கோபங்களைத் திரட்டு!

Posted by அகத்தீ Labels:





கோபங்களைத் திரட்டு!



பாசிச மேகங்கள் நம்மைக் கவ்வும் வேளை இது. இப்போது கோட்சேவும் ஹிட்லரும் ஆள்வோரால் நம் முன் மாதிரிகளாய் முன்மொழியப்படும்போது நாம் என்னசெய்வது? அறிவியலை சகிப்புத் தன்மையை ஓரங்கட்டி விட்டு வெறுப்பும் குரோதமும் சமூக படிநிலையும் பத்தாம்பசலி பழைய பஞ்சாங்கமுமே நம் முகவரி என மோடிகள் முகங்காட்டும் போது இளைய தலைமுறையின் பதிலடி என்னவாக இருக்கமுடியும்?

“இளைஞர்கள் நாங்கள் இருபது கோடி- இந்திய நாட்டின் இருதய நாடி” - 1981 ஆம் ஆண்டு திண்டுக்கல் வீதி களில் நாங்கள் எழுப்பிய முழக்கம். அதுவரை “சோசலிஸ்ட் வாலிபர் முன்னணி” என்ற பெயரில் பொன் நட்சத்திரம் பொறித்த செங்கொடியை ஏந்தி பவனி வந்தவர்கள். சிகப்பு நட்சத்திரம் பொறித்த வெண்கொடியை ஏந்தி“ இந்திய ஜனநாயகவாலிபர் சங்கம்” என்ற பெயரில் பய ணத்தை தொடங்கிய நாட்கள் அவை .
வெறும் பெயர் மாற்றம் அல்ல. பார் வையைமேலும் விசாலப்படுத்தி கதவை மேலும் தாராளமாய் திறந்து வைத்த நாட்கள்.


“வேலை இல்லை! வாழ்வு இல்லை! வீணாய் இருப்பதில் அர்த்தமில்லை! புறப்படு தோழா! புதுயுகம் காண்போம்” என நெஞ்சு நிமிர்த்தி அன்று எழுப்பிய முழக்கம்இன்னும் காதுகளில் ரீங்காரமிடுகிறது.“எல்லோருக்கும் வேலை! எல்லோருக்கும் கல்வி!” என அன்றெழுப்பிய கோரிக்கை இன்றும் கோரிக்கையாகவே நீடிக்கிறது.


காலம் தான் எவ்வளவு மாறி விட்டது. இளைஞர்கள் நாங்கள் இருபது கோடி எனமுழக்கமிட்டதே இன்றைக்குப் பொருந் தாது. “இளைஞர்கள் நாங்கள் நாற்பது கோடி” என முழக்கத்தை மாற்ற வேண்டியுள்ளது. அதுவும் சரியா? தற்போதே இந்தஎண்ணிக்கை 43 கோடியைத் தாண்டிவிட்டது. 2021இல் 46 கோடியைத் தாண்டு மாம். உலகின் மிக இளமையான தேசமாக இந்தியா மாறிக் கொண்டிருக்கிறது. 2020 ஆம் ஆண்டு - அதாவது இன்னும் ஐந்தே வருடத்தில் இந்திய வீதிகளில் நடக்கும் ஒவ்வொரு மூன்று பேரிலும் ஒருவர் நிச்ச யம் இளைஞராக 15 லிருந்து 35 வயதுக்கு உட்பட்டவராக இருப்பர் என ஐ.நா.புள்ளி விபரம் தெரியப்படுத்துகிறது. சீனாவின் சராசரி வயது 35 ஆக இருக்கும் போது இந்தியாவின் சராசரி வயது 25 ஆகக் குறைந்துள்ளது.


இந்த இளமையின் முறுக்கு மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் அளிக்கிற போதே பெரும் சவாலாகவும் நம் முன் எழுகிறது. தகுதியும் தரமும் மிக்க கல்வியும், சுயமரியாதை மிக்க வேலையும் இன்னும் இளைஞர்களின் பெருங்கனவாகவே உள்ளன. சரியாகக் கணக்கிட்டால் இந்திய இளைஞர்களில் 20 விழுக்காட்டினர் வேலையின்றி உள்ளதாகவும், மூன்றில்ஒரு பட்டதாரி வேலையின்றி அலைவதாகவும் ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ தகவல் தரு கிறது. அதிலும் பெரும் பகுதி இளைஞர்களின் கல்லூரிக் கனவு கை கூடாமலே இருக்கும் நாட்டில் தான் இந்த அவலம்.


