விஞ்ஞானம் முன்னேறியதால்
நோய்நொடிதானே பெருத்திருக்கிறது?
சு.பொ. அகத்தியலிங்கம்
·
தப்பு செய்தால்
கடவுள் தண்டிக்காமல் விடமாட்டார். சென்னை வெள்ளமே அதற்குச் சாட்சி.
இப்போதாவது கடவுள் இருப்பை உணர்கிறீர்களா?
·
என்ன சேர்த்துவைத்து
என்ன? வெள்ளம் அடித்துக்கொண்டு போய்விட்டதே! இதெல்லாம் இப்படித்தான் நடக்க
வேண்டும் என்று இருந்தால் அப்படித்தான் நடக்கும். தலையில் பிரம்மன்
எழுதியதை யாரால் மாற்றி எழுத இயலும்? கடவுளைச் சரணடைவதைத் தவிர நமக்கு வேறு என்ன
வழி?
·
நாம் நினைத்துப்
பார்க்காத ஓர் நொடிக்குள் எல்லாம் நடந்து போகிறது. அப்படியாயின் நம்மை மீறிய ஒரு
சக்தி இருக்கிறது என்றுதானே பொருள்? அதனை உங்களால் நிராகரிக்க முடியுமா?
·
டார்வின் பரிணாம
தத்துவத்தை சொன்னாலும் கிறுத்துவத்தை நம்பினார் என்பது மெய்யல்லவா ?
·
இறைவழிபாட்டில்
ஈடுபட்டு நம் முன்னோர் நீண்ட ஆயுளும் நல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்தனர். விஞ்ஞானம்
முன்னேறி என்ன பயன், நோய் நொடிகள்தானே பெருத்துள்ளது ?
மழைவெள்ளத்தைத்
தொடர்ந்து கேள்விமழையும் பொழிகிறது .
அறிவியல் படிப்பு
என்பது மட்டுமே அறிவியல் பார்வையைக் கொடுத்துவிடுவதில்லை .
ஆகவே நாம் இயன்றவரை
அறிவியல் பார்வையைக் கொடுக்க தொடர்ந்து முயல்வோம்.
தப்பு செய்தால் கடவுள் தண்டிக்காமல் விடமாட்டார்.
சென்னை வெள்ளமே அதற்குச் சாட்சி. இப்போதாவது கடவுள் இருப்பை உணர்கிறீர்களா?
இவ்வாறு பேசுவது புதிதல்ல. உத்தர்கண்ட் வெள்ளப் பாதிப்பின்போது
மாட்டுக்கறி சாப்பிடுவதன் மேல் பழி போட்டார் ஒரு சாமியார். ஏசு வழங்கிய தண்டனை;
என் கனவில் சொன்னார் என ஒரே போடாய் போட்டார் கிறித்துவ மதப்பிரச்சாரம் செய்யும் ஐஏ
எஸ் அதிகாரி உமாசங்கர்.
கடவுள் தண்டித்து விட்டார் என சாதாரண மக்கள் சொல்வது இந்த வகையானது அல்ல
மாறாக அது சுயசமாதானம் அல்லது இயலாமையின் வெளிப்பாடு; இன்னும் சொல்லப்போனால்
ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் சமூகக்கோபத்தின் வடிகால் என்றுகூட சொல்லலாம் .
இன்னொரு வகையில் காலங்காலமாய் அவனுள் இருக்கும் ஒரு விதக்
கருத்தோட்டம் . ஆதியில் இயற்கை சீற்றத்தைக் கண்டு பயந்த மனிதன் மண்டியிட்டான் .
வணங்கினான் . கடவுளை மனிதன் உற்பத்தி செய்ய அதுவும் காரணமானது .
