபுறம் ஆன்மீகத்துடன் அறிவியலை கலப்பதுடன், மறுபுறம் அறிவியலும்அப்படி ஒன்றும் நம்பத்தகுந்ததல்ல என வாழைப்பழத்தில் ஊசி சொருகுகிறார்கள். இந்த இரட்டை வழிமுறை மூலம் காலாவதியாய்ப் போன பழைய சடங்குகள்காலத்திற்கு ஒவ்வாத கருத்தோட்டங்களை நியாயப்படுத்துகிறார்கள் என்கிறார்ப.கு. ராஜன் . எல்லா மதங்களிலும் இந்நிலை உண்டு என்பது தெளிவாகிறது .
மரணம் என்பது என்ன? நித்திய வாழ்வு சாத்தியமா ? பிறவிப் பெருங்கடலைக்கடந்தபின் என்ன ஆகப்போகிறாய்? இதுபோன்ற கேள்விகளை உங்கள் பகுத்தறிவுஎப்படி எதிர்கொள்கிறது ?

மரண பயமே பல தத்துவ ஞானிகளின் முக்கியப் பேசு பொருளாய் இருக்கிறது. சீனதத்துவஞானி கன்பியூசியஸ்சிடம் ஒருவர் சாவு என்றால் என்ன என்றுகேட்டாராம் ; அதற்கு அவர் ,
“ முதலில் வாழ்வின் பொருளை அறிந்து கொள்”என்றாராம். நித்திய வாழ்வு , சொர்க்கம் , நரகம் , சுவனம் , மறுபிறவி இப்படிஒவ்வொரு மதமும் வெவ்வேறு குரலில் பேசிடினும் அவற்றின் சாரம் என்னவோமரணத்திற்கு பிந்தைய வாழ்வு குறித்தே . அப்படி ஒன்று இல்லை என்பதைஇன்றைக்கு ஆத்திகர் கூட அறிவர் . ஆயினும் வாழ்வு , சாவு குறித்து அறிவதில்விருப்பம் தொடரவே செய்கிறது.
வாழ்வும் சாவும் எதிர் எதிர் விஷயமாகவே பார்க்கப்படுகிறது. ஆயின் அறிவியல்வேறுமாதிரியும் சொல்லுகிறது. மார்க்ஸிய ஞானி ஜார்ஜ் பொலிட்ஸர்சொல்லுகிறார்:
“ஜீவராசிகளின் உடலிலிருக்கும் ஜீவ அணுக்களிடையே ஒருநிரந்தரமான போரட்டம் நடந்து கொண்டிருக்கிறது; அந்தப்போரில் சில ஜீவஅணுக்கள் இடையறாது மடிந்துகொண்டே இருக்கின்றன . அப்படி மடிகிற ஜீவஅணுக்களுக்கு பதிலாகப் புதிய ஜீவ அணுக்கள் உடலில் இடையறாது பிறந்துகொண்டே இருக்கின்றன. இந்தப் போர் நடந்து கொண்டே இருப்பதால்தான்ஜீவராசிகள் வாழ்வது சாத்தியமாகிறது என்று நாம் கருதுகிறோம். ஆகவேவாழ்வுக்குள்ளேயே சாவின் அம்சமும் அடங்கி இருக்கிறது.”
செத்துபோன ஒரு நாயை தெருவில் தூக்கிப் போட்டால் நாற்றம் குடலைப்புரட்டும் என்பது வேறு சங்கதி; மறுபுறம் அதில் புழுக்கள் நெளியும். அதாவது புதியஜீவராசிகள் தோன்றும் .
அதே சமயம் மீண்டும் அது நாயாகாது . செத்த மனிதன் மீண்டும் மனிதனாகான். கடைசித் தீர்ப்பு நாள் என்றும், எமதர்மன் தர்மக் கணக்கு பார்க்கும் நாள் என்றும்சொல்லப்படும் நேரம் மனிதர் இருக்கமாட்டார்கள். செத்தபின் உடல் அழுகி புழுநெளிந்து மண் தின்னும் அல்லது எரிந்து சாம்பலாகி காற்றில் கலக்கும்அவ்வளவுதான். பாவம் , புண்ணியம் , சொர்க்கம் , நரகம், நியாயத் தீர்ப்பு எல்லாம்வெறும் கற்பனையே !