தமிழ்நாடு இந்தியாவில் தானே இருக் கிறது. இதே நிலை தான். கொஞ்சம் முன்,பின் அவ்வளவு தான். தமிழகத்தில் இளைஞர்கள் எண்ணிக்கையும் இரண்டு கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. வேலையின்மையும் தமிழகத்தில் சுமார் 50 லட்சத்தை தாண்டி விட்டது. இந்த பெரும் தாக்குதல் நகரங்கள்- கிராமங்கள் என இரண்டிலும் நீக்கமற நிறைந்திருப்பினும், ஒப்பீட்டளவில் கிராமங்களில் அதிகம். தமிழக இளைஞர்களில் 1.2 கோடிக்கு மேற்பட்டோர் இன்னும் கிராமங்களில் தான் உள்ளனர்; அதுவும் நகர் மயம் அதிகமாக உள்ள தமிழகத்தில். வேலையின்மை யிலும் போதுமான கல்வி வாய்ப்பு கிடைக்காமையிலும் தலித், தொல்குடி இளைஞர் களும் இளம் பெண்களும் மிக அதிகம்.


இதன் பொருள், குமுறும் எரிமலை மீது தான் தேசம் உட்கார்ந்திருக்கிறது. பயன்படுத்தப்படாத இந்த பேராற்றல் திசை மாற வும் அழிவின் கரங்களாவதும் மிக எளிது. சாதி, மத, பயங்கரவாத சக்திகளின் இலக்கும் இவர்களே. ஆம் எளிதில் உணர்ச்சிவசப்படும் இளமையை கொம்பு சீவி ஏவுவது சதிகாரர்களுக்கு எளிதாக இருக்கிறது. ஆகவே இளைய தலைமுறையின் எண்ணக் குமுறல்களை உள்வாங்கி அதற்கொரு போராட்ட களம் காணாமல் வளமான இந்தியாவோ - வலிமையான இந்தியாவோ சாத்தியமே அல்ல. ஆம் இதனை முன்னிறுத்தாமல் இடதுசாரித் திருப்பம் எளிதல்ல; பெரும் சவாலுமாகும்.

“கொட்டும் “மழையில்” இரண்டு விதமான பிள்ளைகள்மாம் :

.!இட்ஸ் ரைனிங்..ஏசியை கம்மி பண்ணுங்க ......

அம்மா.!இங்கேயும் ஒழுகுது பாத்திரம் எடுத்துட்டு வா ”

 - வாட்ஸ் அப்பிலும் முகநூலிலும் டுவிட்டரிலும்உலாவரும் இது போன்ற நறுக்குகள் நச்சென நம் மண்டையில் குட்டுகிறது. இளைய இந்தியாவும் இரண்டாக இருப் பதை உடைத்துக் காட்டுகிறது .


“ வேலை வாய்ப்பு அடிப்படை உரிமை; வேலை கொடுப்பது அரசின் கடமை” கல்வி தருவது அரசின் பொறுப்பு ; கற்றுத் தேர்வது எங்கள் கடமை” என முழங்கியது மட்டும் போதுமா? “ காதல் என் உரிமை”, “ என் வாழ்வு என் தேர்வு”, “ உணவு என்உரிமை”, “என் உடை என் தேர்வு”, “அறிவியல் என் பார்வை”, “கருத்து சுதந்திரம் என்உரிமை”, “ சமூக நீதி எம் உயிர் மூச்சு”, “கும்பிடும் உரிமை தனி உரிமை; கூடி வாழ்வதுபெருங்கடமை”, “ ஒற்றைத் தாமரை அல்லஎம்தேசம்; வண்ண மலர்களின் வாச மலர்க ளின் நந்தவனமே எம் தேசம்” என இளைய தலைமுறை முழங்க வேண்டியவற்றின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.“விஞ்ஞான சோசலிசம் வென்றெடுப் போம்; சமுதாயக் கொடுமைகளைத் துடைத்தெறிவோம்” எனும் நெடுங்கனவோடு இளைய தலைமுறை பயணிக்க வேண்டியகால கட்டம் இது.


எல்லாவற்றிலும் “டாப்டென்” அதாவது முதன்மையான பத்து எவையென் பதை பட்டியலிடுவது இன்றைய வழக்க மாகிவிட்ட படியால்; இங்கு நாமும் இளையதலைமுறையின் முன்னாலுள்ள ஒரு பத்து சவால்களை கேள்விகளாய்த் தொகுப்போம்.