இயற்கையின் சீற்றத்திற்கு கடவுளே காரணம் என நம்பி மனிதகுலம் மண்டியிட்டு
மட்டுமே கிடந்திருந்தால் இன்று நாம் பேசிக்கொண்டிருக்கமாட்டோம் . மாறாக இயற்கையைப்
படித்தான், பயன்படுத்தினான். வளைத்தான். வளங்களை அனுபவிக்க வழிகண்டான் . இன்று
நாம் அனுபவிக்கும் ஒவ்வொரு முன்னேற்றமும் பலலட்சம் வருடங்கள் இயற்கையோடு மனிதகுலம்
மல்லுக்கட்டி பெற்ற வெற்றி அன்றோ ?
இப்போது மட்டுமீறி இயற்கைச் சூறையாடிவிட்டதை மனிதகுலம் உணரத்
தலைப்பட்டுவிட்டது. ஆயின் அதன் சமூகக் கோப வெளிப்பாடும் பாமர வார்த்தைகளில் கடவுள்
தண்டித்து விட்டான் என வெளிப்படலாம்; அவ்வளவே. மதத்தை வைத்து பிழைப்பவர்
பிதற்றலுக்கும் பாமரர் வெளிப்பாடும் ஒன்றல்ல .
கடவுளின் தண்டனை இதுவெனில் வறியவனை மட்டும் எப்போதும் ஏன் கடவுள்
தண்டிக்க வேண்டும்? சென்னை வெள்ளம் பற்றிப் பேசத்தொடங்கினால் அது நெடிய அரசியல்
உரையாக நீளக்கூடும். எனவே பொதுவாக பேரிழப்புகள் என கருதிப் பதில் தேடுவோம் .
சுனாமி ஆயிரக்கணக்கான உயிர்களைக் காவு கொண்டது; அத்தனை பேரும் பாவம்
செய்தவர்களா? உலகில் நடக்கும் பல மோதல்களுக்கும் அழிவுக்கும் சூத்தரதாரியாகத்
திகழ்வது அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் ஆயுத வியாபாரிகளும். அவர்களை கடவுள்
ஒரு முறைகூடத் தண்டிக்க வில்லையே!
அன்பும் கருணையும் மிக்கவராகக் கொண்டாடும் தெய்வம் இப்படி இயற்கையை ஏவி
மனிதர்களைப் பலிவாங்குவது முரண்பாடாக இல்லையா?
சர்வசக்தி படைத்த கடவுள் எனில் தப்பே நடக்காமல் தடுப்பதைவிடுத்து
தண்டிப்பது அறிவுக்கும் அறத்துக்கும் பொருத்தமாக இல்லையே !
இயற்கையைப் மேலும் அறிவியல் ரீதியாக அணுகுவதும் தற்காப்புமே சிறந்த வழி .
என்ன சேர்த்துவைத்து என்ன? வெள்ளம் அடித்துக்கொண்டு
போய்விட்டதே! இதெல்லாம் இப்படித்தான் நடக்க வேண்டும் என்று இருந்தால் அப்படித்தான்
நடக்கும். தலையில் பிரம்மன் எழுதியதை யாரால் மாற்றி எழுத இயலும்? கடவுளைச்
சரணடைவதைத் தவிர நமக்கு வேறு என்ன வழி?
முன்னதன் தொடர்ச்சிதான் இதுவும். தனிமனிதனுக்குத் தாங்க முடியாத
இழப்பு ஏற்படும் போது வெந்து நொந்து புலம்ப நேரிடுகிறது . எப்படி தன்னைத் தேற்றிக்
கொள்வது ? எப்படி தன் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லுவது ? எப்படி
ஆற்றுப்படுத்துவது ? எப்படி மீண்டும் முட்டி மோதி போராடி எழுவது ? சமூகப்
பாதுகாப்பையும் பொறுப்பையும் அரசு கைகழுவும் போது அல்லது ஏதோ கொஞ்சமாக அதாவது
யானைப் பசிக்குச் சோளப்பொரி போல் கொடுத்துவிட்டு ஒதுங்கும்போது என்ன செய்வது
? சமூக , அரசியல் , பொருளாதாரக் கேள்விகளுக்கு சரியான விடை
அவர்களுக்குவழங்கப்படாதபோது அல்லது வழிகாட்டப்படாதபோது அவர்கள் இப்படித்
தடுமாறுவதும் சலிப்பதும் சரண்டைவதும் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது .
