மார்க்சியம் காலாவதியாகிவிட்டதா?
வரலாற்று விவாதம்
மார்க்சியம் காலாவதியாகிவிட்டதா? முதலாளித்துவமே உச்சகட்ட சமூகம் ; அதற்கும் மேல் ஒன்றுமில்லை என்பது மெய்யா ? சோவியத் சிதைவோடு கம்யூனிசக் கனவு தவிடுபொடி ஆகிவிட்டது ; இனிஅதைப் பற்றிப் பேசிப் பயனில்லை என்பது சரியா ? இப்படி தொடர்ந்து வீசப்படும் கேள்விக்கணைகளுக்கு வரலாற்று ரீதியாக – அறிவார்ந்த முறையில் அலசி ஆய்ந்து பதில் தந்திருக்கிறார் அருணன் .
காலந்தோறும் பிராமணியம், கடவுளின் கதை , தமிழரின் தத்துவ மரபுபோன்ற காத்திரமான நூல்களின் தொடர்ச்சியாக அருணன் “ யுகங்களின் தத்துவம்” என்கிறநூலைத்தந்துள்ளார் .
“மார்க்சியம் அடிப்படையில் கடந்தகாலம் பற்றிய தரிசனமே . அதன் நீட்சியாகத்தான் எதிர்காலம் பற்றிய தீர்க்கதரிசனத்தை அதனால் தர முடிந்தது.” என அருணன் முன்னுரையில் மிகச்சரியாக பீடிகை போட்டிருப்பது வெறும் வார்த்தை ஜாலமல்ல மெய்யென்பதை இந்நூலினை படித்து முடிக்கும் போதுஉணரமுடிகிறது. மார்க்சியத் தத்துவத்தின் மீதான நம்பிக்கையும் தெளிவும் உறுதிப்படுகிறது .
“வரலாறே தத்துவம் என்பது நடந்து முடிந்த மனித வாழ்விலிருந்து மட்டுமல்லாது மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலிருந்த தொடர்பிலிருந்தும் நிச்சயமாகிறது . சரித்திர ஞானம் கைவரப்பெற்றால் ;சகல ஞானமும்கைவரப் பெற்றதாகவே அர்த்தம்.” எனமுதல் அத்தியாயத்தின் முடிவில் சொல்லியிருக்கும் அருணன் ; முதல் மூன்று அத்தியாயங்களையும் வரலாறு குறித்த ஒரு பருந்துப் பார்வையை நமக்குள் விதைக்கிறார் .
“மனித சித்தாந்தப் பரிணாமத்தின் இறுதிக் கட்டம்” என “முதலாளித்துவ யுகத்தை” வர்ணிக்கும் பிரான்சிஸ் புகுயாமா எழுதிய நூலுக்கு பதில் சொல்லவே இந்நூல் பிறந்தது எனில் மிகை அல்ல ;
ஆனால் வெறுமே அந்தபுத்தகத்திற்கு மறுப்பாக இல்லாமல் - மார்க்சிய தீபத்தை ஏந்தியவாறு வரலாறு நெடுக இருண்ட சந்து பொந்தெல்லாம் பயணித்து - விவரங்களின் அணிவகுப்பில் அறிவியல் பூர்வமாக விடை கண்டு சொல்லியிருக்கிறார் . முதலாளித்துவ யுகம் வரை மாறி மாறி வந்த உலகு, முன்னேறி முன்னேறி வந்த உலகு முதலாளித்துவ யுகத்தோடு எப்படி நின்று போகும் ?நிற்காது. புதுயுகம் மலரும் என உறுதி செய்கிறார் .
வரலாறு முடிந்து போனதா ? பூகோளமும் மரபினமும் காரணிகளா ? மாமனிதர் பங்கு என்ன ? கிளியோபாட்ராவின் மூக்கும்நெப்போலியன் சளியும் வரலாற்றை மாற்றியதா ? என அடுத்த நான்கு அத்தியாயங்களில் சுவையான அவசியமான கேள்விகளை எழுப்பி நம் கைப்பிடித்து வரலாற்றுக்குள் முங்கி முத்தெடுக்க வைக்கிறார் அருணன் .
“வரலாற்றுப் பொருள் முதல் வாதம்” என்றசொற்றொடரையே இதுகாறும் மார்க்சியர்கள் பயன்படுத்திவந்தோம் . அது சரியா?இல்லை என்பது அருணன் கருத்து . “வரலாற்றுப் பிரபஞ்சவாதம்” என்ற சொல்லே பொருத்தமுடையது என்கிறார் . அதுபோல் கருத்தையே புறக்கணிப்பதுபோல் “கருத்துமுதல்வாதம்” என்கிறோம் ; இது சரியல்ல “ ஆன்மவாதம்” அல்லது “ ஆன்மீகவாதம்” என்றழைப்பதே பொருத்தம் என்றும் அருணன் வாதிடுகிறார் . அந்த வாதத்தில் சாரம் இருப்பதாய் நான் உணர்கிறேன்.