1]எது என் முகம்? எது என் பாரம் பரியம்?

2]ஏன் இன்னும் வறுமை? ஏற்ற, தாழ்வுயாருடைய கட்டளை?

3]கல்வியும் வேலையும் நெடுங் கனவோ? கைகூடுமோ?


4]ஆண், பெண் சமத்துவம் வாய்ப்பந்தலாகலாமோ?

5]சமூக நீதியும் மனித உரிமையும் பொருளற்ற தாமோ? சமூக ஒடுக்கு முறைக்கு முடிவு எப்போது?

6] போதையில் மூழ்கி வாழ்வைத் தொலைப்பதோ ?

7]ஆடலிலும் பாடலிலும் பண்பாட்டு வெளியிலும் பாரபட்சம் தொலையுமோ?

8]தனி நபர் திறனை, தகுதியை வளர்ப்பது எப்படி?

9]அறிவியல் பார்வை வளர்ப்பது எப்படி?

10]காதலை வாழ்வை சமத்துவமாய் சுகிப்பது எப்படி?இப்படி தொகுத்த பத்தும் என் தனிப்பட்ட தேர்வல்ல.


ஐ.நா அறிக்கை ஆராய்ந்துவகுத்தவற்றை- புரிதலில் நிமித்தம் -நம் மண்ணுக்கேற்ப சற்றே கூட்டிக் குறைத்து சமைத்தேன் அவ்வளவே !


ஒவ்வொன்றுக்கும் பெரிய விளக்கம் தேவை இல்லை. ஆயினும் காலத்தின் தேவை கருதி ஒன்றை தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.


எது என் முகம்? எது என் பாரம்பரியம்? கேள்வி சுலபம். பதில் கடினம். இந்தியனா? சொல்லிப்பார்! கேள்வி ஓயாது. தமிழனா? என்ன மதம்? என்ன சாதி? யார் வீட்டுப் பையன்? என்ன வேலை? என்ன படிப்பு? ஓராயிரம் கேள் விகள். அத்துடன் முடிந்ததா? சைவமா? அசைவமா? ஆத்திகனா? நாத்திகனா? அவர் ரசிகரா? இவர் ரசிகரா? அவர் உன் தலைவரா? இவர் உன் தலைவரா? உன் முகமும் முகவரியும் அக்னி சோதனைக் குள்ளாகும் காலம்?பாசிச மேகங்கள் நம்மைக் கவ்வும் வேளை இது.


இப்போது கோட்சேவும் ஹிட்லரும் ஆள்வோரால் நம் முன் மாதிரிகளாய் முன் மொழியப்படும் போது நாம் என்னசெய்வது? அறிவியலை சகிப்புத் தன் மையை ஓரங்கட்டி விட்டு வெறுப்பும்குரோதமும் சமூக படிநிலையும் பத்தாம்பசலி பழைய பஞ்சாங்கமுமே நம் முகவரிஎன மோடிகள் முகங்காட்டும் போது இளைய தலைமுறையின் பதிலடி என்ன வாக இருக்க முடியும்?


“தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்துமன்னுயிர்க் கெல்லாம் இனிது.”என அதாவது “தம் மக்களின் அறிவு டைமை தமக்கு இன்பம் பயப்பதைவிட உலகத்து உயிர்களுக்கெல்லாம் மிகுந்த இன்பம் பயப்பதாகும்” என இளைய தலை முறையைக் கொண்டாடிய; “பிறப்பொக் கும் எல்லா உயிர்க்கும்..” என மநு அநீதிக்கு எதிராய் சமநிலை பேசிய; “எப்பொருள் யார் யார் வாய்கேட்பினும் அப்பொருளின் மெய்ப்பொருளைக் காணச் சொன்ன எம் ஐயன் திருவள்ளுவரே எமது மூதாதை என நெஞ்சு நிமிர்த்துவோம்.


நான் பகத்சின் தோழன் - நான் பெரியார்வாரிசு.நான் அம்பேத்கர் பரம்பரை - நான்சிங்கார வேலர் சிந்தனைப் பள்ளி மாண வன் / மாணவி - வ .உ.சி., ஜீவா, அயோத்திதாசர் , சீனிவாச ராவ், ஏ.பாலசுப்பிர மணியன், பி.ராமமூர்த்தி, களப்பால் குப்பு வழி வந்தவன் / வந்தவள் - திரு.வி.க, வள்ளலார், வைகுண்டசாமிகள் என் முன்னோடிகள் - கல்பனா தத்தும், கே.பி. ஜானகியம் மாவும் குயிலியும் என் குருதியின் முகவரி - சே குவேராவும் , அண்டோனியா கிராம் ஸியும் என் வழிகாட்டிகள், மார்க்ஸ், ஏங் கெல்ஸ், லெனின் என் தத்துவ ஆசான்கள்.