ஆம் வாழ்க்கையைப் பற்றிய அறிவியல் பார்வையும், பிரச்சனைகளை
எதிர்கொள்ள அறிவியல் அனுகுமுறையும் அவர்களுக்குப் பயிற்றுவிக்கப்படாதபோது மதமும்
சமூகமும் அவரவர் தலையில் ஏற்றிவைத்திருக்கும் “தலையெழுத்து” என்பதில் தஞ்சம்
புகுவதைத் தவிர வேறு என்ன நடக்கும் ?
ஆயினும் இது தீர்வல்ல ; பெருமூச்சு அவ்வளவே . மீண்டெழ அரசு செய்ய
வேண்டியதென்ன? தனிமனிதர் செய்ய வேண்டியதென்ன ? சமூகம் செய்ய வேண்டியதென்ன ?
உடனடியாகச் செய்ய வேண்டியதென்ன? தொலை நோக்கில் செய்ய வேண்டியதென்ன? இவ்வாறு பல
கோணங்களில் அலசி வழிக்காட்டுவதும், அதற்காகப் பாதிக்கப்பட்டோரை ஒருங்கிணைப்பதுமே
தீர்வு . சரியான வழி .
எடுத்துகாட்டு : சான்றிதழ்கள், ஆவணங்கள் போன்ற முக்கியமானவற்றை
நெருப்பு, நீர் , கரையான் அணுகாமல் பாதுகாப்பதும், – ஆபத்தான நேரத்தில் எளிதில்
அப்புறபடுத்த வழிகாண்பதும் சாத்தியமல்லவா?
வீடு ஒரு மியூசியமோ குடானோ அதாவது கிடங்கோ, குப்பைத்தொட்டியோ
அல்ல ; கண்ணில் பட்டவற்றை வாங்கிக் குவிக்காமல் - குறைந்த பொருட்களோடு
வாழவும்; அவ்வப்போது தேவையற்றவற்றைக் கழிக்கவும் பழக வேண்டும். போகிப் பண்டிகை
அதற்குத்தானே !
அடிக்கடி எரிமலை சீறும் ஜப்பானில் அதற்கொப்ப வீடுகளைக் கட்டவில்லையா
? வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ளவில்லையா?
அடிக்கடி சுனாமி மிரட்டும் கியூபாவில் லட்சக்கணக்கானோரை ஒரிரு மணிநேரத்தில்
அப்புறப்படுத்தவும் பாதுகாக்கவும் நிரந்தர ஏற்பாடு செய்துள்ளதைப் பார்க்கிறோமே !
ஆக , ஆண்டவனிடம் சரண்டைவதல்ல, கொஞ்சம் ஆற அமர யோசித்தால் வழி
புலப்படும். கூடிப் பயணம் செய்தால் இலக்கை அடையலாம் .
நாம் நினைத்துப் பார்க்காத ஓர் நொடிக்குள் எல்லாம்
நடந்து போகிறது. அப்படியாயின் நம்மை மீறிய ஒரு சக்தி இருக்கிறது என்றுதானே பொருள்?
அதனை உங்களால் நிராகரிக்க முடியுமா?
அப்படி ஓர் நொடிக்குள் நடந்து முடிவதாக நாம் கருதுகிறோம், ஆனால் அது
மெய்யல்ல.
“ பீலிபெய் சாகாடும்
அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்” -என்பார்
வள்ளுவர் .