புராதனப் பொதுவுடைமை சமுதாயம் ,அடிமை சமுதாயம் , நிலப்பிரபுத்துவ சமுதாயம் , முதலாளித்துவ சமுதாயம் என வழக்கமாக மார்க்சியர்கள் சொல்லிவந்ததைக் கிளிப்பிள்ளை போல் அப்படியே சொல்லாமல் ஆதிமனிதன் யுகம் , ஆண்டான் யுகம் , நிலப்பிரபுத்துவ யுகம் , முதலாளித்துவ யுகம் எனவெறும் சொல்மாற்றம் மட்டுமே செய்திடவில்லை . அதற்குரிய நியாயமும் வழங்கி இருக்கிறார் . அதுவே முக்கியம் .
ஹெகலின், பாயர்பாக்கின் தத்துவங்களை மார்க்ஸ் , ஏங்கெல்ஸ் இருவரும் உள்வாங்கி புதிய சமூக விஞ்ஞானமாய் வார்த்ததை ;அறிவியல் கண்டுபிடிப்புகள் இதற்கு உதவியதை மிகச் சரியாக, கச்சிதமாக சுட்டிக்காட்டியுள்ளார் அருணன் .
இந்த நான்கு யுகங்களின் மாறுதல்களை நிரூபித்துக் காட்டுகிற தனித்த நூலெதையும் மார்க்சிய மூலவர்கள் எழுதவில்லையெனினும் ; மார்க்சின் “ மூலதனம்” ஏங்கெல்ஸ் எழுதிய “குடும்பம் ,தனிச்சொத்து ,அரசு” எனும் இரு நூல்களில் இதற்கான உயிர்ச்சரடு இருப்பதை அருணன் சுட்டுகிறார் .
பொதுவாக பொருளாதார அடிக்கட்டுமானத்தின் அடிப்படையிலேயே இந்த யுகங்களைக் கணித்தாலும் அதுமட்டுமே அல்ல அதற்கு, துணையான மதம், அறிவியல் கூறுகளையும் கணக்கில் கொண்டே வரலாற்றைத் தீர்மானிக்கமுடியும் எனச் சொல்லும் அருணன் - உற்பத்தி உறவுகளே எப்படி சகலத்திலும் ஊடும் பாவுமாய் இருப்பதை மிகநுட்பமாக வாதிடுகிறார் . யுனெஸ்கோ வரலாற்றாசிரியர்கள் உள்ளிட்டு பல்வேறு வரலாற்றாசிரியர்கள் கூற்றை ஒட்டியும் வெட்டியும் வாதிட்டு உண்மையை தரிசிக்க நம்மை இட்டுச் செல்கிறார் .
ஆதிமனிதன் யுகம் எப்படி வறுமையைப் பங்குபோடும் யுகமாக இருந்தது ; ஆண்டான் யுகம் தோன்றுவது ஏன் காலத்தின் கட்டாயமானது ? மத்தியகிழக்கு , கிரேக்கம் , ரோம் என பல்வேறு நாடுகளில் ஆண்டான் யுகம் எப்படி ஜனித்தது ? எப்படி வீழ்ந்தது ? நிலப்பிரபுத்துவ யுகம் எப்படி இங்கெல்லாம் தவிர்க்கமுடியாமல் உதயமானது ? அந்த நிலப்பிரபுத்துவ யுகமும் எப்படி சரிந்தது ? இதில் மதங்களின் பங்கு என்ன ? குறிப்பாக கிருத்துவத்தின் பங்கு என்ன ? இந்தியாவில் அடிமை முறை இருந்ததா ? நிலப்பிரபுத்துவம் இங்கே எப்படி மேலிருந்து எழுந்தது ? ஏனைய நாடுகள் போல் ஏன் கீழிருந்து மாறவில்லை ? எல்லா நாடுகளிலும் ஒரே போல்தான் யுகங்கள் தோன்றி மறைந்ததா? இப்படி எழும் ஐயங்களுக்கு விடைதருகிறது இந்நூல் .
முதலாளித்துவ யுகம் எழுவதற்கு வித்திட்ட தொழிற்புரட்சி, பிரெஞ்சுபுரட்சி எனவரலாற்றின் முக்கிய கண்ணிகளை ஒன்றுவிடாமல் கோர்த்து மாறுதல் எப்படி காலத்தின் கட்டாயமானது என நிறுவுகிறார் . முதலாளித்துவ யுகத்தின் முரண்பாடுகளைப் பட்டியலிட்டு , முந்தைய யுகங்களைப் போல இதுவும் இறுதியல்ல என்பதை எடுத்துக்காட்டுகிறார். அடுத்துவரும் கம்யூனிச யுகம் குறித்து ஒரு வண்ணச் சித்திரம் வரைந்து காட்டுகிறார் .