இப்படி நம் முற்போக்கு பாரம்பரியத்தை, மதச்சார்பற்ற பாரம்பரியத்தை , சாதி ஆதிக்க எதிர்ப்பும் சமூக நீதியும் சமத்துவமும் மிக்க பாரம்பரியத்தை உரக்கமுன் மொழியும் காலம் இது.


பிறந்த சாதியைமதத்தை தூக்கி எறிந்து முற்போக்கு பாதையில் முன் செல்லத் துணிபவரே இன்று இளைஞர் எனக் கொள்ள முடியும்? அது தான் நம் முகம், முகவரி, பாரம்பரியம் எல்லாம்.


புதிய தலைமைப் பண்பை, பொதுவாழ்வில் புதிய பண்பாட்டுத் தடத்தைநமது முன்னோர்கள் வழியில் மீட்டெடுப் போம்.


இளைஞர்களைத் திரட்டாமல் இந்திய - தமிழக அரசியல் முகம் மாறாது. நாற்பது கோடி இளைஞர்கள் எண்பது கோடிக் கரங்கள் ஒன்று சேர்ந்தெழும் விஸ்வரூபக் காட்சியை கற்பனை செய்தாலே புல்லரிக்கிறது.


இளைஞன் என்பவன் வேலை தேடும்பாட்டாளி வர்க்கம் என்றார் தோழர் பி.டி. ரணதிவே. “விசாலாமாக, தைரியமாக, மேலும் விசாலமாக மேலும் தைரியமாக, மேலும் மேலும் தைரியமாக மேலும் மேலும்விசாலமாக இளைஞர்கள் திரட்டுங்கள்” என தோழர் லெனின் சும்மாவா சொன்னார்?


தமிழகத்தின் இரண்டு கோடி இளை ஞர்களைத் திரட்ட சகல முனைகளிலும் சகல வழிகளிலும் முழு ஆற்றலையும் பயன்படுத்த வேண்டிய நேரம். லட்சியஉறுதியோடு, கட்டுப்பாடான அமைப்பில்,அளப்பரிய தியாக வேள்விக்கு இளைய தலைமுறையை ஆயுத்தப்படுத்திட, தத்துவ ஆயுதங்களைச் செழுமைப் படுத்துங்கள், கூரேற்றுங்கள். அது ஒன்றே வழி. மாற்று இல்லை.


இளமை என்பது படைப்பாக்க திறனும், புதியன தேடும் இயல்பும், கொடுமை கண்டு கொதிக்கும் உள்ளமும் ஒருங்கே கொண்ட தன்றோ! கண்ணெதிரே அணு தினமும் நடக்கும் கொடுமைகளை அநீதி களை கண்டும் காணாமல் இருப்பது இள மைக்கே இழுக்கன்றோ! ஆங்காங்கே மத்தாப்பு பொறிகளாய், சரவெடிகளாய் வெடித்துப் பயனில்லை.


“கோபங்களைத் திரட்டு! கொடுமை களை நொறுக்கு!” என்பதே வழிமுறை யாகுக! 

திண்டுக்கல் மாநாடு தேசத்துக்கு புதிய நம்பிக்கையைப் பிரகடனப் படுத்தட்டும்!

- சு.பொ.அகத்தியலிங்கம்


வாசகர்கள் கருத்துக்கள்

உங்கள் கருத்துகளை பதிவு செய்ய


பெயர்
மின் அஞ்சல்
கைப்பேசி எண்
உங்கள் கருத்துகளை இங்கே பதிவு செய்யவும்

1 comments :

  1. கமலக்கண்ணன்

    நோக்கம் மற்றும் முழக்கங்களில் அப்டேஷன் தேவை. உதாரணத்திற்கு "வேலைக்கு ஆட்கள் தேவையில்லை" என்ற போர்டுகள் இன்று இல்லை. ஆனால் அனைவருக்கு வேலை என்ற முழக்கம் மாறவில்லை. அதேபோல தத்துவங்களிலும் அப்டேஷன் தேவை. அன்று சொன்னவைகளை இன்று வலிந்து திணிப்பது ஏற்புடையதாக தெரியவில்லை.

Post a Comment