மென்மையான மயிலிறகுதான் என்றாலும்,
ஏற்றியுள்ள வண்டி, அம்மயிலிறகையே அளவுக்கு மிகுதியாக ஏற்றினால் அச்சு முறிந்து
கெடும். அளவு மாறும் போதும் குணம் மாறுகிறது. ஆம் மயிலிறகை ஏற்றிக்கொண்டே
இருக்கிறீர்கள். ஆயினும் ஒரு கட்டத்தில்தான் அச்சு முறிக்கிறது. இதன் பொருள்
அந்தக் கணத்தில் ஏற்றப்பட்ட ஒற்றை மயிலிறகின் பாரம் தாங்காமலா அச்சு முறிந்தது .
இல்லை மயிலிறகு ஏற ஏற அச்சு இற்றுக்கொண்டே வந்தது. ஒரு கட்டத்தில் அதன்
தாங்கும் சக்தி தகர அச்சு முறிகிறது . அளவு மாற்றத்தால் ஏற்பட்டது குணமாற்றம் .
அந்த நொடியில் பாய்ச்சல் வேகத்தில் முடிந்துவிட்டது .
“ அளவு மாற்றம் குணமாற்றம் மற்றும் பாய்ச்சல் வேக மாற்றம்” என்பது
மார்க்சிய இயங்கியல் தத்துவத்தில் அடிப்படையான நான்காவது விதியாகும் .
நீரை கொதிக்க வைத்தால் 99 டிகிரி வரை சூடேறும் 100 டிகிரியில்
கொதிக்கும். அதுபோல் குளிர்வித்தால் 0 டிகிரிக்கு போகும்போது பனிக்கட்டியாக
மாறும். .ஆக அளவு மாற மாற குணம் மாறிக்கொண்டே வந்து ஒரு கட்டத்தில் முந்தைய நிலையை
மறுத்து அடுத்த நிலைக்கு பாய்ச்சல் வேகத்தில் மாற்றம் ஏற்பட்டு விடுகிறது .
இந்தப் பூமிப்பந்தில் பெருவெள்ளமும் இயற்கைப் பேரழிவும் ஆதிமுதலே
அவ்வப்போதைகு நடந்து வந்தது. இந்த பெருவெள்ளம் அப்போதிருந்த வேடர்களின் நாகரீகத்தை
அழித்தது . அதிலிருந்து தப்பிப் பிழைத்து வந்தவர்கள் குகைகளில் வாழ்ந்து தங்கள்
வாழக்கை முறையைப் பூரணமாக மாற்றிக் கொண்டார்கள் என்பதைச் சுட்டும் ஜார்ஜ்
பொலிட்ஸர், “ ஆக , நில இயல் வகைப்பட்ட ஒரு பேரழிவின் விழைவாக பூமியும்
நாகரிகமும் திடீரென மாறுதல் அடைந்தது,” என்கிறார் .
இது போல் வரலாற்றில் சில திடீர் திருப்பங்கள் புரட்சிகள் நிகழ்ந்ததுண்டு.
இவற்றை சில வரலாற்றாசிரியர்கள் “ தற்செயல் நிகழச்சி” என வருணிப்பர். இது
சரியல்ல. ஏனெனில் “ நடந்திருக்க வேண்டாதது எப்படியோ நடந்துவிட்டது என்கிறபோதே அது
தற்செயல் நிகழ்வாகும் ; ஆனால் சமூகத்தில் நடந்த புரட்சிகள் எதுவும் அப்படிப்பட்டதல்ல.
அவசியத் தேவையாக ஏற்பட்டவையே . ஏனெனில் தொடர்ச்சியாக மாறுதல் நிகழந்த வண்ணமே
உள்ளன; அவை கூட்டாகச் சேர்ந்து திடீர் மாறுதல்களில் போய் முடிகின்றன என்பதே மெய் .
“எங்கெல்ஸ் எழுதிய டூரிங்குக்கு மறுப்பு என்ற நூலை எடுங்கள் . அதில்
‘இயக்க இயல் : அளவும் குணமும்’ என்ற தலைப்பிட்ட அத்தியாயத்தைப் புரட்டுங்கள்.