அது எப்போது எழும் ? ஜோதிடம் கூறவில்லை . அறிவியல் கணிப்பைச் சொல்லுகிறார் . “ எந்தவொரு சமூக ஒழுங்கமைப்பும் அதற்குள் இருக்கும் உற்பத்திச் சக்திகள் வளர்ச்சியடைய வாய்ப்பு இருக்கும் வரைஅழிவதில்லை . பழைய சமூகத்தின் கர்ப்பத்தில் உயர்ந்த உற்பத்தி உறவுகளுக்கான பொருளியல் சூழல் உருவாகாதவரை அவை வெளிப்படுவதுமில்லை.” என்கிற மார்க்சின் மேற்கோளை துல்லியமாக விளக்குகிறார் .
அதேசமயம் தற்போது முதலாளித்துவம் சந்தித்துவரும் நெருக்கடிகளை , அதனுள் வெடித்தெழும் உள்முரண்பாடுகளை , உலகில் மதநம்பிக்கைக் குறியீட்டெண் வீழ்ந்து வருவதை,பகுத்தறிவாளர் எண்ணிக்கை உயர்ந்து வருவதை,இந்தியாவில் முதலாளித்துவமும் நிலப்பிரபுத்துவமும் கைகோர்த்திருப்பதால் சாதி , மூடநம்பிக்கை இன்னும் நீடிப்பதை என பல்வேறு கூறுகளை தவறாமல் சுட்டுவதுடன் ; முதலாளித்துவ யுகம் வீழும் ; புது யுகம் எழும் எனப் பிரகடனமும் செய்கிறார் .
22 அத்தியாயங்களில் ஒரு நெடிய வரலாற்றை எளிமையாக அலசிக் காட்டியிருப்பது இந்நூலின் தனிச் சிறப்பாகும் . அருணன்எழுத்தின் எளிமையும் ,எள்ளலும் , வாதமும்நூலினை தடங்கலின்றி வாசிக்கவும் உள்வாங்கவும் தூண்டுகிறது.
முதலாளித்துவத்தின் முரண்பாடுகள் குறித்த அருணன் ஆய்வில் சிலர் மாறுபடலாம். – அதன் மீது விவாதம் எழுமானால் நன்று. – அது புரிதலை மேலும் மேம்படுத்தும் . அரவிந்தன் நீலகண்டன் போன்ற சங்பரிவார் ஆட்கள் மார்க்சியம் மீது பொழியும் அவதூறுகளுக்கும் உரிய பதிலடி இந்நூலில் இடம் பெற்றிருப்பின் நன்றாக இருந்திருக்கும் – அடுத்த பதிப்பில் செய்வாரென எதிர்பார்ப்போம் .
இந்நூல் மார்க்சியத்தை மேலும் நன்கு உள்வாங்க ஒரு பாடநூலாக அமைந்துள்ளது . இதனை வாசிப்பதும் விவாதிப்பதும் மார்க்சியப் புரிதலை மேலும் ஆழமாக்கும்
யுகங்களின் தத்துவம்ஆசிரியர் : அருணன் ,
வெளியீடு : வசந்தம் வெளியீட்டகம்,
69-24 ஏ அனுமார் கோவில் படித்துறை,
சிம்மக்கல் , மதுரை - 625001.
பக் :272 , விலை : ரூ .175 /
- சு.பொ.அகத்தியலிங்கம்
3 comments :
தங்களின் புத்தக அறிமுகம் புத்தகம் எங்கே உடனே வாசி என்று கட்டளையிடுகிறது. சிறப்பு தோழர்.
தங்களின் புத்தக அறிமுகம் புத்தகம் எங்கே உடனே வாசி என்று கட்டளையிடுகிறது. சிறப்பு தோழர்.
மார்க்ஸ்-200 – ஆய்வுக்கட்டுரைப் போட்டி
ஆய்வுக்கட்டுரைத் தலைப்புகள் :
1.கார்ல் மார்க்ஸும் உலகமயமாக்கலும்- சந்தைப் பொருளாதாரம்
2. இந்தியாவைப் பற்றி கார்ல் மார்க்ஸ்
புதிய ஆய்வுக்கட்டுரைகளாக
தமிழில் / ஆங்கிலத்தில் 20 பக்கங்களுக்கு மிகாமல் சமர்ப்பிக்க
வேண்டுகிறோம் )
ஆய்வுக்கட்டுரைகள் ஜனவரி—30, 2019-க்குள் வந்துசேர வேண்டிய
e-MAIL : balasingam1951@gmail.com
தபால் முகவரி :
நூலகர் இசக்கி ,
வ.உசி. நூலகம்--ஆய்வுமையம்,
V.O.C.PT., பழையதுறைமுகம்,
பீச் ரோடு, கஸ்டம்ஸ்-1901 எதிரில்,
தூத்துக்குடி-628001,
Contact : 9385632166
Post a Comment