முரண்பாடுகளின் மூட்டையாய்த்தான் வாழ்க்கை இருக்கிறது ; இப்படி முட்டலும்மோதலும் இல்லா நித்சலனமான வாழ்க்கை சாத்தியமில்லையா?ஆன்மீகவாதிகள் நித்சலனம் பற்றி பேசுவதில் பொருளில்லையா?
முரண்பாடுகள் இல்லாத இடம் காலம் சிறிதும் இல்லை . எதிர்மறைகளின்ஒற்றுமையிலும் போராட்டத்திலும்தான் பிரபஞ்சமே இயங்குகிறது. சகலதும்அப்படித்தான் இயங்குகிறது என்பதே மார்க்சியம். பாசிட்டிவ் , நெகட்டிவ்இல்லாமல் மின்சாரம் ஏது ? வடதுருவம் தென் துருவம் இல்லாமல் காந்தம் ஏது ?முட்டலும் மோதலும் இல்லா வாழ்க்கை சாத்தியமே இல்லை .சலனமேஇல்லாமல் இறுகிப்போன வாழ்க்கை யாருக்கும் இனிக்காது. சம்மதமிருக்காது.ஆன்மீக வாதிகளின் கற்பனையில் வேண்டுமானால் நித்சலனமான வாழ்வுஇருக்கலாம் . நிஜத்தில் இல்லை .
மாரிஸ் கான்போர்த கூறுகிறார்:
“ முரண்பாடுதான் மாற்றத்தின் உந்துசக்தியாகும். பொருள்கள் எவ்வாறு மாற்றமடைகின்றன என்பதைப் புரிந்து கொள்ளவும் ;அவற்றினுடைய மாற்றங்களைக் கட்டுப்படுத்தவும் பயன்படுத்தவும் நாம்விரும்பினால் அப்போது நாம் அவற்றின் முரண்பாடுகளைப் புரிந்து கொண்டாகவேண்டும்.”
இந்த சமூகம்கூட ஒரே மாதிரியாக திரும்பத் திரும்ப சுற்றிச் சுற்றி வரவில்லை.பல லட்சம் வருடங்களுக்கு முன் மனிதர்கள எப்படி இருந்தார்கள்? இன்று எப்படிமாறிப் போயிருக்கிறார்ள்? ஆழ்ந்து யோசித்தால் முரண்பட்டு முட்டி மோதிமுன்னேறியதை அவதானிக்கலாம். முரண்படாமல், முட்டி மோதாமல்இருந்திருந்தால் இன்னும் மனிதக் குரங்காகவே திரிந்து கொண்டிருப்போம். இந்தத்தத்துவ உரையாடலே தேவைப்பட்டிருக்காது!
இந்தப் பிரபஞ்சம் கூட இயந்திரகதியாய் இயங்கிக் கொண்டிருக்கவில்லை –மாரிஸ் கான்போர்த் விளக்குகிறார்:
“பிரபஞ்சம் முரண்பாடுகளால் நிறைந்ததாகும். – இயற்பியலால் ஆய்வு செய்யப்பட்ட ஈர்த்தல் , விலக்கல்,சேர்க்கையும் பிரிதலும்– உயிரியலால் ஆய்வு செய்யப்பட்ட இயற்கைச் சுற்றுச் சூழலுடன் அங்ககஉயிரிகளுக்குள்ள உறவும் வாழ்வின் நிகழ் முறைகளும் என முரண்பாடுகள்நிறைந்ததாகும்.” இப்படி உள்ள முரண்பாடுகளிலும் நட்பு முரண்பாடு அதாவதுதீமை செய்யாமல் நன்மை பயக்கும் முரண்பாடு – பகை முரண்பாடு என பலஉண்டு . அக முரண்பாடு வெளிமோதல் என பல வினைகள் உண்டு .எதிர்மறைகளின் ஒற்றுமையும் போராட்டமும் என்பது மார்க்சிய தத்துவப்பாடத்தில் மிக முக்கியமான இரண்டாவது கோட்பாடாகும் .