அதில் பல உதாரணங்களைத் தந்துள்ளதைக் காண்பீர்கள். “அளவு மாறுபாடு சில குறிப்பிட்ட
நிலைகளை எட்டியவுடனே திடீரென்று குணவேறுபாட்டை உருவாக்குகின்றது’ என்ற விதி இயற்கை
விஞ்ஞானத்தைப் போல சகல விஷயங்களிலும் கறாராகச் செயல்படுகிறது என்பதை அந்த
உதாரணங்கள் நிரூபித்துக் காட்டுவதைப் புரிந்து கொள்ள முடியும்,” என
எடுத்துக்காட்டுக்கிறார் ஜாட்ஜ் பொலிட்ஸர் .
ஆம், சொந்த வாழ்வும் அப்படித்தான். பூப்பெய்தல் என்று கூறப்படும்
இயற்கையான நிகழ்வு உங்கள் மகளுக்கோ தங்கைக்கோ இன்று காலை அல்லது மதியம்
திடீரென ஏற்பட்டிருக்கலாம்; அதற்கான மாறுதல் சில மாதங்களாக அவர் உடலில்
ஏற்பட்டுவந்தது என்பதே மெய். அதன் அளவு மாற்றம் குண மாற்றமாகி திடீரென நிகழ்ந்தது
அவ்வளவே .
ஒருவருக்கு திடீரென வேலை இழப்பு ஏற்பட்டது . அவர் சுற்றிலும்
நடப்பதை அறியாதவராக இருந்தால் ஏதோ தனக்கு கிரகம் சரியில்லாததால் திடீரென வேலை
பறிபோய் விட்டது எனக் கருதுவர் . உண்மை என்ன ? நாட்டில் நிலவிய பொருளாதார மந்தமும்
தொழில் தேக்கமும் பல மாதமாக உருவாக்கிவந்த நெருக்கடியின் கோரவிளைவால்
நூற்றுக்கணக்கானோர் வேலை இழந்து வந்தனர் அதன் ஒரு அம்சமே இவரின் வேலை
இழப்பும் என்பதே உண்மை .
ஆக திடீர் நிகழ்வுகள் எதுவாயினும் அதனை சற்று ஊடுருவிப்பார்த்தால்
அது தானாய் விளங்கும். எந்த வகையிலும் அது கடவுளின் திருவிளையாடல் அல்ல .
டார்வின் பரிணாம தத்துவத்தை சொன்னாலும்
கிறுத்துவத்தை நம்பினார் என்பது மெய்யல்லவா ?
அப்படித்தான் நம்பப்பட்டு வந்தது ; சொல்லப்பட்டு வந்தது . அதே சமயம்
அன்றைய மத ஆதிக்கச் சூழலில் புருனோ எரிக்கப்பட்ட சூழலில் கோப்பர் நிகஸ் கடும்
சவாலை ச்ந்தித்த வேளையில் தன் கருத்தை முன்னெடுத்துச் செல்ல கிறுத்துவத்தை
நம்புவதாக ஒரு நாடகத்தை அவர் தந்திரமாக மேற்கொண்டிருக்கலாம் என்றும் கருதப்பட்டு
வந்தது .
ஏனெனில் உலகில் பல நாடுகளில் அப்படித்தான் நடந்தன . இந்தியாவிலும்
மிகச்சிறந்த வானியல் நிபுணர்களாகத் திகழந்த; பூமிமின் வடிவம் உருண்டை
என்பதையும் – சூரியனே மையமானது என்பதையும் கண்டு சொன்ன ஆரியபட்டரும் ,
வராகமித்திரமும் கூட அவற்றை எழுதும் போது சில மதநம்பிக்கை சார்ந்த சுலோகங்களோடு
கலந்தே தர வேண்டியிருந்தது .
டார்வின் விவகாரத்தில் உண்மை வெளிப்பட்டு, நாம் கருதியது சரிதான் என
நிரூபணமாகியுள்ளது .
அண்மையில் வெளிவந்த செய்தி இது:
“பரிணாம உயிரியல்வாதக் கோட்பாட்டை உருவாக்கிய இயற்கை அறிவியல்வாதி சார்ல்ஸ்
டார்வின், தான் ஒரு நாத்திகன் என்று எழுதிய கடிதம் ஏலம் விடப்படுகிறது.இந்தக்
கடிதம் சுமார் நியூயார்க் ஏலத்தில் சுமார் 90,000 டாலர்களைப் பெற்றுத் தரும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.”
டார்வினின் மத நம்பிக்கை பற்றி எப்போதும் கடும் விவாதங்கள் நடைபெற்று
வருவது வழக்கம். டார்வின் பொது இடத்தில் தனது நம்பிக்கை அல்லது நாத்திகம் பற்றி
கூறியதில்லை, தன் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதற்காக
அவர் தன் கருத்தை வெளிப்படுத்தாமல் இருந்தார் என்றும் கூறப்படுவதுண்டு.மேலும் நாம்
மேலே கூறியது போல் சூழ்நிலையின் கைதியாய் அப்படி தந்திரமாக நடந்திருக்கலாம் .
இந்நிலையில் இளம் பாரிஸ்டர் ஒருவருக்கு டார்வின் எழுதிய கடிதம் ஒன்றில்
அவர் வெளிப்படையாக தனக்கு பைபிள் மீதும், ஏசு கிறிஸ்து கடவுளின் புதல்வன்
என்பதிலும் நம்பிக்கை இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இளம் பாரிஸ்டர் பிரான்சிஸ் மெக்டர்மட் 1880ம் ஆண்டு நவம்பர் 23-ம் தேதி
டார்வினுக்கு எழுதிய கடிதத்தில், “உங்கள் நூல்களை வாசிப்பது எனக்கு பெரும்
மகிழ்ச்சியை அளிக்கிறது என்றாலும், பைபிள் மீது நான் நம்பிக்கை இழந்து விடவில்லை.
இருப்பினும் நான் உங்களுக்கு இதனை எழுதும் காரணம் என்னவெனில் உங்களுக்கு பைபிள்
மீது நம்பிக்கை இருக்கிறதா? ஆம் அல்லது இல்லை என்ற பதில் எனக்கு போதுமானது” என்று
எழுதியிருந்தார்.
இதற்கு பதில் கடிதம் எழுதிய டார்வின், "பைபிள் ஒரு இறைவெளிப்பாடு
என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை, ஆகவே, ஏசு கிறிஸ்து கடவுளின் புதல்வன்
என்பதிலும் எனக்கு நம்பிக்கை இல்லை," என்று எழுதினார்.
இந்தக் குறிப்பை அவர் எழுதுவதற்கு ஓரு மாதம் முன்பு, அவருடைய சமகாலத்திய
முக்கிய நாத்திகவாதியான எட்வர்ட் ஏவ்லிங் என்பவருக்கு அவர் எழுதிய போது, “மதம் பற்றி
நான் எழுதுவதை எப்போதுமே தவிர்த்து வருகிறேன். நான் ஒரு அறிவியல்வாதியாகவே இருக்க
விரும்புகிறேன்” என்றார்.
டார்வினுக்கு மெக்டர்மட் இந்த கடிதம் வெளியிடப்பட மாட்டாது என்று
வாக்குறுதி அளித்திருந்தார். இதனால் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இது
வெளிவரவில்லை.
டார்வின் நாத்திகர் என்பதே இந்த செய்தி உண்மையை உணர்த்தும் . அதே நேரத்தில்
கடவுள் நம்பிக்கை கொண்ட அறிவியலாளர் பலர் உண்டு என்பதையும் மறுக்க இயலாது .
ஏனெனில் ஒரு துறையில் வல்லுநர் என்பதாலேயே அவர் அனைத்தயும் அறிந்தவர் என்று
பொருளல்ல . வாழ்க்கையைப் பற்றிய அறிவியல் கண்ணோட்டம் கூட இல்லாதிருக்கலாம்
.அவருக்கும் தத்துவதுறையில் அறியாமை இருக்கலாம் அதனால் கடவுளை நம்பலாம் . ஆகவே
எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் காண்பதே அறிவு .