வாழ்க்கையிலும் எதிர்பாலினங்களின் ஈர்த்தலில்லையானால் ஏது வம்சவிருத்தி?இயற்கையோடு முட்டி மோதி முரண்பட்டு புதியன கண்டது மனித குலம்என்பதன்றோ யதார்த்தம் . முரண்பாடுகளோடு வாழச் சொல்லவில்லை ; ஆனால்முரண்பாடுகளை சரியாக உள்வாங்கினால் மட்டுமே மாற்றம் சாத்தியமாகும்.
சூடேற்றாவிட்டால் நீர் கொதிக்காது. ஆனால் நீரின் மூலக்கூறுகளுடைய பண்பான ஈர்ப்பு விலக்கல் எனும் உள் முரண்பாடு என்பதன் அடிப்படைமீதுதான் வெப்பம் செலுத்தப்படுவதன் விளைவாகத்தான் கொதிக்கும் நிகழ்முறை நடந்தேறுகிறது . மார்க்சியம் எனும் அறிவியல் இதனை ஆதாரமாகக்கொண்டே வாழ்க்கையை சமூகத்தை பார்க்க வழிகாட்டுக்கிறது . இந்த மகாநதியில் ஒரு திவலையையை இங்கே சுட்டியிருக்கிறோம் .அவ்வளவே.மீண்டும் பின்னர் தேவைக்கேற்ப இதனைப் பார்ப்போம் .
அதிர்ஷ்டம், துரதிர்ஷ்டம், விதி, ஊழ் என்றெல்லாம் சொல்லப்படுபவற்றில்ஆழ்ந்த பொருளில்லையா? ஏன் பல முற்போக்காளர்களும் கூட துரதிர்ஷ்டம்என்ற சொல்லை பயன்படுத்த்தானே செய்கின்றனர்!“யாதும் ஊரே யாவரும்கேளிர்” என்ன சொன்ன கனியன் பூங்குன்றனாரும் விதி பற்றி பேசியிருக்கிறாரே!
“யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.” (புறம்: 192)
-இதன்பொருள் :“எல்லா ஊரும் எம் ஊர் -எல்லா மக்களும் எம் உறவினரே – - ‘கேளிர்’ எனில் உறவினர் எனப் பொருள், ‘கேளீர்’ என நீட்டி முழக்கின்கேளுங்கள் எனப் பொருள்.
“நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை -துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை -சாதல் புதுமையில்லை;வாழ்தல் -இன்பமென்று மகிழ்ந்தது இல்லை -வெறுத்து வாழ்வு துன்பமென ஒதுங்கியதுமில்லை -பேராற்று நீர்வழி ஓடும் தெப்பம்போல -இயற்கைவழிநடக்கும் உயிர்வாழ்வென்று -தக்கோர் ஊட்டிய அறிவால் தெளிந்தோம். ஆதலினால்,பிறந்து வாழ்வோரில் -சிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை -பெரியோரை வியந்து போற்றியதும் இல்லை.”
-இந்தப் பாடலை தமிழர் பண்பாட்டு மரபென போற்றுவது தமிழ்ப் புலவர் இயல்பு . எனினும் இது ஆசீவக மதச் சிந்தனை மரபே. ஆசிவகம், சமணம்,புத்தம் போன்றவை வைதீக மரபை எதிர்த்தபோதிலும் அவற்றினுள் ஊழ் குறித்த சிந்தனை மிகுதியாக உண்டு. சிலப்பதிகாரத்திலும் காப்பிய நோக்கத்தில்ஒன்றாக “ஊழ் வினை உருத்துவந்து ஊட்டும்” என்பது முன்னிறுத்தப்பட்டுள்ளது .