இறைவழிபாட்டில் ஈடுபட்டு நம் முன்னோர் நீண்ட ஆயுளும்
நல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்தனர். விஞ்ஞானம் முன்னேறி என்ன பயன், நோய் நொடிகள்தானே
பெருத்துள்ளது?
“காலம் ரொம்பக் கெட்டுப் போச்சு . நோய் நொடிகள் பெருகிப் போச்சு .
அல்ப ஆயுசில் சாவது அதிகமாயிடிச்சி.” –-இப்படி பொதுவெளியில் புலம்புவோர் அதிகம் .
ஆனால் உண்மை என்ன ? தகவலும் தவறானது பார்வையும் தவறானாது .
கடந்த நூறு ஆண்டுகளின் விவரங்களைச் தெரிந்து கொண்டால் கொஞ்சம்
தெளிவு பிறக்கலாம் . உலக அளவில் எடுத்துக் கொண்டால் 1900 ஆம் ஆண்டில் உலகின்
சராசரி வயது 31 இது 2010 ஆம் ஆண்டில் 67.2 ஆக உயர்ந்திருக்கிறது . இந்தியா விடுதலை
அடையும் போது – 1947ல் சராசரி வயது 32 இன்று 67.8 ஐத் தாண்டிச் சென்று
கொண்டிருக்கிறது, நூறாண்டுகளுக்கு முன் நம்மைப்போலவே இருந்த ஜப்பானின் இன்றைய
சராசரி வயது 82.7 . ஜப்பானில் இறை நம்பிக்கை இல்லாதோர் அதிகம் என்பது கூடுதல்
தகவல் . பொதுவாக சராசரி வயது ஆணை விட பெண்ணுக்கு அதிகமாகவே இருக்கிறது . இந்த
புள்ளிவிவரங்கள் ஆயுளும் ஆரோக்கியமும் முன்னிலும் அதிகரித்திருப்பதன் சாட்சி .
“ஐயா ! எங்க தாத்தா 94 வயசு வரை வாழ்ந்தார், எங்க அப்பா 80 ல்
காலமானார் எனக்கோ இப்போதே சர்க்கரை, இரத்தக் கொதிப்பு எல்லாம்.”- இப்படிச்
சொல்லுவோர் உண்டு . தனிப்பட்ட சிலரின் அனுபவம் அதுவாக இருக்கக் கூடும். அவரிடம் ,
“உங்க பாட்டிக்கு எத்தனை குழந்தைகள் ?” என்ற விவரத்தை சற்று கிளறினால் , “
அவருக்கு மொத்தம் பொறந்தது பத்து ; கருவிலே செத்தது , குழந்தையிலேயே பறிபோனது
எல்லாம் போக நான்கு மிச்சம்” என பதில் வரும் . ஆக பிறந்ததில் இறந்ததே அதிகம் .
இதுதான் அன்றைய நிலை . இது போக காலரா, பிளேக் , வைசூரி போன்ற நோய்களால்
கிராமம் கிராமமாக கொள்ளை கொண்டு போனது. இதையெல்லாம் சேர்த்துத்தான் அன்றைய சராசரி
வயது .
நூறாண்டுகளுக்கு முன் ஸ்வீடனில் பிறந்த ஒவ்வொரு மூன்று குழந்தையிலும்
இரண்டு இறந்தது. ஜெர்மனியில் ஒவ்வொரு இரண்டு குழந்தையிலும் ஒன்று இறந்தது.