மேலே உள்ள இப்பாடல் குறித்து அருணன் தமது ‘தமிழர் தத்துவ மரபு’ என்ற நூலில் குறிப்பிடுவது கவனத்துக் குரியது:
“இந்த விரக்தியான நியதிதத்துவத்தில் சில நல்ல கூறுகளும் உள்ளன. சகலமும் அதன் நியதிப்படி நடக்கும் என்கிற முடிவுக்கு வந்ததும் மனிதர்களில் ஏற்ற தாழ்வு காண்கிறமனப்பான்மை ஒழிந்து போகிறது. யாவரும் கேளிர் என்கிற சகோதரபாவம் வந்துவிடுகிறது . இது வர்ணாஸ்ரமக் கோட்பாட்டிற்கு நேர் எதிரானது . இதன்இன்னொரு வடிவம் பெரியோரை மதிப்பதும் இல்லை, சிறியோரை இகழ்தலும் இல்லை என்றது. குறுநில மன்னர்களை அண்டிப் பிழைக்க வேண்டியநிலையிலிருந்த சங்ககாலப் புலவர் ஒருவர் அது தமக்குத் தேவைஇல்லை என்று கூறியிருப்பது விதி தந்த முரட்டுத் தைரியத்தில் பிறந்ததாகும் .”அருணனின் இக்கருத்து உதாசீனம் பண்ணத்தக்கது அல்ல.
“ யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற வரியை நேற்றும் கொண்டாடினோம் . இன்றும்கொண்டாடுகிறோம். நாளையும் கொண்டாடுவோம். இந்தப்பாடலை முழுமையாகப் பரிசீலிக்க இந்தக் கொண்டாட்டம் தடையாகாது.
வள்ளுவன் கூட முயற்சி திருவினையாக்கும் என்று சொன்னான்; ஊழ் இல்லை என நேரடியாகச் சொல்லவே இல்லை; மாறாக,
“ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்,”
-என்றார். இதன் பொருள் , “சோர்வு இல்லாமல் முயற்சியில் குறைவு இல்லாமல் முயல்கின்றவர், ஊழையும் ஒரு காலத்தில் தோல்வியுறச்செய்வார்கள்” என்பதாகும்.
வைதீக எதிர்ப்பில் தமிழ் மரபு முன்நின்றாலும் ஊழ் பற்றிய கருத்தும் வலுவாக இருந்திருக்கிறது. இது அந்தக் காலத்தின் சிந்தனை வளர்ச்சிமற்றும் அதன் எல்லை சார்ந்தது . ஆயின், இன்றும் ஊழ், அதிர்ஷ்டம் எனப் பேசுவதில் பொருளில்லை . விதி என்று ஏதும் இல்லை. முன் கேள்வியில்மரணத்திற்கு பிறகு என்ன ஆவோம் என்ப் பார்த்தோம். மறுபிறவி இல்லை என்பது தெளிவு. முன்பிறப்பு , ஊழ் என்பதும் வெறும் கற்பனையே .தோல்விகளை , கஷ்டங்களை கண்டு பயந்த மனிதனுக்கு அன்று ஷாக் அப்சர்வராக இந்த விதி தத்துவம் செயல்பட்டிருக்கக் கூடும். கொடுமைக்குஎதிராக மக்களைக் கொதித்தெழச் செய்யாதிருக்க இது உதவுவதால் மன்னர்கள் போற்றியிருப்பர். இன்றையத் தேவையில் இந்த சொற்கள்பொருளற்றவையே ! சில நேரங்களில் துரதிர்ஷ்டம் போன்ற சொற்களை முற்போக்காளர்கள் பயன்படுத்துவதுகூட இதன் ஆழ்ந்த பொருளில் அல்ல;மாறாக பழக்க தோஷத்தாலும்; உடனடி சமாதானம் என்கிற ரீதியிலுமே . ஆயினும் இது போன்ற சொற்களை பயன்படுத்தாமலிருக்க பழக வேண்டும்;பயிற்சி எடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.

1 comments :

  1. Su.ve.kanna

    அருமையான ஆழமான கட்டுரை சில சமரசங்கள் பெரும் முரண்பாடுகளை தவிர்க்கும் என்கிறபோது அல்லது நெருங்கிய உறவுகளுக்குள் விரிசலை தவிர்க்கும் என்கிற பட்சத்தில் தீவிரமான முற்போக்கு எண்ணம் கொண்டவர்களும்கூட சமரசம் செய்துகொள்வது ஏற்றுக்கொண்ட கொள்கையிலிருந்து விளகிசெல்வதாக அர்த்தமன்று ...இந்த கருத்தையே அழுத்தமாக சொல்கிறது இந்த கட்டுரை

Post a Comment