உலகெங்கும் குழந்தை இறப்பு விகிதம் இப்படி கடுமையாகவே இருந்தது . இன்று உலகில்
சராசரி குழந்தை இறப்பு ஒரு சதவீதத்திற்குக் கீழே குறைந்து விட்டது. சில நாடுகளில்
இன்னும் கவலை அளிக்கும் விகிதத்தில் உள்ளது என்பது வேறு சங்கதி . இந்தியாவில்
1947ல் பிறந்த 1000 குழந்தைகளில் 146.5 இறந்ததெனில் இன்று அது 42 ஆகக்
குறந்துள்ளது. மருத்துவ அறிவியலில் ஏற்பட்ட மகத்தான முன்னேற்றமும் , கொள்ளை
நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டதும் முக்கிய காரணங்களாகும் .
இதனைச் சொல்லும் போது இன்றும் புதிய புதிய நோய்களின் மிரட்டலும் ;
ஆரோக்கியச் சவால்களும் தொடர்வதை மறுக்கவில்லை . அதிலும் இந்தியா போன்ற மூன்றாம்
உலக நாடுகள் சந்திக்கும் சவால்களும் – அதிலும் மருத்துவம் வர்த்தகப் பொருளாக
மாற்றப்பட்டு வரும் சூழலின் கடுமையையும் நாம் மறுக்கவில்லை. இதுகாறும் பெற்ற
முன்னேற்றம் கூட பின்னுக்குப் போய்விடுமோ என்கிற கவலையையும் புறந்தள்ள முடியாது
.அதைப்பற்றி விரிவாக தனிக் கட்டுரையே எழுதலாம் .
நேற்று சராசரி ஆயுள் குறைவாக இருந்ததற்கும் , குழந்தை மரணம் அதிகம்
இருந்ததற்கும் அன்றைய கடவுள் பத்தியே காரணம் என்றோ ; மக்களின் முட்டாள்தனமே காரணம்
என்றோ நாம் குற்றஞ்சாட்டினால் அது பிழையானது. அது அன்றைய சமூகச் சூழல் சார்ந்தது.
அதே போல் இன்றைக்கு சராசரி வயது அதிகரித்திருப்பதற்கும் – குழந்தை இறப்பு
விகிதம் குறைந்திருப்பதற்கும் மக்கள் நாத்திகராகிவிட்டதா காரணம்? இல்லவே இல்லை.
விழிப்புணர்வுக்குக் காரணம் மக்களிடம் செய்யப்பட்ட தொடர் பிரச்சாரமும் சமூகச்
சூழலுமே. அரசுத் திட்டங்களிலேயே அதிகமாய் வெற்றி பெற்றது குடும்பக் கட்டுப்பாடு
திட்டமும், போலியோ சொட்டு மருந்து திட்டமும்தான். குழந்தை கடவுளின் வரமல்ல என்கிற
பகுத்தறிவுக் கருத்து வலுப்பெற்றதால்தான் குடும்பக் கட்டுப்பாடு வெற்றி பெற்றதாக
முடிவுக்கு வருவது பிழையாகிவிடும் அல்லவா?
நீண்ட ஆயுளுக்கும் வலுவான ஆரோக்கியத்துக்கும் இறை நம்பிக்கை ஒரு
போதும் காரணமாகாது. சமூக , பொருளாதார , பண்பாட்டுச் சூழலில்தான் விடை தேடவேண்டும்
.
ஜாரெட் டைமண்ட் எழுதிய ப்ரவாஹன் மொழி பெயர்த்த “ துப்பாக்கிகள் , கிருமிகள்
, எஃகு” என்ற புத்தகத்தில் நோய்க் கிருமிகள் மனிதகுலத்தைப் படுத்திய பாடும் ;
பிரதேச ஏற்றத் தாழ்வுக்கு அதுவும் ஒரு காரணியானதும் விரிவாகப்
பேசப்பட்டிருக்கிறது. கிருமிகளின் வரலாறும் , வரலாற்றில் தடம் பதித்த கிருமிகளும்
அறிய வியப்பால் விழிகள் விரியும். ஆக தனி நபர் ஆரோக்கியத்திற்கும் அவரின் கடவுள்
நம்பிக்கைக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை.
நன்றி : வண்ணக்கதிர் , தீக்கதிர் , 10-01-2016
0 comments :
Post a Comment